அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: விமான கதவு திறப்பு... வாய் திறக்காத தி.மு.க நிர்வாகி!

ஸ்டாலினுடன் காங்கிரஸார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலினுடன் காங்கிரஸார்

இதுல எப்படிண்ணே லைட் எரியும்?’ என்று அப்பாவியாகக் கேட்டு, பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பாழாக்கும் செந்தில் - கவுண்டமணி காமெடி கதைதான்.

“அகண்ட பாரதத்தை அவசரமாகப் பார்க்க நினைத்தார்களோ என்னவோ... விமானத்தின் அவசர வழியைத் திறந்து ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் அந்த நிர்வாகிகள்” என்றபடி அலுவலகத்தில் ‘லேண்ட்’ ஆன கழுகார், கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “அவசர வழி மேட்டருக்கு அப்புறம் வருகிறேன். கவர் ஸ்டோரியோடு தொடர்புடைய கூடுதல் தகவல் ஒன்று இருக்கிறது. அதை முதலில் சொல்கிறேன்” என்றபடி உரையாடலைத் தொடங்கினார்.

“ஆளுநருக்கும், ஆளும் தி.மு.க அரசுக்குமிடையே முட்டல் மோதல் தொடர்ந்துகொண்டேயிருப்பதை டெல்லி மேலிடம் விரும்பவில்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக டெல்லியிலிருந்து, முதல்வர் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். ஆளுநருடனான மோதலைத் தவிர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டதோடு, ‘ஆர்.என்.ரவியை ஒரு முறை சந்தித்துவிடுங்கள்’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார்களாம். விரைவில், ஆளுநர் - மேலிடத்து மாப்பிள்ளை சந்திப்பு நடக்கவிருக்கிறது என்கிறார்கள் செனடாப் சாலை வட்டாரத்தில்.”

மிஸ்டர் கழுகு: விமான கதவு திறப்பு... வாய் திறக்காத தி.மு.க நிர்வாகி!

“நடக்கட்டும், நடக்கட்டும்... சரி, விமானத்தில் எமர்ஜென்சி எக்ஸிட்டைத் திறந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?”

“ ‘இதுல எப்படிண்ணே லைட் எரியும்?’ என்று அப்பாவியாகக் கேட்டு, பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பாழாக்கும் செந்தில் - கவுண்டமணி காமெடி கதைதான். டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 70 பயணிகளுடன் கிளம்பத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தின் ‘எமர்ஜென்சி எக்ஸிட்’ திடீரென திறந்துகொண்டதால் பரபரப்பு உருவானது. ‘இதுவே நடுவானில் நடந்திருந்தால்..?!’ என்று பயணிகள் பதற்றமாகிவிட்டார்கள். உடனடியாக அதை கவனித்து, சரிசெய்து, காற்றழுத்தத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவந்த பிறகு, அதாவது இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறது விமானம். இந்தக் காரியத்தைச் செய்தது பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யாவும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும்தான் என்றாலும், ‘இது நமக்குள்ளதான் இருக்கணும். கடுகளவு வெளியே கசிஞ்சாக்கூட பதவிக்கே ஆபத்து’ என்று விமான நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நடந்த சம்பவத்துக்கு அப்போதே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், விமான தாமதம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்குக் காரணம் சொல்லவில்லையென்றால், தங்களின் ஒட்டுமொத்த பிசினஸும் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக ‘நோட்’ அனுப்பிவிட்டது இண்டிகோ நிறுவனம்.”

“ம்...”

“அப்புறம் என்ன... இந்த விவகாரங்களையெல்லாம் அந்த விமானத்தில் பயணித்த தன் நண்பர் மூலம் அறிந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அதை மாநில உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்திக்கொண்டதோடு, தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி மூலம் ட்வீட் போட்டுப் பெரிதுபடுத்திவிட்டார். ‘அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’ என பா.ஜ.க-வினர் சாதித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. அதையடுத்து தேஜஸ்வி சூர்யா நடந்த சம்பவத்துக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனாலும்கூட, ‘அந்தக் கதவை தேஜஸ்வி திறக்கவில்லை’ என இன்னமும் முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை.”

“அண்ணாமலை முட்டுக் கொடுக்கலாம்... நடந்ததையெல்லாம் மறைக்கலாம். ஆனால், இதை தி.மு.க நிர்வாகி ஒருவரே செய்கிறாராமே?”

மிஸ்டர் கழுகு: விமான கதவு திறப்பு... வாய் திறக்காத தி.மு.க நிர்வாகி!

“நானும் விசாரித்தேன். தி.மு.க செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் அதே விமானத்தில் பயணித்திருக்கிறார். கதவைத் திறந்து விளையாடியதால், தேஜஸ்வி சூர்யாவை வேறு இருக்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் விமான ஊழியர்கள். அண்ணாமலைக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்திருக்கிறது. பழைய பாசத்தில், ‘அண்ணே... நல்லாருக்கி யாண்ணே...’ என்றபடி, அண்ணாமலையின் பக்கத்து இருக்கையில் போய் உட்கார்ந்திருக்கிறார் அரசகுமார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருவரும் பேசிக்கொண்டு வந்திருக்கிறார்கள். விவகாரம் இவ்வளவு பெரிதான பிறகும்கூட, தாமரை மீதான பாசத்தில் விமானத்தில் நடந்ததைப் பற்றி அறிவாலயத்திடம் மூச்சுக்கூட விடவில்லையாம் அரசகுமார். ஆனால், அதே விமானத்தில் அவரும் இருந்த தகவலறிந்து கேட்டவர்களிடம், ‘விமானத்தில் ஏறிச் செல்வதற்காக பஸ்ஸில் இருந்தேன். கடைசியில்தான் விமானத்திலேயே ஏறினேன். ஏறியதும் தூங்கிவிட்டேன். ஏதோ... டயரில் ஏர் லீக் ஆனது என்றார்கள்’ என டிசைன் டிசைனாகக் கதை அளந்திருக்கிறார் அவர். ‘அண்ணாமலையின் இமேஜை காலிசெய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு, இப்படிக் கதை சொல்லிக்கொண்டு திரிகிறார் அரசகுமார். இப்படியான ஆட்களைத்தான் தலைமை நம்புகிறது’ எனக் கொதிக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்” என்ற கழுகாருக்கு லட்டும் காராச்சேவும் கொடுத்தோம். அவற்றை ருசித்தபடியே, “நல்ல காம்பினேஷன்” என்று பாராட்டியவர், சட்டென ஈரோடு இடைத்தேர்தல் செய்திகளுக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: விமான கதவு திறப்பு... வாய் திறக்காத தி.மு.க நிர்வாகி!

“இவ்வளவு சீக்கிரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்பதை தி.மு.க., அ.தி.மு.க இரு தரப்புமே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், எதிர்பாராத இறப்பால் வந்த தேர்தல் என்பதால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதியைக் கொடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், அதை கூட்டணித் தலைமையான தி.மு.க அதிகாரபூர்வமாகச் சொல்வதற்கு முன்பே, ‘ஈரோட்டில் காங்கிரஸ்தான் போட்டியிடும். கூட்டணிக் கட்சிகளிடம் விரைவில் ஆதரவு கோரவிருக்கிறோம்’ என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதை தி.மு.க ரசிக்கவில்லையாம்.”

“சின்னத்தை முடக்கினால், பா.ஜ.க-வை கழற்றிவிட்டுவிட்டு நாமே போட்டியிடலாம் என முறுக்கிக்கொண்டிருந்த எடப்பாடியிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்களே?”

“ஆமாம், ‘இடைத்தேர்தலில் எப்படியும் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும். நமக்குச் சின்னமும் கிடைக்காது. ஓ.பி.எஸ் ஆட்கள் வேறு உள்ளடி வேலை பார்ப்பார்கள். தோற்றுவிட்டால், நம்முடைய செல்வாக்கு அவ்வளவுதான் என எதிர்க்கோஷ்டியினர் விமர்சிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். இவ்வளவு ரிஸ்க்கோடு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டாம்’ என அவருக்குப் புரியவைத்திருக்கிறார்கள் சில சீனியர்கள். ஜி.கே.வாசன் வேறு நடையாக நடப்பதால், மறுபடியும் தொகுதியை த.மா.கா-வுக்கே தாரை வார்த்துவிடலாம் என்று அரை மனதோடு தலையாட்டியிருக்கிறாராம் எடப்பாடி. இன்னொரு தரப்பு சீனியர்கள், அ.தி.மு.க போட்டியிட வேண்டும் என்று எடப்பாடிக்கு மூளைச்சலவை செய்கிறார்கள். வேட்புமனு தாக்கலுக்குள் காட்சிகள் மாறலாம்.”

மிஸ்டர் கழுகு: விமான கதவு திறப்பு... வாய் திறக்காத தி.மு.க நிர்வாகி!

“அதிகாரிகள் வட்டச் செய்திகள் ஏதும் இருக்கின்றனவா?”

“சென்னையில் காலியாக இருந்த இணை கமிஷனர் பதவி தனக்குத்தான் கிடைக்கும் என பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கனவில் இருந்திருக்கிறார். ஆனால், அந்த இடத்துக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட, பெண் அதிகாரிக்குப் பேரதிர்ச்சி. ‘மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்’ எனப் பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டாராம். விவகாரம் மற்றொரு சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரியின் காதுக்கும் சென்றிருக்கிறது. பெண் அதிகாரியை அழைத்த அந்த சீனியர், ‘ஏம்மா கண் கலங்குற... கொஞ்ச நாள்ல நான் பெரிய பதவிக்கு வந்துடுவேன். நீ விரும்பிய பதவி உன்னைத் தேடிவரும்’ என உத்தரவாதம் அளித்திருக்கிறார். மீண்டும் கனவுகளோடு பறக்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி...” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

“15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியைக் காண ஒடிசாவுக்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்திருக்கிறார். ஒடிசா அரசின் அழைப்பின்பேரில்தான், விளையாட்டுத்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில் புவனேஸ்வருக்குப் பயணமாகியிருக்கிறார் உதயநிதி. தமிழ்நாட்டின் அரசியல் குறித்து, நவீன் பட்நாயக்கும் உதயநிதியும் சிறிது நேரம் கலந்துரையாடியிருக்கிறார்கள். ‘முதல் நாள் மதுரை லோக்கல் அரசியல். மறுநாள் தேசிய அரசியல்... அண்ணன் லெவலே வேற...’ என புளகாங்கிதம் அடைகிறது உதயநிதி தரப்பு. ஆனால், டெல்லி அரசியலை மேற்பார்வையிடும் டி.ஆர்.பாலு தரப்போ, ‘ஒடிசா வந்த வேகத்துல டெல்லிக்கும் வந்துட்டா, நாம எங்க போறது’ என வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது” என்றபடி சிறகை விரித்தார்.