Published:Updated:

மிஸ்டர் கழுகு: கட்சியினருக்கு செக் வைத்த ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மாவட்டச் செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் ஏற்கெனவே வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால், கட்சித் தலைமை அவர்களுக்கு செக் வைத்துவிட்டது. ‘

மிஸ்டர் கழுகு: கட்சியினருக்கு செக் வைத்த ஸ்டாலின்!

மாவட்டச் செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் ஏற்கெனவே வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால், கட்சித் தலைமை அவர்களுக்கு செக் வைத்துவிட்டது. ‘

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

கழுகார் நுழைந்தவுடன் அவர் கையில் ஜிலேபியைக் கொடுத்தோம்... “நீர் சொன்னதுபோலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 20 நாள்களுக்குள் வந்துவிடும் போலிருக்கிறதே... அதற்காகத்தான் ஸ்வீட்...” என்றோம். ஜிலேபியைச் சுவைத்தபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“மழை, வெள்ளம் அதிருப்தி, பொங்கல் பொருள்கள் குளறுபடி ஆகிய காரணங்களால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கவே தமிழக அரசு விரும்பியது. ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதற்கு வழியில்லாமல் போகவே உளவுத்துறையை வைத்து ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘தற்போது தேர்தல் நடத்தினாலும் 90 சதவிகித வெற்றி உறுதி’ என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே தெம்பாகத் தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க அரசு. இது பற்றி அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியபோது, ‘மக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென்றால், துணைநிலை ராணுவப் பாதுகாப்பு தேவை’ என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தார்கள். பா.ஜ.க சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், ‘தமிழக முதல்வரின் கொளத்தூர் தொகுதி, அமைச்சர்கள் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதி, மா.சுப்பிரமணியனின் சைதை தொகுதி ஆகியவற்றில் கண்டிப்பாக துணைநிலை ராணுவப் பாதுகாப்பு வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.”

“ஓஹோ... தி.மு.க-விலும் உட்கட்சித் தேர்தல் நடக்கிறதாமே?”

“ஊராட்சி, கிளை, ஒன்றியம் ஆகிய பதவிகளுக்கு படிப்படியாகத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்ததாக மாவட்டச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், சென்னையில் எம்.எல்.ஏ மயிலை வேலு, சிற்றரசு, இளைய அருணா, தேனியில் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இன்னும் மாவட்டப் பொறுப்பாளர்களாகவே தொடர்கிறார்கள். தேர்தல் நடந்தால்தான், மாவட்டச் செயலாளராக முடியும். தவிர, கட்சித் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பொதுக்குழு மூலமே தேர்வாகியிருக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முறைப்படித் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தி.மு.க கட்சியின் சட்ட விதிகளில் உள்ளது. சில இடங்களில் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும், வட்ட, பகுதிச் செயலாளர்களுக்கும் டேர்ம்ஸ் சரியில்லை. தேர்தல் நடந்தால் அடிதடிகூட நடக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சிக்கல் என்னவென்றால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்தது... அப்படி உறுப்பினரான சுமார் 45 லட்சம் பேருக்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோகூட உரிமை இல்லை என்பதும் சட்ட விதியாம்!”

மிஸ்டர் கழுகு: கட்சியினருக்கு செக் வைத்த ஸ்டாலின்!

“தி.மு.க கவுன்சிலர் வேட்பாளர்கள் தேர்விலும் சிக்கலாமே!”

“அதையும் சொல்லிவிடுகிறேன்... மாவட்டச் செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் ஏற்கெனவே வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால், கட்சித் தலைமை அவர்களுக்கு செக் வைத்துவிட்டது. ‘பட்டியலில் இருக்கும் டாப் 10 பேர்களில் இரண்டு பெயர்களை மட்டும் தலைமைக்கு அனுப்புங்கள்’ என்று கூறிவிட்டது. இதை அப்படியே மா.செ-க்களும் சீட் கேட்டவர்களிடம் ஒப்பிக்கவே... ‘இது முன்னரே தெரிந்திருந்தால் கப்பம் கட்டியிருக்க மாட்டோமே’ என்று நொந்துகொள்கிறார்கள்.”

“வடை போச்சு என்று சொல்லும்... அது சரி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்ற ரூட்டில் என்ன பிரச்னை?”

“அதுவா... ஜனவரி 18 அன்று ஆளுநரின் வாகனம் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்குள் என்ட்ரி ஆனது. அதேநேரத்தில் பொங்கல் விடுமுறைக்காகச் சொந்த ஊர் சென்ற பலரும் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்ததால், அன்றைய தினம் இரவு நூற்றுக்கணக்கான கார்களும், பஸ்களும் புறநகரைத் திணறடித்தன. அப்போது, ‘ஆளுநர் வரும் ரூட்’ என்று சொல்லி ஆங்காங்கே வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் போலீஸார். பெருங்களத்தூரிலிருந்து வலதுபுறம் திரும்பி பாலத்தில் ஏறி இறங்கினால் தாம்பரம் வந்துவிடும். ஆனால், பாலத்தில் போக்குவரத்தைத் தடைசெய்த காவல்துறை, வாகனங்களையும் பல கிலோமீட்டர் சுற்றவிட்டிருக்கிறது. சுற்றிவிட்டு தாம்பரத்தை அடையும்போது இரவு 10 மணியைத் தாண்டிவிட்டது. இரவு லாக்டெளன் என்பதால் வாகன ஓட்டிகளிடம் போலீஸார் அபராதம் விதிக்க... பலரும் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்!”

“நம் காவல்துறைக்கு என்னதான் ஆச்சு... ரெய்டில் கூடுதல் தகவல்கள் ஏதேனும் உண்டா?”

“பெரிய முதலையையே தப்பவிட்டிருக்கிறார்கள். கமலின் புதுப்படப் பெயர்கொண்ட ஒருவர்தான் உயர்கல்வித்துறையின் ‘கேட்-வே’ என்கிறார்கள். தனியார் கல்லூரிகளின் முதலாளிகள், பல்கலைக்கழகங்களில் பெரும் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்ததாரர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் மீடியேட்டராகச் செயல்பட்டவர் இவர்தான். துறை சார்ந்த புள்ளிகள் இவரை ‘வாங்க கேஷியர்...’ என்றே அழைப்பார்கள். அன்பழகன் பதவியில் இருந்தபோதும் சரி... இப்போதும் சரி... தொடர்ந்து நட்பில் இருந்துவருகிறார் கேஷியர். அந்தமான், புனே உள்ளிட்ட சில விமான நிலையங்களில் வேறு பெயர்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்பவர், தற்போதைய பவர்ஃபுல் அமைச்சரிடமும் நல்ல தொடர்பில் இருக்கிறார். கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும் இந்த கேஷியர் மூலமாகவே அந்த பவர்ஃபுல் அமைச்சரை அணுகி, தங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டுவருகிறார்கள். ஆனால், இவர்மீது ஏனோ லஞ்ச ஒழிப்புத்துறையின் பார்வை படவில்லை!” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதை அருந்தியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

சரோஜா
சரோஜா

“அடுத்த அட்டாக்குக்குத் தயாராகிறது தமிழக அரசு. அநேகமாக முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா மீது நடவடிக்கை பாயலாம். சரோஜாவுக்கு எதிராக அவரின் உறவினர் குணசீலன் என்பவர் கொடுத்த மோசடிப் புகாரில் சரோஜா மீது 406, 420, 506/1 ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சரோஜாவும், அவரின் கணவரும் தலைமறைவானதோடு, மூன்று முறை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ‘வழக்கை இரு தரப்பும் பேசித் தீர்த்துக்கொள்கிறோம்’ என்று எம்.எல்.ஏ., எம்.பி-க்களுக்கான சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் சரோஜா மனுத்தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து குணசீலனும், சரோஜாவின் கணவரும் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அப்போது, ‘15 லட்ச ரூபாய் கொடுக்கிறோம். கேஸை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று மாஜி தரப்பில் சொல்லப்பட... ‘நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம் குணசீலன்” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* பவர்ஃபுல் மாண்புமிகு ஒருவர் சமீபத்தில் அவர் வாங்கியிருந்த 300 ஸ்வீட் பாக்ஸ்களுக்கும் மேலான கடன்களை அடைத்திருக்கிறார். குறுகியகாலத்தில் இவ்வளவு ஸ்வீட் பாக்ஸ் எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்துவருகின்றன மத்திய கண்காணிப்பு அமைப்புகள்.

* முன்னாள் பவர்ஃபுல் மாஜியின் இடங்களில் ரெய்டு நடந்தபோது, அவரிடம் உதவியாளராக இருந்த அரசு அதிகாரி ஒருவர் தற்போது நகரமைப்புத்துறையில் இருக்கிறார். ரெய்டின்போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளவில்லை. காரணம், உதவியாளருக்கு வேண்டப்பட்ட பெண்மணி ஒருவர் முதன்மை யானவர் வீட்டில் பணி செய்வது தானாம். அவரை வைத்து தனக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்ட உதவியாளர், இனியும் அரசு வேலையில் தொடர்ந்தால் சேர்த்த சொத்துகளுக்குச் சேதாரம் வந்துவிடுமோ என்று விருப்பு ஓய்வு கேட்டிருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism