அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘ஸ்வீட்டும் போச்சு... பதவிக்கும் ஆபத்து...’ - கதர்ச் சட்டைக்குள் கத்திச் சண்டை!

காங்கிரஸ் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
காங்கிரஸ் கூட்டம்

முதன்மையானவர் எடுத்த முயற்சிதான் காரணம். ஆரம்பத்திலேயே, ‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வேட்பாளராக வேண்டும்’ என்ற தன் விருப்பத்தை காங்கிரஸிடம் சொன்னது தி.மு.க

பட்டமளிப்பு விழா உடையோடு வந்திறங்கிய கழுகாரை, குட்டி சமோசாக்களோடு வரவேற்றோம். “ஒரு பக்கம், ‘அரசியல் அமைப்புச் சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும்’ என்று கருத்தரங்கு நடத்திவிட்டு, இன்னொரு பக்கம் ஆளுநரோடு விருந்துண்ண அமைச்சர்களை அனுப்பியிருக்கிறதே தி.மு.க?” என்று கேட்டோம்.

“ ‘கண்டித்த டெல்லி... கைவிட்ட பா.ஜ.க... ஆளுநரின் யூ டர்ன் பின்னணி’ என்று கவர் ஸ்டோரி வெளியிட்டுவிட்டு ஒன்றுமே தெரியாததுபோலக் கேட்கிறீரே... குடியரசு தின விழாவுக்குள் ஆளும் அரசுடன் ‘பழம்’விட நினைக்கிறார் ஆளுநர். பொங்கல் விழாவையொட்டி ஆளுநர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழில் தவிர்க்கப்பட்ட, ‘தமிழ்நாடு, அரசின் கோபுர இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு, தைத் திங்கள்’ போன்றவையெல்லாம் குடியரசு தினவிழா அழைப்பிதழில் வழக்கம்போல இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பனுடன் உணவருந்தியதுகூட ஆளுநரின் முன்னெடுப்புதானாம். விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் இருவரும், தான் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்துக்கு அருகிலேயே தங்கியிருக்கும் தகவலை அறிந்த ஆளுநர் தரப்புதான், ‘மதிய உணவைச் சேர்ந்து சாப்பிடலாமே?!’ எனச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறது. முதலில் தயங்கினாலும், தலைமையிடம் ஒப்புதல் வாங்கி, ஆளுநருடன் மதிய உணவு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். பட்டமளிப்பு விழாவில்கூட, சர்ச்சைப் பேச்சை தவிர்த்துவிட்டார் ஆளுநர்.”

மிஸ்டர் கழுகு: ‘ஸ்வீட்டும் போச்சு... பதவிக்கும் ஆபத்து...’ - கதர்ச் சட்டைக்குள் கத்திச் சண்டை!

“எது எப்படியோ, தேவையற்ற மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து ஆக்கபூர்வமான விவகாரங்களில் கவனம் செலுத்தினால் சரிதான்... ‘போட்டியிட மாட்டேன்’ என அறிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிறகு எப்படிப் போட்டியிடும் முடிவுக்கு வந்தார்?”

“முதன்மையானவர் எடுத்த முயற்சிதான் காரணம். ஆரம்பத்திலேயே, ‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வேட்பாளராக வேண்டும்’ என்ற தன் விருப்பத்தை காங்கிரஸிடம் சொன்னது தி.மு.க. ஆனால், ஈ.வி.கே.எஸ் குடும்பத்தினர் போட்டியிட மறுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘போட்டியிட வேறு யாருக்கும் விருப்பம் இருக்கிறதா?’ என மாநில காங்கிரஸ் கட்சி, ‘ஸ்வீட்’ஆன பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. இந்த விவகாரம் உளவுத்துறை மூலம் முதன்மையானவரின் கவனத்துக்குச் செல்ல, அவரே இளங்கோவனைத் தொடர்புகொண்டு, ‘நீங்கள்தான் போட்டியிட வேண்டும்’ என அன்புக் கட்டளை போட்டாராம். அதையடுத்தே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்கிறார்கள். ‘காங்கிரஸ் வேட்பாளரை தி.மு.க முடிவுசெய்வதா?’ என்ற கோபத்தைவிட, ‘ச்சே... ஸ்வீட் போச்சே...’ என அப்செட்டாகிவிட்டதாம் சத்தியமூர்த்தி பவன்.”

“வேட்பாளர் அறிவிப்பு தொடங்கி, ஆதரவு கேட்பது வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை எங்குமே பார்க்க முடியவில்லையே?”

“அதுமட்டுமா... மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் கே.எஸ்.அழகிரி பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் இந்தக் கூட்டம் தொடர்பாக கே.எஸ்.அழகிரிக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். சட்டெனச் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றவர், ‘தவிர்க்க முடியாத காரணத்தால், கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. நான் வருவதற்கு தாமதமாகும். எனவே, இருப்பவர்களைவைத்து ஆலோசனை செய்து வேட்பாளரை அறிவித்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம்.”

“அப்படியென்ன அவருக்குக் கோபம்?”

“ரூபி மனோகர் விவகாரத்தில் கட்சி அலுவலகத்தில் ஒரு கலவரம் நடந்தது அல்லவா... அது தொடர்பாக அழகிரிமீது புகார் கொடுக்க டெல்லிக்குச் சென்ற கோஷ்டிக்கு ஈ.வி.கே.எஸ்-தான் தலைமை தாங்கிச் சென்றார். அந்தக் கோபத்தைக் காட்டவே இப்படியெல்லாம் நடந்துகொள் கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அழகிரியின் நடவடிக்கையால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தினேஷ் குண்டுராவ், இது குறித்து டெல்லிக்கு `நோட்’ அனுப்பிவிட்டாராம்...”

“அட...”

“இதையும் கேளும். அழகிரியைப்போல கோபத்தை வெளிப்படையாகக் காட்டவில்லையே தவிர, மற்றொரு ‘வெல்த்’தான தலைவருக்கும்கூட இளங்கோவனை வேட்பாளராக அறிவித்ததில் வருத்தம்தான் என்கிறார்கள். அவர் வெற்றிபெற்று வந்துவிட்டால், சீனியர் என்ற முறையிலும், தி.மு.க-வுக்கு நெருக்கமானவர் என்ற வகையிலும் சட்டமன்றத்தில் முக்கியத்துவம் பெற்றுவிடுவார். சபையில் தனக்கிருக்கும் முக்கியத்துவமும், மீடியா வெளிச்சமும் ஒட்டுமொத்தமாக இளங்கோவனுக்குச் சென்றுவிடும் எனக் கவலைப்படுகிறாராம் அவர். ‘அடுத்த தலைமை நாம்தான்’ என்ற அவரது நம்பிக்கையையே இந்த வேட்பாளர் தேர்வு லேசாக அசைத்துப் பார்த்திருப்பதாலேயே இந்த அப்செட் என்கிறார்கள். கதர்ச் சட்டைக்குள் நடக்கும் இந்தக் கத்திச் சண்டையில் தி.மு.க-வினர்தான் விழி பிதுங்குகிறார்கள்...”

மிஸ்டர் கழுகு: ‘ஸ்வீட்டும் போச்சு... பதவிக்கும் ஆபத்து...’ - கதர்ச் சட்டைக்குள் கத்திச் சண்டை!

“ஓ.பி.எஸ்-ஸின் குஜராத் பயணம் பற்றிய விசேஷத் தகவல் எதுவும் இருக்கிறதா?”

“போனது, அகமதாபாத்திலுள்ள தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவுக்குத்தான் என்றாலும், போன நோக்கம், ‘பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்கள் சிலரைச் சந்தித்து இடைத்தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க-வை போட்டியிடவைத்துவிட வேண்டும்’ என்பதாகத்தான் இருந்திருக்கிறது. மீண்டும் கட்சியில் இடம் பிடிப்பதற்கு இந்த இடைத்தேர்தலை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப் பார்க்கிறார் ஓ.பி.எஸ். ‘பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவளிக்கத் தயார்’ என்று வெட்கத்தைவிட்டு அவர் அறிவித்தும்கூட, மாநில பா.ஜ.க-விலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. ‘இவர்களை நம்பிப் பயனில்லை. நேரடியாக தேசியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி, இதற்கொரு முடிவுகட்ட வேண்டும்’ என்ற நோக்கத்தில்தான் அழையா விருந்தாளியாக குஜராத்துக்குப் பயணித்திருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால், ‘இப்போது பேசுவதற்கு நேரமில்லை. அடுத்த முறை வரும்போது சொல்லிவிட்டு வாருங்கள்’ என்று கூறி `டாடா’ காட்டிவிட்டார்களாம் பா.ஜ.க-வினர். சுவரில் அடித்த பந்துபோலத் திரும்பி வந்திருக்கிறார் ஓ.பி.எஸ்.”

“கால்வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியாக இருந்தால் என்ன பண்ணுவார் மனுஷன்?!”

“ஓ.பி.எஸ் குஜராத்துக்குப் போய்விட்டு வந்த அதேநாளில் தேனி மாவட்டம், கம்பத்துக்குச் சென்றிருக்கிறார் எடப்பாடி. கூடலூர் நகரச் செயலாளர் இல்லத் திருமணத்தைக் காரணம் காட்டி, ஓ.பி.எஸ்-ஸின் சொந்தத் தொகுதியிலேயே கெத்துகாட்டுவதுதான் அவரது திட்டம். அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, அவரது முதல் வருகை என்பதால் தடபுடல் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்” என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீ கொடுத்தோம். அதைப் பருகியபடி அடுத்த செய்திகளுக்குத் தாவினார்...

மிஸ்டர் கழுகு: ‘ஸ்வீட்டும் போச்சு... பதவிக்கும் ஆபத்து...’ - கதர்ச் சட்டைக்குள் கத்திச் சண்டை!

“துறை மாற்றப்பட்ட பிறகு முதன்முறையாக நீலகிரிக்குச் சென்ற அந்த அமைச்சர், தனியார் விடுதியில் தங்கி அவலாஞ்சி, அப்பர் பவானி எனச் சுற்றுலா அழைத்துச் செல்லச் சொல்லி உள்ளூர் கவுன்சிலர்களை வதைத்தெடுத்திருக் கிறார். அமைச்சர்தானே என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த உடன்பிறப்புகள், ‘டூர் பிளான்’ இரண்டு நாள்களைத் தாண்டியதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். அடுத்து, முதுமலை சரணாலயத்துக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார். ‘அமைச்சர் வருகிறார்’ என, பிற்பகலிலிருந்து வளர்ப்பு யானைகளோடு அதிகாரிகளும் காத்துக்கிடந்து நொந்துபோயிருக்கிறார்கள். சாவகாசமாக வந்த அமைச்சர் பெயருக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் ‘ஆய்வு’ செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். ‘இந்த மாதிரி ஆய்வை இதுவரை பார்த்ததேயில்லை’ என அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் புலம்பித் தீர்க்கிறார்கள்” என்ற கழுகார்.

“குடியரசுத் தினக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள் கோட்டையில். அதையடுத்து, ஏ.டி.எஸ்.பி-யாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் எஸ்.பி-யாக பதவி உயர்வு வழங்கப்படவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். நல்ல இடத்தில் போஸ்ட்டிங் வாங்கிவிட வேண்டும் என வாரிசு சேனலிலிருக் கும் ஐ.பி.எஸ் அதிகாரியின் தம்பியான ‘ஷ்’ பிரமுகரைச் சந்தித்து, இப்போதே ஸ்வீட் மழை பொழியத் தொடங்கியிருக்கிறார்களாம் அதிகாரிகள் பலர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.