Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘பொங்கல்’ வைத்த நிறுவனங்களுக்கே புது டெண்டர்! - புலம்பும் அதிகாரிகள்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

கடந்த வாரம் முதல்வருக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்தான் முதல்வர் சூடாகக் காரணம் என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: ‘பொங்கல்’ வைத்த நிறுவனங்களுக்கே புது டெண்டர்! - புலம்பும் அதிகாரிகள்

கடந்த வாரம் முதல்வருக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்தான் முதல்வர் சூடாகக் காரணம் என்கிறார்கள்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“எல்லாருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்...” என்று சொன்னபடியே உற்சாகமாக என்ட்ரி கொடுத்தார் கழுகார். மினி ஜாங்கிரிகளை நீட்டினோம், ஒன்றை எடுத்துக் கொஞ்சமாக ருசித்தவரிடம், அதே உற்சாகத்தோடு கேள்வியை முன்வைத்தோம்...

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை வலைவீசிப் பிடித்துக் கொண்டிருக்கிறதாமே அ.தி.மு.க?”

“ஆமாம். தி.மு.க-வில் நேர்காணல் முடிந்து இரண்டிரண்டு பேர் அடங்கிய பட்டியலைத் தலைமைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால், அ.தி.மு.க-விலோ இப்போதுதான் அவசர அவசரமாகப் பல மாவட்டங்களில் நேர்காணலே நடந்துவருகிறது. பல இடங்களில் போட்டியிடுவதற்கு ஆட்கள் தயாரில்லையாம். தென்மாவட்டம் ஒன்றில் நடந்த நேர்காணலில் ‘போட்டியிட்டா கட்சி பணம் தருமா?’ என்று மாவட்டச் செயலாளரிடம் நேரடியாகவே ஒருவர் கேட்க, மழுப்பலாக ‘பார்க்கலாம்’ என்றிருக்கிறார் மா.செ. அந்தப் பேரூராட்சியில் ஒரு வேட்பாளர் மட்டுமே அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்வந்திருக்கும் நிலையில், நீங்கள் கேட்டதுபோல வேட்பாளர்களை வலைவீசித்தான் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நெல்லை

அ.தி.மு.க-வில் மேயர் பொறுப்பைக் கைப்பற்ற முக்கிய நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை. இதனால், அந்த மாநகராட்சியைத் தங்கள் வசமாக்க பா.ஜ.க காய்நகர்த்த ஆரம்பித்துள்ளது. பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி மேயருக்கான இடத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வை வலியுறுத்த ஆரம்பித்துள்ளார். இப்படித்தான் பல இடங்களில் வேட்பாளர்கள் கிடைக்காத திண்டாட்டத்தில் உள்ளது அ.தி.மு.க.”

“பொன்விழா கண்ட கட்சிக்கே இந்த நிலையா? சரி... பொங்கல் பரிசு விவகாரத்தில் பொங்கிவிட்டாரே முதல்வர்?”

“உண்மைதான். பல இடங்களிலிருந்தும் அடுத்தடுத்து வந்த புகார்களால் கடுமையாக அப்செட்டாகிவிட்டாராம் முதல்வர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ‘பொங்கல் தொகுப்பில் எந்த முறைகேடும் இல்லை’ என விளக்கம் கொடுத்த அடுத்த சில தினங்களில் முதல்வர், ‘பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்த நிறுவனங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சொன்னது, அமைச்சர் தரப்பை அதிர்ச்சியடையச் செய்துவிட்டதாம். கடந்த வாரம் முதல்வருக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்தான் முதல்வர் சூடாகக் காரணம் என்கிறார்கள். முக்கிய அதிகாரிகளை அழைத்து, ‘பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் என்ன நடந்தது?’ என்று விசாரித்திருக்கிறார். அதோடு ‘டெண்டர் எடுத்து முறைகேடு செய்த நிறுவனங்களை பிளாக் லிஸ்ட் செய்யுங்கள்’ என்று சீறியிருக்கிறார்!”

மிஸ்டர் கழுகு: ‘பொங்கல்’ வைத்த நிறுவனங்களுக்கே புது டெண்டர்! - புலம்பும் அதிகாரிகள்

“முதல்வருக்குத் தெரியாமலா இந்த நிறுவனங்கள் சப்ளையில் இறங்கின?”

“பொங்கல் தொகுப்பை வழங்கிய நிறுவனங்கள், ஒரு சிண்டிகேட் அமைத்து அமைச்சர் முதல் முதல்வர் தரப்பு வரை ஒரு லாபியை ஆரம்பத்திலேயே செட் செய்துவிட்டார்கள். ‘பொருள்கள் விநியோகம் நடந்தால் சரி’ என்று அதிகாரிகளும் அமைதியாக இருந்துவிட, தரமில்லாத பொருள்களை மக்கள் தலையில் கட்டிவிட்டன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். பொங்கல் தொகுப்பில் கேந்திரியா பந்தர்,

ஐ.எஸ்.பி, அருணாச்சலா எண்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களே ஒப்பந்தம் எடுத்தன. அதில் கேந்திரியா பந்தர் நிறுவனத்தின் பின்புலத்தில், திருப்பூர் நிறுவனமும், ஐ.எஸ்.பி நிறுவனத்தின் பின்புலத்தில் சர்ச்சைக்குரிய முட்டை நிறுவனமும் இருந்துள்ளன. இப்போது முதலாவதாக, கேந்திரியா பந்தர் நிறுவனத்துக்கும், அருணாச்சலா என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்க அரசுத் தரப்பு தயாராகியுள்ளதாம்.”

“ஒஹோ!”

“இதில் கொடுமை என்னவென்றால், பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் இதே நிறுவனங்களே சத்தமில்லாமல் நியாயவிலைக் கடைகளுக்கான பருப்பு சப்ளைகளையும் கையில் எடுத்துள்ளன. கடந்த மே மாதம், 200 கோடி மதிப்பிலான பருப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் குளறுபடி ஏற்பட, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது. மீண்டும் புதிய டெண்டர் விடப்பட்டு, ஒரு கிலோ ரூ.88.90 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, சில நிறுவனங்களுக்குப் பருப்பு சப்ளைக்கான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் முதலிடத்தில் அருணாச்சலா என்டர்பிரைசஸ் நிறுவனமே இடம்பிடித்துள்ளது. அதேபோல் சர்ச்சைக்குரிய முட்டை நிறுவனத்துக்கு நெருக்கமான ஐ.எஸ்.பி நிறுவனமும் இந்த சப்ளைக்கான ஆர்டர் பெற்றுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் குளறுபடி செய்து, முதல்வரின் கோபத்துக்கு ஆளாகிய நிறுவனங்கள், அடுத்த சில நாள்களிலேயே புதிய ஆர்டர்கள் பெற்றுள்ளன. ‘முதல்வருக்குத் தெரிந்துதான் இதெல்லாம் நடக்கின்றனவா?’ என்று அந்தத் துறையிலுள்ள அதிகாரிகளே வேதனைப்படுகிறார்கள்.”

“ஒப்பந்ததாரர்கள் மத்தியில் புதிய சர்ச்சை எழுந்துள்ளதுபோலவே?”

“உமக்கும் அந்தத் தகவல் வந்துவிட்டதா? சில நாள்களுக்கு முன்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை ஒன்றில், நீர்வளத்துறையில் ஒப்பந்ததாரர்களாகப் பதிவுசெய்பவர்கள், இனி ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியதில்லை; மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அந்தந்த மண்டலத் தலைமைப் பொறியாளரிடம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறையில் ஏற்கெனவே ஒப்பந்ததாரர்களாகப் பதிவுசெய்திருந்தாலும், மீண்டும் புதிதாகப் பதிவுசெய்த பிறகே, இனி டெண்டரில் கலந்துகொள்ள முடியும் என அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் முதல்தர ஒப்பந்ததாரரின் பண வரம்பு 75 லட்சத்திலிருந்து 10 கோடியாகவும், இரண்டாம் பிரிவு ஒப்பந்ததாரரின் பண வரம்பு 75 லட்சத்திலிருந்து 5 முதல் 10 கோடி வரையும் மாற்றியுள்ளார்கள். நீர்ப்பாசனத்துறையில் ஒப்பந்ததாராகப் பதிவுசெய்தவர்கள், பொதுப்பணித்துறையில் பணிசெய்ய வேண்டுமானால், தனியாகப் பொதுப்பணித் துறையில் பதிவுசெய்ய வேண்டும் என்பது போன்ற ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.”

“இந்த அறிவிப்பு, புதிதாக ஒப்பந்ததாரர்களாகப் பதிவுசெய்ய வருபவர்களுக்குச் சிக்கலாகுமோ?”

“அதேதான்! தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் பேக்கேஜ் சிஸ்டம் இனி இருக்காது என்று அறிவித்தது. ஆனால், தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், குறிப்பிட்டுள்ள பண வரம்பு என்பதே சில நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்ததாரர்களாகப் பதிவுசெய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய நிறுவனங்களே இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டு பதிவுசெய்ய முடியும் என்பதால், ‘இந்த ஆட்சியிலும் எங்களால் டெண்டரிலேயே கலந்துகொள்ள முடியாதே?’ என்று புலம்புகிறார்கள் ஆட்சி மாற்றத்துக்குக் காத்திருந்த ஒப்பந்ததாரர்கள்.”

மிஸ்டர் கழுகு: ‘பொங்கல்’ வைத்த நிறுவனங்களுக்கே புது டெண்டர்! - புலம்பும் அதிகாரிகள்

“ரெய்டில் சிக்கிய மாஜி அமைச்சருக்கு, அ.தி.மு.க தலைமை, ஆறுதல் சொல்லப்போன கதையையும் கொஞ்சம் விவரியுங்கள்...”

“அதைக் கேட்கிறீர்களா... ஜனவரி 22 -ம் தேதி, தருமபுரி கெரகோடஅள்ளி கிராமத்திலுள்ள கே.பி.அன்பழகனின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எதுவும் பேசாமல், எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், இறுக்கமாக அமர்ந்திருந்த அன்பழகனின் தோள்மீது கைவைத்து, ‘கவலைப்படாதே... ரெய்டு உனக்கு மட்டுமா நடந்துச்சு. நம்ம எல்லோரையும் குறிவெச்சு நடந்துறாங்க. சமாளிப்போம்... விடு’’ என்று எடப்பாடி சொல்ல, அருகிலிருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ‘ஆமாண்ணே... என்னையப் பாருங்க. ரெய்டு நடந்தும் ஜாலியா இல்லையா?’ எனச் சிரிக்க, கடுப்பிலிருந்த அன்பழகன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையாம்” என்று கிளம்பத் தயாரான கழுகார்,

“முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்... கோவை மாநகராட்சியில் தி.மு.க 60-65 வார்டுகளை மட்டுமே கைப்பற்றும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துக்கிட்டிருக்கிறதாம். இதனால், தி.மு.க உறுப்பினர்கள் நேர்காணலின்போது, ‘வெற்றி மட்டும்தான் முக்கியம். ஒருவேளை, அந்த வெற்றி வாய்ப்பு எதிர்க்கட்சி வசம் இருந்தால், என்ன செய்தும் அதை நம் வசமாக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் வெற்றி வாய்ப்பை விட்டுவிடக் கூடாது’ என்று கோவை நிர்வாகிகளிடம் கறாராகச் சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி” என்றபடி சிறகை விரித்தார்!

ஜனவரி 23-ம் தேதி அன்று, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் இதற்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தில், 126-வது பிறந்ததினம் என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. ‘அரசு வெளியிடும் அறிவிப்பிலேயே இத்தனை குளறுபடிகளா?’ என்று விமர்சனம் எழுந்துள்ளது!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* மேற்கு பக்கம் உள்ள அமைச்சரின் துறையில், அந்தப் பெண் அதிகாரியின் கை ரொம்பவே ஓங்கியிருக்கிறதாம். துறையில் முக்கிய முடிவுகள் எதையும் சுயமாக எடுக்க முடியாமல் திணறுகிறாராம் அந்த அமைச்சர். அதிகாரியின் கணவர் வெயிட்டான பதவியில் இருப்பதால், அமைச்சரால் எதுவும் பேச முடிவதில்லையாம். யாராவது அவரைத் தேடிவந்தால்கூட, “அந்தம்மாவைப் பாருங்க.” என்று விரக்தியாகச் சொல்லிவிடுகிறாராம்!

* கட்சிக்குள் தனது செல்வாக்கை நிலைநிறுத்த, தனது சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் மூலம் அப்பாவுக்கு நெருக்கமாக இருந்து, தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ள மூத்தவர்களுக்குத் தூது அனுப்பிவருகிறார் அந்தப் பெண் தலைவர். விரைவில் விவகாரம் பெரிதாகலாம் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism