Published:Updated:

மிஸ்டர் கழுகு: அதிரடி காட்டிய கனிமொழி... ஆத்திரத்தில் ஆளும் அரசு!

“தி.மு.க தலைவரின் குடும்பத்தில் ஏதோ வருத்தம் என்கிறார்களே?”

பிரீமியம் ஸ்டோரி
“கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி...” பாடலை முணுமுணுத்தபடியே ஹேங்அவுட்ஸில் காட்சியளித்தார் கழுகார்.

“தி.மு.க தலைவர் ஸ்டாலினின் புதிய ஹேர் ஸ்டைல் உம்மையும் ஈர்த்துவிட்டதோ?” கண்சிமிட்டலுடன் தொடங்கினோம். வறுத்த முந்திரியைக் கொறித்தபடி கழுகார், “எல்லாம் மகன் உதயநிதியின் அட்வைஸாம். ஜிம்மில் சில உடற்பயிற்சிகளை சொல்லிக்கொடுத்த கையோடு ஹேர் ஸ்டலையும் மாற்ற வற்புறுத்தினாராம். `எதுக்குப்பா இதெல்லாம்...’ என்றபடி மிகவும் வெட்கத்துடன்தான் புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறச் சம்மதித்தாரம் ஸ்டாலின்’’ என்றவர், “தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது” என்றபடி செய்திக்குள் தாவினார்.

“காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் உடல்நலக்குறைவால்தான் இறந்ததாக முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த நாடார் சமூக அமைப்புகள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றன. `ஏற்கெனவே தென் மாவட்டங்களில் எந்தத் தொழில் வளர்ச்சியும் இல்லை, அமைச்சரவையிலும் பிரதிநிதித்துவம் இல்லை’ என ஏகக் கடுப்பில் இருக்கும் நாடார் சமூக அமைப்பினர், சாத்தான்குளம் விவகாரத்தால் உஷ்ணத்தின் உச்சிக்கே போயிருக்கிறார்கள்.’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“கோபம் இன்னும் அதிகரித்தபடியேதானே இருக்கிறது.”

“தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடார் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார். இந்த விவகாரத்தை முதல் ஆளாகக் கையிலெடுத்த தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி டி.ஜி.பி-யிடம் புகாரளித்தார். தொடர்ந்து, அலைபேசியில் தூத்துக்குடி ஆட்சியர், தூத்துக்குடி எஸ்.பி மற்றும் தென்மண்டல ஐ.ஜி ஆகியோரை அழைத்தவர், துரித நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி யிருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடமும் அலைபேசியில் பேசி ஆறுதல் கூறியிருக்கிறார். ட்விட்டரிலும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். கனிமொழியின் அடுத்தடுத்த இந்த அதிரடிகளைப் பார்த்து அரசுத் தரப்பு கடுப்பாகிவிட்டது!”

“அந்தக் கோபத்தில்தான் கனிமொழிக்கு அளித்துவந்த போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டார்களோ?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள்... மீண்டும் பாதுகாப்பைக் கொடுத்துவிட்டார்கள். அதன் பின்னணியைச் சொல்கிறேன்... கேளும். கனிமொழி டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துவிட்டு வந்த 23-ம் தேதி இரவே எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்காக, கனிமொழியின் சி.ஐ.டி காலனி வீட்டுக்கு வந்துள்ளனர். ‘போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற இரவில்தான் வர வேண்டுமா?’ எனக் கிண்டலாக கேட்டுவிட்டு, பாதுகாப்புக்கு நின்ற காவலர்களை அப்போதே கிளம்பிப்போகச் சொல்லிவிட்டாராம் கனிமொழி. உடனடியாகத் தன் அண்ணன் ஸ்டாலினை அழைத்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

“ம்ம்ம்...”

“ஸ்டாலின், ‘அப்படியாம்மா, சரி பார்த்துக் கலாம் விடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து ஸ்டாலின் தரப்பிலிருந்தும் உயரதிகாரி ஒருவரிடம் பேசப்பட்டதாம். ‘என்னங்க இது... சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு..’ என்று அவரிடம் போனில் சீறினாராம் ஸ்டாலின். அதற்கு அந்த அதிகாரி, ‘கொரோனா பாதுகாப்புக்கே ஆளுங்க பத்தலை’ என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார். இந்த விவகாரம் சீரியஸானதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் கனிமொழி வீட்டுக்குப் பாதுகாப்புக்கு போலீஸாரை அனுப்பிவிட்டது தமிழக அரசு. இதற்கிடையே அன்றைய தினம் அதிகாலையே தனியாளாக சாத்தான்குளத்துக்கு கிளம்பிவிட்டார் கனிமொழி.”

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

“அ.தி.மு.க மீது டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தியில் இருக்கிறாராமே?”

“ `இந்தக் குதிரை ஓடாது’ என முடிவெடுத்து விட்டார்போல. உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுவிக்கப்பட்டதற்கு துணை முதல்வரை மறைமுகமாகச் சாடியிருக்கிறார் கிருஷ்ணசாமி. இதைவைத்து தெற்கில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். கிருஷ்ணசாமி எடுத்துள்ள இந்தச் சாதி அஸ்திரம், அ.தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிரமாக வேலை செய்யும் என்கிறார்கள்.”

“தி.மு.க தலைவரின் குடும்பத்தில் ஏதோ வருத்தம் என்கிறார்களே?” என்றோம். தலையை ஆட்டி ஆமோதித்த கழுகார், சூடாக ஃபில்டர் காபியை உறிஞ்சியபடி தொடர்ந்தார்.

“கிச்சன் கேபினெட் தரப்பிலிருந்து, ‘ஐபேக் நிறுவனத்துக்கு இத்தனை கோடிகள் செலவு செய்தது ஒன்றும் பெரிதாகப் பலனளிக்கவில்லையே...’ என்று ஓப்பனாகவே பேச ஆரம்பித்து விட்டார்களாம்.”

“கடுகு, புளி, மிளகாய்ச் செலவுகளிலேயே கறாராக இருக்கும் கிச்சன் கேபினெட் தரப்பு இவ்வளவு பெரிய செலவு விஷயத்தில் சும்மா விடுமா என்ன?’’

“செனடாப் சாலை அலுவலகத்துக்கு வந்து சென்ற ஐபேக் நிறுவனப் பணியாளர்களையும் கொரோனா பீதியால், `வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள். இப்போது அந்த நிறுவனத்தின் பணி என்ன என்பதே தி.மு.க-வின ருக்கு புரியவில்லையாம். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை எனக் கட்சியினரிடையே சலசலப்பு எழுந்துள்ளது. இதில் ஐபேக் நிறுவனத் துக்கும் வருத்தம். இதனால், தங்கள் பணியை வெகுவாக குறைத்துக் கொண்டார்களாம்.”

“சரிதான்...”

“ஐபேக் நிறுவனத்துக்கு மாதம் இத்தனை கோடி என்று பேசப்பட்டிருக்கிறது. தி.மு.க-வில் பசையுள்ள பிரமுகர்கள் ஆளுக்கொருவர்வீதம் மாதம் ஒரு முறை சுழற்சிமுறையில் அந்தத் தொகையைக் கொடுக்க உத்தரவு. இடையில் ஒரு மாதம் தொகையும் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இது பிரஷாந்த் கிஷோரின் கவனத்துக்குச் சென்று வருத்தமாகிவிட்டாராம். ‘மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மாநிலங்களவைக்கு சீட் தருகிறேன்’ என்று பிரசாந்த் கிஷோரிடம் மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறாராம். இதையடுத்து, ‘சென்னையா, கொல்கத்தாவா... எதில் கவனம் செலுத்துவது?’ எனத் தவிக்கிறார் கிஷோர்” என்ற கழுகார், “இரு திராவிடக் கட்சிகளின் வி.ஐ.பி-க்கள் பேசிக் கொண்டதைச் சொல்கிறேன். யார் என்று நீரே கண்டுபிடியும்” என்று கண்சிமிட்டினார். நாமும் சுவாரஸ்யமானோம்.

கனிமொழி, ஸ்டாலின்
கனிமொழி, ஸ்டாலின்

“தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இருவரும் ஒருகாலத்தில் ஒன்றாகப் பயணித்தவர்கள். ஒருவர் இந்நாள் எதிர்க்கட்சி மாவட்டச் செயலாளர். மற்றொருவர் ஆளுங்கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர். இருவர் பெயரிலும் அடிக்கடி அறிக்கைகள் வெளியாகி இருதரப்பிலும் தூள் கிளப்பும். சில நாள்களுக்கு முன்பு ஆளுங்கட்சிப் பிரமுகருக்குப் போனை போட்ட எதிர்க்கட்சி பிரமுகர், ‘எனக்கே தெரியாம தலைமையிலயிருந்து என் பெயர்ல அறிக்கை வெளியாகுது. விஷயம் தெரியாம நீ ஏம்ப்பா என்னையப் போட்டு தாக்குறே...’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

“சொல்லும்... சொல்லும்... யார் என்று யூகிக்க முடிகிறது!”

“அதற்கு ஆளுங்கட்சி பிரமுகர், ‘அட நீங்க வேறங்க அண்ணே. முன்னே மாதிரி இப்ப டெண்டர் எதுவும் கைக்கு வர்றது இல்லை. மாவட்டச் செயலாளர் பதவியையும்

பறிச்சுட்டானுவ. கட்சிப் பதவி இருந்தாத்தான் அடுத்தமுறை எம்.எல்.ஏ சீட்டே கிடைக்கும். உங்களை அறிக்கையில அடிச்சா, எங்க தலைமை குஷியாகி, பதவி கொடுக்கும்ல...’ என்று சொல்லியிருக்கிறார். இருவரும் ஆமோதித்தபடியே புண்பட்ட மனதை பரஸ்பரம் தேற்றிக் கொண்டார்களாம்” என்ற கழுகார், காபியைப் பருகிவிட்டு அடுத்த செய்திக்குள் தாவினார்.

“சமீபத்தில் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி ஆவினில் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்தாயிரம் லிட்டர் பால் கீழே கொட்டப்பட்டது. ‘குளிரூட்டும் வசதி போதவில்லை’ என அதிகாரிகள் தரப்பில் விளக்கமளித்தனர். இந்த விவகாரத்தை ஓ.பி.எஸ் பார்வைக்கு ராஜா கொண்டுபோயிருக்கிறார். கலெக்டரை அழைத்த ஓ.பி.எஸ், ‘தேனி ஆவினுக்குப் புதிய கட்டடம் கட்ட உடனே இடம் தேர்வு செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளார். ‘கொரோனா பிஸியில் இடம் தேடும் வேலை அவசியம்தானா?’ என்று எதிர்த்தரப்பில் சிலர் கொந்தளித்துள்ளார்கள். ஓ.பி.எஸ் தரப்போ, ‘ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருளான பால் வீணாகப் போவது மட்டும் சரியா?’ என்று எகிறியிருக்கிறார்கள்.”

“கஷ்டமப்பா... சரி, முதல்வர் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்?”

‘‘சில ஆட்சியர்கள், ‘மண்டலரீதியாகப் போக்குவரத்தைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சொன்னதை முதல்வர் ஏற்றிருக்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாக சில ஆட்சியர்கள் குறைப்பட்டுள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் முதல்வர். மேலும் இரண்டு வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டதாம்” என்றபடி சிறகுகளை அசைத்து “பை... பை...” சொன்னபடி கிளம்பினார் கழுகார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு