Published:Updated:

மிஸ்டர் கழுகு: சிவசேனா பிளவு தந்த பாடம்... உதயநிதிக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்கள் சந்திப்பில்கூட ஆர்.பி.உதயகுமாரையே பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: சிவசேனா பிளவு தந்த பாடம்... உதயநிதிக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்கள் சந்திப்பில்கூட ஆர்.பி.உதயகுமாரையே பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

எம்.ஜி.ஆர் மாளிகையிலிருந்து வந்த கழுகார், “அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னை இப்போதைக்கு ஓயாதுபோல...” என்றபடி நேரடியாகச் செய்திக்குள் நுழைந்தார்.

“ஜூலை 11-ல் நடக்கும் பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியைக் கொண்டுவருவதற்காக ‘பக்கா பிளான்’ போட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. அது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் மேற்கொண்ட ஆலோசனையில், பல விவகாரங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் என்றால் அது வானகரத்திலுள்ள வாரு மண்டபத்தில்தான் நடத்தப்படும் என்பது எழுதப்படாத மரபு. ஆனால், ‘கடந்த பொதுக்குழு எடப்பாடிக்கு சாதகமாக அமையாததற்கு இடம்தான் பிரச்னை’ என்று ஜோதிடர்கள் சொன்னதால், இம்முறை வேறு இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக மீனம்பாக்கம், கந்தன்சாவடி, ஈ.சி.ஆர் பகுதிகளில் தோதான இடம் தேடிக்கொண்டிருக்கிறது இ.பி.எஸ் தரப்பு. எடப்பாடிக்கு அமோக ஆதரவு இருப்பதைக் காட்ட, சிறப்பு அழைப்பாளர்களையும் கூட்டத்துக்கு அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சிவசேனா பிளவு தந்த பாடம்... உதயநிதிக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!


“ஓ.பி.எஸ் பற்றி எதுவும் பேசப்படவில்லையா?”

“பேசாமல் இருப்பார்களா... ‘ஓ.பி.எஸ் இப்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் இல்லை’ என்று சி.வி.சண்முகத்தைவைத்து ஏற்கெனவே அறிவித்தாகிவிட்டது. ‘நமது அம்மா’ நாளிதழ் தொடங்கி தலைமைக்கழகத்தில் இருந்த பேனர் வரையில் ஓ.பி.எஸ் பெயரையும், படத்தையும் தூக்கிவிட்டார்கள். அடுத்ததாக அவரது பொருளாளர் பதவியையும், வைத்திலிங்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர், மனோஜ் பாண்டியனின் அமைப்புச் செயலாளர் பதவிகளையும் பறிப்பது பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதாகத் தலையைச் சொறிந்திருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். டென்ஷனான எடப்பாடி, ‘வழக்கு விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருங்க... கடந்த முறை எல்லாம் நமக்குச் சாதகமாக இருக்கு... ஜமாய்ச்சுடலாம்னு சொன்னீங்க... ஆனா, அதிகாலையில் எல்லாம் மாறிப்போச்சு’ என்று வழக்கறிஞர் அணியை ஒரு பிடி பிடித்தாராம். ‘அநாவசியமா யாரும் வார்த்தைகளை விட வேண்டாம்... திட்டமிட்ட வேலைகளை மட்டும் செய்யுங்கள்’ என்று கூறியதோடு ‘எல்லாருக்கும் வரவேண்டியதெல்லாம் கரெக்டா வரும்’ என்றும் ஊக்கப்படுத்தியிருக்கிறார்.”

“ம்...”

“ஓ.பி.எஸ் பின்னால் யாரும் சாதிரீதியாக அணி திரளக் கூடாது என்பதால், அவர் சமூகத்து ஆட்களைவைத்தே அவரது இமேஜைக் காலி செய்யவும் எடப்பாடி தரப்பு கங்கணம் கட்டிச் செயல்படத் தொடங்கியிருக்கிறதாம். தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்கள் சந்திப்பில்கூட ஆர்.பி.உதயகுமாரையே பேசச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ‘ஜெயக்குமாரே பேசட்டும்’ என்று உதயகுமார் பின்வாங்கியிருக்கிறார். முன்னதாக, செல்லூர் ராஜூவும், ‘இ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு கொடுக்குறேன்... ஆனால், பன்னீர் அண்ணனைத் தாக்கியெல்லாம் வெளியே பேச மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். ‘ஒற்றைத் தலைமை விவகாரம் இரு சமூகத்துக்கு இடையேயான பிரச்னையாக மாறிவிடக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால், கட்சிக்கு நல்லதல்ல’ என்று மூத்த நிர்வாகிகள் கவலைப்படுகிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சிவசேனா பிளவு தந்த பாடம்... உதயநிதிக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

“ஓ.பி.எஸ் தரப்பில் என்ன மூவ்?!”

“பொதுக்குழுக் கூட்டம் நடந்த சமயத்திலேயே, ‘எதற்கும் இருக்கட்டுமே...’ என்று டெல்லியில் இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளிட்ட மூன்று சட்ட நிபுணர்களை ‘புக்’ செய்து வைத்திருந்தது ஓ.பி.எஸ் தரப்பு. ஓ.பி.எஸ்-ஸுடன் டெல்லிக்குச் சென்ற மனோஜ் பாண்டியன், இந்தப் பிரச்னைகளை சட்டரீதியில் எப்படித் திறமையாக எதிர்கொள்வது என்று ஆலோசனை செய்துவிட்டு வந்திருக்கிறார். பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்கவும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால், பிரதமர் ஜெர்மன் செல்லும் பயணத் திட்டம் இருந்ததால், அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை. எப்படியாவது மோடியைச் சந்தித்து தனக்குத்தான் டெல்லி ஆதரவு இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முயன்ற ஓ.பி.எஸ்-ஸின் முயற்சி வீணானதுதான் மிச்சம்.”

“ஓஹோ...”

“டெல்லியிலிருந்து பெரியகுளத்துக்குத் திரும்பிய ஓ.பி.எஸ் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையிலும் அவர் தரப்பில் கூட்டம் நடத்த முயற்சிகள் நடக்கின்றனவாம். இதை கவனித்த உளவுத்துறை, ‘தொடர்ச்சியாக இப்படி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மாறி மாறிக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என்று மேலிடத்துக்கு அறிக்கை அளித்திருக்கிறார்கள். அப்படி ஏதாவது நடந்தால், ‘நீதிமன்றம் சென்று பிரச்னையைச் சரிசெய்துவிட்டு வாருங்கள்’ என்று கூறிவிட்டு, அதுவரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குப் பூட்டுப்போடும் எண்ணத்தில் இருக்கிறதாம் தி.மு.க அரசு” என்ற கழுகாருக்கு பாதுஷாவும், காராபூந்தியும் கொடுத்தோம். ருசித்துச் சாப்பிட்டவர், தி.மு.க செய்திக்குத் தாவினார்.

“அக்டோபர் மாதம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் இருக்காது என்கிறார்கள். மகாராஷ்டிரா அரசியலில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தால் சிவசேனா கட்சியே இரண்டாகி ஆட்சியே கவிழும் நிலை வந்ததுதான் முதல்வரை இப்படி யோசிக்கவைத்திருக்கிறது. எனவே, உதயநிதியை அமைச்சராக்கும் முயற்சிகளுக்கு இப்போதைக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.”

மிஸ்டர் கழுகு: சிவசேனா பிளவு தந்த பாடம்... உதயநிதிக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

“தி.மு.க அமைச்சர்கள் சிலர் மீது புகார்கள் வருகின்றனவே?”

“ஆமாம். அ.தி.மு.க-வில் மணியான முன்னாள் அமைச்சரின் ஊழலோடு தொடர்புடைய, நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது தி.மு.க அரசு. ஆனால், தி.மு.க-வின் அமைச்சர் தலையீட்டால் அவர்களில் இருவரைத் தப்பிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் மணியானவருக்கு ‘மணி’ சேர உதவியவர்கள் என்றாலும் தன் உறவினர்கள் என்பதாலேயே, தலைமை மூலம் அவர்களைத் தப்பிக்கவைக்க அழுத்தம் கொடுக்கிறாராம் அந்த அமைச்சர்” என்ற கழுகார்,

“இன்னொரு மூத்த அமைச்சரின் வாரிசு, ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியானதும் இன்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கைக்கான வசூல்வேட்டையில் தீவிரமாகக் களமிறங்கிவிட்டாராம். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டிலிருக்கும், ‘100 சதவிகித கேம்பஸ் இன்டர்வியூ’ எனப் பெயர் பெற்ற தனியார் கல்லூரிகளில் மட்டும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு பத்து லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறதாம். இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திலிருக்கும் உயரதிகாரி, தனியாக பி.ஏ ஒருவரையே நியமித்திருக்கிறார். அமைச்சர் தரப்பிலிருந்து துண்டுச்சீட்டில் வரும் விவரங்களைச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சொல்லி சீட் வாங்கிக் கொடுப்பதே அந்த பி.ஏ-வின் தலையாய பணியாம்” என்றபடியே பறந்து சென்றார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், ‘தூங்கா நகரில்’ வீடு மேல் வீடாக வாங்கிக் குவிக்கிறாராம். சமீபத்தில் இரண்டு திருமண மண்டபங்களும், அவர் சொன்ன ஆட்களின் பெயரில் ‘பதிவாகி’யிருக்கின்றன.

* நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் 510 பதவிகளுக்கான இடைதேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க உட்கட்சிக் குழப்பம் காரணமாக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் கொடுப்பதற்கான ‘பி ஃபார்ம்’-ல் கையெழுத்து போட முடியாத நெருக்கடி இருக்கிறது. எனவே, ‘சின்னம் கொடுக்க முடியாதுப்பா... சுயேச்சையாவே போட்டியிடுங்க... பார்த்துக்கலாம்...’ என்று சொல்லிவிட்டதாம் தலைமை.