Published:Updated:

மிஸ்டர் கழுகு: ம்ஹும்... செல்லாது... செல்லாது..! - இ.பி.எஸ் தடாலடியின் பின்னணி

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வை மீட்கும் லட்சியத்தோடு அ.ம.மு.க-வைத் தொடங்கிய தினகரன், இப்போது அ.தி.மு.க-வே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம்.

மிஸ்டர் கழுகு: ம்ஹும்... செல்லாது... செல்லாது..! - இ.பி.எஸ் தடாலடியின் பின்னணி

அ.தி.மு.க-வை மீட்கும் லட்சியத்தோடு அ.ம.மு.க-வைத் தொடங்கிய தினகரன், இப்போது அ.தி.மு.க-வே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

“ஒருவழியாக மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது பா.ஜ.க. சிவசேனா கட்சியை பலவீனப்படுத்தும் வகையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி யிருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வராதுபோல” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார்.

“காலியாக இருக்கும் 510 உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு, இரட்டை இலைச் சின்னம் வழங்க, தானும் கையெழுத்திட வேண்டியிருப்பதால் படிவம் ஏ, பி-யைத் தனக்கு அனுப்பிவைக்க வேண்டும் என இ.பி.எஸ்-ஸுக்குக் கடிதம் எழுதியிருந்தார் ஓ.பி.எஸ். ‘தலைமைச் சண்டைக்கு நடுவிலும், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி போட்டியிடுவது பற்றி அக்கறை காட்டுகிறார்’ என்ற இமேஜை ஏற்படுத்தவும், தான் இறங்கிப்போவதாக, அடிமட்டத் தொண்டர்களிடம் காட்டிக்கொள்ளவுமே இப்படியொரு கடிதம் எழுதினாராம் ஓ.பி.எஸ். இதன் மூலம் ‘இரட்டை இலைச் சின்னத்துக்கு என்னுடைய கையெழுத்தும் வேண்டும் என்பது ஞாபகம் இருக்கட்டும்’ என்பதைச் சுட்டிக்காட்டுவதும் அவரது நோக்கமாக இருந்ததாம். ஆனால், ‘நீங்கள் ஒன்றும் ஒருங்கிணைப்பாளர் இல்லை’ என்றும், ‘கட்சிக்கு எதிராக எல்லா வேலைகளையும் செய்துவிட்டு இப்போது இப்படியொரு கடிதம் ஏன்... செல்லாது... செல்லாது...’ என்றும் தடாலடியாக பதில் எழுதிவிட்டார் இ.பி.எஸ்.”

மிஸ்டர் கழுகு: ம்ஹும்... செல்லாது... செல்லாது..! - இ.பி.எஸ் தடாலடியின் பின்னணி

“ஏன் இவ்வளவு ஆக்ரோஷம்?”

“ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எடப்பாடி தரப்பு எக்குத்தப்பாய் செலவிட்டும், நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. ஜூலை 11-ல் அடுத்த பொதுக்குழு நடக்குமா என்றும் தெரியவில்லை. மாவட்டச் செயலாளர்களும் அடுத்தகட்ட ‘கவனிப்புக்காக’க் காத்திருக்கிறார்கள். இந்தச் சிக்கல்களையெல்லாம் எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கவே இல்லையாம். ‘ஒருவேளை பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமையாக மகுடம் சூட்டிக்கொண்டாலும், இரட்டை இலையைப் பெறுவது சாதாரணமில்லை’ என்று வழக்கறிஞர்கள் கூறியிருப்பதால், பயங்கர டென்ஷனில் இருக்கிறாராம் இ.பி.எஸ். இந்த நேரத்தில், ஓ.பி.எஸ் கடிதம் வந்ததால்தான் உச்சகட்ட கோபத்தில் ரிப்ளே செய்திருக்கிறார் இ.பி.எஸ்.”

“ம்...”

“இவர்களின் சண்டையைப் பயன்படுத்தி, சென்னையைச் சேர்ந்த ஐவர் அணியினர் பெரிய அளவில் கல்லாகட்டிவிட்டார்களாம். ஐவர் அணி தரப்பில் யாரை ஆதரிப்பது என்ற பேச்சுவார்த்தை, முதலில் அவர்களுக்குள் நடந்திருக்கிறது. ‘யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஆதரவு’ என்று ‘கொள்கை’ முடிவெடுத்து பேரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆதரவு குறைவாக இருப்பதால் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளவே ஓ.பி.எஸ் நினைப்பார் என்று முதலில் அவரிடம்தான் பேசினார்களாம். ஆனால், வழக்கம்போல பணத்துக்கு பதில் அவர் புன்னகையை மட்டுமே உதிர்க்க, அடுத்து இ.பி.எஸ் பக்கம் பேசியிருக்கிறார்கள். வெளிநாட்டுத் தலைநகர் பெயரை முன்னொட்டாகக் கொண்ட `பெருமாள்’ மூலம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை ‘இனிப்பாக’ முடியவே, இ.பி.எஸ்-ஸை ஆதரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்களாம்.”

மிஸ்டர் கழுகு: ம்ஹும்... செல்லாது... செல்லாது..! - இ.பி.எஸ் தடாலடியின் பின்னணி

“இன்னொரு பக்கம் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்திருக்கிறதே?”

“கவனித்தேன். அ.தி.மு.க-வை மீட்கும் லட்சியத்தோடு அ.ம.மு.க-வைத் தொடங்கிய தினகரன், இப்போது அ.தி.மு.க-வே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம். ‘அவர்கள் சண்டையில் நாம் நுழைந்தால், நமக்குத்தான் பிரச்னை. கொஞ்சம் நாள் போகட்டும், என்ன ஆகுதுன்னு பார்த்துட்டு பிறகு முடிவெடுக்கலாம்’ என்று கூட்டத்தில் டி.டி.வி சொன்னது நிர்வாகிகளை மேலும் சோர்வாக்கியிருக்கிறது. அதேபோல, ‘உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிடாது. அதைப் பயன்படுத்தி அதிக இடங்களில் வெற்றிபெற்று நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கான வேலையைப் பாருங்க...’ என்றிருக்கிறார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பொதுக்குழு, செயற்குழுவை சென்னை வாரு மண்டபத்திலேயே பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். ‘இருக்குற கொஞ்ச நஞ்சக் காசையும் புடுங்காம விட மாட்டாருபோல’ என்று முணுமுணுத்தபடி சென்றிருக்கிறார்கள் நிர்வாகிகள்.”

“கமலாலயத்தில் என்ன பிரச்னை?”

“செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கே.ஆர்.வெங்கடேஷ் என்பவர், சமீபத்தில்தான் பா.ஜ.க-வில் இணைந்தார். மாநிலச் செயலாளர் ஒருவரின் பரிந்துரையால் அவருக்குச் சேர்ந்ததுமே ஓ.பி.சி அணியில் மாநிலச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த... அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பதவி பறிக்கப்பட்டது. இதற்குக் காரணம், கட்சியின் மாவட்டத் தலைவர் சரவணன்தான் என்றெண்ணிய வெங்கடேஷ், அந்த மாவட்டத்திலுள்ள மற்ற நிர்வாகிகளைச் சந்தித்து, ‘சரவணன் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் கமலாலயத்தில் புகார்களாக அடுக்குங்கள்’ என்று அனுப்பி வைத்திருக்கிறார். கூடவே, பறிபோன பதவியை எப்படியாவது திரும்ப வாங்கிவிட வேண்டும் என்று முன்னணித் தலைவர்கள் பலருக்கும் `அன்பு’ செய்திருக்கிறார் வெங்கடேஷ். இவரது தனி ஆவர்த்தனம் அண்ணாமலைக்கு நெருக்கடியை உருவாகியிருக்கிறதாம்.”

மிஸ்டர் கழுகு: ம்ஹும்... செல்லாது... செல்லாது..! - இ.பி.எஸ் தடாலடியின் பின்னணி

“ஓஹோ”

“அதுமட்டுமல்ல. சமீபத்தில் பண மோசடிப் புகாரில் சிக்கிய, ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவருக்கும் பா.ஜ.க-வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலப் பொறுப்பு வழங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரௌடிகளைக் கட்சியில் சேர்த்ததோடு அவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இப்போது செம்மரக் கடத்தல், பண மோசடி, போலி மருந்து விற்பனை எனப் பொருளாதாரக் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டதாகப் புகார்கள் குவிகின்றன. இதனால், ‘பொருளாதாரக் குற்றவாளிகளின் புகலிடமாகிறது கமலாலயம்’ என்று டெல்லி தலைமைக்குப் புகார்களைத் தட்டியிருக்கிறார்கள் அண்ணாமலைக்கு எதிரான நிர்வாகிகள்” என்ற கழுகாருக்கு ‘இமாம் பசந்த்’ மாம்பழத்தைக் கொடுத்தோம். “மாம்பழத்தில் ஆயிரம் ரகங்கள் இருந்தாலும், இமாம்... இமாம்தான்” என்று மெச்சியபடியே, அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான செய்திகளுக்குத் தாவினார்.

“ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பரிந்துரையுடன் அளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு குழுவின் அறிக்கை பற்றி அமைச்சரவையில் பேசப்பட்டது. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மோசமடைந்துவருவதால், வரி அல்லாத வருவாயை எப்படிப் பெருக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாம். அதன்படி, ‘பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோபாலிடன் சிட்டிகளில் இருப்பதுபோல, தனியார் மதுபானக் கடையுடன்கூடிய பார்களுக்கு அனுமதி அளிக்கலாமா...’ என்கிற யோசனையும் முன்வைக்கப்பட்டதாம்.”

“ம்...”

“அஃபீஷியல் கூட்டம் முடிந்ததும், அன்-அஃபீஷியலாகச் சில விஷயங்களை முதல்வர் பேசினாராம். ‘அமைச்சர்கள் வகிக்கும் துறைகளில் சிறு சிறு டெண்டர்களை அறிவிப்பதில் பிரச்னையில்லை. ஆனால் யாருக்கு டெண்டர் கொடுக்கிறோம் என்பது தனது கவனத்துக்கு வர வேண்டும்’ என்றிருக்கிறார். ‘பிளாக் லிஸ்ட்டில்’ வைக்கப்பட்டிருக்கும் நிறுவனத்துக்கு ஒருபோதும் டெண்டர் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இந்த உத்தரவு என்கிறார்கள். அதேபோல், துறைகளில் நிர்வாகரீதியான மாற்றங்கள் செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தனக்குத் தகவல் தந்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், அமைச்சர்களின் துறைகளில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் தன்னுடைய ‘டாஷ் போர்டுக்கு’ வந்துவிட வேண்டும் என்பதைக் கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகவே சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்ற கழுகார்...

“தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளில் ஆறு பேர் போலீஸார் என்பதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குத் தொடர் தலைவலியாகவே இருந்தது. ஒருவழியாக. முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணனைக் கைதுசெய்து, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த அவர்களுக்கு மற்ற போலீஸாரின் தொடர்புகளும் ஊர்ஜிதமாகிவிட்டன. இந்த வழக்கில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த முன்னாள் உதவி கமிஷனர் சிவக்குமாரை நெருங்கும் நேரத்தில், அவருக்கு மட்டும் நிபந்தனை முன்ஜாமீன் கிடைத்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் சரவணன் ஜாமீன் கேட்டபோது ஸ்ட்ராங்காக அப்ஜெக்‌ஷன் செய்த சி.பி.சி.ஐ.டி., சிவக்குமார் விஷயத்தில் நேக்குப்போக்காக விட்டுக்கொடுத்துவிட்டதாம். அதன் பின்னணியில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* மும்பையைச் சேர்ந்த தண்ணீர் பைப்லைன் பதிக்கும் நிறுவனத்தை வாங்கியிருக்கிறாராம் ஆளும் தரப்பு குடும்பப் பிரமுகர் ஒருவர். பெங்களூரைச் சேர்ந்த மூன்று பேரின் பெயர்களில் பதிவாகியிருக்கும் இந்த நிறுவனத்துக்கு, ஆளுங்கட்சி அலுவலகத்தின் எதிரிலேயே கிளை அலுவலகம் தொடங்க ஏற்பாடுகள் பரபரக்கின்றன.

* சமீபத்தில், ஒரு பத்திரிகையாளர் வீட்டு விசேஷத்துக்குச் சென்ற பணிவானவர், பா.ஜ.க தலைவர்களுடன் நெருங்கி உறவாடும் மயிலாப்பூர் பிரமுகரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நடந்திருக்கும் இந்தச் சந்திப்பில், இலைக் கட்சியின் எதிர்காலம், பணிவானவரின் வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாம்.

* மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிமீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறிய இளம்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி விரைவில் மத்திய அரசுப் பணிக்குச் செல்லவிருக்கிறாராம்.