Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘மோடி தீர்மானம்’ மிஸ்ஸிங்... எடப்பாடி போட்ட தடை?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

போலீஸ் வேனிலேயே செம்மரக் கட்டையைக் கடத்தி சர்ச்சையில் சிக்கிய பெண் காவல் அதிகாரி ஒருவரிடம், சிறுசேரியைச் சேர்ந்த ஒரு பெண் மோசடிப் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: ‘மோடி தீர்மானம்’ மிஸ்ஸிங்... எடப்பாடி போட்ட தடை?

போலீஸ் வேனிலேயே செம்மரக் கட்டையைக் கடத்தி சர்ச்சையில் சிக்கிய பெண் காவல் அதிகாரி ஒருவரிடம், சிறுசேரியைச் சேர்ந்த ஒரு பெண் மோசடிப் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

“கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்...” என்றவாறே என்ட்ரி கொடுத்த கழுகார், நாம் கொடுத்த பாதாம் பாலை ருசித்தபடியே உரையாடலைத் தொடங்கினார்.

“69 மாவட்டச் செயலாளர்கள், 65 தலைமைக் கழக நிர்வாகிகள், 2,442 பொதுக்குழு உறுப்பினர்கள் என ஒரு பெரும் படையை வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியை, வெறும் பத்துப் பன்னிரண்டு வக்கீல்களைவைத்து கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தார் பன்னீர்செல்வம். ஆனால், ‘பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க முடியாது’, ‘இரட்டை இலையை முடக்க மறுப்பு’ என்று அடுத்தடுத்து வந்த நீதிமன்றத் தீர்ப்புகள் பன்னீர் தரப்பை நிலைகுலைய வைத்திருக்கின்றன. விரக்தியான பன்னீர், ‘என்ன தம்பி இது, உங்க டீமைத்தானே மலைபோல நம்பியிருந்தேன். நடப்பது ஒண்ணும் சரியில்லையே..?’ என்று மனோஜ் பாண்டியனிடம் வருத்தப்பட்டாராம். ‘எப்படிப் பார்த்தாலும் நாமதான் லீகலா பலமா இருக்கிறோம்’ என்று மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பன்னீரைத் தேற்றியிருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ‘மோடி தீர்மானம்’ மிஸ்ஸிங்... எடப்பாடி போட்ட தடை?

“இன்னொரு பக்கம், வருமான வரித்துறை ரெய்டு நடந்திருக்கிறதே?”

“ம்... முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் செய்யாத்துரை ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாள்களாக ரெய்டு நடத்தினர். ஜூன் 23-ம் நடந்த பொதுக்குழுவுக்கு இவர்கள் இருவரும் ‘நிதியுதவி’ செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதைவைத்துப் பார்க்கும்போது டெல்லி தலைமை, எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.”

“ஓஹோ...”

“அதேவேளையில், ஜூன் 23 அன்று நடந்த பொதுக்குழுவுக்காகத் தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்களில் ‘இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் எண்ணத்துடன் செயல்பட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டுகள்’ என்றொரு தீர்மானம் இடம்பெற்றிருந்தது. ஜூலை 11-ல் நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்களின் எண்ணிக்கை 23-லிருந்து 16-ஆகக் குறைக்கப்பட்டன. அதில் ஒற்றைத் தலைமை பற்றியே நான்கு தீர்மானங்கள் இருக்க, பிரதமர் மோடியைப் பாராட்டும் தீர்மானம் மிஸ்ஸிங். ஒரு கணக்கோடுதான் மோடி பற்றிய தீர்மானத்தைத் தூக்கச் சொன்னாராம் எடப்பாடி.”

“அவருக்கென்ன கோபமோ! சரி... அறிவாலயத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறதே அதைப் பற்றி சொல்லும்...”

“ஒன்றியச் செயலாளர்கள் நியமனப் பிரச்னைதான் கூட்டத்துக்குக் காரணம். இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்வதால் தலைமை கடும் அப்செட்டில் இருக்கிறதாம். ஜூலை 15-ம் தேதிக்குள் ஒன்றியச் செயலாளர்கள் தேர்தலை முடித்துவிட்டு, அடுத்து பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருக்கிறது தலைமை. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் அதற்குள் எல்லாப் பிரச்னைகளையும் முடிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்” என்ற கழுகாருக்கு மசாலா கடலையைத் தட்டில் நிரப்பிக் கொடுத்தோம். கொறித்துக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்...

“ ‘கோல்டு நிறுவனம்’ தொடர்பான வழக்கை விசாரித்த பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார், டி.எஸ்.பி-க்கள் கண்ணன், சம்பத், சுரேஷ் ஆகியோர் அந்த விசாரணைக்குழுவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா... அதன் பின்னணியில் பெரிய கதையே ஓடுகிறது. கோல்டு நிறுவன வழக்கைச் சரியாக விசாரிக்காமல் இருக்கவும், கைது நடவடிக்கையைத் தாமதப்படுத்தவும் அந்த விசாரணைக்குழுவில் இருந்த சிலருக்கு, ஐந்து ‘ஸ்வீட் பாக்ஸ்’கள் வரை கை மாறினவாம்.”

“அடேங்கப்பா...”

“இன்னொரு போலீஸ் ஸ்டோரி சொல்கிறேன். போலீஸ் வேனிலேயே செம்மரக் கட்டையைக் கடத்தி சர்ச்சையில் சிக்கிய பெண் காவல் அதிகாரி ஒருவரிடம், சிறுசேரியைச் சேர்ந்த ஒரு பெண் மோசடிப் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். நடவடிக்கை எடுக்கவேண்டிய அந்த அதிகாரியோ, குற்றம்சாட்டப்பட்டவரிடம் டீல் பேசி புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டாராம். இந்த விவகாரம் டி.ஜி.பி அலுவலகத்துக்கு ஆதாரங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. சந்திக்க வருபவர்களை அவமரியாதையாக நடத்துபவர் என்று பெயர் வாங்கிய அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென போலீஸாரே விரும்புகிறார்கள்.”

“புதுச்சேரி செய்தி ஒன்றும் இல்லையா?”

“இருக்கிறது. ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுச்சேரியில் வழங்கப்படும் மதிய உணவு சரியில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததால், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவை தினமும் தனக்கும் அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. சும்மா இருப்பாரா துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்... 75-வது சுதந்திர தினத்தைக் காரணம் காட்டி, அரசுப் பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்துவிட்டார். அப்போது மாணவர்கள் ஏதாவது ஏடாகூடமாகக் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால், மாணவர்கள் கேட்கவேண்டிய கேள்விகளை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பிவிடுகிறதாம் ஆளுநர் மாளிகை. ‘உங்கள் ரோல் மாடல் யார்?’, ‘உங்களுக்குப் பிடித்த தேசியத் தலைவர் யார்?’ என்று துண்டுச்சீட்டிலிருக்கும் கேள்விகளை ஆளுநரிடம் கேட்டுவருகிறார்கள் மாணவர்கள்.”

சந்திரசேகர்
சந்திரசேகர்
செய்யாத்துரை
செய்யாத்துரை

“என்ன பதில் என்பதுதான் ஊருக்கே தெரியுமே... கொடநாடு வழக்கு அப்டேட் இருக்கிறதா?”

“கொடநாடு சம்பவம் நடந்த பிறகு அங்கிருந்த ஆவணங்கள் சென்னை சி.ஐ.டி நகர், ஷைலிநிவாஸ் அப்பார்ட்மென்ட்டில், அறை எண் 302-ல் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து நாமும் ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருக்கிறோம். இந்நிலையில், கொடநாடு வழக்கை விசாரித்துவரும் தனிப்படைப் போலீஸார், கொடநாட்டிலிருந்து சென்னைக்கு ஆவணங்கள் எப்படிப் போயின என்பது குறித்து மணல் பிரமுகர் ஒருவரின் மகனிடம் கோவையில் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மணல் பிரமுகரின் குடும்பம், இதில் எப்படி ‘இன்வால்வ்’ ஆனது என்று புரியாமல் தவிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்” என்ற கழுகார்,

“ஓ.பி.எஸ்-ஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில், ‘கொடநாடு வழக்கில் நீதி வேண்டும். அம்மாவின் உண்மைத் தொண்டனின் கோரிக்கை’ எனப் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் வைரலானதுடன், ‘எடப்பாடியைக் கொடநாடு வழக்கில் சிக்கவைக்கும் உள்நோக்கத்துடனேயே ஜெயபிரதீப் பதிவிட்டிருக்கிறார்’ என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, ‘என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள்மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை, பத்திரிகையாளரும் இல்லை. சாதாரண மக்களில் ஒருவன்’ என்று பதிவிட்டு, இரண்டு பக்க விளக்க அறிக்கையையும் அதில் இணைத்திருந்தார். ‘ஓ.பி.எஸ் கண்டித்ததால்தான் மழுப்பும்விதமாக மறுப்பு பதிவு போட்டுச் சமாளித்திருக்கிறார் ஜெயபிரதீப்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்றபடி சிறகுகளை விரித்துப் பறந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ‘மோடி தீர்மானம்’ மிஸ்ஸிங்... எடப்பாடி போட்ட தடை?

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* மீசைக்கார மூத்த அமைச்சருக்கு நெருக்கமாக இருந்து ‘கணக்கு வழக்கெல்லாம்’ பார்த்துக்கொண்டிருப்பவர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் பெயர்கொண்ட ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அனைத்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்களை நேரில் அழைத்த அவர், டெண்டர்கள், அவற்றில் சம்பாதிக்கும் வழிகள், மேலிடத்துக்கு எவ்வளவு என்பதெல்லாம் குறித்து விவரமாக எடுத்துச்சொன்னாராம்.

* பணிவானவருக்கு உற்ற துணையாக இருக்கும் ‘ட்ரீட்மென்ட்’ பிரமுகரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது துணிவானவர் தரப்பு. ‘பொருளைக் கையாளும்’ பொறுப்புக் கொடுத்தால் வருவதாகச் சொல்லியிருக்கிறாராம் அவர்.

* ‘அமைச்சர் நமக்கு நெருக்கமானவர்தான். அரசுப் பேருந்துகள் டீசல் நிரப்புவதற்கான ‘டீல்’ பெற்றுத்தருகிறேன். அதற்காக ஒரு லிட்டர் டீசலுக்கு 50 முதல் 70 பைசா கொடுக்க வேண்டும்’ என டெல்டா மாவட்டத் தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் டீல் பேசிவருகிறாராம் மூன்றெழுத்து பிரமுகர் ஒருவர்.