Published:Updated:

மிஸ்டர் கழுகு: அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அறிக்கைப் போர்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

‘கொரோனாவிலும் கொள்ளையடித்து, தன் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் இழிபிறவியான வேலுமணிக்கு எங்கள் தலைவரை விமர்சிக்க எந்தத் துப்பும் இல்லை

‘‘ஊரெங்கும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறதே... கவனித்தீரா?’’-கேள்வியுடன் வந்தமர்ந்தார் கழுகார். இளநீர்ப் பாயசத்தை அவரிடம் நீட்டிவிட்டு, ‘‘அமைச்சர் வேலுமணியின் ‘ஒரே எதிரி’ போஸ்டரைக் குறிப்பிடுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்த கழுகார், ‘‘அந்த போஸ்டரில் ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. அறிக்கை யுத்தத்தை போஸ்டர் யுத்தமாக மாற்றிவிட்டார் வேலுமணி’’ என்று பாயசத்தை ருசித்தபடியே செய்திக்குள் தாவினார்.

‘‘கடந்த ஒரு வாரமாக தி.மு.க., அ.தி.மு.க சார்பில் வெளியாகும் அறிக்கைகளில் அநாகரிக வார்த்தைகள் கொப்பளிக்கின்றன. ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோதுகூட இப்படி அடித்துக்கொண்டதில்லை. கடந்த வாரம் ஸ்டாலினைக் கண்டித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுத்த அறிக்கைதான் எல்லாவற்றுக்கும் தொடக்கம்.’’

‘‘ஓஹோ...’’

‘‘சில தினங்களுக்கு முன்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஸ்டாலின். வேலுமணி தரப்பில் அதற்கு பதிலடியும் தரப்பட்டது. வேலுமணிக்கு மறுப்பாக தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனாவிலும் கொள்ளையடித்து, தன் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் இழிபிறவியான வேலுமணிக்கு எங்கள் தலைவரை விமர்சிக்க எந்தத் துப்பும் இல்லை; அருகதையும் இல்லை’ என்று காட்டமாகியிருந்தார். இதற்கு வேலுமணி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடமிருந்து கடும் விமர்சனங்களோடு 11 பக்க அறிக்கை வெளியானது.’’

வேலுமணி
வேலுமணி

‘‘அந்த அறிக்கையில் என்ன சொல்லியிருந்தார்?’’

‘‘ ‘400 கோடி அளவில் டியூஷன் வாத்தியார் வைத்திருக்கும் உலக அறிவாளி ஸ்டாலின்’ என்று தொடங்கும்போதே விமர்சிக்க ஆரம்பித்தவர், ‘முதலமைச்சரின் மகன் என்பதைப் பயன்படுத்திக்கொண்டு எழுபதுகளிலேயே கூர்க்காவைத் தாக்கியதால், காவல்நிலையத்துக்குப் பிடித்துச் செல்லப்பட்டவர். கல்லூரிப் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட மலிவான பேர்வழி. அந்த மானம்கெட்ட கழிசடை யார் என்பது மக்களுக்குத் தெரியும்’ என்கிறரீதியில் உதயகுமாரின் அறிக்கை வெந்நீரைப் பாய்ச்சுகிறது. அறிக்கையில் கே.என்.நேருவைக் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத ரகம்.’’

‘‘யார் இந்த அறிக்கைகளை எழுதித் தருவதாம்?’’

‘‘அ.தி.மு.க-வின் அறிக்கைகளை ‘நமது அம்மா’ பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜும், தி.மு.க-வின் அறிக்கையை கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கமும் தயார் செய்வதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில நாள்களில் இந்த அறிக்கை மோதல், குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சர்யமில்லை. ‘ஆர்.பி.உதயகுமார் உதிர்த்த வார்த்தைகள் வரம்பு மீறியுள்ளது. நாம் பதிலடி தந்தே ஆக வேண்டும்’ என்று ஸ்டாலினிடம் சில நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர். ஸ்டாலின் தரப்பில் உடனே பதில் வரவில்லையாம்.’’

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

‘‘ம்ம்... இந்த அறிக்கைப் போரில் கராத்தே தியாகராஜன் வாளெடுத்துள்ளாரே?’’

‘‘அந்தக் கடுப்பு தி.மு.க-வுக்கும் உள்ளது. ‘ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரின் நெருங்கிய நண்பரான ராஜாசங்கர் என்பவருக்குப் புதிய பதவியை உருவாக்கி, தன்னோடு ஸ்டாலின் வைத்துக்கொண்டார். அந்த நியமனத்துக்கு எந்த அரசாணையும் கிடையாது. மேயருக்கு இணையான அந்தஸ்தில் ராஜாசங்கர் பவனி வந்தார். அது தவறு இல்லையா?’ என்று 96-ம் ஆண்டு கதையை இப்போது கிளப்பிவிட்டிருக்கிறார் கராத்தே. ஏற்கெனவே ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, இதே ராஜாசங்கருடன் தாய்லாந்து நாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமல் சென்றது குறித்து கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை பிரச்னையானது.’’

ஸ்டாலின்
ஸ்டாலின்

‘‘கூட்டணிக்கு ஆள் சேர்ந்துவிட்டது என அ.தி.மு.க-வினர் குஷியாகி இருப்பார்களே?’’

‘‘ஆமாம். கராத்தே தியாகராஜனை இணக்கமாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். `ஸ்டாலின் முதல்வராவதைத் தடுக்க, கராத்தே முழு மூச்சாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார்’ என்கிறது அவருக்கு நெருக்கமான தரப்பு’’ என்ற கழுகார், ‘‘கொரோனாவை ‘ஒரே எதிரி’ என உருவகப்படுத்தி, போஸ்டர் அடிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்திருந்தது. இதற்கான போஸ்டர் டிசைனை வேலுமணியிடம் அதிகாரிகள் காட்டியுள்ளனர். ‘பின்னணியில் உதயசூரியனின் கதிர்கள் இருக்கிற மாதிரி டிசைன் போடுங்க’ என்றாராம். தன்னைச் சீண்டிய ஸ்டாலினை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே இதுபோல போஸ்டர் அடிக்கச் சொன்னாராம்’’ என்றபடி இளநீர்ப் பாயசத்தைப் பருகி முடித்தார்.

‘‘ஓ.. இதுதான் போஸ்டர் சூட்சுமமா?’’ என்றபடி கழுகாரிடம் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்துக் கேட்டோம்.

‘‘அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்துக்கான பட்டியலை ஆறு பேர் குழு பரிசீலித்துள்ளது. தனது ஆதரவாளர்களுக்குப் பதவி இல்லை என்கிற பன்னீர்செல்வத்தின் மனக்குறை இப்போது நீங்கிவிடுமாம். இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பேசியிருக்கிறார்கள். அறிக்கை தயார் செய்து முடிக்கும் நேரத்தில்தான் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது’’ என்ற கழுகார், ‘‘சூசகமாக ஒரு விஷயம் சொல்கிறேன். நீரே புரிந்துகொள்ளும்’’ என்று தண்ணீரைப் பருகியபடி தொடர்ந்தார்.

‘‘அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளின் பார்வை தென்மாவட்ட கட்டுமான ஒப்பந்த நிறுவனம் பக்கம் திரும்பியிருக்கிறது. அரசு தொடர்பான வேலைகளில் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து துருவ ஆரம்பித்திருக் கிறார்கள். அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர், ஒடிசாவில் கோலோச்சும் நிறுவனத் தொடர்பு மூலமாக ஆஸ்திரேலியாவில் சுரங்கங்கள், தென் ஆப்பிரிக்காவில் வைரச் சுரங்கம் ஆகியவற்றில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறதாம். ஒடிசா மாநிலத்தில் காலூன்றிய திரியான பிசினஸ்மேனும் இந்த அரசியல் பிரமுகரின் வாரிசும் நெருக்கமானவர்கள் என்பது கூடுதல் தகவல்.’’

‘‘யாரெனப் புரிந்துவிட்டது. அந்தத் திரியான பிசினஸ் புள்ளியின் வாரிசுதான் அரசியல் பிரமுகரின் கணக்கு வழக்குகளையும் பார்க்கிறாராமே..?’’

‘‘உமக்கும் தெரிந்துவிட்டதா? தோட்டத்துக்குப் பணம் வசூலித்துக் கொடுக்கும் பொறுப்பை அந்த அரசியல் பிரமுகர்தான் கவனித்துவந்தார். அவருக்கு உதவியாக சேலத்தை அடைமொழியாகக் கொண்ட பிரமுகரும், மலையை நினைவுபடுத்தும் அதிகாரியும் இருந்தார்கள். இப்போது, அந்த அரசியல் பிரமுகரின் கணக்கு வழக்குகளை இருவரும் கவனித்துவந்தார்களாம். அதில் சந்தேகம் ஏற்பட, இருவரிடமுமிருந்து கணக்குப்பிள்ளை வேலையை அரசியல் பிரமுகர் பறித்துவிட்டாராம். இப்போது அரசியல் பிரமுகரின் வாரிசும், திரியான பிசினஸ் புள்ளியின் வாரிசும்தான் கணக்கு வழக்குகளைப் பார்க்கிறார்களாம்.’’

“சரிதான். அ.தி.மு.க-வில் 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளதே?’’

பழனிசாமி - பன்னீர்செல்வம்
பழனிசாமி - பன்னீர்செல்வம்

‘‘2017-ம் ஆண்டு முதல் பேசப்பட்டுவந்த இந்த விவகாரத்துக்கு, சிலர் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் எடப்பாடி கை ஓங்கிவிடக் கூடாது என்று அவர்கள் இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி அ.தி.மு.க தலைமைக்கு எதிராகத் தொடுத்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அது தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கலாகி, தேர்தல் நேரத்தில் ‘பி பார்ம்’-ல் கையெழுத்திடும் அதிகாரம் பறிபோய்விடும் என்று பன்னீரும் பழனிசாமியும் நினைக்கிறார்களாம். கடந்த வாரம் மூத்த அமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் கே.சி.பழனிசாமியைச் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ‘11 பேர் கொண்ட கமிட்டியில் உங்களை இணைத்துக் கொள்கிறோம். வழக்கை வாபஸ் வாங்குங்கள்’ என்று சொல்ல, உடனடியாக பதில் ஏதும் சொல்லாமல் அந்த நபரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம் கே.சி.பி.’’

“ஓ... இப்படியொரு சிக்கல் இருக்கிறதா?’’

‘‘ஏற்கெனவே பல விவகாரங்களால் அ.தி.மு.க தரப்பு பி.ஜே.பி-க்கு அடங்கி கிடக்கிறது. இந்த விவகாரமும் பி.ஜே.பி-க்கு கூடுதல் ப்ளஸ் ஆக மாறி, எதிர்காலத்தில் நமக்குச் சிக்கல் எழலாம் என்று எடப்பாடி காதில் யாரோ ஓதியுள்ளார்கள். அதற்குப் பிறகுதான் இந்தச் சமாதானத் தூது விடப்பட்டுள்ளது. அதேபோல, ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதிநீக்க வழக்கில், சபாநாயகருக்கும் 11 எம்.எல்.ஏ-க்களுக்கும் நோட்டீஸ் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பு கேட்டுக்கொண்டதால், நான்கு வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது’’ என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘கடந்த ஒரு மாதமாக தஞ்சாவூர் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருந்தபடி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒரு குழு ரகசிய சர்வே எடுத்துள்ளனர். எடப்பாடி அனுப்பி இந்தக் குழு வந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சாதி அமைப்புகள் எனப் பலரிடமும் ஆட்சியின் செயல்பாடு, தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதிகள், லோக்கலில் யாருக்கு செல்வாக்கு என சர்வே எடுத்துள்ளனர். இவர்கள் வந்து சென்றதே அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்குத் தெரியாதாம். வைத்திலிங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சர்வே ரிசல்ட் அமைந்துள்ளதாகத் தகவல்கள் கசிவது டெல்டா அ.தி.மு.க-வில் அனலைக் கிளப்பியுள்ளது.

அதேபோல தென்மாவட்டங்களிலும் ஒரு குழு சர்வேயை முடித்துள்ளனர். 55 தொகுதிகள் படு வீக் என எடப்பாடியிடம் அவர்கள் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்களாம். ‘டி.டி.வி.தினகரனால் முக்குலத்தோரும், சாத்தான்குளம் விவகாரத்தால் நாடார்களும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால் தேவேந்திர குல வேளாளர்களும் அ.தி.மு.க-வுக்கு எதிராகத் திரண்டு நிற்பதால் அங்கு தேறுவது கஷ்டம்’ என்று முடிகிறதாம் அந்த ரிப்போர்ட். இதனால், கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும்படி அந்தப் பகுதி அமைச்சர்களிடம் கூறியிருக்கிறாராம் எடப்பாடி’’ என்றபடி சிறகை விரித்தார் கழுகார்.

அறக்கட்டளை குஸ்தி!

சீன விவகாரம், கொரோனா, பொருளாதார நெருக்கடி விவகாரங்களில் தினமும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் குடைச்சல் கொடுத்துவருகிறது. குறிப்பாக, ராகுல் காந்தியின் மூன்றுவரிக் கேள்விகள் டிரெண்ட் ஆகிவிடுவதால், பா.ஜ.க-வினர் எரிச்சலின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்கள். இந்த நிலையில், ராஜீவ் காந்தி பெயரிலான இரண்டு அறக்கட்டளைகளுக்கும், இந்திரா காந்தி நினைவு டிரஸ்ட்டுக்கும் வந்துள்ள வெளிநாட்டு நன்கொடைகளை விசாரிக்க, குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதில் ராஜீவ் காந்தியின் பெயரிலான இரண்டு அறக்கட்டளைகளுக்கும் சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.

இந்த அமைப்புகளுக்கு வெளிநாடு களிலிருந்து 85 கோடி ரூபாய் பணம் வந்தது குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை சிறப்பு இயக்குநர் தலைமையில் பல துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் பதிலுக்கு, பா.ஜ.க கட்டுப்பாட்டிலுள்ள விவேகானந்தா ஃபவுண்டேஷன், இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்புகளுக்குக் கடந்த சில ஆண்டுகளில் வந்த நன்கொடை விவரங்களை வெளியிட்டுள்ளது. ‘இந்த அமைப்புகளுக்கு 2016-ம் ஆண்டு 570 கோடி ரூபாய் மட்டுமே வந்த நன்கொடை, 2019-ம் ஆண்டு 2,410 கோடியாக உயர்ந்தது எப்படி... அதன் கணக்குகளை பா.ஜ.க வெளியிட முடியுமா?’ என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியோடு சோனியா காந்தி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஓராண்டு முடிவடைகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தைக் கூட்டி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க இயலாது என்பதால், சோனியா காந்தியையே தலைவராக நீட்டிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளதாம்.