Published:Updated:

மிஸ்டர் கழுகு: என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை... கொதிப்பில் திருமதி முதன்மை!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை, திருப்பூர், நாமக்கல் ஏரியாக்களிலிருந்துதான் வரி வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது

மிஸ்டர் கழுகு: என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை... கொதிப்பில் திருமதி முதன்மை!

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை, திருப்பூர், நாமக்கல் ஏரியாக்களிலிருந்துதான் வரி வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

போனில் பார்வையை ஓட்டியபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடான லெமன் டீயை அவருக்கு அளித்துவிட்டு, ‘‘கொங்கு நாடு விவகாரத்துக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என பா.ஜ.க மறுத்திருக்கிறதே?” என்றோம். ``பா.ஜ.க-வுக்குச் சம்பந்தம் இல்லாமலா, ‘கொங்கு நாடு கோரிக்கை தொடக்ககட்ட பரிசீலனையில் உள்ளது’ என்று அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேட்டியளித்தார்?” என்று டீயைப் பருகியபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றத்துக்குப் பிறகு, தமிழக அரசியலில் கவனத்தை ஈர்ப்பதற்காக கொங்கு நாடு விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது டெல்லி. ஒருகாலத்தில், தங்களுக்குப் பிடிக்காத மாநில அரசுகளை ஒடுக்க இந்திய அரசியலமைப்பு விதி 356-ஐ தவறாகப் பயன்படுத்தினார்கள். இப்போது, விதி 3-ஐ பயன்படுத்தி, தங்களுக்குக் கட்டுப்படாத மாநிலங்களைப் பல கூறுகளாகத் துண்டுபோடப் பார்க்கிறார்கள். இந்திய ஒற்றுமை பற்றிப் பேசும் பா.ஜ.க., இங்கு பிரிவினை பற்றிப் பேசுவது முரண்.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை, திருப்பூர், நாமக்கல் ஏரியாக்களிலிருந்துதான் வரி வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. தமிழக அரசுக்கு அந்த நிதி கிடைத்துவிடாமல் தடுக்க, நெருக்கடி கொடுக்கப்பார்க்கிறது பா.ஜ.க. அதனால்தான், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில், ‘கொங்கு நாடு என்ற மாநிலம் புதிதாக உருவாக வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.’’

‘‘தீர்மானத்தைச் செயல்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார்களோ?’’

‘‘எல்லாம் வாய்ப் பேச்சு... ஒரு சலசலப்பை உருவாக்க நினைக்கிறார்கள், அவ்வளவுதான். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘மேற்கு வங்கத்திலிருந்து பிரித்து, கூர்காலாந்து தனி மாநிலம் கேட்கும் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்’ என்றார் மோடி. அவரே ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆன பிறகும் இன்றுவரை அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து மட்டுமே வருகிறது டெல்லி. இந்த அளவில்தான் இருக்கிறது பிரதமர் மோடியின் உத்தரவாதம்.”


‘‘சரிதான்... தன் பெயரிலான மக்கள் மன்றத்தை ரஜினி கலைத்துவிட்டாரே!’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், ‘ரஜினி மக்கள் மன்ற’ பேனரை வைத்துக்கொண்டு சிலர் தேர்தலில் களமிறங்க நினைத்திருந்தார்களாம். அதற்குக் கடிவாளம் போடுவதற்காகத்தான் மன்றத்தையே அவர் கலைத்துவிட்டார் என்கிறார்கள். அதோடு, ‘இனி அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை’ என்று ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற மன்ற நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு அறிவித்திருக்கிறார் ரஜினி. மன்றத் தரப்பிலிருந்து இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். ரஜினி நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகவில்லையாம். இதனால், தயாரிப்பாளர் தரப்பு அப்செட் ஆகியிருக்கிறது. தனக்கு ரசிகர்கள் பலம் இன்னமும் இருப்பதாக வெளியுலகுக்குக் காட்டத்தான், இப்படியொரு நிர்வாகிகள் கூட்டத்தை ரஜினி கூட்டியிருக்கிறார் என்கிறார்கள். எப்படியோ, சிகிச்சை முடித்து தெம்பாக வந்திருக்கும் ரஜினி, தன் பட வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.’’

‘‘ம்... அ.தி.மு.க செய்தி ஏதும் இருக்கிறதா?’’

மிஸ்டர் கழுகு: என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை... கொதிப்பில் திருமதி முதன்மை!

‘‘அமைச்சராக வேலுமணி இருந்தபோது, கோவையில் செயல்படுத்தப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக தி.மு.க உள்ளிட்ட அமைப்புகள் புகார் எழுப்பின. நீதிமன்ற அறிவுறுத்தல்படி, அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்த ஓர் அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கோவையில் முகாமிட்டு வேலுமணி குறித்து அவர் விசாரணை நடத்தினார். அந்தச் சமயத்தில், அந்த அதிகாரியின் உறவினர் ஒருவரை பொள்ளாச்சிக்குக் கொண்டுவந்த வேலுமணி தரப்பு, அந்த நபர் மூலமாக விசாரணை அதிகாரிக்கு மறைமுக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், ‘வேலுமணி தரப்புமீது எந்தக் குற்றமும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை. விசாரணை அதிகாரியாக இருந்தவரிடம் மீண்டும் சில விவரங்களைக் கேட்டார்களாம். அதன்படி, வேலுமணிக்கு எதிராகச் சில ஆவணங்களை அவர் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையின் மூத்த அதிகாரிகள்.’’

மிஸ்டர் கழுகு: என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை... கொதிப்பில் திருமதி முதன்மை!

‘‘ஓஹோ...’’

‘‘தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் பணியாற்றிவந்த 13 நகராட்சி கமிஷனர்கள், ஜூலை 9-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இடமாறுதலுக்கு முன்பு பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கிறது. பணம் புரளும் நகராட்சிகளைப் பெற்றுத்தருமாறு சில நகராட்சி கமிஷனர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்திருந்தார்களாம். ஆனால், இடமாறுதல் உத்தரவில் அவர்கள் எதிர்பார்த்த இடம் அளிக்கப்படவில்லை. இப்போது கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்களைத் திருப்பிக் கேட்கிறதாம் நகராட்சி கமிஷனர்கள் தரப்பு. வாய்க்குள் போன ஸ்வீட் வெளியே வருமா என்ன? ‘பொறுமையாக இருங்கள், உங்களுக்குப் பெரிய பொறுப்பு வரவிருக்கிறது’ என்று ஸ்வீட்டைத் திருப்பியளிக்காமல் காரணம் சொல்கிறதாம் எம்.எல்.ஏ-க்கள் தரப்பு’’ என்ற கழுகாருக்குச் சூடாக வெங்காய பஜ்ஜியை நீட்டினோம். பஜ்ஜியைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘வேலூரில் காமராஜர் அறக்கட்டளைக்குச் சொந்தமாக 100 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. இதை நிர்வகித்துவந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இறந்துவிட்டதாலும், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டதாலும், சொத்துகளை அபகரித்துக்கொள்ள மாவட்டப் பிரமுகர் ஒருவர் காய்நகர்த்துகிறாராம். கடத்தல் வழக்கு ஒன்றில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, பிணையில் வெளிவந்திருக்கிறார் அந்த நபர். ‘காமராஜர்’ பெயரிலுள்ள அறக்கட்டளையின் பெயரை மாற்றி, மொத்தச் சொத்துகளையும் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் அவர் இறங்கியிருப்பதால், கதர்ச்சட்டைகள் கொதிப்பில் இருக்கிறார்கள். சத்தியமூர்த்திபவனுக்குப் புகார் அம்புகள் தொடுக்கப்பட்டிருக் கின்றன.’’

‘‘ம்...’’

‘‘தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லியோனி நியமிக்கப்பட்டதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. இந்தநிலையில், ஜூலை 10-ம் தேதியன்று முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு அன்றே பதவியேற்றுக்கொள்ள லியோனி திட்டமிட்டாராம். ஆனால், முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டும், அன்று முழுவதும் முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் இல்லையாம். இதில் அதிர்ச்சியான லியோனி, வேறு சில சேனல்கள் மூலமாக முதல்வர் தரப்பை நெருங்கியிருக்கிறார். அப்போதுதான், ‘ஒன்றியம் என்ற வார்த்தை பாடப்புத்தகத்தில் இடம்பெறும்’ என்ற தன் பேச்சால் முதல்வர் தரப்பு கோபத்திலிருப்பது தெரிந்திருக்கிறது. அந்தக் கோபத்தைச் சரிக்கட்ட படாதபாடு பட்டிருக்கிறார் லியோனி. அதன் பிறகே ஜூலை 12-ம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை அருகில் வைத்துக்கொண்டு பதவியேற்றார்’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும் பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் மூலமாக ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம் அவர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து, திருமதி முதன்மை கொதிப்பின் உச்சத்திலிருப்பதாகத் தகவல்” என்றபடி சிறகை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* தேர்தல் நேரத்தில் தி.மு.க-வுக்கு 300 ஸ்வீட் பாக்ஸ்கள் பரிசளித்த பிரபல லாட்டரி அதிபர் தரப்பு, இப்போது லாட்டரி அனுமதிக்காக நெருக்கடி அளிக்கிறார்களாம். அதனால், தமிழகத்துக்கு லாட்டரியைக் கொண்டுவரும் ஏற்பாடுகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

* அன்னமிடும் துறையில், வெளிநாட்டு கரன்சி ஒன்றை அடைமொழியாகக்கொண்டிருக்கும் பொள்ளாச்சி பிரமுகரின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறதாம். ‘நானும் முதல்வரும் பால்ய காலத்து நண்பர்கள்’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி, திகைக்கவைக்கிறாராம் அந்தப் பிரமுகர். துறையின் பல்வேறு ஒப்பந்தங்கள், இந்த நபரின் கண் அசைவில்தான் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

இலாகாக்கள் வெளியான பின்னணி!

புதுச்சேரிக்கான கொரோனா இரண்டாம் கட்ட நிவாரண நிதி அனுமதியைப் பெற, கோப்புடன் துணைநிலை ஆளுநர் தமிழிசையை ஜூலை 10-ம் தேதி சந்தித்தார் ரங்கசாமி. ‘பா.ஜ.க அமைச்சர்களுக்கான இலாகாக்களை நீங்கள் ஒதுக்கீடு செய்யாதவரை, எந்தக் கோப்பும் நகரக் கூடாது’ என்று டெல்லி அறிவுறுத்தி யிருப்பதாக ராஜ்நிவாஸ் தரப்பிலிருந்து ரங்கசாமிக்குச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பா.ஜ.க அமைச்சர்களுக்கான துறை விவரங்களுடன், தமிழிசையைச் சந்தித்திருக்கிறார் ரங்கசாமி. துறைகள் ஒதுக்கப்பட்டதில் பா.ஜ.க-வுக்கு திருப்தி இல்லையாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism