Published:Updated:

மிஸ்டர் கழுகு: டேவிட்சன்.. அண்ணாமலை... போலி பாஸ்போர்ட்! - மேற்கு வங்க மாடல் ஆக்‌ஷன் பிளானில் டெல்லி!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இம்மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம் எடப்பாடி

மிஸ்டர் கழுகு: டேவிட்சன்.. அண்ணாமலை... போலி பாஸ்போர்ட்! - மேற்கு வங்க மாடல் ஆக்‌ஷன் பிளானில் டெல்லி!

இம்மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம் எடப்பாடி

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

“சர்வாதிகாரம்... துரோகம்... நாடகம்...” என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “என்ன சினிமா டயலாக்குகளைச் சொல்லிக்கொண்டே வருகிறீர்...” என்று நாம் கேட்க, “சினிமா டயலாக்குகள் அல்ல... இதெல்லாம் அன்பார்லிமென்ட்டரி வார்த்தைகள். இவற்றை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு” என்ற கழுகாருக்கு மசாலா டீயை கப்பில் நிரப்பிக் கொடுத்தோம். அதைக் குடித்தபடியே உரையாடலைத் தொடர்ந்தார்...

“ஜூலை 28-ம் தேதி உலக ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி சென்னையருகே உள்ள மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. பிரதமர் மோடிதான் அதைத் தொடங்கிவைக்கிறார் என்று சொல்கிறார்கள். இன்னும் மோடி வருகை உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், பிரதமர் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது அ.தி.மு.க. எப்படியாவது மோடியைச் சந்தித்துவிட வேண்டும் என்று எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பில் பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இரு தரப்பில் ஒருவரை மட்டும் சந்தித்தால், அந்த நபருக்கு மட்டுமே பா.ஜ.க-வின் ஆதரவு இருப்பதுபோலாகிவிடும். இருவரையும் தனித்தனியாகச் சந்திக்கவும் நேரம் கிடைக்காது என்பதால், அவர்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடும் எண்ணத்தில்தான் பா.ஜ.க மேலிடம் இருப்பதாகத் தெரிகிறது.”

மிஸ்டர் கழுகு: டேவிட்சன்.. அண்ணாமலை... போலி பாஸ்போர்ட்! - மேற்கு வங்க மாடல் ஆக்‌ஷன் பிளானில் டெல்லி!

“அதுசரி... முதல்வரின் உடல்நிலை எப்படியிருக்கிறது?”

“ஜூன் 14-ம் தேதி காலை உடல் சோர்வு அதிகரித்ததாக முதல்வர் கூறியதைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆய்வில், கொரோனா காரணமாக 10 சதவிகிதம் மட்டுமே நுரையீரல் பாதிப்பு இருக்கிறது என்றாலும், முழு ஓய்வில் இருக்குமாறு முதல்வரை மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதற்கிடையே, ஆனி மாத பௌர்ணமி தினமான ஜூலை 13-ம் தேதியன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று, தந்தையின் உடல்நலம் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்திருக்கிறார் அவருடைய மகள் செந்தாமரை.”

அண்ணாமலையார் கோயிலில் செந்தாமரை
அண்ணாமலையார் கோயிலில் செந்தாமரை

“விரைவில் நலம் பெறட்டும். தி.மு.க உட்கட்சித் தேர்தல் கன்னித்தீவு கதைபோல நீண்டுகொண்டே போகிறதே?”

“ஆமாம். சமீபத்தில்கூட திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜூ மீது சிலர் புகார் சொல்ல... அவர் தரப்பு எதிர்ப் புகார் சொல்ல... பஞ்சாயத்து அறிவாலயத்தில் மூன்று நாள்களாகத் தீர்க்கப்படாமல் ஜவ்வாக இழுத்திருக்கிறது. நாகப்பட்டினம், திருப்பூர் மாவட்டங்களிலிருந்து ஏற்கெனவே வந்த பஞ்சாயத்தே முடிவுக்கு வராததால், புதிய புதிய பிரச்னைகளைச் சரிசெய்ய முடியாமல் அறிவாலய விசாரணைக்குழுவினர் திண்டாடுகிறார்களாம். ஒன்றியச் செயலாளர் தேர்தலை முடித்தால்தான், பகுதி, வட்டம், மாநகரம், மாவட்டம், பொருளாளர், பொதுச்செயலாளர், தலைவர் என அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நினைவுநாளுக்குள்ளாக உட்கட்சித் தேர்தலை முடித்துவிட நினைத்திருந்தனர். ஆனால், இன்னும் தொடக்கப்புள்ளியிலேயே இருப்பதால், கருணாநிதியின் நினைவுநாளுக்குள் ஸ்டாலின் மீண்டும் தலைவராவாரா என்கிற சந்தேகத்தைக் கட்சிக்காரர்களே எழுப்புகிறார்கள்.”

“ஜூலை 17-ம் தேதி இரு கட்சிகளும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனவே...”

“ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. புதிதாகத் தேர்வாகியிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு எப்படி வாக்களிப்பது என்று பயிற்சியளிப்பதற்காகவே இரு கட்சிகளும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டுகின்றன. என்றாலும், ஓ.பி.எஸ்-ஸுக்கு பதில், புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்தும் பேசப்படவிருக்கிறது. கூடவே, ‘ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் பதவிகளைப் பறிக்கும் வகையில் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று சில அமைப்புச் செயலாளர்கள் பேசவிருக்கிறார்களாம். ஆனால், தகுதிநீக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ‘கட்சியிலிருந்து தனியாகப் பிரிந்து சென்றவர்களைத்தான் தகுதிநீக்கம் செய்ய முடியும். ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவரும், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், உடனடியாக அவர்கள் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களாக ஆகிவிட்டனர். அப்படியிருக்க, மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென, கட்சித் தலைமையால் சொல்ல முடியாது. மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் எடப்பாடி தரப்பால் தென் மாவட்டங்களில் வெற்றிபெறவும் முடியாது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.”

“ம்... எடப்பாடி சுற்றுப்பயணம் செல்கிறாராமே?”

“ஆமாம். இம்மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம் எடப்பாடி. ஓ.பி.எஸ்-ஸைத் தொடர்ந்து அவரின் மகன்கள் உள்ளிட்ட 18 பேரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கும் எடப்பாடி, தனது பயணத்தையும் தென் மாவட்டத்திலிருந்தே தொடங்க விருக்கிறாராம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, காலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி, மாலையில் பொதுக்கூட்டத்தில் பேசுவதுதான் திட்டமாம்...”

“மதுரையில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறாரே அண்ணாமலை?”

அண்ணாமலை
அண்ணாமலை

“அது டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டாம். இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தபோதே, மத்திய உளவுத்துறையின் விசாரணை தொடங்கிவிட்டது. அங்கொட லொக்காவுக்கு இந்திய அரசின் போலி அடையாள அட்டை, போலி பாஸ்போர்ட் கிடைத்தது எப்படி என்ற விசாரணையில், மதுரையைச் சேர்ந்த சில புள்ளிகள் அவருக்கு உதவியிருப்பதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறது. குறிப்பாக, மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுரை போலீஸ் கமிஷனராக இருந்தபோது, சுமார் 200 போலி பாஸ்போர்ட்டுகள் கொடுக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை டெல்லியிலிருந்து பெற்ற பிறகே ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் அண்ணாமலை.”

``இது தொடர்பாக, வழக்கு ஒன்றும் நடக்கிறதே...”

“ஆமாம். சி.பி.ஐ விசாரணை கேட்கும் அந்த வழக்கில், ‘சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. மூன்று மாதங்களுக்குள் வழக்கை முடித்து தமிழ்நாடு க்யூ பிராஞ்ச் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று 2021, பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒன்றரை வருடமாகியும் இன்னும் அந்த விசாரணை முடிவுறவில்லை. மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக டேவிட்சன் பணியாற்றியபோது, அவரிடம் உளவுத்துறை உதவி ஆணையராக இருந்த சிவக்குமார் மீதுதான் இப்போது பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வழக்கில், சில காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க க்யூ பிராஞ்ச் ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்கிறார்கள். சிவக்குமாரைக் காப்பாற்ற டேவிட்சன் முயல்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.”

டேவிட்சன்
டேவிட்சன்

“ம்...”

“டெல்லியின் நகர்வுகளைப் பார்த்தால், டேவிட்சனோடு தி.மு.க-வுக்கும் சேர்த்தே சிக்கல் வரும்போல் இருக்கிறது. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் டேவிட்சனை சஸ்பெண்ட் செய்வதோடு, வழக்கை சி.பி.ஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றிருக்கிறார் அண்ணாமலை. போலி பாஸ்போர்ட் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரித்துவருகிறது. விரைவிலேயே, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தரச் சொல்லி, மத்திய உள்துறையிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பப்படும் என்கிறார்கள். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், டேவிட்சனை மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி பொறுப்பிலிருந்து நீக்கவேண்டியிருக்கும். ஒருவேளை அதற்கு தி.மு.க அரசு மறுத்தால், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் விவகாரத்தில் நடந்ததுபோல நேரடியாக மத்திய அரசே நடவடிக்கை எடுக்க முயலலாம். ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற பெயரில், தி.மு.க அரசைக் குடைவதற்கு பா.ஜ.க-வும் தயாராகிறது” என்ற கழுகார்...

“காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் போதைப்பொருள்களை விற்றதாக வடமாநில இளைஞர் `ஒருவரை’ப் பிடித்த மதுவிலக்குப் போலீஸார், மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். போதைப்பொருள் விவகாரம் என்பதால், இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் தனியாக விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் குட்டே வெளிப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் முதலில் பிடித்தது 10 பேராம். அவர் களிடமிருந்து தலா ஒரு ‘லட்டு’ பெற்றுக்கொண்டு, ஒன்பது பேரை விடுவித்துள்ளனர் மதுவிலக்கு போலீஸார். கணக்கு காட்டுவதற்காக ஒருவரை மட்டும் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இதைக் கண்டுபிடித்து, டி.ஜி.பி-க்கும் அறிக்கை அனுப்பிவிட்டது. விசாரணை நடக்கும்போதே, காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவருக்கும், அதே கட்சியின் அமைச்சர் ஒருவருக்கும் இடையேயான ஈகோ யுத்தம் உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒருவரையொருவர் வேவு பார்த்து, புகார்களை டெல்லிக்குத் தட்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்களாம்.

* சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் தாமரைக் கண்ணன் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறுகிறார். ‘பவர்ஃபுல்’ போஸ்ட்டிங் என்பதால், அந்தப் பதவியைப் பெற இப்போதே சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

* வட சென்னையைச் சேர்ந்த ஆளும் தரப்பு மக்கள் பிரதிநிதி ஒருவர், தன் ஏரியாவிலுள்ள கல் குவாரிகள் செயல்படுவதற்குப் பெருந்தொகை கேட்டு மிரட்டுகிறாராம். விவகாரம் அறிவாலயப் படியேறியிருக்கிறது.