Published:Updated:

மிஸ்டர் கழுகு: பறந்து வந்த உதயநிதி... மறந்துபோன அன்பில்! - தி.மு.க-வில் கடைசி நேர திக்... திக்...

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

சென்னைக்கு அருகேயிருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கொண்ட நகராட்சியில், ‘காக்கும் கடவுள் பெயர்’ கொண்டவர் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: பறந்து வந்த உதயநிதி... மறந்துபோன அன்பில்! - தி.மு.க-வில் கடைசி நேர திக்... திக்...

சென்னைக்கு அருகேயிருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கொண்ட நகராட்சியில், ‘காக்கும் கடவுள் பெயர்’ கொண்டவர் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

“நல்லவேளை... கள்ளக்குறிச்சி, இன்னொரு தூத்துக்குடியாக மாறவில்லை...” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகார், அதன் பின்னணியைச் சொல்லத் தொடங்கினார்.

“ஜூலை 17-ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் பற்றிக் கேட்டதுடன், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகக் காவல்துறை மற்றும் உளவுத்துறையினரிடம் தொடர்ந்து விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ‘பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலக அதிகாரிகளும், காவல்துறை உயரதிகாரிகளும், இன்னொரு தூத்துக்குடி போல் ஆகிவிடாதபடி, மூன்று மணி நேரமாக நிலைமையைச் சமாளித்திருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் மக்களைக் குறிபார்த்துச் சுட்ட நிகழ்வு, அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. அப்படியொரு நிலை தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள் அவர்கள்.”

“நல்ல விஷயம்... இப்போது எப்படியிருக்கிறார் முதல்வர்..?”

“முழுமையாக குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அதற்கு முன்பாக, சிகிச்சையில் இருந்தபடியே, 25-க்கும் மேற்பட்ட அரசுக் கோப்புகளில் கையெழுத் திட்டிருக்கிறார். ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் நேரடியாகச் சென்று வாக்களித்தவர், ‘தமிழ்நாடு நாள்’ நிகழ்ச்சியில் மட்டும் நேரடியாகக் கலந்துகொள்ளாமல் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசினார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறேன், கேளும்... ஜூலை 17-ம் தேதி ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிறந்தநாள். முதல் நபராக வாழ்த்துச் சொல்வதற்காக, ஜூலை 16-ம் தேதி இரவு 12 மணிவரை ஸ்டாலின் தூங்கவே இல்லையாம். சரியாக 12 அடித்ததும், மாப்பிள்ளைக்கு போன் செய்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். மருமகன் சபரீசன் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: பறந்து வந்த உதயநிதி... மறந்துபோன அன்பில்! - தி.மு.க-வில் கடைசி நேர திக்... திக்...

“ம்... கடைசி நேரத்தில் உதயநிதி வந்துவிட்டார் போலிருக்கிறதே?”

“நானே சொல்லலாம் என்றிருந்தேன், நீரே கேட்டுவிட்டீர்... ஜூலை 17-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் பங்கேற்காத உதயநிதி, ஜூலை 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவுக்கும் தாமதமாகவே வந்தார். அதற்குள்ளாக, ‘உதயநிதி எங்கே... கொரோனா விலிருந்து குணமான கையோடு முதல்வரே வாக்களிக்க வந்துவிட்டாரே?’ என எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விசாரித்தால், இரு வேறு தகவல்களைச் சொல்கிறார்கள். ஒன்று, உதயநிதி தாய்லாந்துக்குச் சென்றுவிட்டார் என்பது. மற்றொன்று, அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற கோபத்தில்தான் அவர் வரவில்லை என்பது. முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், முதல்வரின் மகனே வாக்களிக்க வில்லையென்றால் சர்ச்சையாகிவிடும் என்று சொல்லி வற்புறுத்தித்தான் அவரை அவசர அவசரமாக வரவைத்தார்களாம். இருந்தாலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகக் கட்டக்கடைசியில் அவர் ‘ட்வீட்’ போட்டது சர்ச்சையாகியிருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: பறந்து வந்த உதயநிதி... மறந்துபோன அன்பில்! - தி.மு.க-வில் கடைசி நேர திக்... திக்...

“பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸாவது உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு நேரில் போயிருக்கலாம்...”

“ஆமாம். ‘சென்னையில், சபரீசனின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில், கள்ளக்குறிச்சிக்கு உடனடியாகச் சென்றிருக்கலாமே... 18-ம் தேதி போனவர் ஒரு நாள் முன்னதாகச் சென்றிருந்தால், இவ்வளவு விமர்சனங்கள் எழுந்திருக்காதே’ என்று அவருக்கு நெருக்கமானவர்களே கேட்கிறார்கள்.”

“மக்கள், கொடுத்த பொறுப்பை மிகச்சரியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்.”

நம் கமென்ட்டுக்குச் சின்னப் புன்னகையை மட்டும் உதிர்த்த கழுகார், டேபிளில் இருந்த ஃப்ரூட் சாலட்டைப் பதம் பார்த்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவினார்.

“அ.தி.மு.க-வின் இரு கோஷ்டிகளும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வானது, பன்னீர் உள்ளிட்டவர்களைக் கட்சியைவிட்டு நீக்கியது போன்ற தீர்மானங்களை இ.பி.எஸ் தரப்பு அனுப்பியிருக்கிறது. அதேவேளையில், பொதுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வானதை ஏற்கக் கூடாது என்றும் பன்னீர் தரப்பு கோரியிருக்கிறது. இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் முடிவு வரும்வரை பன்னீர் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு எடப்பாடியும், இ.பி.எஸ் விஷயத்தில் ஏடாகூடமாகப் பேச வேண்டாம் என்று பன்னீரும் அறிவுறுத்தியிருக்கிறார்களாம். இ.பி.எஸ் தரப்பிலிருந்து சீக்கிரமே என்.ஆர்.சிவபதி, இசக்கி சுப்பையா, இன்பதுரை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்குக் கட்சிப் பதவி வழங்கும் அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்கிறார்கள். பன்னீர் தரப்பிலும் தலைமைக் கழக நிர்வாகிகள், மண்டல, மாவட்ட நிர்வாகிகளை அறிவிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.”

“அதுசரி... தி.மு.க ஒன்றியத் தேர்தல் முடிந்துவிட்டதாமே?”

“எங்கே முடிந்தது... பிரச்னை அதிகமாக வெடித்த இடங்களில் மட்டும் ஒன்றியச் செயலாளர் தேர்தலைத் தள்ளிவைத்திருக்கிறது தலைமை. மற்றபடி, எல்லா இடங்களிலும் 99 சதவிகிதம் ஒன்றியத் தேர்தல் முடிந்துவிட்டது என்று சொல்லி, அடுத்ததாக மாநகரங்களில் வட்டம், பகுதிக் கழகத் தேர்தலை அறிவித்துவிட்டது அறிவாலயம். இதைக் கேட்டு நிர்வாகிகள் கொந்தளித்துவிட்டனர். ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த பிரச்னை குறித்து, பலமுறை சென்னைக்கு நேரடியாக வந்து புகாரளித்திருக்கிறோம். போக்குவரத்துச் செலவு முழுவதும் எங்களுடையதுதான். அறிவாலயத்தில் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை. மேலோட்டமாக விசாரித்துவிட்டு, பிறகு அழைக்கிறோம் என்று சொல்லி விசாரணைக் குழுவினரும் அனுப்பிவிட்டனர். இதுநாள் வரை நாங்கள் சொன்ன புகார்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அதற்குள்ளாக ஒன்றியத் தேர்தல் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள்’ என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.”

“அரசியல் செய்திகள் போதும்... அதிகாரவர்க்கத் தகவல்கள் ஏதாவது...”

“இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் நீண்டகாலமாகப் பூட்டியே கிடக்கும் தொழிற்சாலை ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு திருட்டு நடந்திருக்கிறது. இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, தொழிற்சாலையை ஒட்டியிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. திருடிச் சென்ற பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன்விடாமல், மீண்டும் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை அமைத்திருக்கிறார்கள் போலீஸார். எல்லாவற்றுக்கும் உளவுத்துறை ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் உத்தரவே காரணமாம். ‘தனியார் தொழிற்சாலை, அதுவும் இயங்காத தொழிற்சாலைக்கு அரசு ஏன் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்?’ என்கிற கேள்விக்குத்தான் பதிலில்லை...” என்ற கழுகார்...

“சென்னைக்கு அருகேயிருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கொண்ட நகராட்சியில், ‘காக்கும் கடவுள் பெயர்’ கொண்டவர் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனம் 246 வீடுகள்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, அனைத்து மட்டத்தில் இருப்போருக்கும் ‘லட்டு’களை அள்ளித் தெளித்து ஓ.கே-யும் வாங்கிவிட்டது அந்த நிறுவனம். ஆனால், கடைசியில் அந்த நகராட்சி அதிகாரியிடம் சிக்கிக்கொண்டனர். இவருக்கும் ஒன்றிரண்டு ‘லட்டு’களைக் கொடுத்தால் ஓ.கே செய்துவிடுவார் என்று பேச்சுவார்த்தையில் இறங்கியதாம் அந்த நிறுவனம். அவரோ சுளையாக, 80 ‘லட்டு’களை வாங்கிக்கொண்டுதான், கையெழுத்தே போட்டாராம். விஷயம் மெல்லக் கசிந்து, அந்த அதிகாரிக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது” என்றபடி ஜூட் விட்டார்.

போலீஸ் வாகன சோதனைச் சாவடி
போலீஸ் வாகன சோதனைச் சாவடி

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* தென்மாவட்டத்தில் உயர் பதவியிலிருக்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், பணியாற்றிய இடங்களிலெல்லாம் இடம் வாங்கிக் குவித்திருக்கிறாராம். அந்த நிலங்கள் தொடர்பான ஆதாரங்களை ஒரு டீம் சேகரித்துவருகிறது. விரைவில் அந்தப் பட்டியல் வெளியாகலாம்.

* பதிவுத்துறையில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் ஈட்டித்தரும் கோவை மண்டலத்தில், வழிகாட்டு நெறிமுறையை மீறி அதிக அளவில் சார்பதிவாளர்களை இடம் மாற்றிவருகிறாராம் ஓர் அதிகாரி. ‘லட்டு’கள் மேலிடம் வரை சரியாகப் பங்கிடப்படுவதால், கொங்கு மண்டலத்தில் ‘சாமி’யாடுகிறாராம் அந்த அதிகாரி.

* மருத்துவத்துறை உயரதிகாரி ஒருவரின் பணிக்காலம், ஜூலையுடன் நிறைவடைகிறது. ஆனால், பழைய புகார்கள் பெண்டிங் இருப்பதால், ஓய்வுக்கு முன்பே அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான ‘பேப்பர் வொர்க்’ தொடங்கிவிட்டதாம்.