Published:Updated:

மிஸ்டர் கழுகு: “தி.மு.க-வை முடக்குவோம்!” - எடப்பாடி புது வியூகம்

மம்தாவுக்காக மேற்கு வங்க அரசியலில் தீவிர கவனம் செலுத்தும் பிரசாந்த் கிஷோர், மாதத்துக்கு ஒரு முறைதான் வீடியோ காலில் தி.மு.க தரப்போடு உரையாடுகிறாராம்.

பிரீமியம் ஸ்டோரி
கழுகார் உள்ளே நுழைந்ததும், தயாராக வைத்திருந்த பானத்தைக் கொடுத்தோம். அதை ருசித்தவர், ‘அட... என்ன இது?’ என்று கேட்க, ‘கற்பூரவள்ளி ரசம்... சளியைக் கரைக்கும். இந்த கொரோனா காலத்துக்கு ரொம்பவும் நல்லது’ என்றோம். முழுக்கப் பருகி முடித்த பின்னரே செய்திக்குள் தாவினார்.

“அ.தி.மு.க முகாமுக்கு சுனில் வந்ததன் பலனை இப்போதுதான் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, தங்களுடன் ஐந்து ஆண்டுகள் பயணித்தவரை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டது தவறு என தி.மு.க உணர்ந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சுனிலுக்கு அத்துப்படி. இன்றைக்கு தி.மு.க-வில் புதிதாக என்ன திட்டம் தீட்டினாலும் அது அ.தி.மு.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறதாம்.’’

‘‘ஓஹோ... அப்படியென்றால் சுனிலின் கரம் அ.தி.மு.க-வில் ஓங்குகிறது என்று சொல்லுங்கள்... அதுசரி, எதிர்முகாமில் எப்படி?’’

‘‘பிரசாந்த் கிஷோரின் திட்டங்கள் பெரிய அளவில் இதுவரை தி.மு.க-வுக்குக் கைகொடுக்கவில்லை. மம்தாவுக்காக மேற்கு வங்க அரசியலில் தீவிர கவனம் செலுத்தும் பிரசாந்த் கிஷோர், மாதத்துக்கு ஒரு முறைதான் வீடியோ காலில் தி.மு.க தரப்போடு உரையாடுகிறாராம். ‘என்ன டேட்டா சேகரிப்பது?’ என அந்த மாத டார்கெட்டை விளக்கிவிட்டுச் சென்றுவிடுகிறாராம். ஏக கடுப்பில் இருக்கிறது செனடாஃப் வீடு. ஆனால், அ.தி.மு.க தரப்பில் வியூகங்கள் விஷயத்தில் கொஞ்சம் வேகமாகவே இருக்கின்றனர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எஸ் பணியிட மாற்றமே தேர்தலை மனதில் வைத்துத்தான் என்கிறார்கள். சமீபத்தில் சுனிலுடன் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். அப்போது பேசப்பட்ட முக்கிய வியூகமே தி.மு.க-வைப் பொருளாராதரீதியாக முடக்க வேண்டும் என்பதுதானாம்.’’

‘‘ஓ...’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘‘சமீப நாள்களாக ஒப்பந்தப்புள்ளி விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகளை தி.மு.க தொடர்ந்து விமர்சித்துவருகிறது. அதேநேரத்தில் ஒப்பந்தப்புள்ளி எடுக்கும் ஒப்பந்ததாரர்களை தி.மு.க தரப்பு நெருக்குகிறதாம். ‘தேர்தல் செலவுக்கு எங்களுக்கு என்ன செய்வீர்கள்?’ என்று ஓப்பனாகவே கேட்டார்களாம். இந்த விவகாரம் எடப்பாடியின் காதுக்கும் போயிருக்கிறது. எடப்பாடியார் வசமிருக்கும் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு தி.மு.க நெருக்கடி அதிகமாக இருக்கிறதாம். இதைப் பின்னாலிருந்து இயக்குவது சபரீசன்தான் என்று கருதும் எடப்பாடி, இந்த விவகாரத்தை ஆதாரத்தோடு பிடிக்க உளவுத்துறையை முடக்கிவிட்டுள்ளாராம்.’’

‘‘ஏற்கெனவே ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை குடைச்சல் கொடுக்கிறதே!’’

‘‘ஆமாம். ஜெகத்ரட்சகன் வாங்கிய ஒரு நிலத்தில் ஒருபுறம் மத்திய அரசு குடைந்தாலும், மறுபுறம் மாநில அரசும் குடைச்சல் கொடுக்கப்போகிறதாம். தி.மு.க-வின் வளம்மிக்க நபர்கள்மீது இருக்கும் பெண்டிங் விவகாரங்களைத் தூசுதட்டத் திட்டமிட்டுள்ளனர். இந்த முழுப் பொறுப்பையும் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சத்தியமூர்த்தியிடம் வழங்கியிருக்கிறாராம் முதல்வர். தி.மு.க-வுக்கு எதிரான காய்நகர்த்தலில் அவரும் முக்கியப் பங்குவகிப்பார் என்கிறார்கள். அதேபோல ஜாஃபர்சேட்டை யும் கடைசி நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறதாம் அ.தி.மு.க. அவருக்குச் சமீபத்தில் பணி மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு இருந்தது. அதைச் சரிசெய்து மீண்டும் அவரை முக்கியப் பதவிக்குக் கொண்டுவந்து தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரங்களை வேகப்படுத்த இருப்பதாகத் தகவல். தி.மு.க-வுக்கு நெருக்கமான சுனில், ஜாபர்சேட் போன்றவர்களை வைத்தே தி.மு.க-வை வீழ்த்தப் பார்க்கிறார் எடப்பாடி.’’

‘‘தி.மு.க முகாம் ரியாக்‌ஷன் என்னவோ?’’

“தன்னுடைய நட்பு வட்டாரத்தில் சபரீசன், ‘சுனில் வெறும் டேட்டா சேகரித்துத் தருபவர்தான், அவர் வியூக வகுப்பாளர் கிடையாது. அவரைப் பற்றி எனக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் மட்டும்தான் தெரியும். நம்ம ஆட்சி வந்த மாதிரிதான்’ எனப் பேசிவருகிறாராம். வழக்கமாக, எந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரு நிறுவனங்கள் கருதுகின்றனவோ, அந்தக் கட்சிக்குத் தாராளமாகச் செய்யும். அப்படி தமிழகத்தில் தி.மு.க மீது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்பிக்கையோடு இருப்பதால், அவற்றின் மூலம் தேர்தல் செலவைச் சரிக்கட்டலாம் என்று தி.மு.க நினைக்கிறது. இந்த விஷயம் மத்திய அரசுக்குச் சென்றிருப்பதால், `தி.மு.க-வுக்கு உதவியே செய்யக் கூடாது’ என்று வட இந்திய நிறுவனங்களுக்கு எச்சரிக்கை சிக்னல் சென்றிருக்கிறதாம்.’’

‘‘சரிதான்...’’

‘‘கந்த சஷ்டி விவகாரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையிலெடுத்து, ‘இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிடாதது ஏன்?’ என்று தி.மு.க-வைத் தாக்கத் தொடங்கியிருப்பதும் அவர்களுக்குப் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதி மூலம் ‘தி.மு.க-வில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்’ என அறிவாலயம் விளக்கமளித்தது. ‘இந்த விவகாரத்தில் நம்மைச் சிக்கவைத்து `இந்து விரோதி’ என அடையாளப்படுத்தப் பார்க்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை, நலத்திட்ட உதவி வழங்குவதை மட்டும் கையிலெடுப்போம்’ என ஸ்டாலினுக்கு சீனியர்கள் அட்வைஸ் அளித்துள்ளனர். `வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை’ என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாகத்தான், தனது தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10,000 பேருக்கு தலா 1,000 ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.’’

ஸ்டாலின்
ஸ்டாலின்

‘‘திடீரென கன்னியாகுமரிக்கு கே.என்.நேரு சென்றிருக்கிறாரே..?’’

‘‘கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மனோ தங்கராஜ், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரை கிளைக்கழகப் பொறுப்புகளில் நியமித்திருப்பதாகத் தலைமைக்குப் புகார் பறந்துள்ளது. இது குறித்து விசாரிக்கத்தான் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குமரி மாவட்டம் சென்றுள்ளார். புகார் அளித்தவர்களையும் மா.செ மனோ தங்கராஜையும் ஒரே இடத்தில் வைத்துப் பேசியிருக்கிறார். அந்தச் சமயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், கே.என்.நேருவின் மொபைலுக்கு வீடியோ கால் செய்திருக்கிறார். அப்போது கூடியிருந்த நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், ‘தேர்தல் நெருங்கி வர்ற நேரத்துல இது மாதிரி நடந்துக்குறது நல்லா இல்லை. காழ்ப்புணர்ச்சிகளை ஒதுக்கிவெச்சுட்டு ஒற்றுமையா வேலையைப் பாருங்க’ என்று கூறியிருக்கிறார். ‘மாவட்டச் செயலாளரின் செயல்பாட்டால் தேர்தல் சமயத்தில் பாதிப்பு ஏற்படும்னு புகார் சொன்னா, இவங்க சமாதானம் பேசிட்டுப் போறாங்களே...’ என நொந்தபடி கலைந்துள்ளது புகார்தாரர்கள் தரப்பு.’’

‘‘ம்ம்...’’

‘‘கோவை நரசிபுரம் அருகே, இன்னோவா காரில் முன்புறம் அ.தி.மு.க கொடியும், பின்புறம் போலியாக `Press’ என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் வனப்பகுதி அருகே மது குடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு ரோந்துப்பணியில் இருந்த வனக்காப்பாளர் நேருதாஸ், ‘இங்கு யானை நடமாட்டம் இருக்கிறது. இங்கிருந்து செல்லுங்கள்’ என்றிருக்கிறார். அவர்களோ, நேருதாஸிடம் தகராறு செய்ததுடன், தாக்கவும் செய்துள்ளனர். தடுக்க வந்த ஊர் மக்களையும் தாக்க முற்பட்டுள்ளனர். கடுப்பான மக்கள் தர்ம அடி கொடுத்து ராஜேஷ், அருண்பிரசாத், அருண்குமார், சாமிநாதன் ஆகிய நான்கு பேரையும் பிடித்து ஆலந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் மீது நேருதாஸ் புகாரும் அளித்துள்ளார்.

ஜெகத்ரட்சகன் - கே.என்.நேரு - சபரீசன்
ஜெகத்ரட்சகன் - கே.என்.நேரு - சபரீசன்

அந்த நான்கு இளைஞர்களில் ராஜேஷ் என்பவர், ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் வலதுகரமாக வலம்வருபவர். அதேபோல அருண், சாமிநாதன் இருவரும் சந்திரசேகரின் ஆதரவாளர்கள்தான். நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களைப் பிணையில் விடுவித்துவிட்டது ஆலந்துறை போலீஸ். இதில் ஹைலைட் என்னவென்றால், விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அருண்பிரசாத், தி.மு.க பிரமுகர் என்பதுதான். அவர், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இளைஞரணி தி.மு.க துணை அமைப்பாளர் என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க தரப்பிலோ, ‘சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரு மாதங்களுக்கு முன்பே அருண்பிரசாத் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். இப்போது வேண்டுமென்றே அவர் வகிக்காத பதவியை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்’ என்கிறார்கள்.’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரவணன், நீதிபதியின் ஜூனியர் அல்ல!

ஜூ.வி 22.07.2020 தேதியிட்ட இதழில், ‘அதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்’ என்ற தலைப்பில் சாத்தான்குளம் காவலர்கள் மீதான இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டு குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், ‘கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் இருவரையும் ரிமாண்டுக்கு அனுப்பிய சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர் சரவணன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வழக்கறிஞராக இருந்தபோது, அவரிடம் ஜூனியராகப் பணிபுரிந்தார்’ என்று இடம்பெற்றிருந்த தகவலில் உண்மை இல்லை என்று தெரியவருகிறது. சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சிலர் கூறிய தகவலின் அடிப்படையில்தான் அதைப் பதிவு செய்திருந்தோம். மற்றபடி எந்த உள்நோக்கத்துடனும் பிரசுரிக்கப்படவில்லை. தவறான தகவலை வெளியிட்டமைக்காக வருந்துகிறோம்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு