Published:Updated:

மிஸ்டர் கழுகு: பல்கலை... கல்லூரி... பள்ளி... அடித்து ஆடும் ஆளுநர் மாளிகை!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

ஜூலை 23-ம் தேதி தூத்துக்குடி -யிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்களுடன் சென்ற கப்பலை, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

மிஸ்டர் கழுகு: பல்கலை... கல்லூரி... பள்ளி... அடித்து ஆடும் ஆளுநர் மாளிகை!

ஜூலை 23-ம் தேதி தூத்துக்குடி -யிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்களுடன் சென்ற கப்பலை, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

“மாணவர்களின் தொடர் தற்கொலைகளை நினைத்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது...” என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “கள்ளக்குறிச்சி காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் திருவள்ளூரிலும் ஒரு பள்ளி மாணவி இறந்திருக்கிறார்” என்று ஆமோதித்தபடியே கழுகாருக்கு, கருப்பட்டி காபி கொடுத்தோம். பருகிக்கொண்டே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்குச் சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரியிலும், மாடியிலிருந்து விழுந்து ஒரு மாணவி படுகாயமடைந்திருக்கிறார். அந்த மாணவி தவறி விழுந்ததாகக் கல்லூரித் தரப்பில் சொல்லப்பட்டாலும், அந்த மாணவி இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்கிறார்கள் அந்தப் பகுதியினர். மாணவி எழுதியதாகக் கடிதம் ஒன்று கிடைத்ததாகக் கூறப்பட்ட நிலையில், ‘அப்படி ஏதும் இல்லையே...’ எனப் பூசி மெழுகியிருக்கிறது கல்லூரித் தரப்பு. அமைச்சரின் குடும்பத்துக்குச் சொந்தமான கல்லூரி என்பதால், மாணவி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை மற்றும் கல்லூரிப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் பலம்தான். ‘கள்ளக்குறிச்சி சம்பவம்போல இந்த விவகாரம் பெரிதாகிவிடக் கூடாது, அமைச்சர் பெயருக்கும், அவரது பிஸினஸுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்று இந்த விவகாரத்தை மிகக் கவனமாகக் கையாளுகிறது ஆளும் தரப்பு.”

“ம்...”

“இன்னோர் அமைச்சர் பற்றிய தகவல் இருக்கிறது. ஆனால், இது டெண்டர் விவகாரம். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில், 600 கோடி ரூபாயில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டம் கொண்டுவரப்பட்டது அல்லவா... ‘இந்தத் திட்டத்தை நிறைவேற்றியதில் குவாலிட்டி இல்லை. அரசு நிறுவனமான எல்காட் மூலமாக நிறைவேற்றப்பட்டால் நன்றாக இருக்கும்’ என்று சமீபத்தில் முதல்வர் அலுவலக அதிகாரி களிடையே ஆலோசனை நடந்திருக்கிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். ‘பல கோடி ரூபாய் டெண்டர்யா... மண்ணை அள்ளி போட்டுறாதீங்கய்யா’ என முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் அவர் புலம்பிவருவதாகவும் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: பல்கலை... கல்லூரி... பள்ளி... அடித்து ஆடும் ஆளுநர் மாளிகை!

“இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி...”

“நக்கல்தான் உமக்கு... இதையும் கேளும். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விவகாரத்தில் தமிழ்நாடு அரசைக் கலந்தாலோசிக்காமல் நிகழ்ச்சிகளை முடிவுசெய்த ஆளுநர் மாளிகை, இப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளையும் அறிவித்திருக்கிறது. இதுவரை பல்கலைக்கழக விவகாரங்களில் மட்டும் தலையிட்ட ஆளுநர் மாளிகை, இப்போது பள்ளி, கல்லூரிகளிலும் மூக்கை நுழைக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஆளும் தரப்பில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. பல்கலை, கல்லூரி, பள்ளி என்று அடுத்தடுத்து அடித்து ஆடுகிறது ஆளுநர் மாளிகை. ஆளும் தரப்போ ரொம்பவே அடக்கி வாசிக்கிறது.”

“அது சரி. கனிமொழி தரப்பு அப்செட்டில் இருக்கிறதாமே..?”

மிஸ்டர் கழுகு: பல்கலை... கல்லூரி... பள்ளி... அடித்து ஆடும் ஆளுநர் மாளிகை!

“ஆமாம். ஜூலை 23-ம் தேதி தூத்துக்குடி -யிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்களுடன் சென்ற கப்பலை, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மூன்றாவது கப்பலை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், மாண்புமிகு தமிழக அமைச்சர்களும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. கனிமொழியின் பெயரோ, அமைச்சர்களின் பெயரோ இல்லை. போட்டோகூட இடம்பெறவில்லை. செய்தித்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் (TN DIPR) பக்கத்திலும், கனிமொழியின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், அதேநாளில் பாரதியார் நூற்றாண்டு நினைவுவிழா குறித்த செய்தித்துறை பதிவில், உதயநிதி படத்துடன் செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது. இதுதான் கனிமொழி தரப்பின் அப்செட்டுக்குக் காரணம். பெரிய குடும்பத்து லடாய் முற்றிக்கொண்டே போகிறது.”

மிஸ்டர் கழுகு: பல்கலை... கல்லூரி... பள்ளி... அடித்து ஆடும் ஆளுநர் மாளிகை!

“தி.மு.க-வில் அவர் உதாசீனப்படுத்தப்படுவது புதுசா என்ன... அதுசரி, கட்சி அலுவலகப் பொருள்களைத் திருடியதாகப் புகார் கொடுத்தும், ஓ.பி.எஸ் மீது இன்னமும் வழக்கு பதியாமல் இருக்கிறார்களே... என்ன காரணம்?”

“இது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், அ.தி.மு.க அலுவலக மேலாளர் மகாலிங்கமும் புகார் கொடுத்ததோடு நில்லாமல், நடவடிக்கை எடுக்கச் சொல்லி தொடர்ந்து பிரஷரும் கொடுத்துவருகிறார்களாம். ஆனால், ஓ.பி.எஸ் தரப்போ, ‘எங்கள் கட்சிக்குச் சொந்தமான பொருள்களை நாங்கள் எடுத்து, பாதுகாப்பாக வைத்ததில் என்ன தவறு இருக்கிறது?’ என்று சொல்லியிருக்கிறது. மேலிடத்து சிக்னலுக்காக போலீஸ் காத்திருப்பதுதான் வழக்கு பதிவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்துக்குக் காரணம் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்” என்ற கழுகாருக்கு கோவில்பட்டி கடலை மிட்டாயைக் கொடுத்தோம். அதைக் கொறித்தபடி அடுத்த செய்திக்குத் தாவினார் கழுகார்.

“234 தொகுதிகளிலும் பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் கபடிப் போட்டிகள் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று நான்கு லட்டுகள் வரை வசூல் செய்ய அந்தந்த மாவட்டத் தலைவர்களுக்கு அந்தப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக் கிறாராம். ‘இப்போதுதான் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்கக் கூட்டம் நடத்து வதற்கு வசூல் செய்துகொடுத்தோம். அதற்குள் அடுத்த தலைவலியா...’ என்று புலம்புகிறார்கள் மாவட்ட நிர்வாகிகள்” என்ற கழுகார்...

“உளவுத்துறையில் அடுத்தடுத்த அதிரடிகள் தொடங்கிவிட்டன. உளவுத்துறை ஐ.ஜி-யாக பொறுப்பேற்றதுமே குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை இடம் மாற்ற உத்தரவிட் டிருக்கிறாராம் செந்தில்வேலன். முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க்கில் இருப்பவர்களை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக உதவி கமிஷனர்கள் மற்றும் அதற்கு மேலுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் பட்டியல் ரெடியாம். பிரதமரின் சென்னை வருகை காரணமாக, தற்சமயத்துக்கு இடமாறுதல் இருக்காது” என்றவாறே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* தாமரைக் கட்சியில் தேசிய பொறுப்பில் இருக்கும் பெண் நிர்வாகிக்கும், மாநிலத் தலைவருக்கும் பனிப்போர் முற்றுகிறது. சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வேண்டுமென்றே அவரைப் பக்கத்து மாவட்டத்துக்கு தலைமை வகிக்கச் சொல்லியிருக்கிறார் மாநிலத் தலைவர். கடுப்பான பெண் நிர்வாகி, ‘நான் என் சொந்த ஊரில்தான் இருப்பேன்’ எனச் சொல்லி மறுத்துவிட்டாராம்.

* தேசிய கட்சியோடு தொடர்பிலிருந்த பிரபல ரௌடியைப் பிடித்த தாம்பரம் தனிப்படைப் போலீஸார், அவரை ரகசிய இடத்தில் வைத்திருக்கிறார்கள். இதையறிந்த ரௌடியின் மனைவி, ‘அவரை என்கவுன்ட்டர் செய்யப்போகிறார்கள்’ என்று கமிஷனரிடம் புகாரளித்திருக்கிறார். ரௌடிக்கு ஆதரவாக தேசிய கட்சியினரும் களமாடுகிறார்களாம்.

* தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் பள்ளிக்கல்வித்துறையின் இணைச் செயலாளராக சமீபத்தில் மாற்றப்பட்டார். ஆர்டர் வந்த பின்னர்தான் இந்த விஷயம் துறைச் செயலாளருக்கே தெரியுமாம்.