அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “நிலத்தை மொத்தமா கொடுத்துடுங்க!” - அணில் அமைச்சரின் மெகா டீல்...

ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்

கட்சியின் முதன்மைச் செயலாளராகத் தன்னை அமர்த்திக்கொண்டு, அவைத்தலைவர் பதவியைப் பன்னீருக்கு வழங்கலாம் என்று அவர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்

மழைத்தூறலில் நனைந்தபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவருக்குச் சூடாக பாதாம் பாலை நீட்டிவிட்டு, ‘‘மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருகிறதாமே...’’ என்றோம். பாலைப் பருகியபடியே, ‘‘ஆமாம். இந்த முறையாவது தன் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுவிட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மெனக்கெடுகிறார்... பார்ப்போம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘அ.தி.மு.க-வின் அவசர பொதுக்குழு, செயற்குழு ஜூலை மாதம் கூடவிருக்கிறது என்கிறார்கள் கட்சியின் உள்விவரமறிந்தவர்கள். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளால் தி.மு.க ஒருபக்கம் இறுக்குவதாலும், சசிகலாவின் போன் உரையாடல்கள் தொடர்வதாலும் கட்சிக்குள் தன் பிடியை உறுதியாக்கிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் முதன்மைச் செயலாளராகத் தன்னை அமர்த்திக்கொண்டு, அவைத்தலைவர் பதவியைப் பன்னீருக்கு வழங்கலாம் என்று அவர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சசிகலாவைக் கண்டித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றவும் எடப்பாடி தரப்பு தயாராகிறது”

“மாவட்டச் செயலாளர்கள் பதவியிலும் மாற்றம் இருக்கும் என்கிறார்களே?”

மிஸ்டர் கழுகு:  “நிலத்தை மொத்தமா கொடுத்துடுங்க!” - அணில் அமைச்சரின் மெகா டீல்...

“ம்ம்ம்... அதற்கான வேலையில் வேலுமணியும் தங்கமணியும் தீவிரமாகியிருக்கிறார்கள். ஆனால், பன்னீருக்கு இதில் உடன்பாடில்லையாம். அதனால், எடப்பாடியிடம் அவர், ‘மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என முடிவெடுத்தால், புதிதாக நியமிப்பவர்களில் பாதிப் பேரை என் கோட்டோவில் நியமிக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். வழக்கம்போல எடப்பாடி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இதையடுத்து, கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தன் ஆதரவாளர்களைச் சந்திக்க பன்னீர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘இவர்கள் பஞ்சாயத்துக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா!”

‘‘தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நேரடியாக நடத்தினாலும், பார்களைத் தனியார் நடத்த லைசென்ஸ் கொடுக்கப்படுகிறது. இவை தவிர, தங்கும் விடுதிகளிலும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறதாம் தி.மு.க அரசு. மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் பெரிய உணவகங்களிலும் பார் நடத்துவதற்கான ‘டூரிஸ்ட் பார் லைசென்ஸ்’ வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அதே பாணியில் தமிழகத்திலும் உணவகங்களில் பார் நடத்த அனுமதியளித்தால், அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று சிலர் ஆலோசனை அளித்திருக்கிறார்கள். இதையடுத்தே இப்படியொரு யோசனை ஓடுகிறது!’’

‘‘ஆக, மதுக்கடைகளை குறைப்பதற்காகத் திட்டம் எதுவும் போடவில்லை என்று சொல்லும்... அணில் அமைச்சரிடம், முன்னாள் அமைச்சர் ஒருவர் சரண்டராகிவிட்டாராமே?’’

‘‘அப்படித்தான் மூன்றெழுத்து மாவட்டத்திலிருந்து தகவல் வருகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே இரு தரப்பிடமும் சமாதானம் பேசிய சமூகப் பெரியவர்கள்தான், இப்போதும் முன்னாள் அமைச்சருக்காக அணில் அமைச்சரிடம் தூது போயிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் மீதிருக்கும் பல்வேறு புகார்களைக் குறிப்பிட்டுப் பேசிய அந்தப் பெரியவர்கள், ‘அவர் அரசியல்ல இருந்து ஒதுங்கி தொழிலை கவனிக்கப் போறதாகச் சொல்றார். அதனால அவருக்கு எதிராக எதையும் நீங்க செய்ய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்களாம்.”

“அணில் அமைச்சர் என்ன சொன்னாராம்?”

“ஒரேயொரு கண்டிஷனைப் போட்டு மிரளவைத்திருக்கிறார். கடந்த ஆட்சியின்போது, திருச்சி பைபாஸ் ஏரியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அந்த முன்னாள் அமைச்சர் முயன்றார். திட்டம் தீட்டுவதற்கு முன்பே அந்த ஏரியாவைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர் தரப்பு வாங்கிப் போட்டுவிட்டதாம். அந்த நிலங்களை அடிமாட்டு ரேட்டுக்குக் கேட்டிருக்கிறார் அணில் அமைச்சர். ‘நிலங்களை மொத்தமா கொடுத்துட்டா வம்பு வழக்குல இருந்து தப்பிக்கலாம்’ என்று அணில் அமைச்சர் சொன்னதைக் கேட்டு, சமாதானம் பேசிய பெரியவர்கள் வெளிறிப்போய் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், ‘லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையிலிருந்து தப்பினால் போதும்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்ட அந்த முன்னாள் அமைச்சர், இந்த டீலுக்கு சம்மதம் தெரிவித்தாலும், அவரின் தம்பி மறுப்பு தெரிவிப்பதால், டீல் தொங்கலில் இருக்கிறது.’’

‘‘சரிதான்... கமல் கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவே?’’

மிஸ்டர் கழுகு:  “நிலத்தை மொத்தமா கொடுத்துடுங்க!” - அணில் அமைச்சரின் மெகா டீல்...

‘‘ஜூன் 26-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், புதிய நிர்வாகிகளையும் அறிவித்திருக்கிறார். தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் என அதிகாரம் மிக்க இரு பதவிகளையும், தானே எடுத்துக்கொண்ட கமல், துணைத் தலைவர்களாக மௌரியா, தங்கவேலு ஆகியோரை நியமித்திருக்கிறார். இவர்கள் தவிர அந்தப் பதவிகளில் மேலும் இருவரை நியமிக்கவிருக்கிறாராம். பொதுச்செயலாளர்களாக இருந்த முருகானந்தம், குமரவேல், அருணாச்சலம் ஆகியோர் அடுத்தடுத்து விலகியதால், கட்சியின் இமேஜ் வெகுவாக பாதித்தது. இப்போது தலைவர் பொறுப்புடன், பொதுச்செயலாளர் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டால், பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து தன்னால் விலக முடியாது என்று இப்படியொரு ‘அடேங்கப்பா’ ஏற்பாடாம்’’ என்ற கழுகாரைச் செல்லமாக முறைத்தபடி மிளகாய் பஜ்ஜியை நீட்டினோம். பஜ்ஜியைச் சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் கிளம்பியது அல்லவா... இதன் மீதான புகாரை சி.பி.ஐ விசாரிக்க, தமிழக அரசிடம் பரிந்துரைத்திருக்கிறாராம் அந்தத் துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. விவகாரம் பெரிதாக வெடிக்கலாம் என்ற நிலையில் இது தொடர்புடைய பெண் அதிகாரி ஒருவர் தலைமறைவாகிவிட, சம்பந்தப்பட்டவரும் இதர நபர்களும் பதற்றத்தில் இருக்கிறார்கள். இதையடுத்து ‘ஜெய’மான ஆளுங்கட்சி முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மூலம் திருவள்ளூர் மாவட்ட கோட்டை பிரதிநிதியிடம் தூதுவிட்டிருப்பவர்கள், எப்படியாவது கைது நடவடிக்கையிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பேரம் பேசிவருகிறார்கள்.”

“ம்ம்... புதுச்சேரி தகவல்கள் ஏதேனும்...”

மிஸ்டர் கழுகு:  “நிலத்தை மொத்தமா கொடுத்துடுங்க!” - அணில் அமைச்சரின் மெகா டீல்...

“புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றிவரும் டாக்டர் மோகன்குமார், வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அதன் பிறகு, அவரைத் தனது தொகுதியில் இருக்கும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் ஆக்குவதற்கான ஃபைலை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பினாராம் ரங்கசாமி. ஆனால், விதிகளைக் காரணம் காட்டி அதற்கு அனுமதி தராமல் ஃபைலைத் திருப்பி அனுப்பிவிட்டாராம் தமிழிசை. ஆனால், ‘அவர் சிறந்த மருத்துவர்’ என்று குறிப்பிட்டு மீண்டும் ஃபைலை அனுப்பியிருக்கிறார் ரங்கசாமி.

‘‘அதற்குத் தமிழிசையின் ரியாக்‌ஷன் என்னவோ?’’

‘‘அப்போதும் அசரவில்லை அவர். ‘சிறந்த மருத்துவர் என்றால் அவரை மருத்துவ ஆலோசகராகப் பணி நீட்டிப்பு செய்யலாம். இயக்குநராக நியமிக்க முடியாது’ என்று இரண்டாவது முறையும் ஃபைலை திருப்பிவிட்டிருக்கிறார் தமிழிசை. அதனால் அப்செட்டான ரங்கசாமி, பணி நியமன விதிகளையே மாற்றுவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறாராம்.”

“சரிதான்... புதுச்சேரியில் பிரிக்க முடியாதது ஆளுநர் - முதல்வர் மோதல் என்று சொல்லும்!”

நமது காமெடியைக் கண்டுகொள்ளாத கழுகார், “பா.ஜ.க தகவல் ஒன்றைச் சொல்கிறேன், பெயரை நீரே கண்டுபிடித்துக்கொள்ளும். தனது பெயரிலேயே நிறத்தைக்கொண்டிருக்கும் அந்த பா.ஜ.க பிரமுகர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கு மண்டலத்துக்குப் பொறுப்பேற்றிருந்தார். அப்போது, பிரசாரத்தை முடித்த கையோடு கோவையின் முக்கியத் தொகுதி அருகே வாடகைக்கு எடுத்திருந்த கெஸ்ட் ஹவுஸுக்குள் புகுந்துகொள்வாராம். இந்த விவகாரங்களையெல்லாம் இப்போது ஆதாரங்களோடு ஒரு டீம் டெல்லிக்கு புகாரைத் தட்டிவிட்டுள்ளது. ஆக்‌ஷன் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘அமெரிக்காவில் உடல் பரிசோதனை முடிந்து நடிகர் ரஜினி, ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறாராம். அமெரிக்காவிலுள்ள அவரின் இரண்டு நண்பர்கள்தான் ரஜினி தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். இதுவரை நடந்த மருத்துவப் பரிசோதனைகள் நல்லபடியாக முடிந்ததால், ரஜினி உற்சாகமாக இருக்கிறாராம். இனி, ‘அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனைக்கு வந்தால் போதும்’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதால் ரஜினியும், உடன் சென்ற அவர் மகள் ஐஸ்வர்யாவும் ஹேப்பி என்கிறது கோலிவுட் வட்டாரம்’’ என்றபடி ஜூட் விட்டார்.

*****

கான்ஃபிடென்ஷியல் கழுகார் நோட்!

* முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தின் வெளிநாட்டு முதலீடுகள், கணக்குகளையெல்லாம் ‘ராஜ’ நபர் ஒருவர்தான் கவனித்துவந்தார். இந்தநிலையில், ஒட்டுமொத்த கணக்கையும் மாப்பிள்ளையிடம் ஒப்படைத்துவிடும்படி குடும்பத்திலிருந்து உத்தரவு சென்றுள்ளதால், ராஜநபர் கடும் அப்செட் என்கிறார்கள்.

* ஒவ்வோர் ஆட்சியின்போதும் அரசுத் தரப்பு விளம்பரங்களை மீடியாக்களுக்குத் தரும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைப்பார்கள். இந்தமுறை, கிச்சன் கேபினெட் சிபாரிசில் திருவெண்காடு சகோதரிகளில் ஒருவரின் கணவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். “இதைக்கூட விட மாட்டேங்குறாங்களே!” என்று புலம்புகிறது கோட்டை வட்டாரம்!