Published:Updated:

மிஸ்டர் கழுகு: மோடியின் ரோடு ஷோ... காத்திருந்த மு.க.ஸ்டாலின்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவ 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்புகிறது தமிழ்நாடு அரசு.

மிஸ்டர் கழுகு: மோடியின் ரோடு ஷோ... காத்திருந்த மு.க.ஸ்டாலின்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவ 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்புகிறது தமிழ்நாடு அரசு.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

“முதல்வர் ஸ்டாலினை முந்திக்கொண்டார்கள், ஆளுநரும் எடப்பாடி பழனிசாமியும்...” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம், “மோடி ஃபங்ஷனிலிருந்து நேராக வருகிறீர்போல....” என்றோம்.

“தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியின் முதல் சென்னை வருகை என்பதால், தடபுடல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் பா.ஜ.க-வினர். சென்னை விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்றார்கள். பழனிசாமியுடன் சில நொடிகள் சிரித்துப் பேசிய பிரதமர், முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்துக்கு வந்திறங்கியபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அங்கேயும் அதே புன்னகையை உதிர்த்திருக்கிறார் பிரதமர். அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்குக்குச் செல்கையில் வழிநெடுக உற்சாக வரவேற்பைக் கண்ட பிரதமர், காருக்கு வெளியில் நின்றபடி கையசைத்துச் சிரித்தார். இந்த ரோடு ஷோவால், விழா அரங்கில் முதல்வர் உள்ளிட்டவர்கள் பிரதமருக்காகக் காத்திருக்க நேரிட்டது.”

மிஸ்டர் கழுகு: மோடியின் ரோடு ஷோ... காத்திருந்த மு.க.ஸ்டாலின்!

“ஓஹோ...”

“பிரதமர் முன்னிலையிலேயே, ‘ஒன்றிய அரசு’, ‘மாநில உரிமை’, ‘திராவிட மாடல்’ என்று ஸ்டாலின் பேசியதில் தி.மு.க-வினருக்கு மகிழ்ச்சி. இன்னொரு வகையில், பா.ஜ.க-வினரும் ஹேப்பி. தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டதுடன், மோடியை வரவேற்க ஒரு குரூப்... அனுப்பிவைக்க ஒரு குரூப் எனத் திட்டமிட்டிருந்தார்கள். இப்படி அனைத்து நிர்வாகிகளும் மோடியுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டதில் நிர்வாகிகள் ஏக குஷியாம். ஆனால், அண்ணாமலை முகத்தில்தான் உற்சாகம் மிஸ்ஸிங்....”

“அவருக்கு என்னவாம்..?”

“பிரதமர் வருகையையொட்டி, சென்னையின் பிரபல தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலைக்கும் முருகனுக்கும் முட்டிக்கொண்டது என்கிறார்கள். மத்திய சென்னை மாவட்டப் பட்டியலின அணித் தலைவர் பாலசந்தர், மே 24-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் அல்லவா... அதைக் கண்டித்து அண்ணாமலை தாமதமாக அறிக்கை வெளியிட்டது குறித்து முருகன் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் புகார் வாசித்திருக்கிறார். `தலித்துகளுக்கு தமிழ்நாடு பா.ஜ.க-வில் தரப்படும் மரியாதை இதுதான்’ என்றும் புகார் சொல்லியிருக்கிறார். அண்ணாமலையோ, ‘இவர் தலைவராக இருந்த காலத்தில் தேவையில்லாமல் ரௌடிகளையும், குற்றப்பின்னணி கொண்டவர்களையும் சேர்த்துவிட்டுவிட்டுப் போய்விட்டார். அவர்கள் சொந்தப் பகையால் பாதிக்கப்பட்டாலும் கட்சி தலையிடவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் கட்சிக்குத்தான் அவப்பெயர். அதனால்தான் இப்போதெல்லாம் குற்றப்பின்னணி கொண்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதேயில்லை’ என்று பதிலளிக்க இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டிருக்கிறது. ‘பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று ஆலோசனை செய்யவேண்டிய கூட்டத்தில் இதெல்லாம் எதற்கு?” என்று சி.டி.ரவி கேட்ட பிறகே பிரச்னை ஓய்ந்திருக்கிறது” என்ற கழுகாருக்கு முந்திரிப் பருப்புகளைக் கொடுத்தோம். கொறித்தபடி அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: மோடியின் ரோடு ஷோ... காத்திருந்த மு.க.ஸ்டாலின்!

“ஒரு வழியாக அ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. மோடி சென்னைக்கு வரும்போது, பா.ஜ.க-வுக்கு ஒரு சீட் கேட்டுவிடக் கூடாது என்றுதான் முந்தைய நாள் இரவோடு இரவாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதாகத் தகவல். ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஒரு யுத்தமே நடந்துவிட்டது எம்.ஜி.ஆர் மாளிகையில். கட்சியில் அதிக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தனக்கிருப்பதால், தன்னுடைய ஆதரவாளர்கள் இருவரை எம்.பி-யாக்கவே எடப்பாடி நினைத்திருந்தார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்ட பன்னீர்செல்வம் தன் சார்பில் ஒருவர்... அதுவும் தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தேயாக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். சரியென்று ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை அறிவிக்கலாம் என்று இ.பி.எஸ் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டபோது, ஓ.பி.எஸ் மறுத்துவிட்டாராம். கடைசியில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருந்தவரும், இப்போது ஒன்றியச் செயலாளராக இருப்பவருமான ஆர்.தர்மரை ஓ.பி.எஸ் பரிந்துரைத்திருக்கிறார். இதிலும் சர்ச்சை இல்லாமல் இல்லை. தர்மயுத்த காலத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக இருந்தவர் என்றாலும், ‘ஸ்வீட் பாக்ஸ்’ கொடுத்து வாய்ப்பு வாங்கிவிட்டார் என்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வினர்.”

“சி.வி.சண்முகம்?”

“எம்.பி பதவிக்காக சி.வி.சண்முகம் எவ்வளவு முயன்றாரோ, அதைக்காட்டிலும் அதிக சிரத்தை எடுத்தது அவருடைய சகோதரர் ராதாகிருஷ்ணன்தானாம். கட்சியின் செய்தி சேனலை நடத்தும் பொறுப்பில் இருப்பவர் அவர் என்பதாலும், ஜெயக்குமாரைக்கூடச் சமாளித்துக் கொள்ளலாம், சி.வி.சண்முகத்தைச் சமாளிக்க முடியாது என்பதாலும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் இ.பி.எஸ் என்கிறார்கள். கடைசி வரையில் முட்டி மோதிய ஜெயக்குமாரை அவர் மடக்கிய கதையைச் சொன்னால் சிரிப்பீர்கள். ‘உங்களுக்குப் பதவி கொடுக்கக் கூடாதுன்னு சென்னை மாவட்டச் செயலாளர்களிடமிருந்தே கடுமையா எதிர்ப்பு வருது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்க மகனுக்கோ, 2026 சட்டமன்றத் தேர்தலின்போது உங்களுக்கோ சீட் கேட்க மாட்டேன்னு சொல்லுங்க... சீட் தர்றேன்’ என்றிருக்கிறார் பழனிசாமி. இதை எதிர்பார்க்காத ஜெயக்குமார், போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். அதன் பிறகுதான், லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.”

“அப்படியானால் 2026 சட்டமன்றத் தேர்தலில், சி.வி.சண்முகம் சீட் கேட்க மாட்டாரா?!” என்ற நம் கேள்வியை ரசித்த கழுகார், “செம்மலைதான் ரொம்ப அப்செட். ‘இந்த முறை கட்டாயம் நீங்க ராஜ்ய சபா எம்.பி ஆகுறீங்க. அதுக்கு நான் கேரன்டி...’ என்று பழனிசாமி வாக்கு கொடுத்ததால்தான், ஓ.பி.எஸ் அணியிலிருந்து இந்தப் பக்கம் வந்தாராம் செம்மலை. எம்.பி ஆகி டெல்லிக்கு நெருக்கமாகிவிடலாம் என்ற கனவில் இருந்தவருக்கு இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றம்” என்றார்.

சி.வி.சண்முகம், தர்மர்
சி.வி.சண்முகம், தர்மர்

“இலங்கைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் ஏதோ பிரச்னையாமே...”

“ஆமாம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவ 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்புகிறது தமிழ்நாடு அரசு. சரக்குகளைக் கொண்டு சேர்க்க, மூன்று கப்பல்களை வாடகைக்குப் அமர்த்துவதாகத் திட்டம். 9,000 டன் அரிசியுடன் முதல் கப்பல் இலங்கைக்குச் சென்றுள்ள நிலையில், இரண்டாவது கப்பலில் அனுப்புவதற்காக 90 அரிசி ஆலைகளிலிருந்து அரிசி மூட்டைகள் தூத்துக்குடி துறைமுகத்துக்குப் புறப்பட தயாராகியிருக்கின்றன. கடைசி நேரத்தில், ‘இப்போது அரிசி மூட்டைகளை அனுப்ப வேண்டாம். இரண்டாவது கப்பல் இன்னும் ரெடியாகவில்லை’ என்றிருக்கிறார்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள். ‘ஏற்கெனவே அனுப்பிய அரிசிக்கே பாதித் தொகைகூட வரவில்லை. இப்போது தாமதப்படுத்துவதைப் பார்த்தால், நாம் அரைத்துவைத்த அரிசிக்குப் பணம் வந்து சேருமா?’ என்று பரிதவிக்கிறார்களாம் ஆலை அதிபர்கள்” என்ற கழுகார்,

“ஆரணி காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தைத் தன் அறையில் ஒரு மணி நேரம் காக்கவைத்திருந்தது முதல் முதல்வரின் நலத்திட்ட விழாவில் தாமதமாக வந்தது வரை சென்னை கலெக்டர் விஜயராணி மீது பல குற்றச்சாட்டுகள். கூடவே, அவருடைய உறவினர்கள் மீதும் சிலர் தலைமைச் செயலாளருக்கே புகார் அனுப்பியிருக்கிறார்கள். மே 25-ம் தேதி கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, மக்களே முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகவும் புகார் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் விஜயராணி மாற்றப்பட்டார் என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்துப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism