Published:Updated:

மிஸ்டர் கழுகு: புதிய மதுபான ஆலைகள்... பா.ஜ.க - தி.மு.க சியர்ஸ்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான போராட்டம் வரை என்னென்னவோ செய்து பார்த்தும் தலைமை மசியவில்லையே என்று அவருடைய ஆதரவாளர்கள் சோககீதம் பாடுகிறார்கள்

மிஸ்டர் கழுகு: புதிய மதுபான ஆலைகள்... பா.ஜ.க - தி.மு.க சியர்ஸ்!

பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான போராட்டம் வரை என்னென்னவோ செய்து பார்த்தும் தலைமை மசியவில்லையே என்று அவருடைய ஆதரவாளர்கள் சோககீதம் பாடுகிறார்கள்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

“‘நெஞ்சுக்கு நீதி’ என்று முத்தமிழறிஞர் வழிவந்து, ‘இப்படை வெல்லும்’ என்று முழங்கும் ‘மனிதனாக’ உயர்ந்து ‘நிமிர்ந்து நின்று’, `கெத்’தாக நடைபோடும் இளைஞர்களின் விடிவெள்ளியே... இவர் என்றுமே நமக்கு ‘நண்பேன்டா’...” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம், “என்ன கழுகாரே... இது எந்த அமைச்சரின் துதிபாடல்?” என்றோம்.

“அமைச்சர் இல்லை. ஓர் அதிகாரி! தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் அன்பைப் பெறவேண்டி சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பாடிய கவிதைக்கும் ஒருபடி மேலே போய், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வாசித்த கவிதைதான் இது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் உதயநிதியை துணைவேந்தர் வேல்ராஜ் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அமைச்சர்களைத் தொடர்ந்து தற்போது அதிகாரிகளும் உதயநிதி புகழ் பாடத் தொடங்கி விட்டார்கள்...”

“பிழைக்கத் தெரிந்த துணைவேந்தர்... தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கவனித்தீரா..?”

வேல்ராஜ்
வேல்ராஜ்

“ஆமாம் கவனித்தேன். அதில் நடந்த பெரும்பாலான விஷயங் களை கவர் ஸ்டோரியிலேயே எழுதிவிட்டீர்கள். கூடுதலாக ஒன்றைச் சொல்கிறேன். கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் பலரை வறுத்தெடுத்ததற்கு, அவர்களின் செயல்பாடுகள் குறித்து வந்த ரகசிய ரிப்போர்ட்தான் காரணமாம். ஏற்கெனவே ஐபேக் டீமிலிருந்து தி.மு.க-வுக்காகத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் இப்போது ‘பெனின்சுலா’ என்ற பெயரில் செயல்படுகிறார்கள். அவர்கள் கொடுத்திருந்த ரிப்போர்ட்தான் அது. ‘தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ என்று ஸ்டாலின் சொன்னதை, ‘எப்போது வேண்டுமானாலும் தாங்கள் மாற்றப்படலாம்’ என்ற எச்சரிக்கை யாகவே எடுத்துக்கொண்டு கருணாநிதி சிலைத் திறப்பு விழாவுக்குச் சென்றிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். அங்கே அடுத்த அதிர்ச்சி. அவர்களில் பலருக்கு அங்கே இருக்கையே இல்லையாம். பல்வேறு தரப்பிலிருந்தும் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்ததால், மூத்த அமைச்சர்களே பின் வரிசையில்தான் உட்காரவைக்கப்பட்டார்கள். காரணத்தைச் சொல்லி அதிகாரிகள் சமாதானப்படுத்திய பிறகுதான் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்களாம்.”

மிஸ்டர் கழுகு: புதிய மதுபான ஆலைகள்... பா.ஜ.க - தி.மு.க சியர்ஸ்!

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக் கிறார்களே?”

“அதில் இரண்டு மாநகராட்சி ஆணையாளர்கள் மாற்றத்துக்கு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது. மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கறாரான ஆள். அந்த குணத்தால் மூத்த அமைச்சர் ஒருவருடன் உடன்பட முடியாததாலேயே அவர் மாற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆவடி மாநகராட்சிக்கென இதுவரை ஐ.ஏ.எஸ் அல்லாத அதிகாரியே ஆணையாளராக இருந்ததால், அவரை அமைச்சரின் வாரிசு இஷ்டத்துக்கு ஆட்டுவித்தாராம். டெண்டருக்கும் கமிஷன், பில் பாஸ் பண்ணுவதற்கும் கமிஷன் என்று அவரை படுத்தியெடுத்தாராம் வாரிசு. இது முதல்வரின் கவனத்துக்குப் போனதாலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியான தற்பகராஜ் நியமிக்கப்பட்டிருக்கிக்கிறார் என்கிறார்கள்.”

“ஓஹோ...”

“அடுத்து அனைத்துத் துறைகளையும் இரண்டாகப் பிரித்து, இரண்டு கட்டங்களாக ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார் முதல்வர். ஒவ்வொரு துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களையெல்லாம் பக்காவாக எடுத்துவிட்டார்களாம். இந்தத் தகவல்களின் அடிப்படையில் செயல்படாத அதிகாரிகளைக் களையெடுக்கும் படலம் தொடங்கும் என்கிறார்கள்!”

“நீர் சொன்னபடியே, ப.சிதம்பரத்துக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்துவிட்டதே...?”

மிஸ்டர் கழுகு: புதிய மதுபான ஆலைகள்... பா.ஜ.க - தி.மு.க சியர்ஸ்!

“ஆமாம். ஆனாலும், கடைசிவரை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் கே.எஸ்.அழகிரி. பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான போராட்டம் வரை என்னென்னவோ செய்து பார்த்தும் தலைமை மசியவில்லையே என்று அவருடைய ஆதரவாளர்கள் சோககீதம் பாடுகிறார்கள். அதேபோல அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காத அப்செட்டில் இருந்தார் பேட்டிக்கு பெயர்போன முன்னாள் அமைச்சர். மறுநாளே அவரை அழைத்த இ.பி.எஸ்., ‘இந்த முறை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் விடாப்பிடியாகத் தனக்கு ஒன்று வேண்டும் என்று நின்றுவிட்டார். அதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ எனச் சொன்னதோடு, ‘வாய்ப்பு வரும்போது, கட்சியின் முக்கியப் பொறுப்பு தருகிறேன் என்று உத்தரவாதமும் அளித்திருக்கிறார். ‘சரிங்கண்ணே... அப்பவும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எந்தக் கதையும் சொல்லிறாதீங்க’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டாராம். அவருக்குப் பேசச் சொல்லியா கொடுக்கணும்?” என்ற கழுகாருக்கு காராபூந்தி கொடுத்தோம். அதைக் கொறித்தபடியே அடுத்த விஷயத்துக்குத் தாவினார் கழுகார்.

“புதுச்சேரியில் ஆயிரக்கணக்கில் மதுவகைகள் கிடைத்தாலும் அங்கு இயங்குவது என்னவோ ஆறு மதுபான ஆலைகள்தான். அவையும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி பெறப்பட்டவை. அதன் பிறகு புதிதாக எந்த மதுபானத் தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிதாக ஐந்து மதுபானத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது புதுச்சேரி கலால்துறை. அந்த அறிவிப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் விதிமுறைகள் அனைத்தும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி கவனமாக உருவாக்கப் பட்டிருக்கிறதாம். அந்த ஐந்து தொழிற்சாலை களுக்கான ‘கோட்டா’வில் நான்கை ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசின் முன்னணி நிர்வாகிகள் வைத்துக்கொண்டு, ஒன்றை அதிகாரம்மிக்க பெண் நிர்வாகிக்கு ஒதுக்கியிருக்கிறார்களாம். ஒரு தொழிற்சாலை அனுமதிக்கு சில ‘ஸ்வீட் பாக்ஸ்கள்’ அன்பளிப்பாகக் கிடைக்கும் என்பதால், குஷியாக இருக்கும் நிர்வாகிகள், யாராவது பஞ்சாயத்துக்கு வந்தால், ஒன்றிரண்டு லட்டுகள் கொடுத்து அவர்களைச் சரிக்கட்டிவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். முதற்கட்டமாக தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்களின் பெயர் `டிக்’ அடிக்கப்பட்டிருக்கிறதாம். தமிழ்நாட்டில் எலியும் பூனையுமாக இருந்தாலும், அங்கே பா.ஜ.க-வும் தி.மு.க-வும் சியர்ஸ் சொல்லிக்கொள்வதை மூத்த நிர்வாகிகள் ரசிக்கவில்லை” என்ற கழுகார்,

“எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறாராம் தென்மாவட்ட தி.மு.க அமைச்சர் ஒருவர். நெல்லை மாவட்ட கல்குவாரியில் விபத்து ஏற்பட்டு நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இருக்கும் குவாரிகளில் அதிகாரிகளின் அதிரடி சோதனை நடக்கிறது அல்லவா... இதனால், வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பாறைகள், சரளைக் கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்டவை நிறுத்தப்பட, கேரளாவில் கட்டுமானப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு அமைச்சர் தனது ஆட்களின் குவாரிகளை ராப்பகலாக இயக்குகிறாராம். அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப் படுகின்றன. அமைச்சரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் தி.மு.க தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

*****

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* பிரதமர் நிகழ்ச்சியில், ‘திராவிட மாடல்’ குறித்து முதல்வர் பேசியது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் பேச்சைத் தயாரித்துக் கொடுத்த தொலைக்காட்சிப் புள்ளிமீது கடும் எரிச்சலில் இருக்கிறதாம் பா.ஜ.க.

* ‘தமிழ்நாடு அமைச்சர்கள் இருவரின் ஊழல் பட்டியலை அடுத்த வாரம் வெளியிடுவேன்’ என்று அண்ணாமலை சொல்லியிருந்தார் அல்லவா... அது இரண்டெழுத்து இனிஷியல் அமைச்சர், விஷ்ணுவின் ஆயுதப் பெயரைக்கொண்ட அமைச்சர் ஆகியோரின் துறைகளைப் பற்றித்தானாம். கூடுதலாக மீன்வளத்துறை டெண்டர்கள் இரண்டு குறித்தும் தகவல் எடுக்கிறாராம் அண்ணாமலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism