Published:Updated:

மிஸ்டர் கழுகு: கூட்டணிக்குள் புகைச்சல்... பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

சில துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் இருப்பது தெரிகிறது. இனி அப்படியான தகவல்கள் வரக் கூடாது

மிஸ்டர் கழுகு: கூட்டணிக்குள் புகைச்சல்... பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் பழனிசாமி!

சில துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் இருப்பது தெரிகிறது. இனி அப்படியான தகவல்கள் வரக் கூடாது

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

“பா.ஜ.க-வுக்கு மணிகட்டத் துணிந்துவிட்டது அ.தி.மு.க தலைமை” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், டேபிளில் இருந்த பொன்னையனின் பேட்டியில் பார்வையை ஓடவிட்டார். “பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருப்பதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் புகைச்சல் இருப்பதைக் காட்டிக்கொடுத்துவிட்டது அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனின் விமர்சனம்...” என்று உரையாடலைத் தொடங்கினார்.

“மேலே சொல்லும்...”

“ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொன்னையன், ‘நம் கட்சியின் இடத்தை பா.ஜ.க நிரப்புகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்வது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல’ என்று வெளிப்படையாகப் பேசியதும், அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டிகளும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பொதுவெளியில் இதைப் பிரச்னையாக்காமல், ‘எல்லாத் தலைவர்களுக்கும் தங்களுடைய கட்சி தமிழகத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது தவறில்லை’ என்று கடந்து சென்றிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. ஆனாலும், ‘என்ன இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார் பொன்னையன்?’ என்று பா.ஜ.க தரப்பிலிருந்து அ.தி.மு.க சீனியர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ‘மாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்த்தார் பொன்னையன். அது கிடைக்கவில்லை. தமிழ்மகன் உசேன், `தற்காலிகமாகப் பொறுப்பு வகிக்கும் அவைத் தலைவர் பதவியாவது தாருங்கள்’ என்று கேட்டுப் பார்த்தார். அதற்கும் சாதகமான பதில் வரவில்லை. பொறுமையிழந்தவர், பா.ஜ.க-வைத் தாக்கி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பார்க்கிறார்’ என்று சமாளித்திருக்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்!”

மிஸ்டர் கழுகு: கூட்டணிக்குள் புகைச்சல்... பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் பழனிசாமி!

“இ.பி.எஸ் சொல்லித்தான் அவர் இப்படிப் பேசியதாகச் சொல்லப்படுவதெல்லாம்...”

“உண்மை இல்லை. ஆனால், இந்த சந்தர்ப்பத்தை ‘வேற மாதிரி’ பயன்படுத்தத் திட்டமிடுகிறாராம் இ.பி.எஸ். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து சீட்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க., 2024 தேர்தலுக்கு 20 சீட் கேட்கத் தீர்மானித்திருக்கிறது. அதற்காகவே தாங்கள் பெரிதாக வளர்ந்துவிட்டதைப்போல பா.ஜ.க ஆர்ப்பாட்டம் செய்வதாகக் கருதுகிறார் இ.பி.எஸ். எனவே, ‘உங்களைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடச் சொல்லி எங்கள் நிர்வாகிகள் நிர்பந்திக்கிறார்கள்’ என்று பா.ஜ.க-வை தட்டிவைக்க முடிவெடுத்திருக்கிறாராம். பா.ஜ.க-வுக்கு எதிரான அ.தி.மு.க-வின் மனநிலையை பொன்னையன் மட்டுமல்ல, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் தொடங்கி பலரும் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறார்கள். இதெல்லாம் கூட்டணிக்குள் இருக்கும் விரிசலின் வெளிப்பாடுதான் என்கிறார்கள். தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்த அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23-ம் தேதி கூடுகிறது. அப்போது இந்தப் பிரச்னை பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள். இந்தப் பிரச்னை போதாதென்று, வாலன்டியராகப் போய் வேறு வில்லங்கத்திலும் சிக்கியிருக்கிறார் அண்ணாமலை...”

“கோட்டையை முற்றுகையிடப் படை திரட்டிப் போனதைச் சொல்கிறீரா..?”

மிஸ்டர் கழுகு: கூட்டணிக்குள் புகைச்சல்... பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் பழனிசாமி!

“ஆமாம். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மே 31-ம் தேதி தமிழக பா.ஜ.க நடத்திய போராட்டம் அந்தக் கட்சிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடுப்பான டெல்லி மேலிடம், அண்ணாமலைக்கு ‘டோஸ்’ விட்டதாகச் சொல்கிறார்கள். ‘தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் இவற்றில் ஒன்றைக் கையிலெடுத்து ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி சென்றிருக்கலாம். தேவையில்லாமல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கச் சொல்லி ஏன் பேரணி சென்றீர்கள்... இந்த விவகாரம் நம்மை நோக்கியே திரும்பும் என்பதுகூடவா தெரியாது?’ எனக் கேள்விமேல் கேள்வி கேட்டதாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ‘மாநிலத் தலைவர் எங்கே சீனியர்களின் யோசனையைக் கேட்கிறார்... வழக்கம்போல இந்தப் போராட்டத்தையும் அவராகவே அறிவித்துவிட்டுத்தான் எங்களிடம் சொன்னார். மாநிலத் தலைமை என்பதால் எதிர்த்து எதுவும் பேச முடிவதில்லை’ என நாசுக்காகப் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.”

“கடந்த இதழில் நீர் சொன்னதுபோலவே, கோட்டையிலும் சூடு பறந்திருக்கிறதே..!”

“ஆமாம். அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஜூன் 1, 2-ம் தேதிகளில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வழக்கத்தைவிட சூடாகவே இருந்திருக்கிறார் முதல்வர். ‘சில துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் இருப்பது தெரிகிறது. இனி அப்படியான தகவல்கள் வரக் கூடாது’ என்று தொடங்கி ‘திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். அறிவிக்கப்படுகிற திட்டங்களுக்கு அரசாணை வெளியிடுவதோடு நின்றுவிடாமல், கள ஆய்வு செய்வது அவசியம். திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு சாரா வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 2021-22-ம் ஆண்டில் வெளியிட்ட பல அறிவிப்பு களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிலும் இருக்கிறது. ஆனால், 2022-23-ம் ஆண்டுக்கு வெளியிட்ட 1,596 அறிவிப்புகளில் 1,216 அறிவிப்புகளுக்கு இன்னும் அரசாணையே வெளியிடவில்லை. அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போது, எனக்கு இந்தத் திட்டங்களின் அப்போதைய நிலை குறித்த தகவல்கள் வேண்டும். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களோடு இணைந்து செயல்படுங்கள்’ என்று பாடம் எடுத்திருக்கிறார் முதல்வர்.”

“ம்...”

“ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமாகக் கேள்விகளைக் கேட்டாராம் முதல்வர். துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் நேரடியாகப் பார்வையிட பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டாஷ்போர்டில், எந்த விவரமும் முழுமையாக இல்லை என்று அதிகாரிகளைக் கண்டித்திருக்கிறார். ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம், அந்தத் துறையில் நடைபெறவிருந்த பணி நியமனம் திடீரேன ரத்து செய்யப்பட்டது குறித்தும் கடிந்துகொண்டாராம் முதல்வர். சில துறைகளைக் குறிப்பிட்டு, அவற்றின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துமிருக்கிறார். முதல்வர் இவ்வளவு பேசியதற்குக் காரணம், கோட்டையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு ஒன்று மூன்று மாதங்களாகத் திரட்டிக்கொடுத்த தகவல்களே அடிப்படை...” என்று அடைமழைபோல் பேசிய கழுகாருக்கு காபியும், குட்டிக் குட்டி சமோசாக்களும் கொடுத்தோம். அவற்றை ருசித்தபடியே அடுத்த விஷயத்துக்குத் தாவினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: கூட்டணிக்குள் புகைச்சல்... பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் பழனிசாமி!

“ஆளுநர் ரவியை முதல்வர் சந்தித்ததில், பரபரப்பாக ஒன்றுமில்லை. நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்ததற்கு நன்றி சொன்ன கையோடு, ‘மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு உங்களுக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் இருக்கிறது. அதற்கும், நிலுவையிலுள்ள இதர சட்ட முன்வடிவுகளுக்கும் அனுமதி அளியுங்கள்’ என்றிருக்கிறார் ஸ்டாலின்.”

“ஓஹோ...”

“முதல்வர் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டதும், ஒருவேளை அமைச்சரவை மாற்றமாக இருக்குமோ என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்போதைக்கு மாவட்டச் செயலாளர் மாற்றம்கூட இல்லையாம். சில மாவட்டங்களில் ஒன்றியங்களைப் பிரிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க தலைமை. இதைக் கவனிக்க ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஆ.ராசா ஆகியோரையும் நியமித்திருக்கிறார்கள். அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் தங்களுக்குப் பிடிக்காத ஒன்றியச் செயலாளர்களை காலி செய்யவும், பிடித்தவர்களைப் பதவிக்குக் கொண்டுவரவும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டதில், வடக்கு ஒன்றியத்தின் பெயரையே தவிர்த்து விட்டார் மாவட்டப் பொறுப்பாளர் செல்லப் பாண்டியன். இதற்கு அமைச்சர் ரகுபதியும் உடந்தையாம். இது குறித்து கே.என்.நேரு வரை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ‘தி.மு.க-வைப் பொறுத்தவரை அமைச்சர்களும் மா.செ-க்களும் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது’ எனப் புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.”

“கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவே, கட்சியை பலவீனப்படுத்தாமல் இருந்தால் சரி...”

“ஆமாம். நெல்லை கல்குவாரி விவகாரம் சீரியஸாகிக்கொண்டே போகிறது. சிறப்புக்குழு நடத்திய ஆய்வில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் விதிகளை மீறிச் செயல்பட்டதைக் கண்டறிந்து, அரசிடம் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். பயத்தில் பல கல்குவாரி உரிமையாளர்கள், பெருந்தொகையுடன் சென்னைக்குப் படையெடுத்திருக்கிறார்கள். எதிர்பார்த்த புள்ளியின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால், துறை அமைச்சரைச் சந்தித்திருக்கிறார்கள். அவரோ, துறை இயக்குநரும், வருவாய்த்துறைச் செயலரும் இந்த விஷயத்தில் கறாராக இருப்பதாகத் திருப்பியனுப்பிவிட்டாராம்” என்ற கழுகார்...

மிஸ்டர் கழுகு: கூட்டணிக்குள் புகைச்சல்... பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் பழனிசாமி!

“அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு கொடுப்பதற்காக, ‘தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன்’ 450 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதைப் பெற துறை உயரதிகாரி ஒருவரின் ஆதரவுடன் முட்டி மோதுகிறது ஒரு நிறுவனம். பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கியதில் முறைகேடு செய்த நிறுவனங்களை ‘பிளாக் லிஸ்ட்’டில் வைப்போம் என்று முதல்வர் சொல்லியிருந்தார் அல்லவா... அந்தப் பிரச்னையில் பெயர் அடிபட்ட நிறுவனம் அது என்பதுதான் ஆச்சர்யம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism