Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர்

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த துரைமுருகன் சில நாள்களுக்கு முன்னர் ஏற்காடுக்குச் சென்று ஓய்வு எடுத்திருக்கிறார்

மிஸ்டர் கழுகு: முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர்

பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த துரைமுருகன் சில நாள்களுக்கு முன்னர் ஏற்காடுக்குச் சென்று ஓய்வு எடுத்திருக்கிறார்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

“அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வெயிலின் கொதிப்பு ஓரளவு அடங்கியிருக்கிறது. அப்பாடா...” என்றபடி அலுவலகத்துக்கு ஆஜரான கழுகாருக்கு இளநீர்ப் பாயசம் கொடுத்தோம். “ஆஹா... அற்புதம்!’’ என்றபடி பருகத் தொடங்கியவரிடம், “தி.மு.க-வில் துரைமுருகனுக்கு மீண்டும் பொருளாளர் பதவி கொடுத்துவிட்டார்களே...” என்று கேள்வியை வீசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நான் ஏற்கெனவே உம்மிடம் சொன்னதுதான். பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த துரைமுருகன் சில நாள்களுக்கு முன்னர் ஏற்காடுக்குச் சென்று ஓய்வு எடுத்திருக்கிறார். அங்கிருந்து ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களிடம் தனது வழக்கமான கிண்டல் பாணியில் போனில் பேசி பொழுதைக் கழித்திருக்கிறார். அப்போதெலாம், ‘நான் என்னப்பா... ஒரு சாதாரண உறுப்பினர்’ என்றரீதியில் பேசினாராம். இந்தத் தகவல்கள் தலைமையின் காதுக்கு போகவே... அதன் பிறகே இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.”

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

“துரைமுருகனுக்கு கருணாநிதியின் பிறந்தநாள் பரிசு என்று சொல்லும்!’’

‘‘ஆமாம். கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்காகச் சென்னை வந்த துரைமுருகன், அன்றைய தினம் காலையில் ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். அப்போதும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லையாம். இது ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறகு ஸ்டாலினே

ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சீனியர்களிடம் ‘துரை அண்ணன் வருத்தத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது. மாற்று ஏற்பாட்டை உடனடியாக செய்துவிட வேண்டும்’ என்று தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தினாராம். அதன் தொடர்ச்சியாகத்தான் அன்று மாலையே அவசரமாக துரைமுருகனுக்கு மீண்டும் பொருளாளர் பதவியை வழங்கியிருக்கிறார்கள்.”

“சரி... பொதுச்செயலாளர் தேர்வு எப்போதுதான் நடக்குமாம்?”

“ `செப்டம்பர் மாதத்தில்தான் சாத்தியம்’ என்கிறார்கள். துரைமுருகனைப்போல டி.ஆர்.பாலுவும் வருத்தத்தில் இருக்கிறாராம். அடுத்தகட்டமாக அவரும் தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம்.”

“தி.மு.க-வில் அதிரடிக்குப் பெயர்பெற்ற ஜெ.அன்பழகன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே?”

அன்பழகன்
அன்பழகன்

“கடைசியாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் `ஐபேக்’ நிறுவன தலையீடு தொடர்பாக ஸ்டாலினிடம் மாற்றுக் கருத்துகளை துணிச்சலாக எடுத்துவைத்தார் அன்பழகன். அப்போதே ஸ்டாலின், ‘உன் உடல்நிலையை முதலில் பார்த்துக்கொள் அன்பு’ என்று சொல்லியிருக்கிறார். கொரோனா நிவாரணப் பணிகளில் தீவிரமாக இருந்த அன்பழகனால் தனக்கும் கொரோனா தொற்று இருந்ததைக் கண்டறிய முடியவில்லை. ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்பழகன், அதற்கும் மருந்துகளைச் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அவரையும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கிறது என்கிறார்கள்.’’

முதல்வர் - ஆளுநர் சந்திப்பின்போது...
முதல்வர் - ஆளுநர் சந்திப்பின்போது...

“அச்சச்சோ!”

“கருணாநிதி பிறந்தநாளுக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அன்பழகன். ஆனால், அதற்கு முன்தினம் அவருக்கு வயிற்றுவலி அதிகமாகியிருக்கிறது. உடனடியாக ஜெகத்ரட்சகனிடம் பேசியவர், ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார். கருணாநிதி பிறந்தநாள் அன்று காலையில்தான் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கூடவே அவருக்கு மூச்சுத்திணறலும் அதிகமாகியிருக் கிறது. சிறுநீரகச் செயல்பாட்டிலும் சிக்கல் வந்ததாம். இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தியிருக் கிறார்கள். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. ‘அன்பழகனை எப்படியாவது குணப்படுத்தி விடுங்கள்’ என்று மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.’’

‘‘தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்குப் பதவி நீட்டிப்பு வந்துள்ளதே?”

“ஜூலை மாதத்துடன் சண்முகம் ஓய்வு பெறவிருப்பதால் அவரது பதவிக்காலத்தை ஆறு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் தரப்பிலிருந்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து மூன்று மாதங்களுக்கு மட்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர, `இப்படியான பதவி நீட்டிப்புகளை மூன்று மூன்று மாதங்களாக மட்டுமே நீட்டிக்க முடியும்’ என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.”

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

“சரி... மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன நடந்தது?”

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால், அவற்றுக்குத் தேவையான நிதியை எந்த வகையில் கொண்டுவருவது என்கிற குழப்பம் மத்திய அரசிடம் இருக்கிறதாம். இதுவரை மத்திய அரசு அறிவித்த நிதியுதவித் திட்டம் எதுவும் மக்களை நேரடியாகச் சென்று சேரவில்லை; திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. இந்தத் தகவலும் உளவுத்துறை மூலமாக மத்திய அரசுக்கு சென்றுள்ளது. இதைப் பற்றியும் தீவிரமாக ஆலோசனை செய்திருக்கிறார்கள். அடுத்த வாரம் ஊரடங்கு குறித்தும், நிதியுதவி தொடர்பாகவும் மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுவாராம் பிரதமர்.’’

விஜயபாஸ்கர் - பீலா ராஜேஷ்
விஜயபாஸ்கர் - பீலா ராஜேஷ்

“ `பிரதமரின் கொரோனா நிவாரண நிதியைப் பற்றி எந்தத் தகவலும் அளிக்க முடியாது’ என்று பிரதமர் அலுவலகத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே..?”

‘‘இதைவைத்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்ப இருக்கிறதாம். `கொரோனா காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு உதவிகளைச் செய்துள்ளன. சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வந்திருக்கும்’ என்கிறார்கள். ஆனால், ‘பி.எம் கேர் என்கிற பெயரில் தனியான அறக்கட்டளை மூலமே இந்த நிதி வசூல் நடப்பதால், இதைப் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்ல அவசியம் இல்லை’ என்று பிரதமர் அலுவலகத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.’’

“அதெல்லாம் இருக்கட்டும்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரைச் சந்தித்ததில் ஏதேனும் முக்கிய செய்தி இருக்கிறதா?’’

“ `வழக்கமான சந்திப்புதான்’ என்கிறார்கள். ஆனால், கொரோனா தீவிரமாகப் பரவுவது தொடர்பாக இந்த முறை ஆளுநர் தரப்பில் சற்றே கடுமை காட்டப்பட்டதாம். சந்திப்பின்போது, ‘சென்னையில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு என்னதான் செய்துவருகிறது? இப்படியான சூழலில் சுகாதாரத்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பது குறித்தும் தகவல்கள் வருகின்றன’ என்று ஆளுநர் தரப்பில் கடும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாம். அப்போது, ‘விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவோம்’ என்று மட்டும் முதல்வர் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றுவது குறித்து தலைமையிலிருந்து உத்தரவிடப்பட்டு, இடையே அது கேன்சல் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் சுற்றுகிறதே?”

``சுகாதாரத்துறையில் நேர்மையான அதிகாரி என்று அறியப்பட்ட திட்ட இயக்குநர் நாகராஜுக்கும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஒருகட்டத்தில் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது சில முறைகேடுகளை முதல்வர் தரப்பிடமே சுட்டிக்காட்டியிருக்கிறார் நாகராஜ். `அப்போதே பீலாவைத் துறையிலிருந்து மாற்றிவிடுங்கள்’ என்று தனது செயலாளர்களிடம் சொல்லிவிட்டு கார் ஏறிவிட்டாராம் முதல்வர். ஆனால், முதல்வர் வீடு போய்ச் சேரும்போது வீட்டில் காத்துக்கொண்டிருந்த விஜயபாஸ்கர் தரப்பினர், ‘பீலா ராஜேஷை இப்போது மாற்றினால் கொரோனா பணிகள் பாதிக்கப்படும்’ என்றதுடன், துறைரீதியான இன்னும் சில உள் விஷயங்களைச் சொல்லி பீலாவைக் காப்பாற்றிவிட்டு, நாகராஜை மாற்றிவிட்டார்கள் என்கிறார்கள்.’’

‘‘அமைச்சர்கள்மீது முதல்வர் கோபமாக இருக்கிறார் போலிருக்கிறது?’’

‘‘சில நாள்களுக்கு முன்னர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் சிலர், ‘ஆகஸ்ட் மாதம் சின்னம்மா சிறையிலிருந்து வந்துவிடுவார். அதற்குப் பிறகு அண்ணன் சில அதிரடிகளை அரங்கேற்றப் போகிறார்’ என்று கோட்டை வட்டாரத்தில் கொளுத்திப்போட... தகவல் அப்படியே முதல்வர் தரப்புக்குச் சென்றுள்ளது. கோபமடைந்த முதல்வர் தரப்பு, பிரச்னை ஓரளவு தணிந்த பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவிருக்கிறதாம்!’’

‘‘ஓஹோ!’’

‘‘சென்னையில் ஈ.சி.ஆர் பகுதியில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பில் இடம் வாங்கிவருகிறார்கள். அந்த இடங்களுக்குள் பிரபல மூன்று எழுத்து நிறுவனத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் புகுந்து வில்லங்கம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம். `புதிதாக யார் இடம் வாங்கினாலும், போலி ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னை செய்து பெரும் தொகையைக் கறந்துவிடுகிறார்’ என்கிறார்கள். இதற்கு அந்தப் பகுதியின் முக்கிய காக்கியும் உடந்தையாக இருக்கிறாராம்” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்.

துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை தீபா!

‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எங்களைக் கேட்காமல் எந்த ஆணையும் பிறப்பிக்கக் கூடாது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கிடையே `தீபா - தீபக் இடையே உரசல் மீண்டும் ஆரம்பித்துவிட்டது’ என்கிறார்கள். “போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தீபா சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை; இப்போது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைக்கூட நாங்கள்தான் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது; இந்த மனுவில் கையெழுத்து போடக்கூட தீபா இழுத்தடித்தார். தீர்ப்பு சாதகமாக வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தீபாவைச் சுற்றி சேரக் கூடாத கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது” என்று தீபக் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்க்கிறாராம்!

நிறுத்தப்பட்ட ‘காட்மேன்’!

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தயாரித்த ‘காட் மேன்’ வெப் சீரீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகச் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளியைச் சந்தித்துப் பேசியிருக் கிறாராம் சுப்பிரமணிய சுவாமி. இருவருமே நெருங்கிய நண்பர்கள். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தொடரை ஒளிபரப்புவதை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டதாம் நிறுவனம்.

நீதிமன்றப் படியேறும் கெளரி காமாட்சி!

காஞ்சி மடத்துக்குச் சொந்தமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கைமாறும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அந்தக் கல்லூரியை கெளரி காமாட்சி என்பவர் நிர்வகித்துவருகிறார். இந்தநிலையில் கல்லூரியை அவரிடமிருந்து பறித்து, தமிழக அரசியல் புள்ளி ஒருவரிடம் விற்பதற்காக அதிகார மட்டத்திலிருக்கும் முக்கியஸ்தர் மூலம் மடம் தரப்பில் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரியை ஜெயேந்திரர், தன்னிடம் ஒப்படைத்தபோது பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், ஆவணங்களுடன் நீதிமன்றத்தை நாடவிருக்கிறாராம் கெளரி காமாட்சி.