Published:Updated:

மிஸ்டர் கழுகு: “நான் வேண்டுமா... அவர் வேண்டுமா?”

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

முதல்வரிடம் சீறிய அமைச்சர்!

மிஸ்டர் கழுகு: “நான் வேண்டுமா... அவர் வேண்டுமா?”

முதல்வரிடம் சீறிய அமைச்சர்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘என்ன... அடுத்தடுத்து ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் களைகட்டுகிறதே?’’ என்றபடியே தேன்குழல் முறுக்குகளைத் தட்டில் நிரப்பினோம். எடுத்து நொறுக்கியபடியே செய்திகளைக் கொட்டத் தொடங்கினார்.

‘‘சமீபத்தில் மின்வாரியத்தில் நடைபெற்ற சில விவகாரங்களில் மின்துறை அமைச்சர் தங்கமணி தரப்புக்கும், மின்வாரிய சேர்மனாக இருந்த விக்ரம் கபூருக்கும் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் ஆசியுடன்தான் விக்ரம் கபூர் மின்வாரிய சேர்மனாகத் தொடர்ந்தாராம். ஆரம்பத்திலிருந்தே எதையும் அமைச்சர் தரப்பில் ஆலோசிக்காமல், நேரடியாக முதல்வர் அலுவலகம் மூலம் காரியம் சாதித்துக் கொண்டதாம் வாரியம் தரப்பு. ஆரம்பத்தில் அமைச்சர் தரப்பில், ‘எதுவும் உரசல் வேண்டாம். நிலைமை ஸ்மூத்தாகப் போகட்டும்’ என்று அமைதி காத்தார்கள். இப்போது நிலைமை கைமீறிப் போய்விட்டது என்கிறார்கள். சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு கரன்ஸி விவகாரம் ‘எல்லை தாண்டி’ப் போயிருப்பதைக் கண்டுபிடித்த அமைச்சர் தரப்பு விக்கித்துவிட்டதாம். அதேசமயம் ‘சேர்மனை மாற்றக் கூடாது’ என்று முதல்வர் தரப்புக்கு அழுத்தம் வந்திருக்கிறது. ஆனால், ‘நான் வேண்டுமா, அவர் வேண்டுமா?’ என்கிறரீதியில் முதல்வரிடம் அமைச்சர் சீறிவிட்டார் என்கிறார்கள். அதனாலேயே, இப்போது அந்தப் பதவிக்கு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். விக்ரம் கபூரை சுற்றுலாத்துறைக்கு மாற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை கமிஷன் ஒன்றை நியமித்து, சேர்மன் தரப்பை விசாரிக்கவும் அமைச்சர் தரப்பில் காய்நகர்த்தப்படுகிறது என்கிறார்கள்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஓஹோ!’’

‘‘கொரோனா தடுப்புப் பணி ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டதற்குப் பின்னணியிலும் ஒரு விவகாரத்தைச் சொல்கிறார்கள். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இடையே ஏற்பட்ட ஈகோ மோதல்தான் இதற்குக் காரணமாம். இந்தநிலையில், அமைச்சர்கள் சிலர் தங்கள் துறையின் அதிகாரிகளை மாற்றினால் மட்டுமே தேர்தல் நேரத்தில் சரிப்பட்டுவரும் என்று முதல்வரை நெருக்க ஆரம்பித்துள்ளனராம். `இன்னும் சில நாள்களில் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றமும் இருக்கப்போகிறது’ என்கிறது கோட்டை வட்டாரம்.’’

‘‘தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை எப்படி இருக்கிறதாம்?’’

‘‘ஜூன் 7-ம் தேதி அன்று அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஸ்டாலினுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார் ஜெகத்ரட்சகன். ஆனால், ஜூன் 8-ம் தேதி மாலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ரேலா மருத்துவமனை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுத் தரப்பிலும் அன்பழகனின் உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.’’

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

“அதுதான், ஜெ.அன்பழகனின் உடல்நிலையை விசாரிப்பதற்கு ஸ்டாலின் செல்வதற்கு முன்னதாகவே அமைச்சர் விஜயபாஸ்கர் ரேலா மருத்துவமனைக்குச் சென்றுவந்தாரே?’’

‘‘இதை தி.மு.க-வே எதிர்பார்க்கவில்லை. அன்பழகன் அட்மிட்டான மறுதினமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ரேலா மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கரும், மருத்துவர்களிடம் மட்டுமல்லாமல் ஜெகத்ரட்சகனிடமும் விசாரித்திருக்கிறார். அத்துடன், ‘அன்பழகனைச் சந்திக்கப் போகலாமா?’ என்று முதல்வரிடம் ஒப்புதல் கேட்க, ‘உடனே செல்லுங்கள்’ என்று பதில் வந்ததாம். அதைத் தொடர்ந்துதான் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். ‘ஸ்டாலின் ஏன் வரவில்லை?’ என்ற கேள்வி எழுந்த பிறகுதான் தன் மகன் உதயநிதி யுடன் மருத்துவமனைக்குச் சென்றார் ஸ்டாலின். ‘மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்று ஸ்டாலினின் மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதாலேயே அவர் ஆரம்பத்தில் செல்லவில்லை’ என்கிறது தி.மு.க தரப்பு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பரவாயில்லையே... தமிழகத்தில் எதிர்க்கட்சியினரை நலம் விசாரிக்கும் நாகரிக அரசியல் மலர்ந்திருக்கிறதே... அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் கண்டிப்பாக வாழ்த்துச் சொல்லலாம்.’’

‘‘வாழ்த்துகள் முதல்வரே... வாழ்த்துகள் அமைச்சரே! இந்த நாகரிகம், எல்லா தரப்பிலும் தொடரட்டும்!’’

‘‘அது சரி, `அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குறித்து எதிர் கோஷ்டியில் புகைச்சல் அதிகரித்திருக்கிறது’ என்கிறார்களே?”

மிஸ்டர் கழுகு: “நான் வேண்டுமா... அவர் வேண்டுமா?”

‘‘ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுப்பவர்கள் பத்து சதவிகிதம் வரை அந்தந்தப் பகுதியின் எம்.எல்.ஏ தரப்பை ‘கவனிப்பது’ வழக்கம். அந்த வகையில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசுப் பணிகளுக்கான ‘கவனிப்பு’ அ.தி.மு.கழகத்தைச் சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ-வான கோவிந்தராசு தரப்புக்குக் கிடைப்பதில்லையாம். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள்தான் தலையீட்டு இந்த ‘கவனிப்பை’த் தடுக்கிறார்கள் என்பதுதான் கோவிந்தராசு தரப்பின் புகைச்சல். இதை மேலிடத்தில் புகாராகச் சொல்லிவிட்டு கடுப்புடன் காத்திருக்கிறார்கள் கோவிந்தராசுவின் ஆதரவாளர்கள்!”

“நெல்லை தி.மு.க-வில் கோஷ்டித் தகராறு உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதாமே?’’

‘‘நெல்லை மாவட்ட தி.மு.க-வில் மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் ஓர் அணியாகவும், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாலைராஜா தலைமையில் மற்றோர் அணியாகவும் செயல்படுகின்றனர். சமீபத்தில் நெல்லை மாநகரில் கொரோனா நிவாரண உதவிப் பொருள்களை நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம் வழங்கினார். இந்தப் பொருள்களைத் தன்னைவைத்து கொடுக்காமல், பகுதிச் செயலாளர்கள் மூலமாகக் கொடுத்ததில் மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாபுக்கு கடும் வருத்தமாம்.’’

‘‘ஓ...’’

‘‘பாளையங்கோட்டைப் பகுதிச் செயலாளரும், மாலைராஜாவின் ஆதரவாளருமான அண்ணாதுரை நிவாரணப் பொருள்களை வழங்கிக்கொண்டிருக்கும்போதே, அனுமதி யில்லாமல் நிகழ்ச்சியை நடத்தியதாக காவல்துறை அவரை அழைத்துச் சென்றுவிட்டது. கோஷ்டித் தகராறில் ஒரு சிலர் போலீஸாருக்கு போன் போட்டு, ‘அண்ணாதுரையை வெளியே விடாதீங்க’ என்றிருக்கிறார்கள். இதை அறிந்ததும் கொதித்துப்போன மாலைராஜா கோஷ்டி, கட்சித் தலைமையிடம் புகார் அளித்துள்ளது. உடனடியாக நேரில் விசாரணை நடத்த தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கடந்த வாரம் நெல்லைக்கு வந்துவிட்டார். அவரைத் தங்கவைப்பதிலும் கோஷ்டித் தகராறு ஏற்பட்டு, கடைசி நேரத்தில் ஹோட்டல் அறை கேன்ஸல் ஆகிவிட்டதாம். அந்தரத்தில் விடப்பட்ட நேரு, ‘வேணாம்யா... நான் சொந்தக்காரன் வீட்டுலேயே தங்கிக்கிறேன். நீங்க யாரும் வர வேண்டாம்’ என குற்றாலத்தில் தங்கிவிட்டாராம்.’’

‘‘அட பாவமே...’’

‘‘ஒருவழியாக கமுக்கமாக விசாரணையை முடித்த நேரு, சென்னைக்குக் கிளம்பிவிட்டார். தலைமையிடம் அவர் அளிக்கப்போகும் ரிப்போர்ட்டால் மாவட்ட தி.மு.க-வில் பெரிய தலைகளே உருளும் என்கிறார்கள்’’ என்ற கழுகாரிடம் சூடான காபியை நீட்டினோம்.

‘‘நான் ஏற்கெனவே கூறிய வெட்டுக்கிளி ஊழல் விவகாரம் கோட்டையை ஆட்டம்காண வைத்துவிட்டது. சமீபத்தில் கோட்டையில் நடைபெற்ற சர்க்கரை ஆலை நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டத்தில், வேளாண்துறையின் உயரதிகாரியை தலைமைச் செயலாளர் சண்முகம் வார்த்தைகளால் வறுத்துவிட்டாராம்’’ என்று காபியை பருகியபடியே தொடர்ந்தார்.

‘‘பணியிட மாறுதல் செய்தல் உட்பட மனிதவள மேம்பாடு கூடுதல் இயக்குநரிடமுள்ள அதிகாரங்களை இயக்குநருக்கு மாற்றி, கடந்த ஜனவரி 29-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. ‘கொரோனாகால சிக்கன நடவடிக்கையாக ஒரு நபரின் பொதுப் பணியிட மாற்றல் விவகாரங்களை, அவர் சம்பந்தப்பட்ட துறையின் மேலதிகாரிதான் முடிவெடுக்க முடியும்’ என தலைமைச் செயலாளர் சண்முகம் சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால், ஜனவரி 29-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விழுந்துவிட்டது. இதை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று வேளாண்துறை மேலிடத்தின் வாரிசு முட்டி மோதுகிறதாம்.’’

சண்முகம்
சண்முகம்

‘‘ஏனாம்?’’

‘‘வேறேன்ன... ‘நோட்டு’ விவகாரம்தான். எட்டு இணை இயக்குநர்கள், மூன்று கூடுதல் இயக்குநர்கள் பொறுப்புகளுக்கான வசூல் வேட்டை முடிந்து, கட்டிங் வாரிசிடம் சேர்ந்துவிட்டதாகத் தகவல். ஆனால், இந்த கோப்புகளின்மீது துறையின் ‘கறார்’ அதிகாரி கையொப்பமிட மறுக்கிறாராம். வசூல் வேட்டையைப் பார்த்து கடுப்பில் ‘பல்லே... பல்லே’ என்று ஆட்டம் போடாத குறையாகக் கீழிருக்கும் அதிகாரிகளை வறுத்தெடுத்துவிட்டார் அந்த ‘கறார்’ அதிகாரி. ஜனவரி 29-ம் தேதி அரசாணையை அமல்படுத்தினால், தங்கள் ஆதரவு அதிகாரியை வைத்தே பொறுப்புகளை நிரப்பிவிடலாம் என மேலிட வாரிசு திட்டமிடுகிறது. இதற்காக ஜனவரி 29-ம் தேதி அரசாணையையே மீண்டும் அமல்படுத்தக்கோரி அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அத்துடன், சொந்த ஊரில் அடுத்தடுத்த ரகசியக் கூட்டங்களை மேலிட வாரிசு கமுக்கமாக நடத்துகிறதாம்.’’

‘‘அடேங்கப்பா...’’

‘‘வெட்டுக்கிளி விவகாரம் ஜூ.வி-யில் வெளியான பிறகு, துறை சார்ந்த பத்து கோப்புகளை முதல்வர் மூலமாக நேரடியாகவே மூவ் செய்துவிட்டாராம் அந்த ‘கறார்’ அதிகாரி. விவரமறிந்து ‘நாங்க என்ன ஒப்புக்குத்தானா?’ என வானத்துக்கும் பூமிக்கும் மேலிடத்து வாரிசு குதித்திருக்கிறார். இதனால், தன் பதவிக்கே ஆபத்தாகிவிடுமோ என அந்த மேலிடம் பதற ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள்!’’

“அமைச்சரவையில் ஏதோ மாற்றம் என்று தகவல்கள் வருகின்றனவே, உண்மையா?”

‘‘மூன்று ஆண்டுகளாக இது மட்டும் மாறவே இல்லை. அவ்வப்போது, ‘அமைச்சரவை மாற்றம்’ என்று குறிப்பிட்ட இடைவெளியில் எங்கிருந்தோ செய்தி புறப்பட்டுவிடுகிறது. இப்போதும்கூட, ‘மூன்று அமைச்சர்கள் மாற்றப்படலாம்’ என்ற செய்தி கோட்டையில் தீயாகப் பரவுகிறது. முதல்வரின் களையெடுப்பு பட்டியலில் எட்டு அமைச்சர்கள் வரை இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த தடவை, ‘அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட உள்ளனர்’ என்கிற செய்தியும் சேர்ந்தே பரவுகிறது. வழக்கம்போல, இதுவும் ‘புஸ்’ ஆகலாம்’’ என்ற கழுகார், சிறகுகளை விரித்துப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism