Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!

வெங்கைய நாயுடு
பிரீமியம் ஸ்டோரி
வெங்கைய நாயுடு

ஜூன் 20-க்குள்ளாக மாவட்டச் செயலாளர் தேர்தலை முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!

ஜூன் 20-க்குள்ளாக மாவட்டச் செயலாளர் தேர்தலை முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது

Published:Updated:
வெங்கைய நாயுடு
பிரீமியம் ஸ்டோரி
வெங்கைய நாயுடு

‘‘ஜூலை 18-ம் தேதி, குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, ‘ஜில்’லென்ற லஸ்ஸியைக் கொடுத்தவாறே “யார் வேட்பாளராம்?” என்றோம். “ஒருசில நாள் பொறுத்திரும்” என்ற கழுகார், லஸ்ஸியை உறிஞ்சியபடியே உரையாடலைத் தொடங்கினார்.

“தற்போதைய சூழலில் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க-வினால் வேட்பாளரை நிறுத்த முடியாது. அப்படி நிறுத்த வேண்டுமென்றால், கூட்டணியில் இல்லாத வேறு சில கட்சிகளும் ஆதரவு கொடுத்தாக வேண்டும். தற்போது குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கைய நாயுடு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் தங்களுடைய எம்.எல்.ஏ-க்களையும், எம்.பி-க்களையும் வாக்களிக்கவைப்பதாக தி.மு.க உறுதி கொடுத்திருக்கிறதாம். வெங்கைய நாயுடுவைக் குடியரசுத் தலைவராக்கிவிட்டால், அடுத்த நான்காண்டுகள் அரசியல் மற்றும் நிர்வாகரீதியான பல சிக்கல்களை எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்று தி.மு.க நினைக்கிறது. ஆனால், பா.ஜ.க-வின் கணக்கு வேறாகவும் இருக்கலாம்.”

“குடியரசுத் தலைவர் தேர்தல் இருக்கட்டும்... தி.மு.க உட்கட்சித் தேர்தல் பற்றிச் சொல்லும்?”

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!

“ஜூன் 9-ல் ஒன்றியச் செயலாளர் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக, மாவட்டச் செயலாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில்தான் பிரச்னையே. ‘தற்போதிருக்கும் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டாம்’ என்று முதலில் சொன்னவர்கள், இப்போது ‘மாவட்டங்களும் பிரிக்கப்படவிருப்பதாக’ச் சொல்கிறார்கள். விழுப்புரம் மத்தி, தஞ்சை வடக்கு, சேலம் கிழக்கு மற்றும் கோவையில் இரண்டு மாவட்டங்கள் என நீக்கப்படவிருக்கும் மாவட்டங்கள் குறித்த பட்டியலும் அறிவாலயத்தில் தயாராகியிருக்கிறது. இது தவிர, சில மாவட்டங்களின் செயலாளர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிக்கவும் தலைமை முடிவுசெய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்காகப் பெரிய பட்டியலே தயாராகிவருகிறதாம்.”

“அதுசரி, பொதுக்குழு எப்போது கூட்டப்படுமாம்?”

“ஜூன் 20-க்குள்ளாக மாவட்டச் செயலாளர் தேர்தலை முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிலும் சில சிக்கல்கள்... ‘அமைச்சர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் தங்களது கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்று அறிவாலயத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தலைமையின் முடிவுக்கு அமைச்சர்கள் யாரும் சம்மதிக்கவில்லை என்கிறார்கள். எல்லாப் பிரச்னைகளையும் இம்மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, ஜூலை முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டப்படலாம் என்கிறார்கள்” என்ற கழுகாருக்கு நறுக்கிய வெள்ளரித் துண்டுகளைத் தட்டில்வைத்து நீட்டினோம். சுவைத்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!

“10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 1.2 லட்சம் மாணவர்கள் எழுதாத விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரம் தாமதமாகத்தான் அமைச்சருக்கே தெரிந்திருக்கிறது. ‘தேர்வு முடிந்த அடுத்த நாளே அமைச்சருக்குத் தெரிந்திருக்கவேண்டிய விஷயத்தை அவர் கவனத்துக்கே போகாமல் தடுத்தவர்கள் யார்?’ என்கிற விசாரணை இப்போது தீவிரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை மூடுவதாக அதிரடியாக அறிவித்ததோடு, எதிர்ப்பு கிளம்பியதும் தடாலடியாக அறிவிப்பை திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அடுத்தடுத்த இந்தச் சர்ச்சைகளால் டென்ஷனான முதல்வர், துறை அமைச்சரை அழைத்து டோஸ் விட்டிருக்கிறார்.”

“கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அடித்த பல்டிகள் இப்போதும் தொடர்கின்றன. அதுசரி... நிலக்கரி வாங்கியதில் பிரச்னை எனத் தகவல் வந்ததே... என்னவாம்?”

“உமக்கும் தகவல் வந்துவிட்டதா... சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ‘கோல் இந்தியா’ என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்திலிருந்துதான் பெருமளவில் நிலக்கரி சப்ளை செய்யப்படுகிறது. அங்கிருந்து வரும் நிலக்கரி போதவில்லை என்று சொல்லி, வெளியிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தரம் குறைவான நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கிளப்பிவருகின்றன.”

‘‘ஓஹோ... டி.டி.வி தரப்பு குஷியில் இருக்கிறதாமே...’’

“அடுத்து அதைத்தான் சொல்லவந்தேன்... இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் டி.டி.வி.தினகரன். விசாரணையின்போது, ‘இந்த வழக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனத் தெளிவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து, தினகரன் பெயர் இல்லாமல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது அமலாக்கத்துறை. அதை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றமும் ஏற்றிருக்கிறது.”

“ஒருவழியாக தினகரனுக்கு நிம்மதிதான். திடீரென தினகரனை டெல்லி விடுவித்ததற்கு அரசியல் காரணம் ஏதும் உண்டா?”

“அரசியல் இல்லாமலா... 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும்போது, அ.தி.மு.க-வின் வாக்குவங்கி சிந்தாமல் சிதறாமல் கூட்டணி வேட்பாளர்களுக்கு விழ வேண்டுமென்பதில் பா.ஜ.க தெளிவாக இருக்கிறதாம். அதனால், அ.தி.மு.க-விடமிருந்து கூடுதல் சீட்டுகளைப் பெற்று, அதில் உள் பங்கீடாக தினகரனுக்கும் வழங்க பா.ஜ.க முடிவெடுத்திருக்கிறதாம். இதற்காகத்தான், இரட்டை இலைச் சின்னம் வழக்கிலிருந்து தினகரன் விடுவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சி ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகள்... வெளியிடத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!

‘‘கட்சிச் செய்திகள் போதும்... அதிகாரிகள் தரப்பு செய்தி ஏதும் உண்டா?’’

“ம்... இருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கடத்தல் தங்கம் டீலிங், ஹவாலா பணம் டீலிங் என கல்லாகட்டிவருகிறாராம். தங்கம் பிசினஸில் அனுபவம் உள்ள இன்ஸ்பெக்டர் மூலம்தான் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு மாமூல் வருகிறது. ஸ்வீட் பாக்ஸ்கள் அதிக அளவில் வருவதால், ‘சினிமா தயாரிப்பைத் தொடங்கலாம்’ என முடிவெடுத்த அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, திரைத்துறையில் உள்ளவர்களுடனும் நெருக்கம் காட்டிவருகிறாராம். இப்படி திரைத்துறையினரோடு பேசுவதற்கென்றே வேறு ஒருவரின் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டைப் பயன்படுத்திவருகிறாராம் அந்த அதிகாரி.’’

‘‘அடடே..!’’

“இன்னொன்றையும் சொல்கிறேன் கேளும்... ஆளுங்கட்சி வாரிசுப்புள்ளிக்கு நிழலாக இருந்துவரும் ‘ஷ்’ புள்ளி ஒருவருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளிடமிருந்து டிரான்ஸ்ஃபர் தொடர்பான போன் அழைப்புகள் கன்னா பின்னாவென வருகின்றனவாம். இவரிடம் டிரான்ஸ்ஃபர் ஃபைலைக் கொடுத்துவிட்டால், ‘கன்ஃபார்ம்’ எனத் தெரிந்துகொண்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஃபைலோடும் ஸ்வீட் பாக்ஸோடும் ‘ஷ்’ புள்ளியை ரகசிய இடங்களில் சந்தித்து வருகிறார்களாம். ‘ஷ்’ புள்ளியின் சகோதரரும் ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால், அவரை முக்கியமான இடத்துக்குக் கொண்டுவரவும் முயற்சிகள் நடக்கின்றனவாம். இதற்கிடையே, இந்த டிரான்ஃஸ்பர் பின்னணி மற்றும் ‘ஷ்’ புள்ளியின் டீலிங்குகளைக் குறித்தும் அதிரடியான தகவல்களை விரைவில் வெளியிட எதிர்க்கட்சியினர் தயாராகிவருகிறார்களாம்” என்ற கழுகார்,

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாறுதல் லிஸ்ட் அவ்வப்போது லீக் ஆகிவிடுவதால், முதல்வருக்கு பிரஷர் அதிகமாகிவிடுகிறதாம். அதனால், லிஸ்ட்டை நிறுத்திவைக்கச் சொல்லியிருந்தாராம். இந்த இதழ் கடைக்கு வருவதற்கு முன்பே மாறுதல் லிஸ்ட் வெளியாகலாம்’’ என்றபடியே சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism