அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆவணங்களைக் காணோம்! - ஆடிப்போயிருக்கும் கோட்டை...

பன்வாரிலால் புரோஹித் -  ஸ்டாலின் சந்திப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
பன்வாரிலால் புரோஹித் - ஸ்டாலின் சந்திப்பு

இந்த நான்கு துறைகளிலிருந்து வெவ்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்

“முக்கிய வேலையாக தலைமைச் செயலகத்தில் இருக்கிறேன்... அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. சொன்ன நேரத்துக்கு அலுவலகம் வந்த கழுகாருக்கு, நெய் கேசரியை நீட்டினோம். சுவைத்தபடி செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

“பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சித்துறை தொடர்பான முக்கியமான ஃபைல்களைக் காணவில்லை என்று தலைமைச் செயலகம் பரபரப்பாகியிருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யப்பட்டிருந்த டேட்டாக்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது மேற்கண்ட நான்கு துறைகள் மீதுதான் அதிகப்படியான ஊழல் குற்றச்சாட்டுகளை தி.மு.க சுமத்தியது. அதுமட்டுமன்றி, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஸ்டாலினும் அறிவித்தார். இந்தச் சூழலில், ஆவணங்கள் காணாமல் போயிருப்பதால், அவற்றை மீட்டெடுக்கும் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நான்கு துறைகளிலிருந்து வெவ்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.”

“நல்லக் கதையாக இருக்கிறதே!”

மிஸ்டர் கழுகு: ஆவணங்களைக் காணோம்! - ஆடிப்போயிருக்கும் கோட்டை...

“ஆமாம். மற்றொரு சூடான செய்தியையும் சொல்கிறேன். தி.மு.க-வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீட் கேட்ட மணல் பிரமுகர் கரிகாலன் சில நாள்களுக்கு முன்பு துரைமுருகன், அவரின் மகன் கதிர் ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்திருக்கிறார். இதைவைத்து கரிகாலனுக்குத்தான் மணல் ஒப்பந்தம் செல்கிறது என்கிற தகவல் றெக்கை கட்டியது. ஆனால், ஆட்சியாளர்களின் எண்ணமோ வேறு என்கிறார்கள். மணல்மேல்குடி பரணி கார்த்திகேயன் என்பவருக்குத்தான் மணல் ஒப்பந்தங்களைக் கொடுக்கப்போகிறார்களாம். அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த பரணி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், தொகுதி காங்கிரஸ் கட்சிக்குச் சென்றதால், ‘நாங்கள் ஆட்சி அமைத்ததும் மணல் ஒப்பந்தம் கொடுக்கிறோம்’ என்று தி.மு.க தலைமை சொல்லியிருந்ததாம். அதன்படி பரணிக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்கிறார்கள்.”

“ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் சென்றிருக்கிறாரே... ஏதும் விசேஷமா?”

“ஜூன் 9-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் - முதல்வர் ஸ்டாலின் இடையே நடைபெற்ற சந்திப்பில், அரசியல்ரீதியாக எதுவும் பேசப்படவில்லையாம். ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கப்படவிருக்கிறது. அதற்கு அழைப்புவிடுக்கவும், ஆளுநர் உரையில் இடம்பெறவிருக்கும் முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கவும்தான் முதல்வர் சென்றாராம். இதில் இன்னொரு தகவலும் ஓடுகிறது... அதாவது, தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு சங்கங்களுக்குக் கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பாலான சங்கங்களில் அ.தி.மு.க-வினர்தான் பதவியில் இருக்கிறார்கள். அதனால், சங்க நிர்வாகத்தை மொத்தமாகக் கலைத்துவிட்டு, தேர்தல் நடத்த தி.மு.க அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக சட்ட மசோதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.”

பரணி கார்த்திகேயன்
பரணி கார்த்திகேயன்

“உதயநிதியின் கோவை மாவட்ட பயணத்தால் கனிமொழி ஆதரவாளர்கள் கொதித்துப் போயிருப்பதை கவனித்தீரா?”

“கவனித்தேன்... கவனித்தேன்! கனிமொழியை மேற்கு மண்டலப் பொறுப்பாளராக தி.மு.க நியமிக்கப்போவதாக ஜூன் 8-ம் தேதியே தகவல்கள் பரவின. இந்தத் தகவல் கசிந்த மறுதினமே, கோவைக்கு விசிட் அடித்த உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதை முன்வைத்து, ‘கொங்கு மண்டலத்தை மீட்டெடுக்கும் பொறுப்பை கனிமொழிக்கு தந்துவிடக் கூடாது’ என்பதற்காகவே, உதயநிதி இப்படி ஸ்டன்ட் அடிக்கிறார் என்று பொங்குகிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.”

“சரிதான்... புதுச்சேரியில் பா.ஜ.க ‘வளைப்பு’ முயற்சிகளில் தீவிரமாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றனவே?”

“ம்ம்... பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்து ஒரு மாதமாகியும், ரங்கசாமி மட்டுமே முதல்வராகப் பதவியேற்றுள்ளார். ஆரம்பத்தில் துணை முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளைக் கேட்ட பா.ஜ.க., இப்போது சபாநாயகர், உள்துறை அமைச்சர் உட்பட இரு அமைச்சர் பதவிகளைக் கேட்டு முட்டிமோதுகிறது. ரங்கசாமி பிடிகொடுக்காத நிலையில், புதிய திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறதாம் பா.ஜ.க. முன்பு எப்படி மூன்று சுயேச்சைகள் வளைக்கப்பட்டனரோ, அதுபோல இந்த முறை ஐந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். தேர்தலுக்குச் செலவு செய்த தொகையுடன் சேர்த்து, அடுத்த இரண்டு தேர்தல்களைச் சந்திக்கும் அளவுக்கு நிதியுதவி, ப்ளஸ் அமைச்சர் பதவி என்று பேரம் நடக்கிறதாம். இதில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் ‘அலைபாயும்’ மனநிலைக்கு வந்துவிட்டார்களாம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பத்து எம்.எல்.ஏ-க்கள் பலம் இருப்பதால், அவர்களில் ஐந்து பேர் கட்சி மாறும்பட்சத்தில் கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயாது. இதைவைத்து, பா.ஜ.க-வே நேரடியாக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.”

“புதுச்சேரி அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்...” என்றபடி கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ஆவணங்களைக் காணோம்! - ஆடிப்போயிருக்கும் கோட்டை...

“வரும் ஜூன் 14-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளை யாருக்கு அளிப்பது என்பதை அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யவிருக்கிறார்கள். இந்தப் பதவிகளைப் பிடிக்க தங்கமணி, வேலுமணி, தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் என ஒரு பெரும் படையே ரேஸில் இருக்கிறது. இதில் பன்னீரின் கை பெரிதாக ஓங்காது என்கிறார்கள்!”

“ஓஹோ...”

“சென்னை அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும், ‘கங்கை’ பிரமுகர், ‘ஏழுமலையான்’ பிரமுகர், ‘விருகை’ பிரமுகர், அவைத்தலைவருக்கு நெருக்கமானவர் ஆகிய நான்கு பேர் தி.மு.க அமைச்சர்கள் இருவரிடம் நெருக்கமாக இருக்கிறார்களாம். அந்த இரு அமைச்சர்களும் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்றவர்கள் என்பதால் பழக்கம் நெருக்கமாகியிருக்கிறது. இதைவைத்து தி.மு.க-வுக்குக் கட்சித்தாவ அந்த நால்வரும் முடிவு எடுத்திருக்கிறார்களாம். அ.தி.மு.க தலைமைக்கும் இந்தத் தகவல் எட்டியிருப்பதால், தலைநகர் அ.தி.மு.க-வில் விரைவில் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.”

“சசிகலா தரப்பினர் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருக்கிறாரே?”

“அதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்கிறார்கள். நீண்ட நாள்களாகத் தோட்டத்து தலைவருடன் அவருக்குப் பிரச்னை இருப்பதால், பி.எஸ்.ஓ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது, போலீஸ் பாதுகாப்பைத் திரும்பப் பெறும் முயற்சியில் காவல்துறை இறங்கியதாம். ‘போலீஸ் பாதுகாப்பை விட்டுவிடக் கூடாது’ என்பதற்காகவே இப்படியொரு புகாரை சண்முகம் கொடுத்திருக்கிறார் என்கிறது திண்டிவனம் வட்டாரம்” என்றபடி கிளம்பத் தயாரான கழுகார்,

“மத்திய நிதி அமைச்சகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.வி.சோமநாதன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்பதால் தி.மு.க ஆறுதலாக இருந்தது. ஆனால், அவரைவைத்தே நம் மாநிலத்துக்கான நிதித் தேவைகளில் நெருக்கடி கொடுக்க பா.ஜ.க முயல்வதாகத் தகவல்கள் வருகின்றன...” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

சமீபத்தில் கோவைக்குச் சென்ற மூத்த அமைச்சர் ஒருவரிடம், ஏரியா எம்.பி-யின் செயல்பாடுகள் குறித்து கட்சிப் பிரமுகர்கள் குமுறியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட எம்.பி-யை அழைத்து வெளுத்து வாங்கிவிட்டாராம் அமைச்சர். இதனால் கோபமடைந்த அந்த எம்.பி., தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்ய கடைசியில் வார்த்தைப்போர் ஒருமைக்குச் சென்றுவிட்டது. கைகலப்பு ஆரம்பிப்பதற்குள் சீனியர்கள் தலையிட்டு சமாதானம் செய்திருக்கிறார்கள்.

 தலைமைச் செயலகத்திலும் மாவட்ட அளவிலும் பி.ஆர்.ஓ-க்கள் நியமனங்கள் தாமதமாகின்றன. ஆனால், தன்னுடைய மாவட்டத்தில் மட்டும் ஏ.பி.ஆர்.ஓ நியமனத்தை ‘கொங்கு பாசத்தால்’ கச்சிதமாக முடித்துக்கொண்டாராம் ‘கோவில்’ அமைச்சர். இது மற்ற மாவட்டங்களில் புகைச்சலைக் கூட்டியிருக்கிறது.

 அரசு வழக்கறிஞர் நியமனத்தில் திருநெல்வேலி தி.மு.க மாவட்டப் பிரமுகர் ஒருவருக்கும், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் மூத்தவருக்கும் இடையே மோதல் வலுத்திருக்கிறது. ‘தன் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாத வேலைகளை மூத்தவர் பார்க்கிறார்’ என்று அறிவாலயத்துக்கு ஓலை அனுப்பியிருக்கிறார் மாவட்டப் பிரமுகர்.

மிஸ்டர் கழுகு: ஆவணங்களைக் காணோம்! - ஆடிப்போயிருக்கும் கோட்டை...

கைது வளையத்தில் முன்னாள் அமைச்சர்?

துணை நடிகை சாந்தினி அளித்திருக்கும் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நெருக்கடி முற்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாந்தினியை அழைத்துச் சென்றது, அரசு பங்களாவில் தங்கவைத்ததெல்லாம் பிரச்னையாக வெடித்ததாலேயே, மணிகண்டன் பதவி சத்தமில்லாமல் பறிக்கப்பட்டது என்கிறார்கள். இப்போது தன்னைக் காப்பாற்றும்படி, அ.தி.மு.க தலைமையை மணிகண்டன் நாடியபோது, தலைமை கைவிரித்துவிட்டதாம். முன்ஜாமீன் கோரி மணிகண்டன் முயன்றுவரும் நிலையில், விரைவில் அவர் கைதுசெய்யப்படுவார் என்கிறார்கள்.