Published:Updated:

மிஸ்டர் கழுகு: கேரள நம்பூதிரியின் அருள்வாக்கு... உற்சாகத்தில் திவாகரன்!

திவாகரன்
பிரீமியம் ஸ்டோரி
திவாகரன்

‘இழந்த அரசியல் அதிகாரம் உங்கள் குடும்பத்துக்கு வரும். பழையபடி நீ அதிகாரத்தில் இருப்பாய்’

மிஸ்டர் கழுகு: கேரள நம்பூதிரியின் அருள்வாக்கு... உற்சாகத்தில் திவாகரன்!

‘இழந்த அரசியல் அதிகாரம் உங்கள் குடும்பத்துக்கு வரும். பழையபடி நீ அதிகாரத்தில் இருப்பாய்’

Published:Updated:
திவாகரன்
பிரீமியம் ஸ்டோரி
திவாகரன்

கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘முதல்வர் சேலம் சென்றுவிட்டாரே... தலைமைச் செயலக கொரோனா பரவல் ஒரு காரணமோ?’’ என்ற கேள்வியுடன் நறுக்கிய மாம்பழங்களை எடுத்துவைத்தோம். மாம்பழங்களைச் சுவைத்தபடியே செய்திகளைக் கொட்டினார் கழுகார்.

‘‘சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் இருந்துதான் பெரும்பாலான ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்கு வருகின்றனர். இவர்கள் மூலமாக கொரோனா பரவல் கோட்டையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தொழில்துறையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தினார்கள். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால், தொழில்துறை அலுவலகத்தில் மட்டும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இப்போது அந்த அலுவலகம் அமைந்திருந்த கட்டடத்தையே மூடிவிட்டார்கள். ‘தலைமைச் செயலகப் பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை 33 சதவிகிதமாகக் குறைக்கும்படி அரசுக்கு பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் கொரோனா தொற்று தலைமைச் செயலகத்திலும் பரவிவிட்டது. முதல்வர் சேலம் சென்றுவிட்டார். ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஜெ.அன்பழகன் இறப்பால் தி.மு.க-விலும் கொரோனா அச்சம் தொற்றியுள்ளதே!’’

ஜெ.அன்பழகனுக்கு மலர் அஞ்சலி...
ஜெ.அன்பழகனுக்கு மலர் அஞ்சலி...

‘‘இருக்காதா பின்னே... வீட்டுப் பணியாளர்களைக்கூட துரைமுருகன் நிறுத்திவிட்டாராம். ‘எந்த வெளி நிகழ்ச்சிகளுக்கும் போக வேண்டாம்’ என உதயநிதிக்கு ஸ்டாலின் தடைபோட்டிருக்கிறார். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த மூன்று நிகழ்ச்சிகளையும் ஸ்டாலின் ரத்து செய்துவிட்டாராம். மருத்துவமனையில் அன்பழகன் அட்மிட் ஆன மறுநாளே நந்தனத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளார். ‘நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்த பின்னர்தான் அவருக்கு உயிரே வந்திருக்கிறது. சர்க்கரைநோய், கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ள தி.மு.க தலைவர்கள் எல்லாம் ஆடிப்போயிருக்கிறார்கள். இதனால், ஐபேக் ஆரம்பித்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டமும் மூடுவிழாவுக்கு வந்துவிட்டது.’’

துரைமுருகன் - கதிர் ஆனந்த்
துரைமுருகன் - கதிர் ஆனந்த்

‘‘ஓஹோ... துரைமுருகன்கூட ஐபேக்மீது ஏதோ கோபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்களே?’’

‘‘ ‘ஐபேக்’கின் யுக்திகள்மீது துரைமுருகனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அவ்வப்போது தன் விமர்சனங்களை நக்கலாகக் குத்திக் காட்டுவிடுகிறார். இதில் கடுப்பான ஐபேக் தரப்பு, துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்துக்குக் குடைச்சல் கொடுப்பதாக வேலூர் தி.மு.க-வில் பரபரப்பு எழுந்துள்ளது. கதிர் ஆனந்த் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் குறையைக் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் வீண் வதந்தியைச் சிலர் பரப்புகிறார்களாம். ‘இந்த உள்ளடி வேலையைப் பார்ப்பதே, ‘ஐபேக்’ கட்டுப்பாட்டிலுள்ள தி.மு.க நிர்வாகிகள் சிலர்தான்’ என துரைமுருகன் சந்தேகப்படுகிறார். தன்னை எதிர்க்க முடியாமல், மகனின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்ப்பதாக ‘ஐபேக்’ மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அப்படியா?’’

“ரேபிட் டெஸ்ட் கிட், பி.பி.இ கிட் கொள்முதல் முறைகேடு விவகாரங்களை உன்னிப்பாக கவனித்த மத்திய உளவுத்துறை, தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் குறித்து டெல்லிக்கு நோட் போட்டிருந்தது. ஏற்கெனவே சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது புதிதாக இந்தக் குற்றச்சாட்டுகளும் முளைத்ததால், ‘அவரை உடனே மாற்றுங்கள்’ என டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாம். முதல்வரும் விஜயபாஸ்கரை வேறு துறைக்கு மாற்றிவிடலாம் என நினைத்துள்ளார். அமைச்சர் தங்கமணிதான் தலையிட்டு, ‘இந்த நேரத்துல மாத்தினா தப்பு நடந்திருக்கறதா நாமளே ஒப்புக்கிட்ட மாதிரி ஆகிடும். கொஞ்சம் பொறுமையாகக் கையாளலாம்’ என்று சொல்லி முதல்வரை ஆஃப் செய்துவிட்டார் என்கிறார்கள்.’’

விஜயபாஸ்கர் - ராஜேந்திர பாலாஜி
விஜயபாஸ்கர் - ராஜேந்திர பாலாஜி

‘‘ஓ...’’

‘‘இந்த விவகாரம் நடந்த மறுதினமே செய்தி வாசிப்பாளர் வரதராஜனின் ‘ஹாஸ்பிடல்களில் பெட் இல்லை’ வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கான எதிர்வினையை முதல்வர் காட்டியதும், மாவட்டவாரியாக எத்தனை படுக்கைகள் காலியாக இருக்கின்றன, தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் எத்தனை என்ற பட்டியலை முதல்வர் அலுவலகத்தில் விஜயபாஸ்கர் கொடுத்துள்ளார். ‘இதையெல்லாம் நீங்களே மீடியாக்காரங்ககிட்ட சொல்லிடுங்க’ என முதல்வரிடமிருந்து அமைச்சருக்கு உத்தரவு வந்துள்ளது. இதன் பிறகுதான் தழுதழுக்கும் குரலில் அந்த உருக்கமான செய்தியாளர்கள் சந்திப்பை விஜயபாஸ்கர் நடத்தியுள்ளார். `அந்தச் செய்தியாளர் சந்திப்பையே தன் அமைச்சர் பதவியைப் பாதுகாத்துக்கொள்ளும் யுக்தியாக மாற்றிவிட்டார்’ என்கிறார்கள் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘உஷார் பார்ட்டிதான்... இன்னோர் அமைச்சரும் பதவிக்காக தனி ரூட் போடுகிறாராமே?’’

‘‘ராஜேந்திர பாலாஜியைத்தானே குறிப்பிடுகிறீர்?’’ என்ற கழுகார், தண்ணீரைப் பருகிவிட்டு தொடர்ந்தார். ‘‘விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பிடிக்க, டெல்லி பா.ஜ.க தலைவர்களை அவர் நாடியுள்ளார். இங்குள்ள மாநில பா.ஜ.க தலைவர்களிடமும் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். டெல்லி ஆதரவால் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்ததுபோல, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துவிடும் என நம்புகிறாராம். ஆனால், இதுவரை பாசிட்டிவ் செய்தி எதுவும் அவருக்கு வரவில்லை.’’

‘‘நெல்லை மாவட்ட தி.மு.க அப்டேட்ஸ் இருக்கிறதா?’’

‘‘சமீபத்தில் கட்சியில் இணைந்த தொழிலதிபரான அய்யாத்துரை பாண்டியன் சில தினங்களுக்கு முன்னர் தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனின் ஆதரவாளரும், தென்காசி நகரச் செயலாளருமான சாதிர் தலைமையிலான கட்சியினர், ‘எங்களுக்குத் தெரிவிக்காமல் எப்படி நலத்திட்ட உதவி வழங்கலாம்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், விவகாரம் காவல்நிலையம் சென்றுவிட்டது.

சசிகலா
சசிகலா

“ம்ம்ம்...”

“பிறகு ‘நாங்கள் தி.மு.க சார்பாக நலத்திட்ட உதவி வழங்கவில்லை. எங்களுடைய சொந்தப் பணத்தில் உதவிகளைச் செய்கிறோம். கட்சி நிர்வாகிகளிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என அய்யாதுரையின் ஆட்கள் மல்லுக்கட்டியுள்ளனர். பின்னர் காவல்துறையின் உதவியுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி முடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் கட்சித் தலைமையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். ஏற்கெனவே நெல்லை மத்திய மாவட்டத்தில் நடைபெற்ற கோஷ்டிப் பூசல் தொடர்பாக தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விசாரணை நடத்திச் சென்றிருக்கும் நிலையில், நெல்லை மேற்கு மாவட்ட கோஷ்டிப் பூசல் விவகாரமும் தலைமைக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் நெல்லை மாவட்டம் முழுவதும் பல முக்கியத் தலைகள் கட்சியிலிருந்தே ஓரங்கட்டப்படலாம்’’ என்ற கழுகார், ‘‘சுவாரஸ்யமான தகவல் ஒன்றைச் சொல்கிறேன்... கேளும்” என்றபடி தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: கேரள நம்பூதிரியின் அருள்வாக்கு... உற்சாகத்தில் திவாகரன்!

‘‘ஜெயலலிதாவும் சசிகலாவும் கேரளாவைச் சேர்ந்த 90 வயது நம்பூதிரி ஒருவரிடம் ஜாதகம் பார்ப்பது வழக்கம். ஜெயலலிதாவின் மரணம், சசிகலாவின் சிறைவாசம் உட்பட பல விவகாரங்களை முன்கூட்டியே கணித்து, ‘நேரம் சரியில்லை’ என கூறியவராம் அந்த நம்பூதிரி. சில மாதங்களுக்கு முன்னர் சசிகலாவின் தம்பி திவாகரன் அந்த நம்பூதிரியை கேரளாவில் சந்தித்துள்ளார். தன்னுடைய அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசியுள்ளார். ‘இழந்த அரசியல் அதிகாரம் உங்கள் குடும்பத்துக்கு வரும். பழையபடி நீ அதிகாரத்தில் இருப்பாய்’ என அந்த நம்பூதிரியும் அருள்வாக்குக் கூறியிருக்கிறார். இதிலிருந்து திவாகரனின் நடவடிக்கைகளில் உற்சாகம் பீறிடுகிறதாம். திவாகரன் குடும்பம் இப்போது அந்த நம்பூதிரியின் வார்த்தையைத்தான் வேதவாக்காக நம்பியிருக்கிறது’’ என்ற கழுகார், “விரைவில் தமிழக அரசிடமிருந்து முக்கிய அறிவிப்பு வந்தாலும் வரலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism