Published:Updated:

மிஸ்டர் கழுகு: அண்ணாமலைக்கு தகவல் தரும் கறுப்பு ஆடு... கோட்டையில் தொடங்கிய விசாரணை!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

கட்சி தொடங்கிய குறுகியகாலத்திலேயே எதிர்க்கட்சி அளவுக்கு வளர்ந்த தே.மு.தி.க., தற்போது அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் கழுகு: அண்ணாமலைக்கு தகவல் தரும் கறுப்பு ஆடு... கோட்டையில் தொடங்கிய விசாரணை!

கட்சி தொடங்கிய குறுகியகாலத்திலேயே எதிர்க்கட்சி அளவுக்கு வளர்ந்த தே.மு.தி.க., தற்போது அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

“ஆன்லைன் சூதாட்ட விளம்பரங் களை வெளியிடத் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கக்கூடியதுதான். ஆனால், ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாகத் தடைசெய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார்.

“சரியாகச் சொன்னீர்... இதற்கு மேலும் உயிர்ப்பலி தொடர அனுமதிக்கக் கூடாது!”

“நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம், பெரிய அளவில் நடந்திருக்கிறது. உள்துறைச் செயலாளராக பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். தொடர் லாக்கப் மரணங்கள், அதிகரிக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் என்று சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியிருப்பதால், அதைச் சரிக்கட்டவே பணீந்திர ரெட்டியை உள்துறைச் செயலாளராக நியமித்திருக்கிறார்களாம். காவல்துறை அதிகாரிகளுக்குள் இருக்கும் ஈகோவைக் கண்டறிந்து சரிசெய்யும் வேலையும் இவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சுகாதாரத்துறைச் செயலாளராக ரொம்ப காலமாக இருந்த ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கிறார். அதே துறையில் நீட்டிக்கச் சொல்லி எவ்வளவோ முயன்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால், துறை மாற்றத்தில் அரசு உறுதியாக இருந்திருக்கிறது. கடைசியாக உள்துறையையாவது ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அதையும் மறுத்து கூட்டுறவுச் செயலாளர் ஆக்கியிருக்கிறார்கள். கடும் ‘அப்செட்’டில் இருக்கிறார் ராதாகிருஷ்ணன்.”

மிஸ்டர் கழுகு: அண்ணாமலைக்கு தகவல் தரும் கறுப்பு ஆடு... கோட்டையில் தொடங்கிய விசாரணை!

“அரசுப் பணியில் இதெல்லாம் சகஜம்தானே?!”

“ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. சீனியர் அமைச்சர்கள் தொடங்கி ஜூனியர்கள் வரை தங்களுக்குத் தோதான அதிகாரிகளைத் தங்கள் துறைக்கு மாற்றிக்கொண்டதோடு வேண்டாதவர்களைத் தூக்கியடித்திருக்கிறார்கள். இதனால் ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி நிறைய அதிகாரிகள் அப்செட்டில் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, ‘மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் கேட்டதைச் செய்துகொடுத்த தலைமை, என்னை மட்டும் கண்டுகொள்ளவில்லை’ எனப் புலம்பியிருக்கிறார் சமீபத்தில் முறைகேடு புகார் எழுந்த ஒரு துறையின் அமைச்சர்.”

“அமைச்சர் மனோ தங்கராஜ் விவகாரத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தீரா?”

“கன்னியாகுமரி குமாரகோயில் தேர்வடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொட்டு இழுத்ததைத் திட்டமிட்டே பிரச்னையாக்கியிருக்கிறது பா.ஜ.க. ‘மாற்று மதத்தவரைவைத்து தேரை இழுப்பதா?’ என்று போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ காந்தி தலைமையில் கைதாகியிருக்கிறார்கள். ‘நீங்கள் தேர்வடம் பிடித்தால் இப்படியெல்லாம் பிரச்னை வரும்’ என்று உளவுத்துறை மூலம் மனோ தங்கராஜுக்கு ஏற்கெனவே ‘அலர்ட்’ போயிருக்கிறது. தேரோட்டத்துக்கு முதல்நாள் அவசர அவசரமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்ட மனோ, ‘நீங்க வந்து துணைக்கு நில்லுங்கண்ணே...’ என்றிருக்கிறார். அதன்படி, காவித்துண்டு அணிந்து துணைக்கு 25 பேருடன் குமாரகோயிலுக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘உங்க மத அரசியலை வேற எங்காவது போய் வெச்சுக்கிடுங்க. என் தம்பி மனோ தேர்வடத்தைத் தொடுவான். முடிஞ்சா தடுத்துப் பாருங்கலே’ என்று பா.ஜ.க-வினருக்கு சவால் விட்டிருக்கிறார். பெரும் களேபரங்களுக்கு இடையேதான் தேரோட்டம் நடைபெற்றிருக்கிறது. எல்லோருக்கும் பொதுவானவரான மாநில அமைச்சர் ஒருவர் மீதே மதரீதியிலான தாக்குதலை பா.ஜ.க-வினர் தொடங்கிவிட்டதால், தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க நிர்வாகிகளின் செயல்பாட்டை மாநில உளவுத்துறை ‘ஹை அலர்ட்’டாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.”

“இது தொடர்பான அண்ணாமலையின் அறிக்கை சர்ச்சையாகியிருக்கிறதே?”

“அதை அவர் தவிர்த்திருக்கலாம் என்று பா.ஜ.க-விலேயே சிலர் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். இது மட்டுமின்றி, அண்ணாமலையின் சமீபத்தியச் செயல்பாடுகள் ஆளும் தரப்புக்கு கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் அரசுமீது சுமத்தும் ஊழல் புகார்களுக்கான பூர்வாங்க தகவல்களை அதிகாரிகள் மட்டத்திலிருந்துதான் யாரோ கொடுக்கிறார்கள் என்கிற சந்தேகம் ஆளும் தரப்புக்கு எழுந்திருக்கிறது. ‘அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்து கோட்டையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள்கூட கசிகிறது. உயரதிகாரிகள் மட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களை அண்ணாமலைக்குச் சொல்பவர் யார்?’ என்று ரகசிய விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறாராம்.”

மிஸ்டர் கழுகு: அண்ணாமலைக்கு தகவல் தரும் கறுப்பு ஆடு... கோட்டையில் தொடங்கிய விசாரணை!

“அப்படி உத்தரவிடும் அளவுக்கு என்ன நடந்ததாம்?”

“சில மாதங்களுக்கு முன்பு, ஆளுநர் ரவியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் அப்பாயின்ட்மென்ட் கேட்கும் படலம் நடந்துகொண்டிருந்தது. இந்தத் தகவல் அண்ணாமலை காதுகளை எட்ட… முதல்வரை முந்திக்கொண்டு ஆளுநரின் அப்பாயின்ட்மென்டை வாங்கியதோடு, அரசு குறித்துப் பெரிய குற்றப் பத்திரிகையே வாசித்துவிட்டுவந்தார் அண்ணாமலை. ‘ஆளுநரைச் சந்திக்க நாம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கும் தகவலை யாரும் அண்ணாமலைக்குச் சொல்லியிருப்பார்களோ?’ என்று அப்போதே முதல்வருக்குச் சந்தேகம் எழுந்திருக்கிறது. தொடர்ந்து இதைப்போலவே பல சம்பவங்கள் வரிசைகட்டியிருக்கின்றன. இதன் பிறகே, ‘நம் கூட்டத்தில் இருக்கும் கறுப்பு ஆடுதான் இந்தத் தகவல்களையெல்லாம் அண்ணாமலைக்குக் கொடுக்கிறது. அந்தக் கறுப்பு ஆட்டைக் கண்டுபிடியுங்கள்’ என்று கோட்டையில் தனக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டாராம். விரைவில் அந்தக் கறுப்பு ஆடு சிக்கும் என்கிறார்கள்.”

“தே.மு.தி.க-வில் ஏதோ சலசலப்பு தெரிகிறதே...”

“கட்சி தொடங்கிய குறுகியகாலத்திலேயே எதிர்க்கட்சி அளவுக்கு வளர்ந்த தே.மு.தி.க., தற்போது அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் இது பற்றி முக்கிய நிர்வாகிகள் ஆதங்கத்தோடு கேட்டால், ‘கேப்டன் மீது நேசமும், என்மீது நம்பிக்கையும் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லையென்றால் போய் தி.மு.க-வுக்குள் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் எதுவும் நினைக்க மாட்டோம்’ எனச் சொல்லிவிடுகிறாராம். ‘ஏன் இப்படியெல்லாம் சொல்கிறார்?’ என்று குழப்பத்தில் இருக்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள்” என்ற கழுகாருக்கு பாதாம் பாலும், காராச்சேவும் கொடுத்தோம். அவற்றை ருசித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: அண்ணாமலைக்கு தகவல் தரும் கறுப்பு ஆடு... கோட்டையில் தொடங்கிய விசாரணை!

“பிரதமர் மோடியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் டெல்லியில் சந்தித்தார் அல்லவா... அப்போது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்ததாக வெளியில் சொல்லப்பட்டாலும், கொஞ்சம் விசாரித்தால் வேறொரு காரணத்துக்காகவே இந்தச் சந்திப்பு என்கிறார்கள். நீர்நிலையையும், அரசு நிலங்களையும் ஆக்கிரமித்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அறக்கட்டளை கட்டியிருக்கும் கட்டங்களை உடனே அகற்றக் கறாராக உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தடுப்பதற்கு அறக்கட்டளை சார்பில் தமிழக அரசை அணுகியும் எந்த பயனும் இல்லையாம். எனவே, எம்.பி அன்புமணியை நாடியுள்ளனர். இதையடுத்தே அன்புமணி பிரதமரை சந்தித்துப் பேசினாராம். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஜூன் 10-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்து, 15-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்ற கழுகார்…

“பராமரிப்பு வேலைகள் செய்கிறேன் என்ற பெயரில், கிட்டத்தட்ட 60 லட்ச ரூபாய்க்கு திருச்சி மேயர் பங்களாவை அழகுபடுத்தியிருக் கிறாராம் மேயர் அன்பழகன். மாநகராட்சியின் பல பணிகளுக்கு நிதிப் பற்றாக்குறை இருக்கும் சூழலில், தன்னுடைய பங்காளாவுக்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்திருக்கிறார் மேயர். ‘பெயின்ட் அடித்துப் பராமரிப்பு செய்ததற்கே இத்தனை லட்சங்களா... இந்தக் கணக்கை எப்படி எழுதுவது...’ என்று தெரியாமல் திணறுகிறார்களாம் மாநகராட்சி அதிகாரிகள்” என்றபடி சிறகுகளை விரித்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism