Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி சாதுர்யம்... பணிந்துபோன பன்னீர்!

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

கூட்டம் நடைபெற்ற சமயத்தில் புகழேந்தி தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தார். தான் நீக்கப்படப் போகும் செய்தி லேட்டாகத்தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அ.தி.மு.க-வில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா நியமனம் தொடர்பான அறிவிப்பு நகலை வாசித்தபடியே ‘என்ட்ரி’ கொடுத்த கழுகாரிடம் சூடாக இஞ்சி டீயை நீட்டிவிட்டு, “பன்னீர்செல்வம் சரண்டராகிவிட்டாரே?” என்றோம். புன்முறுவல் பூத்த கழுகார், “பன்னீர் அப்படிச் செய்யவில்லை என்றால்தானே ஆச்சர்யம்...” என்று டீயை உறிஞ்சியபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

“சட்டமன்றத் துணைத் தலைவர் பொறுப்புக்கு வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர் பெயர்கள்தான் முதலில் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், ‘நீங்கதான் இந்தப் பொறுப்பை ஏத்துக்கணும். அப்பதான் சசிகலாவோட நீங்க இணக்கமாக இல்லைன்னு தொண்டர்களுக்கும் தெளிவுபடுத்த முடியும்’ என்று எடப்பாடி போட்ட பிட்டை நம்பி, பன்னீர் சரண்டர் ஆனாராம். இந்த விவகாரத்திலும் ஆரம்பத்தில் முறுக்கிக்கொண்ட பன்னீரை சாதுர்யமாகப் பேசி, வழக்கம்போல பணிய வைத்துவிட்டார் எடப்பாடி என்கிறது ராயப்பேட்டை வட்டாரம். கொறடா பொறுப்பு வேலுமணிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பெயருக்கு சிறு பதவிகளைப் பிற சமூகத்தினருக்கு அளித்துவிட்டு, அதிகாரமிக்க எதிர்க்கட்சித் தலைவர், கொறடா பொறுப்புகளைத் தன் சமூகத்தினருக்கே எடப்பாடி ஒதுக்கிக்கொண்டது, மற்ற சமூக எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், இந்த நியமனங்களைத் தாண்டி சசிகலாவைப் பற்றித்தான் காரசாரமாக விவாதித்திருக்கிறார்கள்.”

“என்ன விவாதித்தார்களாம்?”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி சாதுர்யம்... பணிந்துபோன பன்னீர்!

“வேலுமணிதான் மிளகாயைக் கடித்தவர்போல வெடித்திருக்கிறார். ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறுறவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு ஏற்கெனவே நாம அறிவிச்சிருக்கோம். அதையும் மீறி அந்தம்மாகிட்ட பேசுறாங்க. இதை முளையிலேயே கிள்ளி எறியணும்’ என்றிருக்கிறார். கடம்பூர் ராஜூவும் தன் பங்குக்கு சசிகலாவை வறுத்தெடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்துதான், சசிகலாவுடன் போனில் பேசிய 15 பேரை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். ஆனால், இதில் பன்னீருக்கு உடன்பாடு இல்லையாம். பலரும் அழுத்தம் கொடுத்ததாலேயே அவர் கையெழுத்திட்டதாகச் சொல்கிறார்கள்.”

“இதே காரணத்தைத்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தியிடமும் பன்னீர் சொன்னாராமே?”

“ஆமாம். கூட்டம் நடைபெற்ற சமயத்தில் புகழேந்தி தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தார். தான் நீக்கப்படப் போகும் செய்தி லேட்டாகத்தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது. கூட்டம் முடிந்து வீட்டுக்குச் சென்ற பன்னீரை, புகழேந்தி தனியே சந்தித்திருக்கிறார். அப்போது, ‘என்னைக் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போடவெச்சுட்டாங்க. என்னால எதுவும் செய்ய முடியலை’ என்று பன்னீர் கூறினாராம். அதற்கு, ‘இனி எடப்பாடியை ஒரு கை பார்க்காம விட மாட்டேன்... நீங்க சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்கண்ணே’ என்று நக்கலாகச் சொல்லிவிட்டு கிளம்பினாராம் புகழேந்தி. சசிகலாவுடன் புகழேந்தி தொடர்பில் இருந்ததுதான் நீக்கத்துக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.”

“ஓஹோ... அதிருக்கட்டும், முதல்வர் ஸ்டாலின் கட்சி நடவடிக்கைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்களே?”

“ம்ம்ம்... என் காதுக்கும் தகவல் வந்தது. சாதாரண நாள்களில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தால் ஆட்சி, கட்சி இரண்டையும் கவனிக்கலாம். ஆனால், நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் பொறுப்பேற்றதால், ஆட்சிதான் முக்கியம் என்று கொஞ்ச நாள்கள் கட்சிப் பக்கம் கவனத்தைச் செலுத்தாமல் இருக்கிறாராம். வரும் ஜூன் 21-ம் தேதி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கூடவிருக்கிறது. அது முடிந்தவுடன், தினமும் கருணாநிதி பாணியில் அறிவாலயம் செல்லவிருக்கிறாராம் ஸ்டாலின். அதன் பிறகு, கட்சியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள்.”

“சரிதான்... முதல்வரின் டெல்லி விசிட் குறித்து ஏதேனும் தகவல் இருக்கிறதா?”

“ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரும் ஜூன் 17-ம் தேதி முதன்முறையாக பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமரைச் சந்திக்கவில்லை. அவ்வளவு ஏன்... பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் புதுச்சேரி ரங்கசாமிகூட டெல்லி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்தநிலையில், மோடியை ஸ்டாலின் சந்திப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறது. இந்தச் சந்திப்பில் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை எடுத்து நடத்துவது, நிதித் தேவை ஆகியவை பற்றிப் பேசவிருக்கிறாராம். மேலும், இந்தப் பயணத்தில் டெல்லியில் கட்டப்பட்டுவரும் தனது கட்சி அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளையும் ஸ்டாலின் பார்வையிடுகிறார் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி சாதுர்யம்... பணிந்துபோன பன்னீர்!

“தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியில் விரைவில் மாற்றம் இருக்கும் என்கிறார்களே?”

“அணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல், நிதி நிர்வாகம் உள்ளிட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அணித் தலைவரின் வழிகாட்டுதல் இல்லாததால், தி.மு.க-வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு, ஐடி விங் நிர்வாகிகளால் எதிர்வினையாற்ற முடியவில்லையாம். அதனால், பி.டி.ஆரை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு, நிதியமைச்சர் பொறுப்பை மட்டும் கவனிக்கும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தவிருக்கிறதாம்” என்ற கழுகாருக்கு, சூடாக மிளகாய் பஜ்ஜியை நீட்டினோம். பஜ்ஜியைச் சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“ஜூன் 13-ம் தேதி வெளியான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் முழுக்க முழுக்க சித்தரஞ்சன் சாலை தயாரிப்பாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராகப் பணியமர்த்தப் பட்டிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடியுடனும் வேலுமணியுடனும் நெருக்கமாக இருந்தவர் பொன்னையா. காஞ்சிபுரம் ஆட்சியராக அவர் இருந்தபோது, மணல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் விவகாரங்களில் அவரது பெயர் சர்ச்சையானது. மேலும், பொன்னையாவுக்கு கீழ் சப் கலெக்டராக இருந்த சரவணக்குமார், நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டபோது அது ஏன் என்பது அப்போது பலருக்கும் புரியவில்லை. தற்போது மாப்பிள்ளை சேனலைப் பிடித்து, தான் நினைத்தபடியே நகராட்சி நிர்வாக ஆணையர் பதவிக்கு பொன்னையா வந்துவிட்டார். இப்போது இருவரும் ஒரே துறையில் இருப்பதால், இந்த இருவர் கூட்டணி என்ன செய்யப்போகிறதோ என்று சீனியர் அதிகாரிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது!”

“ஓ...”

“டாக்டர் ஆர்.செல்வராஜ் என்பவர் பேரூராட்சிகள் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பேரூராட்சி இயக்குநராக இருந்தபோது ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவராம். அதேபோல கடந்த ஆட்சியில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடர்பான டெண்டர் சர்ச்சையில் சிக்கிய அமுதவள்ளியை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் இயக்குநராக நியமித்திருக்கிறார்கள். இப்படி அ.தி.மு.க ஆட்சியில் சர்ச்சையில் சிக்கியவர்களை மீண்டும் பொறுப்புக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை முன்வைத்துப் புலம்பும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், ‘அ.தி.மு.க ஆட்சியை கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் என்று விமர்சித்துத்தான் ஸ்டாலின் முதல்வரானார். ஆனால், அதிகாரிகள் நியமனத்தில் அவரின் குடும்பம் புகுந்து விளையாடினால் எப்படி ஊழலற்ற ஆட்சியை ஸ்டாலின் கொடுப்பார்?’ என்று கேட்கிறார்கள்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி முதல் மே மாதம் வரை முழுக்க முழுக்க அதிகாரிகளின் ஆட்சிதான் நடந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இருவர் இதைப் பயன்படுத்தி ஏகத்துக்கும் சம்பாதித்திருக்கி றார்களாம். குறிப்பாக, கட்டடங்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் பிளானிங் செக்‌ஷனில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இது தொடர்பான புகார்கள் தலைமைக்கு எட்டிய செய்தி அறிந்தவுடன், அந்த இரண்டு அதிகாரிகளும் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரை நேரில் பார்த்து பேசி முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

சர்ச்சையில் சிக்கியிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சென்னைக்கு அருகிலிருக்கும் மாவட்டத்தின் உச்சப் பதவியில் அமரவைக்கப்பட்டிருக்கிறார். ‘நிலவு’ அதிகாரி இவரைப் பற்றி ‘சரியான ரெஸ்பான்ஸ் இல்லை, அவர் வேண்டாம்’ என்று எவ்வளவோ சொல்லியும், மாப்பிள்ளை தரப்பு அழுத்தம் கொடுத்து பதவியில் அமரவைத்துவிட்டதாம்!

 கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏழு நட்சத்திர தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலை, முன்னாள் பவர்ஃபுல் அமைச்சரின் அன்பான சகோதரர் வாங்கியிருக்கிறாராம். இந்த டீலை சத்தமில்லாமல் முடித்துக் கொடுத்தது பொள்ளாச்சி பிரதிநிதிதானாம்!

 மதுரையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய சினிமா ஃபைனான்ஸியர் ஒருவர் மீண்டும் தி.மு.க-வுக்கு வர நினைக்கிறாராம். இதற்காக ஸ்டாலின் குடும்பப் பிரமுகர்களை நெருங்க முயன்றிருக்கிறார். ஆனால், உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களாம்!

 கடந்த தேர்தலின்போது கொங்கு மண்டலத்துக்கு போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டுசென்றதாக சில அதிகாரிகள்மீது ரகசிய விசாரணை ஆரம்பித்திருக்கிறது. இதில் ஸ்பெஷல் பிராஞ்ச் பொறுப்பில் இருந்த ஒருவர், மேற்கு மண்டல முன்னாள் அமைச்சரின் பி.எஸ்.ஓ ஒருவர் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள்.