Published:Updated:

மிஸ்டர் கழுகு: பதவிப் பஞ்சாயத்து... திணறும் தி.மு.க., பா.ஜ.க!

அண்ணா அறிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா அறிவாலயம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னைச் சாதியைச் சொல்லித் திட்டியதாக முதுகுளத்தூர் பி.டி.ஓ ராஜேந்திரன் பகிரங்கப் பேட்டி கொடுத்தார் அல்லவா

மிஸ்டர் கழுகு: பதவிப் பஞ்சாயத்து... திணறும் தி.மு.க., பா.ஜ.க!

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னைச் சாதியைச் சொல்லித் திட்டியதாக முதுகுளத்தூர் பி.டி.ஓ ராஜேந்திரன் பகிரங்கப் பேட்டி கொடுத்தார் அல்லவா

Published:Updated:
அண்ணா அறிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா அறிவாலயம்

“கடந்த ஜூ.வி இதழில் வெளியான இரு கட்டுரைகளுக்கு தமிழ்நாடு அரசு ‘ரியாக்ட்’ செய்திருக்கிறது. ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலைக் கூட்ட வலியுறுத்தி பிரதமருக்குக் முதல்வர் ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதவில்லை?’ என்றும், ‘அகவிலைப்படி உயர்வு கோரும் ரேஷன் பணியாளர்களின் போராட்டம்’ குறித்தும் இரு கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம். ஜூன் 16ம் தேதி பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர், அதில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை நடத்த வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். ரேஷன் பணியாளர் களுக்கு 28 சதவிகித அகவிலைப்படி உயர்வை முன் தேதியிட்டு வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்” என்றபடியே ‘என்ட்ரி’ கொடுத்த கழுகார் நேரடியாகச் செய்திக்கு வந்தார்.

“தி.மு.க உட்கட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக ஒன்றியச் செயலாளர் தேர்வு நடந்ததல்லவா... அதில் ஏகப்பட்ட குளறுபடிகளாம். அது குறித்து புகார் கொடுப்பதற்காக அறிவாலயத்தில் குவிகிறார்கள் உடன்பிறப்புகள். ‘பெரிய அளவில் புகார் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மாற்ற வேண்டாம்’ என்று கட்சித் தலைமை சொல்லியிருந்தது. அந்த ஓட்டையைப் பயன்படுத்தி புகுந்து விளையாடியிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும். பெரிய பெரிய புகார்கள் இருந்தும்கூட, தங்களுக்கு வேண்டிய ஒன்றியச் செயலாளர்கள் பலரது பதவியைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்களாம். அது பற்றி முறையிடத்தான் சுமார் பத்து மாவட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் குவிந்திருக்கிறார்கள்.”

அண்ணாமலை
அண்ணாமலை

“ஓஹோ...”

“இவ்வாறான புகார்களை விசாரிக்க, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்திருந்தது தி.மு.க தலைமை. ஆ.ராசாவுக்கும் நேருவுக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்படவே, நேருவும் தங்கம் தென்னரசுவும் அதிலிருந்து விலகிக்கொண்டனர். அவர்களுக்கு பதிலாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டார்கள். இவர்கள்தான் கடந்த ஒரு வாரமாக இந்தப் புகார்களை விசாரித்து வருகிறார்கள். புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு, 5 முதல் 10 நிமிடங்கள் அவர்களிடம் பேசும் இந்தக் குழுவினர், புகாருக்குள்ளான ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர்களிடம் போனில் பேசி அவர்களின் விளக்கத்தையும் கேட்கிறார்கள். பிறகு, ‘ஊருக்குப் போங்க... நல்லது நடக்கும்...’ என்று சொல்லி அனுப்பி விடுகிறார்களாம். முடிவே தெரியாமல் வந்தவழியில் திரும்பிச் செல்கிறார்கள் நிர்வாகிகள். முதல்வர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தாரே தவிர கட்சி விவகாரங்களைக் கவனிக்கவில்லை என்கிற ஆதங்கம் கட்சியினருக்கு இருக்கிறது.”

“அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அடுத்த சிக்கல் வரப்போகிறது என்கிறார்களே...”

“உண்மைதான். அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னைச் சாதியைச் சொல்லித் திட்டியதாக முதுகுளத்தூர் பி.டி.ஓ ராஜேந்திரன் பகிரங்கப் பேட்டி கொடுத்தார் அல்லவா... அதையடுத்து அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சில அமைப்புகள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்குப் புகார் மேல் புகார் அனுப்பின. இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம், அவர்மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி-யை அறிவுறுத்தியிருக்கிறது. ‘இது அறிவுறுத்தல் அல்ல, அச்சுறுத்தல் நடவடிக்கை தான்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ‘சமூகநீதி பேசும் தி.மு.க-வின் இமேஜை உடைக்க, மத்திய இணை அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையில் நடப்பவைதான் இவை’ என்கிறார்கள் அவர்கள். விரைவில் அமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கேட்கும் நிலை வரலாம்.”

மிஸ்டர் கழுகு: பதவிப் பஞ்சாயத்து... திணறும் தி.மு.க., பா.ஜ.க!

“கமலாலயத்திலும் அடுத்த பஞ்சாயத்து தொடங்கிவிட்டதாமே?!”

“ஆமாம். பா.ஜ.க-வில் மாநிலத் தலைவர் மாறும்போது ஒட்டுமொத்தக் கட்சி நிர்வாகிகளும் மாற்றப்படுவது வழக்கம். அடுத்த முறை கட்சிப் பொறுப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில், தற்போது அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் தொடங்கி மாநிலப் பொறுப்பாளர்கள் வரை பலரும் தங்களுக்குக் கீழே நிர்வாகிகளை நியமிக்க வசூல்வேட்டையில் இறங்கியிருக்கிறார்களாம். அப்படி நியமிக்கப்பட்ட சிலரின் குற்றப்பின்னணி தெரியவந்திருப்பது பா.ஜ.க-வின் இமேஜை டேமேஜ் ஆக்கியிருப்பதால், ‘மொத்தம் இப்படி எத்தனை பேருக்கு பொறுப்பு கொடுத்திருக் கிறார்கள்?’ என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் அண்ணாமலை.”

“இதெல்லாம் அண்ணாமலைக்குத் தெரியாமலா நடந்திருக்கும்?!”

“அப்படித்தான் கட்சிக்குள்ளும் பேசிக்கொள்கிறார்கள். வருமான வரித்துறைச் சோதனைக்குள்ளானவர்கள், மோசடிப் புகாருக்கு உள்ளானவர்கள் பலரை கட்சியில் சேர்த்தவர், தன் பெயரோடு சாதியைச் சுமப்பவர்தான் என்றறிந்து அவரைக் கூப்பிட்டுக் கடுமையாகத் திட்டி அனுப்பியிருக்கிறார் அண்ணாமலை. ‘இதெல்லாம் பங்கு வாங்கும்போது தெரியாதா... எல்லாவற்றுக்கும் நான் மட்டுமே காரணம் என்கிறரீதியில் பேசுகிறாரே...’ என்று தனக்கு நெருக்கமானவர் களிடம் பொங்கியிருக்கிறார் அந்தப் புள்ளி. தன்னைக் கேட்காமல் யாரையும் இனி கட்சியில் சேர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, மீடியாக்களில் பேசவும் தன்னுடைய ஒப்புதல் வாங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டும் போட்டிருக்கிறாராம் அண்ணாமலை. எங்கள் பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என்று கடுப்பில் இருக்கிறார்கள் சீனியர்கள்” என்ற கழுகாருக்கு இமாம்பசந்த் மாம்பழத் துண்டுகளைக் கொடுத்தோம்.

ராஜ கண்ணப்பன்
ராஜ கண்ணப்பன்

ருசித்துச் சாப்பிட்டவர், “ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு, கைரேகை பெறும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. இதை அப்டேட் செய்யும்விதமாக, கருவிழிப் பதிவாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. கைரேகை பெறும் பயோமெட்ரிக் உபகரணங்களை அரசு நிறுவனமான ‘எல்காட்’டிடம் வாங்கியது போல, இந்தக் கருவிழிப் பதிவுக் கருவியை வழங்கும் பணியையும் ‘எல்காட்’ நிறுவனத்துக்கே வழங்கலாம் என்று மூத்த அதிகாரிகள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட மாண்புமிகு ஒருவர், ‘தனியார் நிறுவனம் மூலமாகக் கொள்முதல் செய்யலாம்’ என்று வற்புறுத்துவதால் அதிகாரிகளெல்லாம் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். ‘ஏற்கெனவே ஊட்டச்சத்து கிட் டெண்டர் விவகாரத்தில், ஆவினுக்கு ஏன் டெண்டர் வழங்கவில்லை என பா.ஜ.க-வினர் சர்ச்சையை உருவாக்கினார்கள். தனியாருக்கு டெண்டர் கொடுத்தால், இதிலும் சர்ச்சை எழும். நம்மை வம்பில் மாட்டிவிடப் பார்க்கிறாரே...’ எனக் குமுறுகிறார்கள் அந்த அதிகாரிகள்” என்ற கழுகார்...

“தலைநகரில் மீண்டும் ஒரு காவல் மரணமா என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்த நிலையில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸுக்கு ஆதரவாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கிறது. ராஜசேகரின் உயிரிழப்புக்கு போலீஸார் தாக்கியது காரணமில்லை என்றும், அவர் கைது செய்யப்படும் முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும் சொல்கிறது அந்த ரிப்போர்ட். அதனடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை விரைவில் பணிக்குத் திரும்பவிருக்கிறார்கள். மேலிட அழுத்தத்தால்தான் இப்படியொரு ரிப்போர்ட் வந்திருப்பதாகக் கருதும் ராஜசேகரின் குடும்பத்தினர் நீதிமன்றப் படியேறியிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* அ.தி.மு.க தென்மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரின் வாரிசும், எம்.ஜி.எம் குழும முதலாளிகளில் ஒருவரும் பிஸினஸ் பார்ட்னர்களாம். அ.தி.மு.க ஆட்சியில்தான் இந்த நிறுவனத்தின் முதலீடு கிராஃப் கிடுகிடுவென எகிறியதாம். அமைச்சர் தரப்பில் ஒருவரும், நிறுவனத் தரப்பில் ஒருவரும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பறந்திருக்கின்றனர். அது தொடர்பான சில ஆவணங்களும் சமீபத்திய ரெய்டில் சிக்கியிருக்கின்றன. விரைவில் அந்த முன்னாள் அமைச்சரும் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார் என்கிறார்கள்.

* உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி, தென்மாவட்ட அமைச்சர் ஒருவருக்கு உறுதுணையாக இருந்துவருகிறாராம். அந்த அமைச்சருக்கு எதிரான புகார்களை மட்டுப்படுத்துவதோடு, அவருக்கு வேண்டாதவர்கள் பற்றி தலைமைக்குத் தவறான ரிப்போர்ட்களைக் கொடுத்தும் பழிதீர்க்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism