அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘நீயா... நானா?’ - அமைச்சர்களின் அதிகார யுத்தம்!

தமிழக அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழக அமைச்சர்கள்

ஒரு மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்களை ஏன்தான் தேர்வு செய்தோமோ என்று இன்னும் கொஞ்ச நாள்களில் ஸ்டாலின் வருத்தப்படுவார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

‘விஷ்ஷ்ஷ்க்...’ என்று என்ட்ரி கொடுத்தார் கழுகார். சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்த முதல்வரின் டெல்லி விசிட் தொடர்பான கவர் ஸ்டோரியை எடுத்து வாசித்தவர், நாம் கொடுத்த சூடான ஃபில்டர் காபியை ரசித்துக் குடித்தபடியே, ‘‘என்னிடமும் ஒரு தகவல் இருக்கிறது... சொல்கிறேன்’’ என்று செய்திகளுக்குள் தாவினார்.

‘‘ஆரம்பத்தில் டெல்லியில் ஒருநாள் திட்டம் மட்டுமே ஸ்டாலினிடம் இருந்திருக்கிறது. அந்தப் பயணத் திட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி சந்திப்பே இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வராக முதன்முறையாக டெல்லிக்குச் செல்வதால் சோனியா, ராகுல் இருவரையும் சந்திக்காமல் வந்தால் நன்றாக இருக்காது என்று கடைசி நேரத்தில் பயணத் திட்டத்தை மாற்றியிருக்கிறார் ஸ்டாலின். இந்தச் சந்திப்பால் தி.மு.க-வுக்குப் பலன் உண்டோ இல்லையோ, காங்கிரஸ் கட்சிக்குப் பலன் இருக்கும் என்கிறார்கள்.’’

‘‘ஓஹோ... என்ன பலனாம்?’’

மிஸ்டர் கழுகு: ‘நீயா... நானா?’ - அமைச்சர்களின் அதிகார யுத்தம்!

‘‘தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. அந்த மூன்று இடங்களையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றும் நிலை உள்ளது. அதில் ஒரு சீட்டை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம்நபி ஆசாத்தை தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்ப சோனியா திட்டமிட்டுள்ளார். சில நாள்களுக்கு முன்பே இந்தக் கோரிக்கையை ஸ்டாலினிடமும் சோனியா தரப்பிலிருந்து வைத்திருக்கிறார்களாம். இந்தச் சந்திப்புக்கு பிறகு அவர்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கலாம்.’’

‘‘பார்ப்போம்... பா.ஜ.க-விலும் இதே போன்ற தகவல் ஒன்று ஓடுகிறதுபோல!”

‘‘ம்ம்க்கும்... எல்லாத் தகவல்களும் உமது காதுகளுக்கும் வந்துவிடுகின்றன. கடந்த ஒரு வாரமாகத்தான் இப்படியொரு தகவல் தமிழக பா.ஜ.க வட்டாரத்தில் பலமாக ஒலிக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில், ராஜ்யசபா இடம் ஒன்று காலியாக இருக்கிறது. அதை பா.ஜ.க-வே கைப்பற்றும் நிலை இருப்பதால், அந்த இடத்தை தமிழக பா.ஜ.க-வினர் குறிவைத்துள்ளார்களாம். பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எல்.முருகன் ஆகிய மூவரும் இதற்கான ரேஸில் இருக்கிறார்கள். அதேநேரம், உறுதியான எந்தத் தகவலும் பா.ஜ.க தலைமையிலிருந்து வரவில்லை.”

‘‘தமிழகத்தில் அமைச்சர்களுக்குள் அதிகாரப் போட்டி தூள்கிளப்புகிறதாமே?”

மிஸ்டர் கழுகு: ‘நீயா... நானா?’ - அமைச்சர்களின் அதிகார யுத்தம்!

‘‘அதை ஏன் கேட்கிறீர்கள்... ஒரு மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்களை ஏன்தான் தேர்வு செய்தோமோ என்று இன்னும் கொஞ்ச நாள்களில் ஸ்டாலின் வருத்தப்படுவார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். பல மாவட்டங்களில் இரண்டிரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒருவகையில் அவர்களுக்கு வைக்கப்பட்ட செக் என்றாலும்கூட அமைச்சர்களுக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் சட்டை கிழியாதது ஒன்றுதான் பாக்கி. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி, பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எல்லை தாண்டி ஆதிக்கம் செலுத்துகிறாராம். இதனால் கடுப்பான அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள், ‘விழுப்புரத்தில் எங்கள் அண்ணனை தன்னிச்சையாக இயங்கவிடுவதில்லை. சரி, கள்ளக்குறிச்சியில் அரசியல் செய்யப் பார்த்தால், அங்கும் மூக்கை நுழைக்கிறார்கள்’ என்று சீறுகிறார்கள். இன்னொரு பக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியர் அமைச்சரான ரகுபதிக்கும், புதுமுக அமைச்சரான மெய்யநாதனுக்கும் இடையே ஈகோ யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், அந்த மாவட்ட அரசு அதிகாரிகள்தான் பரிதவிக்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’

‘‘ம்... இருவரில் ரகுபதி சீனியராக இருந்தாலும், மெய்யநாதன் செய்யும் லாபிகளால் பல நேரங்களில் அரண்டுபோய் கிடக்கிறாராம் ரகுபதி. அதிலும் மெய்யநாதன் தரப்பு, ‘நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்’ என்று செய்யும் அதிகாரத்தால் ரகுபதி தரப்பினருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்புகிறார்கள் அரசு அதிகாரிகள். இங்கெல்லாம் இப்படியென்றால் அமைச்சரே இல்லாத கோவையில் கதையே வேறு... ‘இந்த மாவட்டத்துக்கு என்னைத்தான் பொறுப்பாளராகக் கட்சித் தலைமை அறிவித்தது. அதன் பிறகு சக்கரபாணியை நியமித்தார்கள். ஆனால், சம்பந்தமே இல்லாமல் மாவட்டத்துக்குள் புகுந்து தொழிலதிபர்களிடம் செந்தில் பாலாஜி லாபி செய்கிறார். எங்களுக்கு மரியாதையே இல்லை’ என்று புலம்புகிறது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பு.’’

‘‘சபாஷ்... சரியான போட்டி என்று சொல்லும்!’’

‘‘இன்னும் இருக்கிறது கேளும்... கடலூர் மாவட்டத்தைத் தனது கோட்டையாக வைத்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதே மாவட்டத்தைச் சேர்ந்த திட்டக்குடி கணேசன், ‘நான் எதற்காக அமைச்சராக இருக்கிறேன் என்றே தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர்கூட என் பேச்சைக் கேட்பதில்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் சக்கரபாணி தனது லாபியைத் தீவிரப்படுத்த ஆரம்பித்திருப்பதால், கட்சியின் சீனியரான ஐ.பெரியசாமி, ‘ஒண்ணுமில்லாத துறையை எனக்கு ஒதுக்கிட்டு, வளமான உணவுத்துறையை சக்கரபாணிக்குக் கொடுத்துட்டாங்க’ என்று புலம்புகிறார். இதே கதைதான் திருச்சியில் சீனியரான நேருவுக்கும் ஜூனியரான அன்பில் மகேஷுக்கும் இடையே நடக்கிறது!’’

‘‘அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு எதிரான சத்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டனவே?”

‘‘எதிர்பார்த்ததுதானே! மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் எடப்பாடி தரப்பிலிருந்து தொடர்புகொண்டு, ‘சசிகலாவுக்கு எதிராகக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுங்கள்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்தத் தகவல் பன்னீருக்கே தாமதமாகத்தான் தெரிந்ததாம். தகவல் தெரிந்தவுடன் ஜூன் 16-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு திடீரென விசிட் அடித்தவர், அங்கிருந்த நிர்வாகிகளிடம் கோபமாக, ‘நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எனக்குத் தெரியாமலேயே கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட இவர்கள் யார்?’ என்று பொருமியிருக்கிறார். அப்போது அவருக்கு எங்கிருந்தோ போன் வந்ததாம். எதிர்முனையில் இருந்தவர்களுடன் காரசாரமாகப் பேசியவர், சிறிது நேரத்தில் வழக்கம்போல் ஆஃப் ஆகிவிட்டாராம். அன்று மாலையிலிருந்து ஒவ்வொரு மாவட்டமாக சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது கட்சியினர் பலரும், ‘அண்ணன் ஓ.பி.எஸ் எப்போது தேனி மாவட்டத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவார்?’ என்று கிண்டலாகக் கேட்கிறார்கள்!”

‘‘சசிகலா ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?’’

‘‘நேரடியாகக் களத்தில் இறங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். ஜூலையிலிருந்து சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிடுபவர், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தன் ஆதரவாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு வொர்க்அவுட்டாகும் என்று போகப் போகத்தான் தெரியும்.’’

மிஸ்டர் கழுகு: ‘நீயா... நானா?’ - அமைச்சர்களின் அதிகார யுத்தம்!

‘‘கோட்டையில் முதல்வரைச் சந்தித்திருக்கிறாரே அற்புதம் அம்மாள்?’’

‘‘தன் மகன் பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். ஏற்கெனவே முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘ஒருவருக்கு மட்டும் தொடர்ந்து பரோல் வழங்குவது சிக்கலாகிவிடும். எழுவர் விடுதலையில் மத்திய அரசு நமக்குச் சாதகமான முடிவை எடுக்காது. ஆனால், ஏழு பேருக்கும் பரோல் கொடுப்பதை மத்திய அரசால் தடுக்க முடியாது’ என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். ‘அப்படி யென்றால் அதை முதலில் செய்யுங்கள்’ என்று முதல்வர் சொல்லவும், மத்திய உள்துறை அமைச் சகத்துக்கு அதிகாரிகள் உடனடியாகக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அங்கிருந்தும் சாதகமான பதிலே வந்துள்ளதால், விரைவில் எழுவருக்கும் பரோல் உறுதியாகும் என்கிறார்கள்.’’

‘‘இந்து அறநிலையத்துறையில் அதிரடிகள் பலமாக இருக்கிறதே?’’

‘‘அதிரடிகள் இருக்கட்டும். அந்தத் துறையின் இணையதளத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் பாத்தியப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டார்கள் அல்லவா? அதில் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ‘கோயிலுக்குரிய சொத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அந்தச் சொத்துகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, எந்த ஊரில் உள்ளன என்ற விவரங்களை ஏன் வெளியிடவில்லை, யாருக்காக இதையெல்லாம் மறைக்கிறார்கள்?’ என்று பொருமல்கள் எழுந்துள்ளன. இதற்கு அறநிலையத்துறை என்ன பதில் சொல்லப்போகிறது என்று தெரியவில்லை’’ என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கடந்த ஆட்சியில் கமிஷனாகப் பெற்ற கறுப்பை வெள்ளையாக்க, பல உத்திகளைக் கையாண்டுவருகிறாராம் சுத்தமான அந்த அமைச்சர். அதற்காக சென்னையில் பிரமாண்டமான அலங்கார மையத்தை ஆரம்பித்துள்ளார். ஆட்களே வரவில்லையென்றாலும், தினமும் லட்சக்கணக்கில் பில் மட்டும் அங்கு பதிவாகிறதாம்!

* சென்னை அம்பத்தூரில் பிரபல கணினி நிறுவனத்தின் வளாகம் ஒன்றில் வாகனத்துறையின் மூத்த அதிகாரிகளைவைத்து கூட்டம் போட்டிருக்கிறார் ராஜாவான அமைச்சருக்கு நெருக்கமான தொழிலதிபர். ஜூன் 11-ம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த 24 முக்கிய அதிகாரிகளிடம் பட்டியல் ஒன்றைக் கொடுத்து, மாதந்தோறும் இந்தப் பட்டியலில் உள்ளபடி கரன்சி மூட்டைகள் துறையின் உச்சத்தின் இல்லத்துக்கு வந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறாராம். 40 சதவிகிதம் கமிஷன் தொகை எகிறியிருப்பதைப் பார்த்தவர்கள், ‘எட்டு போடாத’ குறையாக மயக்கத்தில் இருக்கிறார்கள்!