Published:Updated:

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி பட்ஜெட்... பா.ஜ.க-வின் ஈகோவைச் சீண்டிய ராகுல்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் காற்றாலை மின் நிலையங்களை, தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தலாம் எனச் சமீபத்தில் கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள்

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி பட்ஜெட்... பா.ஜ.க-வின் ஈகோவைச் சீண்டிய ராகுல்!

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் காற்றாலை மின் நிலையங்களை, தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தலாம் எனச் சமீபத்தில் கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

“புதுக்கோட்டையில் ஊராட்சித் தொடக்கப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து, காயமடைந்திருக்கிறார்கள் மாணவர்கள். இந்தப் பள்ளிக் கட்டடம் குறித்து ஆசிரியர்கள் ஏற்கெனவே அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். மாநிலம் முழுவதும் பள்ளிகளைப் புனரமைக்க தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி முறையாகச் செலவிடப்பட்டதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமீபத்தில்தான் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். பள்ளி தொடங்கிய ஒரு வாரத்திலேயே இப்படியொரு விபத்து நடந்திருப்பது, அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். ஒரு நிமிடம் நிதானித்தவர், முதல்வரின் உடல்நிலை குறித்த செய்திக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி பட்ஜெட்... பா.ஜ.க-வின் ஈகோவைச் சீண்டிய ராகுல்!

“சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறான ‘மகுடம் மறுத்த மன்னன்’ நூல் வெளியீட்டுவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காய்ச்சல் காரணமாக அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கவில்லை. ‘மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வில் இருப்பதாலேயே நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்ளவில்லை’ என்று நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகன் சொன்னார். ‘முதல்வருக்குச் சாதாரண சளி, காய்ச்சல்தான். கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் வெளியில் செல்வது சரியல்ல என்பதாலேயே இரண்டு நாள் நிகழ்வுகளை ரத்து செய்திருக்கிறார். வீட்டில் ஓய்விலிருக்கும் தன்னை அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் ‘ஸ்ட்ரிக்ட் ஆர்டர்’ போட்டிருக்கிறார். முதல்வர் தேதி கொடுத்திருந்த இரண்டு திருமண நிகழ்வுக்குக்கூட துர்கா மட்டுமே சென்று வந்தார்’ என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்…”

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி பட்ஜெட்... பா.ஜ.க-வின் ஈகோவைச் சீண்டிய ராகுல்!

“முதல்வரின் லண்டன் பயணத் திட்டம் என்ன ஆனது?”

“துபாய்க்குப் போனதுபோலவே லண்டனுக்கும் தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஒப்புதல் கிடைத்ததும் முதல்வர் லண்டன் செல்லும் தேதி அறிவிக்கப்படும். துபாய் பயணம்போல இந்தப் பயணத்திலும் சர்ச்சை எழக் கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருக்கிறாராம். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை முன்கூட்டியே லண்டனுக்கு அனுப்பி, தொழில் முதலீடு குறித்து பக்காவாகத் திட்டமிடச் சொல்லியிருக்கிறார்களாம்.”

“அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஸ்காட்லாந்து சென்றிருக்கிறாரே..?”

“தமிழ்நாடு, குஜராத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில், கடல் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் அமையவிருக்கும் காற்றாலை மின் நிலையங்களை, தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தலாம் எனச் சமீபத்தில் கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து அறியவே, அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகள் குழுவுடன் ஸ்காட்லாந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்” என்ற கழுகாருக்கு சூடான பாதாம் பால் கொடுத்தோம். பருகியபடியே அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

“கவர் ஸ்டோரியோடு தொடர்புடைய தகவல் ஒன்று இருக்கிறது... சொல்கிறேன், கேளும்... தேனி மாவட்டத்தில் பன்னீரை ‘டீல்’ செய்வதற்கு, அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்ற அதிரடியானவரை மீண்டும் அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு. ‘அரசியல்ரீதியாக பன்னீரை முடக்குவதற்கு அவர்தான் சரியான நபர். மாநிலங்களவை எம்.பி சீட் கிடைக்காததால், அறிவாலயத்தின் மீது மனக்கசப்பில் இருக்கிறார். இப்போது கூப்பிட்டால் வந்துவிடுவார். பன்னீருக்கும் அவருக்கும் இருக்கும் பகை ஊரறிந்தது. அவரை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொண்டால், லோக்கல் அரசியலில் பன்னீரை அவர் பார்த்துக்கொள்வார். தி.மு.க-வுக்கும் ஷாக் கொடுத்ததுபோல இருக்கும்’ என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார் சேலம் இளங்கோவன். ‘தூக்கிட்டு வாங்க அந்தத் தங்கத்தை’ என எடப்பாடியும் ஓ.கே சொல்லிவிட்டாராம். பேச்சுவார்த்தை ஆரம்பமாகியிருக்கிறது” என்ற கழுகாரிடம்,

“தமிழ்நாட்டில் பா.ஜ.க நடத்தும் மோடி அரசின் எட்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களுக்கு வழக்கத்துக்கு மாறாக அதிக கூட்டம் கூடுகிறதே?” என்றோம்.

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி பட்ஜெட்... பா.ஜ.க-வின் ஈகோவைச் சீண்டிய ராகுல்!

“அதன் பின்னணியைச் சொல்கிறேன் கேளுங்கள். இந்தக் கூட்டங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டும், ராகுலின் ஆவேசப் பேச்சும்தான் காரணம் என்கிறது பா.ஜ.க வட்டாரம். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, நீட் விவகாரத்தைத் தொட்டுப் பேசிய ராகுல் காந்தி, ‘உங்கள் வாழ்நாளில், ஒருபோதும் உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது’ என்று பேசினார் அல்லவா... ராகுலின் அந்தப் பேச்சு அப்போதே பா.ஜ.க மேலிடத் தலைவர்களின் ‘ஈகோ’வை வெகுவாக ‘டச்’ செய்துவிட்டது. ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், அமித் ஷா போன்ற சீனியர்களே, ‘ராகுலெல்லாம் இப்படிப் பேசும் நிலை வந்துவிட்டதே... தமிழ்நாட்டில் நம் கட்சியை வலுப்படுத்தியே ஆக வேண்டும்’ என்று சூளுரைத்திருக்கிறார்களாம்.”

“ம்...”

“தவிர, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய வயநாடு தொகுதி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிடக்கூடும் என்று மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவரை எதிர்கொள்ளவும், அ.தி.மு.க பலவீனமாக இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் தங்களை வளர்த்துக்கொள்ளவும் நினைக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், மோடி அரசின் எட்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை மாநிலம் முழுக்க பிரமாண்டமாக நடத்த மேலிருந்து உத்தரவு வந்ததாம். இந்தப் பிரசாரச் செலவுகளுக்காக மட்டும் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதைவைத்துத்தான், பா.ஜ.க கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டும் பணி ஜரூராக நடக்கிறது.”

“அரசு கேபிள் டி.வி என்று மட்டும் வாட்ஸ்அப் அனுப்பியிருந்தீரே... என்ன செய்தி?”

“நல்லவேளை ஞாபகப்படுத்தினீர்... தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைச் சத்தமில்லாமல் முடக்கிக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ‘குறிஞ்சி’ பிரமுகரைத் தவறாக வழிநடத்த ஒரு கும்பல் தீவிரமாக இயங்குகிறதாம். ‘உடுமலை’ பிரமுகர் அரசு கேபிள் டி.வி பொறுப்பில் இருந்தபோது, அவர் ‘தேவை’யையெல்லாம் பூர்த்தி செய்து பலனடைந்தது ஒரு கும்பல். அதே கும்பல்தான் இப்போது, ‘குறிஞ்சி’ பிரமுகரையும் சுற்றுகிறதாம். சில தனியார் நிறுவனங்களுடன் மறைமுகக் கூட்டணி போட்டுக்கொண்டு, அரசு கேபிளை நலிவடையச் செய்கிறது அந்தக் கும்பல். குறிஞ்சியார் விழித்துக்கொள்ளவில்லை என்றால் சிக்கல்தான்” என்ற கழுகார்...

“நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் மாவட்டங்களைப் பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. முதற்கட்டமாக தஞ்சாவூரை மூன்றாகப் பிரித்து மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள். மேலிடத்துக்கு ‘இனிப்பு’ கொடுத்தவர்களுக்கே தலைவர் பதவி கிடைத்ததாம். ‘இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. அதற்குள் இத்தனை அலம்பலா?’ என்று புலம்புகிறார்கள் மன்ற நிர்வாகிகள்” என்றபடியே பறந்து சென்றார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* பா.ஜ.க-வின் அடுத்த டார்கெட், ‘அன்பான’ அமைச்சர்தான் என்கிறார்கள். அமைச்சர், அவருடைய மைத்துனர், டிரைவர் ஆகியோர் சமீபத்தில் வாங்கிய நிலம் தொடர்பான ஆதாரம் அண்ணாமலை கையில் கிடைத்திருக்கிறதாம். கடந்த இரு முறைபோல இல்லாமல் இந்த முறை குற்றச்சாட்டு நறுக்கென இருக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெடுகிறாராம் அண்ணாமலை.

* துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவரைத் தட்டித் தூக்கிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி. இனி டெல்டாவில் அந்த ‘அகிம்சை’ பிரமுகரின் கை ஓங்கும் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism