Published:Updated:

மிஸ்டர் கழுகு: கிச்சனுக்கு கொடுக்கணும்... 300 ஸ்வீட் பாக்ஸ் அனுப்புங்க! அடம்பிடிக்கும் அமைச்சர்...

ஸ்டாலின் - தமிழிசை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - தமிழிசை

விரைவில் காலியாகவுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தொடர்பாக முதல்வரிடம் தமிழிசை பேசியதாகத் தகவல்.

மிஸ்டர் கழுகு: கிச்சனுக்கு கொடுக்கணும்... 300 ஸ்வீட் பாக்ஸ் அனுப்புங்க! அடம்பிடிக்கும் அமைச்சர்...

விரைவில் காலியாகவுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தொடர்பாக முதல்வரிடம் தமிழிசை பேசியதாகத் தகவல்.

Published:Updated:
ஸ்டாலின் - தமிழிசை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - தமிழிசை

“உமது கவர் ஸ்டோரி லஞ்ச ஒழிப்புத்துறை வரை எட்டிவிட்டது...” என்றபடியே உற்சாகமாக என்ட்ரி கொடுத்தார் கழுகார். மாம்பழ ஜூஸை அவருக்கு நீட்டிவிட்டு அவரை உற்று நோக்கினோம். “சொல்கிறேன் கேளும்...” என்றபடி ஜூஸைப் பருகியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா காலத்தில் உணவு வழங்கியதில் நடந்த ஊழல் குறித்து, 20.6.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!’ என்று கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம் அல்லவா? அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் சென்றுள்ளனவாம். அதன்படி, வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் பவர்ஃபுல் அமைச்சர் ஒருவருக்கும், சென்னை மாநகராட்சியின் தமிழ்க் கடவுள் பெயர்கொண்ட நபருக்கும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதாம். விரைவில் இவர்களை நேரில் அழைத்து விசாரிக்க முடிவுசெய்திருக்கிறார்கள். உமது நிருபருக்கு எமது வாழ்த்துகள்!”

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

“வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்... சரி, ஆளுநர் உரையை கவனித்தீரா?” என்றோம். நமது கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்ட கழுகார்,

“ம்ம்... கவனித்தேன். உமது கவர் ஸ்டோரியில் இடம் பெறாத சில தகவல்களைக் கூறுகிறேன் கேளும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தி.மு.க சார்புள்ள அதிகாரிகள் பல துறைகளிலும் இருந்த காரணத்தால், அவர்களிடம் பேசிய தி.மு.க தலைமை, தேர்தல் அறிக்கையில் எந்தெந்த விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று கருத்து கேட்டிருக்கிறது. அவர்கள் சொன்ன விஷயங்களையும் சேர்த்துத்தான் தேர்தல் அறிக்கையே உருவாக்கப்பட்டது. அதனால், தி.மு.க தேர்தல் அறிக்கைப்படியே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கிய விஷயங்கள் முதல்வர் உரையிலும், மற்ற விஷயங்கள் அமைச்சர்கள் உரைகளிலும், பொதுவான விஷயங்களை மட்டும் ஆளுநர் உரையிலும் என மூன்று வகையாகப் பிரித்து அறிக்கைகளைத் தயார்செய்து கொடுத்திருக்கிறார்கள்.”

“தமிழிசை சௌந்தரராஜன் திடீரென முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறாரே?”

“மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறப்பட்டாலும், பா.ஜ.க வட்டாரத்தில் வேறொரு காரணத்தையும் சொல்கிறார்கள். விரைவில் காலியாகவுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தொடர்பாக முதல்வரிடம் தமிழிசை பேசியதாகத் தகவல். இப்போதைக்கு முதல்வர் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லையாம்.”

மிஸ்டர் கழுகு: கிச்சனுக்கு கொடுக்கணும்... 300 ஸ்வீட் பாக்ஸ் அனுப்புங்க! அடம்பிடிக்கும் அமைச்சர்...

“சரிதான்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது சொந்தக் கட்சியினரே புகார் பட்டியலை வாசிக்கிறார்கள். கேள்விப்பட்டீரா?”

“என் காதுக்கும் வந்தது. விருதுநகர் மாவட்டத்தில் சமுதாயரீதியாகவே செயல்படுகிறார் என்று தி.மு.க-வினரே அவர்மீது புகார் எழுப்புகிறார்கள். சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராகப் பணியாற்றிவந்த மேகநாத ரெட்டி, சமீபத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் அமைச்சர் ராமச்சந்திரனின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான், அமைச்சரின் சிபாரிசில் விருதுநகருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார் என்று கொதிக்கிறது தி.மு.க வட்டாரம். ஏற்கெனவே விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பாலிடிக்ஸ் செய்துவருவதால், மாவட்ட நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே, தனக்குச் சாதகமான ஒருவரை மாவட்ட ஆட்சியராக அமைச்சர் ராமச்சந்திரன் நியமித்துக் கொண்டாராம்” என்ற கழுகாருக்குச் சூடாக வெங்காய பஜ்ஜியை நீட்டினோம். பஜ்ஜியைச் சுவைத்தபடியே, “அமைச்சர் ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன். பெயரைக் கேட்கக் கூடாது” என்ற பீடிகையோடு செய்திகளைத் தொடர்ந்தார்.

“வடமாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் அமைச்சரான அவர், கட்சிக்கு கஜானாவாக இருப்பவர். முக்கியமான இரு துறைகளை தன்வசம் வைத்துள்ளவர், கடந்த ஆட்சியின்போது தனது துறைகளில் டெண்டர் எடுத்திருந்த ஒப்பந்ததாரர்களை சமீபத்தில் வரவழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘கடந்த பத்தாண்டுகளில் ஏகப்பட்ட டெண்டர்களை எடுத்து சம்பாதித்திருப்பீர்கள். அதில் பங்கெல்லாம் கேட்கவில்லை. மொத்தமாக நீங்கள் எடுத்த டெண்டரின் தொகையில் பத்து சதவிகிதத்தை மட்டும் கொடுத்தால் போதும்’ என்றாராம். வெளிறிப்போன ஒப்பந்ததாரர்கள் சிலர், ‘பழைய டெண்டருக்கெல்லாம் ஏற்கெனவே சம்பந்தப்பட்டவங்களுக்குக் கப்பம் கட்டியாச்சுங்களே... இப்படிக் கேட்டா எப்படிங்க?’ என்று மென்று விழுங்கியிருக்கிறார்கள். டென்ஷனான இன்ஷியல் அமைச்சர், ‘நான் என்ன எனக்காகவா கேக்கறேன்... கிச்சன்ல கேட்கச் சொல்றாங்க. ஒரு மாசத்துல 300 ஸ்வீட் பாக்ஸ் வேணும்கறாங்க. நான் எங்க போறது? கமிஷனை ஒழுங்கா கொடுத்துட்டா, அடுத்த அஞ்சு வருஷத்துக்குச் சிரமம் இல்லாம தொழில் பண்ணலாம்’ என்று பழியை ஒரே போடாக கிச்சன் தலையில் போட்டிருக்கிறார். ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள் எதுவும் பேச முடியாமல் எழுந்து சென்றிருக்கிறார்கள். இப்போது முதற்கட்ட வசூலும் முடிந்துவிட்டதாம். ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதற்கு முன்னர், முதல்வர் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி.”

“இன்னும் என்னவெல்லாம் கிச்சன் தலையில் கட்டப்போகிறார்களோ!”

“மூன்றெழுத்து மாவட்டத்திலுள்ள தொகுதி ஒன்றில், சிவனின் பெயர்கொண்ட பெண் ஒருவர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவருக்கு அந்த மாவட்டத்தின் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று, தேர்தல் செலவுக்காக 50 ‘லட்டு’கள் வரை கொடுத்திருந்ததாம். ஆனால், அதற்கான உண்மையான காரணம் தற்போது கசிந்திருக்கிறது. திருச்சியிலிருந்து வரும் பேருந்துகள் மூன்றெழுத்து மாவட்டத் தலைநகருக்குள் செல்லும்போது, பைபாஸில் ஓரிடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதனால், அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட மக்கள் வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், மேம்பாலம் கட்ட வேண்டிய இடத்தில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருப்பதால், தங்கள் நிலம் பறிபோவதைத் தடுக்க மேம்பாலத் திட்டத்துக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார்களாம். இதற்காகத்தான் அந்தப் பெண் எம்.எல்.ஏ-வையும் கவனித்திருக்கிறார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

“கூட்டுறவு சங்கங்களில் கடந்த பத்தாண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்றதாக அமைச்சரே பேசியிருப்பதால், கூட்டுறவு சங்கங்களை தி.மு.க அரசு கலைக்கப்போகிறது என்கிற தகவல் வெளியானது. அப்படி கூட்டுறவு சங்கங்களைக் கலைப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயல் என்பதால், வேறொரு ரூட்டில் பயணிக்கிறதாம் தி.மு.க. அதாவது, ஐந்தாண்டுகளாக இருக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை மூன்றாண்டுகளாகக் குறைக்க மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யவிருக்கிறார்களாம். இதன் மூலம், ‘கலைப்பதற்கு வேலையில்லாமல், சங்கங்கள் தானாக செயலிழந்துவிடும், கெட்ட பெயரும் ஏற்படாது’ என்பதுதான் தி.மு.க-வின் பிளான்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

“தம்பி பேரை முன்னாடி போடுங்க!”

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குள் வரும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை, தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர். ``இது தொடர்பான செய்தியை வெளியிடும்போது, தம்பி (உதயநிதி) பேரை முன்னாடி போடுங்க” என்று சில ஊடக நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

மிஸ்டர் கழுகு: கிச்சனுக்கு கொடுக்கணும்... 300 ஸ்வீட் பாக்ஸ் அனுப்புங்க! அடம்பிடிக்கும் அமைச்சர்...

சென்னைக்கு அருகேயுள்ள கல்வி நிறுவனம் ஒன்று, அருகிலிருந்த நிலத்தில் விதிமுறைகளை மீறிக் கட்டடம் எழுப்பியதாம். இதற்கு லோக்கல் எம்.எல்.ஏ-வைச் சரிக்கட்டியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஏரியா அமைச்சர் ஒருவர், ‘எனக்கும் பங்கு வேண்டும்’ என்று கோதாவில் குதித்திருப்பதால், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக விழித்துக்கொண்டிருக்கிறது கல்வி நிறுவனம்.

விரைவில் ஓய்வுபெறப்போகும் காவல்துறை உயரதிகாரியை, துறைரீதியிலான பிரச்னையில் சிக்கியிருக்கும் சில காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் சந்தித்திருக்கிறார்கள். ‘நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி பிரச்னையிலிருந்து எங்களை ரிலீவ் பண்ணிடுங்க’ என்று அவர்கள் வைத்த கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அந்த உயரதிகாரியும் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்!

அ.தி.மு.க-வின் மூத்த தலைவருடைய மகன் ஒருவர், சென்னை கோபாலபுரத்தில் பிரமாண்ட பங்களா ஒன்றைக் கட்டிவருகிறாராம். வாசக்கால் தொடங்கி ரெஸ்ட் ரூம் வரை வாஸ்து பார்த்து கட்டப்பட்ட அந்த வீட்டுக்கு விரைவில் பால் காய்ச்சல் வைபோகம் நடக்குமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism