Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘எங்களுக்கு அ.தி.மு.க இருக்க வேண்டும்..!’ - ஸ்டாலின் அக்கறை

அ.தி.மு.க பொதுக்குழுவில்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொதுக்குழுவில்

முதல்வர் உடல்நிலை தேறி, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்

மிஸ்டர் கழுகு: ‘எங்களுக்கு அ.தி.மு.க இருக்க வேண்டும்..!’ - ஸ்டாலின் அக்கறை

முதல்வர் உடல்நிலை தேறி, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்

Published:Updated:
அ.தி.மு.க பொதுக்குழுவில்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொதுக்குழுவில்

“அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து வருகிறேன். கடுமையான கூட்ட நெரிசல்” என்றபடியே அலுவலகம் வந்த கழுகார், கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “நிகழ்வை முழுவதுமாக உமது நிருபர்கள் கவர் செய்துவிட்டார்கள்போல. என்னிடம் கூடுதல் தகவல்கள் இருக்கின்றன...” என்றபடி உரையாடலைத் தொடங்கினார்.

“எந்தக் கூட்டமாக இருந்தாலும் அதில் அதிகமாக ‘ஸ்கோர்’ செய்யும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் அடக்கிவாசித்ததைக் கவனித்தீரா... ராஜ்ய சபா வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனபோது, ‘அவைத்தலைவர் போஸ்ட் கட்டாயம் தருகிறேன்’ என்று சொல்லித்தான் ஜெயக்குமாரை சமாதானப்படுத்தியிருந்தார் எடப்பாடி. அதற்கு அச்சாரமாகப் பொதுக்குழுவில், ‘தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் இந்தவொரு பொதுக்குழுவுக்கு மட்டும், அவைத்தலைவராகத் தேர்வுசெய்யப்படுவார்’ என்றே முதலில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில், ‘நிரந்தர அவைத்தலைவர் உசேன்தான்’ என கே.பி.முனுசாமி அறிவித்ததைக் கேட்டு ஜெயக்குமார் ஷாக் ஆகிவிட்டார். ‘தீர்மானக் குழுவில் இருந்த நம்மிடமே இதைச் சொல்லவில்லையே...’ என்று புலம்பியிருக்கிறார். இதனாலேயே, பொதுக்குழுக் களேபரங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் மேடையில் அமைதியாக இருந்தாராம்.”

மிஸ்டர் கழுகு: ‘எங்களுக்கு அ.தி.மு.க இருக்க வேண்டும்..!’ - ஸ்டாலின் அக்கறை

“ஓஹோ...”

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில், மருமகன்கள் இருவரிடையே நடந்த சந்திப்பு குறித்து, கடந்த இதழ் கவர் ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா... அதில் ஒரு அப்டேட்... பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் கடைசி நிமிடம் வரையில், ஆளும் தரப்பின் அனுசரணைக்காக முட்டி மோதியிருக்கிறார் பன்னீர் தரப்பிலிருந்து மருமகன் ஒருவர். ஆனால், ‘இது உங்க உட்கட்சி விவகாரம். இதுல நாங்க தலையிடுறது நல்லா இருக்காது. மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் செய்த தவற்றை நாங்கள் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ... உங்களுக்குள்ள பேசிக்கங்க... நாங்கள் யார் பக்கமும் இல்லை.எங்களுக்கு அ.தி.மு.க இருக்கணும் என்பதுதான் விருப்பம் என்பதே ஸ்டாலினின் கருத்து’ எனச் சொல்லப்பட்டதாம். இதற்குப் பிறகுதான், டெல்லியின் கடைக்கண் பார்வைக்காக சீரியஸாகக் காய்நகர்த்தியிருக்கிறது பன்னீர் தரப்பு.”

“டெல்லியின் அரவணைப்பாவது கிடைத்ததா?”

“இப்போதைக்குக் கிடைத்திருக்கிறது. எடப்பாடிக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரமுகர்தான், தற்போது அ.தி.மு.க-வில் நடக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் சூத்ரதாரி என்று கருதுகிறதாம் டெல்லி. அந்தப் பிரமுகர்தான், எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக்கி, காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இணைக்க வியூகம் வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதற்காக, காங்கிரஸ் தலைமையுடன் எடப்பாடியைத் தொலைபேசியில் பேசவைக்கும் முயற்சிகூட நடந்ததாம். இந்த விவகாரம் தெரிந்தவுடன் பா.ஜ.க அலர்ட் ஆகியிருக்கிறது. ‘கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க-வை வலுப்படுத்த வேண்டுமானால் அ.தி.மு.க எடப்பாடியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக் கூடாது. அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை தொடர்ந்தால் மட்டுமே தங்களுக்கு அரசியல்ரீதியாக லாபம் என்பதை உணர்ந்த டெல்லி, கடைசி நேரத்தில் பன்னீருக்கு நேசக்கரம் நீட்டியிருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: ‘எங்களுக்கு அ.தி.மு.க இருக்க வேண்டும்..!’ - ஸ்டாலின் அக்கறை

“ம்...”

“அதேநேரத்தில், ஜனாதிபதி தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை முறைத்துக்கொள்ளவும் டெல்லி விரும்பவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ஜூன் 23-ம் தேதி எடப்பாடியின் வீட்டுக்குச் சென்ற பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடியின் ஆதரவைக் கேட்டிருக்கிறார்கள். பொதுக்குழு நடைபெற்ற அன்றைய தினத்தில், அரசியல்ரீதியிலான சந்திப்புகளுக்கு எடப்பாடி அப்பாயின்மென்ட் எதுவும் கொடுக்கவில்லையாம். அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான், தனக்கு டெல்லி சப்போர்ட் இருப்பதாகக் காட்டிக் கொள்ள, எடப்பாடியும் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்தார். அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் வீட்டுக்கே சென்று சந்தித்திருக்கிறார்கள். ‘நாங்கள் இந்த விவகாரங்களிலெல்லாம் தலையிடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ளவே இந்தச் சந்திப்பு’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.”

“குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?”

“குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்ப்பது, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு. அதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறது தி.மு.க. ஆனாலும், ‘ஒரு பெண்ணை, அதுவும் பழங்குடியினப் பெண்ணை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. எனவே, சமூகநீதி பேசும் தி.மு.க அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்’ என கனிமொழி வழியாக ஸ்டாலினின் ஆதரவைப் பெறவும் பா.ஜ.க முயலும் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ‘எங்களுக்கு அ.தி.மு.க இருக்க வேண்டும்..!’ - ஸ்டாலின் அக்கறை

“ஓஹோ...”

“பா.ஜ.க-வின் இந்த முயற்சிக்கு, ‘திரௌபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது அதானியின் நிலக்கரி ஆலைக்காக 2,000 ஏக்கர் பழங்குடிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்துக்குக் கையெழுத்திட்டார். அப்படிப்பட்டவர் எப்படிப் பழங்குடிகளின் பிரதிநிதியாக இருக்க முடியும்?’ என்ற பதிலைச் சொல்லத் தயாராக வைத்திருக்கிறது தி.மு.க. ‘காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மட்டுமல்ல... 2024 மக்களவைத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும் அழுத்தமான முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்’ என்கிறார்கள் அறிவாலயத்தில்” என்ற கழுகாருக்குச் சூடான வெஜ் சூப் கொடுத்தோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“முதல்வர் உடல்நிலை தேறி, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அங்கிருந்து அறிவாலயம் சென்றவர், உட்கட்சித் தேர்தல் விவகாரங்கள், ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்கள், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்த உத்தரவிட்டிருக்கிறாராம்” என்ற கழுகார்…

மிஸ்டர் கழுகு: ‘எங்களுக்கு அ.தி.மு.க இருக்க வேண்டும்..!’ - ஸ்டாலின் அக்கறை

“சென்னையில் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு, வார விடுமுறை நாள்களில் குடும்பத்தினருடன் மால்களுக்குச் செல்வதே பொழுதுபோக்கு. அவர் எந்த மாலுக்குச் செல்கிறாரோ, அதற்கான முழு ஏற்பாடுகளையும் அந்த எல்லைக்குரிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்களே செய்துகொடுக்கிறார்கள். குடும்பத்தினருக்கான செலவுகளையும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவரின் உத்தரவாம். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு ஆய்வுக்குச் சென்று குற்றம், குறைகளைக் கண்டுபிடித்து மெமோ கொடுக்கிறாராம். ஆர்டர்லி முறையின் மற்றொரு ரகம் இது எனக் காவல்துறையில் புலம்புகிறார்கள்” என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

 ‘அண்ணாச்சி’ அமைச்சரிடம் உதவியாளராக இருக்கும் கடவுள் பெயர்கொண்ட ஒருவர், அமைச்சர்கள் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலை ஏரியாவில் வீடே வாங்கிவிட்டாராம். “இந்த வேகத்துல போனா, அண்ணாச்சியையே ஓவர்டேக் பண்ணிடுவாரு” என்று வாய் பிளக்கிறது கோட்டை வட்டாரம்.


உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவை மானியங்களை முழுமையாகக் கேட்டுப்பெறவேண்டி, துறைச் செயலாளர் ஃபைல்களோடு டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். “எப்படியாவது காரியத்தை முடித்துவிட்டுத்தான் வர வேண்டும்!” என கோட்டையிலிருந்து ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்கிறார்களாம்.