அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மாப்பிள்ளை மீது மனவருத்தம்! - புலம்பும் அமைச்சர்கள்...

சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டசபை

சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, சில அமைச்சர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்

இதழ் முடிக்கும் நேரத்தில் வந்தார் கழுகார். ‘‘கலைவாணர் அரங்கம், தலைமைச் செயலகம் என ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது” என்றவர், தான் கொண்டு வந்திருந்த சமோசாக்களை நமக்கும் பகிர்ந்தளித்தார். “ஜூன் 24-ம் தேதியுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்துவிட்டதே?” என்று அவரைச் செய்திக்குள் இழுத்தோம். “கூட்டத்தொடரில் பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை. அமைச்சர்களைப் பற்றித்தான் நிறைய தகவல்கள் உள்ளன. ஜூன் 24-ம் தேதி மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்’’ என்றார்.

‘‘எதற்காம்?” என்றோம்.

‘‘அமைச்சரவைக் கூட்டத்தில், ‘எந்தெந்தத் துறைகளில் என்னென்ன பணிகளைச் செய்யலாம் என்று பட்டியல் கொடுங்கள். கட்சிக்காரர்களின் சிபாரிசுகளை இப்போதைக்கு ஒதுக்கிவையுங்கள். மீடியாக்களிடம் தேவையில்லாமல் பேசாதீர்கள். கடந்த ஆட்சியின் அ.தி.மு.க அமைச்சர்கள்போல யாரும் ‘லூஸ் டாக்’ விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ‘அணில்’ ஸ்டேட்மென்ட்டுக்குத்தான் ஸ்டாலின் இப்படி ரியாக்ட் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: மாப்பிள்ளை மீது மனவருத்தம்! - புலம்பும் அமைச்சர்கள்...

‘‘ஓஹோ... அமைச்சர்கள் சிலர் வருத்தத்தில் இருக்கிறார்களாமே?’’

‘‘எல்லாம் மாப்பிள்ளை மீதான மனவருத்தம்தான். சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, சில அமைச்சர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ‘நாம கேட்ட துறைகளையும் ஒதுக்கலை, இன்னும் அரசு பி.ஏ-க்களைக்கூட நியமிக்கலை. போஸ்ட்டிங், டிரான்ஸ்ஃபர் என எதையுமே நம்மால செய்ய முடியலை. மொத்த அதிகாரத்தையும் மாப்பிள்ளையே எடுத்துக்கிட்டார். வெறும் டிரைவர், டேபிள் மட்டும்வெச்சுக்கிட்டு என்ன பண்றது? இதை தலைவர்கிட்ட நாசூக்காக் கொண்டு போயாகணும்’ என்கிறரீதியில்தான் அமைச்சர்களுக்குள் பேச்சு ஓடியிருக்கிறது.’’

‘‘ம்ம்...’’

“உறங்கா நகர் மாவட்டத்திலிருக்கும் இரு அமைச்சர்களில், கீர்த்தியானவர் சமீபத்தில் வட மாவட்ட இனிஷியல் அமைச்சரைச் சந்தித்து, ‘உங்க துறையில எங்க சிட்டிக்குள்ள எந்த ஒப்பந்தம் வந்தாலும் ‘பாரம்பர்ய’ அமைச்சர்கிட்ட கொடுங்க. ஆனா, மாவட்ட அளவுல வர்ற ஒப்பந்தங்கள் எல்லாம் எனக்குத்தான் வேணும்’ என்று நைசாக கோரிக்கைவைத்தாராம். அதற்கு இனிஷியல் பார்ட்டியோ, ‘நாங்களே ஒண்ணுமில்லாம திணறுறோம். மாப்பிள்ளை தரப்புல என்ன சொல்றாங்களோ, அதைச் செய்யறது மட்டும்தான் என் வேலை. இதுல உங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என தட்டிக்கழித்து அனுப்பியிருக்கிறார்.”

‘‘அவர் பிரச்னை அவருக்கு...’’

‘‘மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், கரூர் தி.மு.க-வில் அமைச்சரின் ஆல் இன் ஆலாகக் கோலோச்ச ஆரம்பித்திருப்பது கட்சியின் சீனியர்களைக் கொதிப்படையவைத்திருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் தொடங்கி வாகன பாடி கட்டும் உரிமையாளர்கள் வரை யார் சென்றாலும், ‘சின்னவரைப் பாருங்க’ என்று அசோக்குமாரை முன்னிலைப்படுத்தித்தான் கரூரில் காட்சிகள் நகர்கின்றனவாம். 2011-16 அ.தி.மு.க ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் அசோக்குமாரின் பெயர் பஞ்சரானது. கார்டனின் கண்டிப்பால் அசோக்குமார் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். கடந்த சில வருடங்களாக இருந்த இடம் தெரியாமலிருந்த அசோக்குமார், இப்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருப்பதாக கே.சி.பழனிசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பினர் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அசோக்குமாரை அடக்கிவைக்கச் சொல்லி கரூரிலிருந்து அறிவாலயத்துக்கும் புகார் போயிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: மாப்பிள்ளை மீது மனவருத்தம்! - புலம்பும் அமைச்சர்கள்...

‘‘சரிதான்...”

‘‘உக்கிர பெண் கடவுள் பெயரைக்கொண்ட நபர், அ.தி.மு.க ஆட்சியில் பவர்ஃபுல் கொங்கு மண்டல அமைச்சரிடம் உதவியாளராக வலம் வந்தார். ஊரகப் பகுதிகள் பற்றிய விவரங்கள் மட்டுமல்ல, அமைச்சரின் இன் அண்ட் அவுட் அனைத்தும் இவருக்கு அத்துப்படியாம். சமீபத்தில், தென்மாவட்ட ‘மீசைக்கார’ அமைச்சரைச் சந்தித்த உக்கிர நபர், துறை பற்றிய முழுத் தகவல்களையும் அள்ளிவிட்டிருக்கிறார். பிரமித்துப்போன மீசைக்காரர், ‘நீங்க என்கூடவே இருங்க’ என்று தனக்கு உதவியாளராக வைத்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டாராம். ‘பவர்ஃபுல் கொங்கு அமைச்சர் மீதுதான் ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெறும் சூழலில், அவரோடு தொடர்பிலிருந்த ஒருவரை தனக்கு அருகில் மீசைக்காரர் வைத்திருக்கிறாரே?’ எனப் பொருமுகிறது தி.மு.க வட்டாரம்’’ என்ற கழுகாருக்குச் சூடாக மசாலா டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடி, ‘‘ஐ.ஏ.எஸ் அமளிதுமளி செய்திகளைச் சொல்கிறேன். பெயரைக் கேட்காதீர்’’ என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான அரசுக் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள ஒரு தளத்தில் வசிக்கும் சீனியர் ஐ.ஏ.எஸ் ஒருவருக்கும், ஜூனியர் பெண் ஐ.ஏ.எஸ் ஒருவருக்கும்தான் லடாய் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராவைத் தன் வீட்டு வாசலில் ஜூனியர் மாட்டியிருந்தாராம். இதைப் பார்த்த சீனியர், ‘என் வீட்டை ஃபோகஸ் பண்ணி ஏன் வெச்சீங்க? உடனே ரிமூவ் பண்ணுங்க’ என்று எகிறியிருக்கிறார். அதற்கு ஜூனியர் மறுத்துவிட்டாராம். திடீரென ஒருநாள் கேமரா காணாமல் போயிருக்கிறது. கேமராவைக் கண்டுபிடித்துத் தரும்படி போலீஸில் ஜூனியர் புகார் அளித்தும், இரண்டு மாதங்களாக நோ ஆக்‌ஷன். வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவரைவைத்து கேமராவை சீனியர்தான் அப்புறப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். இப்போது இந்த கேமரா பஞ்சாயத்து கோட்டை வரை வந்திருக்கிறது.”

செந்தில் பாலாஜி, அசோக் குமார்
செந்தில் பாலாஜி, அசோக் குமார்

“கேமரா மேல் சீனியருக்கு அவ்வளவு பயமா?’’

‘‘யார் கண்டது? கோட்டையின் பொதுவான துறையில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அங்குதான் வசிக்கிறார். செல்லப்பிராணி பிரியரான அவர், கடந்த மாத இறுதியில் அடித்த கூத்தும் இப்போது கோட்டை கதவைத் தட்டியிருக்கிறது. கடந்த மாத இறுதியில், வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட நாயுடன் தனது நாயை ஜோடி சேர மொட்டை மாடியில் விட்டிருக்கிறார் அந்த அதிகாரி. மாடியிலுள்ள தோட்டத்துக்குச் சென்ற குடியிருப்புவாசிகள் சிலர், இதைப் பார்த்து முகம் சுளித்தபடி திரும்பியிருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாள்கள் இந்தக் காட்சிகள் தொடரவே... ‘அவரைக் கொஞ்சம் கண்டிச்சுவையுங்க’ என்று மூத்த அதிகாரிகள் டேபிளுக்கு பஞ்சாயத்து வந்திருக்கிறது’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘தமிழக பா.ஜ.க வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுகளுக்காகக் கொடுத்த பல கோடி பணத்தைச் சிலர் அபேஸ் செய்த விவகாரம் வீதி வரை வந்திருக்கிறது அல்லவா... இந்தத் தகவலை அறிந்து டெல்லி மேலிடம் கொதித்துவிட்டதாம். விரைவிலேயே அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிறார்கள். தமிழகத்தில்

15 மாவட்ட தலைவர்களை மாற்றவும், கட்சியை முழுவதுமாக சீரமைக்கவும் முடிவெடுக்கப்

பட்டிருக்கிறது. சில சீனியர்கள் கௌரவமாக ஓரங்கட்டப்படலாம். ஜூலை இறுதிக்குள் தமிழக பா.ஜ.க-வில் மாற்றங்கள் நிகழலாம் என்கிறது டெல்லி பட்சி’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஒன்றுக்குச் சொந்தமான விமானத்தைத்தான் தனது தனிப்பட்ட உள்ளூர் பயணங்களுக்கு ஸ்டாலின் பயன்படுத்திவந்தார். இப்போது மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் செல்லத் திட்டமிட்டிருப்பதால், நீண்ட தூரம் பயணிக்கும் கல்ஃப் ஸ்ட்ரீம், பம்பார்டியர் ரக விமானங்களை துபாயிலிருந்து வாடகைக்கு அமர்த்த குடும்பத்தினர் ஆலோசித்துவருகிறார்களாம்.

கடந்த ஆட்சியில் ‘பாட்டில்’ துறையின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ‘பத்து பர்சன்ட்’ எழும்பூர் கட்டடத்துக்கு வரவுவைக்கப்பட்டதாம். இப்போது புதிதாகத் தலைமைப் பொறுப்புக்கு வந்திருப்பவர், “கோடி கோடியா கொட்டும்னாங்க... இங்க என்னடான்னா காலி பாட்டிலை நீட்டுறீங்க... இனிமே மாசம் முப்பது பர்சன்ட் வந்தாகணும்” என்று கறார் உத்தரவிட்டிருப்பதால், அரண்டுகிடக்கிறார்கள் மாவட்ட அதிகாரிகள்!

சிமென்ட் ஆலைக்குள் வெடிகுண்டு!

நெல்லை தாழையூத்து பகுதியில் செயல்பட்டுவரும் சிமென்ட் ஆலையிலிருந்து பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் நான்கு பேரை போலீஸார் தேடிவருகிறார்கள். ஏற்கெனவே பக்கத்து மாவட்டமான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் கோபம் நீடிக்கும் நிலையில், நெல்லையில் சிமென்ட் ஆலைக்குள் வெடிகுண்டுகள் இருந்த விவகாரம் மத்திய உள்துறையை உஷார்படுத்தியிருக்கிறதாம். இந்த விவகாரத்தில், பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பிருக்கிறதா என்பதை விசாரிக்குமாறு மத்திய உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.