Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி... ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்!

அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ‘கிட்டத்தட்ட ஓராண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா?’ என நினைக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி... ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ‘கிட்டத்தட்ட ஓராண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா?’ என நினைக்கிறார்கள்.

Published:Updated:
அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி

ஒருநாளும் இல்லாத திருநாளாக நிருபர்களின் மீட்டிங் நடந்துகொண்டிருந்த அறைக்குள் திடுமென நுழைந்த கழுகாரைப் பார்த்ததும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. ‘‘குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். எனக்கு சில தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்’’ என்ற கழுகார், ‘‘உங்களில் ‘உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்’ என்பவர்கள் எத்தனை பேர், ‘நடக்காது’ என்பவர்கள் எத்தனை பேர்... கையை உயர்த்துங்கள்’’ என்று கேட்க, அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

‘‘இதென்ன கழுகாரே பிள்ளை விளையாட்டு... உமது கச்சேரிக்கு உள்ளாட்சித் தேர்தலை கையில் எடுத்துவிட்டீரோ!’’ என்றோம்.

‘‘ம்க்கும்... நாடே இப்படித்தான் விளையாடிக்கொண்டிருக்கிறது. முதலில் கையைத் தூக்குங்கள்’’ என்றார்.

‘நடக்கும்’ என்று இரண்டு, மூன்று பேர் மட்டுமே கைகளைத் தூக்க, ‘நடக்காது’ என்று பலரும் கைகளைத் தூக்க... கலகலவெனச் சிரித்தார் கழுகார். பிறகு ‘‘முதலில் ‘நடக்கும்’ என்பவர்கள் காரணங்களைச் சொல்லுங்கள்’’ என்று கேட்க, நிருபர்கள் அடுக்க ஆரம்பித்தனர்.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

‘‘சொத்துவரி உயர்வு, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் 20 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் இரண்டு முறை சொத்துவரியை உயர்த்திவிட்டதால், கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக சொத்துவரி செலுத்த வேண்டியிருந்தது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போது சொத்துவரி உயர்வை ரத்துசெய்து அரசாணை பிறப்பித்திருக்கிறார்கள். இதுதவிர, ஏற்கெனவே கூடுதலாகச் செலுத்திய வரியை வரும் ஆண்டுகளில் ஈடுசெய்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்லியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லையென்றால், இந்த வரி உயர்வைத் திரும்பப் பெற்றிருக்க மாட்டார்களே. இதைவைத்து ஓட்டு அறுவடைசெய்ய ஆளுங்கட்சி நினைக்கிறது.’’

‘‘வேறு காரணம்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்காகக் காத்திருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்!’’

‘‘இன்னும் ஏதாவது?’’

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

‘‘பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கூட்டணிக் கட்சிகள், ‘உடனே தேர்தலை நடத்தவேண்டும்’ என்று அ.தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. ‘உள்ளாட்சியிலாவது தங்களுக்கு பிரதிநிதிகள் இருந்தால் பரவாயில்லை’ என்று இவர்கள் நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம், ‘உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் தமிழக அரசுக்குத் தர வேண்டிய 15,000 கோடி ரூபாய் நிதியைத் தர முடியாது’ என்று மத்திய பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெளிவாகச் சொல்லிவிட்டார். மற்ற கட்சிகளைவிட பா.ஜ.க-வின் அழுத்தத்துக்கு அ.தி.மு.க அடிபணிய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும்விட சொந்தக் கட்சிக்காரர்களின் கூடுதல் அழுத்தம் வேறு. ‘ஆட்சியே முடியப்போகிறது. நாங்கள் எப்போதுதான் சம்பாதிப்பது? உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்’ என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுத்தேர்தலில் கட்சிக்காரர்களின் ஆதரவு வேண்டுமென்றால், ஆளுங்கட்சி இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்!”

‘‘சரி... எப்போது நடத்துவார்கள்?’’

‘‘ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் மக்களுக்கு கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்குவார்கள். கடந்த முறை பொங்கல் பரிசுடன் 1,000 ரூபாயையும் கொடுத்து இன்ப அதிர்ச்சியை உண்டாக்கினார் எடப்பாடி. அது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், ‘வாக்காளர்களுக்கு லஞ்சம்’ என்பதாகவே பேசப்பட்டது. இந்தத் தடவை, 2,000 ரூபாய் வரை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ‘கவனிப்புகள்’ முடிந்தவுடன் தேர்தல் நடத்தினால் வெற்றி நிச்சயம் என்றும் கணக்குப்போடுகிறார்கள். அதனால், 2020, பிப்ரவரியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதாவது, இப்போதைக்குத் தள்ளிப்போகக்கூடும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆகட்டும்... இப்போது ‘நடக்காது’ என்பதற்கான காரணங்களைச் சொல்லுங்கள்’’ - நிருபர்களைத் துளைத்தெடுத்தார் கழுகார்.

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ‘கிட்டத்தட்ட ஓராண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா?’ என நினைக்கிறார்கள். ஆளும்கட்சியைப் பொறுத்தவரை பா.ஜ.க கேட்கும் இடங்களைத் தரவேண்டியிருக்கும். மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் இடங்களைக் கொடுத்து, அதன் பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்கள், அமைச்சர்களின் ஆட்கள் பங்கீடு செய்வது பெரும்பிரயத்தனமாக இருக்கும். அதனால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளிப்போடவே அ.தி.மு.க நினைக்கிறது.’’

“வேறு?”

“என்னதான் வெளியே தெம்பாகப் பேசினாலும், ‘உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற முடியுமா?’ என்று ஆளுங்கட்சிக்கு சந்தேகம் இருக்கிறது. ‘ஒருவேளை கணிசமான இடங்களில் தோல்வியைத் தழுவினால் அது அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பேரம், இறுதியாக தேர்தல் முடிவுகள் என எல்லாவற்றிலும் அடிவாங்க நேரிடும்’ என நினைக்கிறது அ.தி.மு.க தரப்பு.”

கழுகார், தான் திரட்டிய தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.

‘‘அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, தேர்தலைச் சந்திப்பதில் தி.மு.க-வுக்கும்கூட துளியும் விருப்பமில்லை என்பது உண்மைதான். அதனால், இரண்டு கட்சிகளிலும் ஒருசில பெருந்தலைகள் ரகசியமாகக் கூடிப் பேசி உள்கூட்டணி போட்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன.’’

‘‘அதென்ன உள்கூட்டணி?’’

‘‘இருதரப்புமே முடிந்த வரையில் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் உள்ளுக்குள் செய்யவேண்டும். அதேசமயம், தேர்தலுக்கான மனு வாங்குதல், கூட்டணிப் பேச்சு என்று வெளியில் பரபரப்புக் கிளப்பவேண்டும் என்பதுதான் இந்த உள்கூட்டணியின் நோக்கமாம்.’’

‘‘பயங்கரமான திட்டமாக இருக்கிறதே!’’

‘‘கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல், தமிழக உள்ளாட்சித் துறையில் நிதி புழங்கியிருக்கிறது. ஒருவேளை முன்பே உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் இந்தத் தொகையில் குறிப்பிட்ட ஒரு தொகை, கமிஷன் என்கிற பெயரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளான 1,30,000 பேருக்கும் போயிருக்கும். தேர்தல் நடத்தாததால் அத்தனையும் ஒரே இடத்துக்குப் போயிருக்கின்றன. அதாவது ஆளுங்கட்சியில் இருக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியமான புள்ளிகளுக்குப் போயிருப்பதாக ஆளுங்கட்சிக்காரர்களே பேசிக்கொள்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘மூன்று ஆண்டுகளாக பெரியளவில் அறுவடை செய்தவர்கள், `இன்னும் ஓராண்டுக்கும் நாமே மொத்தமாக அள்ளிவிடலாமே!’ என நினைக்

கிறார்கள். இதற்காகவே ஏதாவது ஒரு வகையில் தேர்தலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார்கள். ஆனால், டிசம்பர் 13-க்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதால், தேர்தல் நடத்துவதைப்

போலவே சீரியஸாக விருப்பமனு வாங்குவது, அவசர சட்டம் கொண்டுவருவது என்று பாவ்லா காட்டிவிட்டு, தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு மறைமுகமாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.’’

‘‘தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்று தி.மு.க கேட்கிறதே?’’

‘‘கேட்கிறார்கள்தான். ஆனால் மறுபுறம், ‘ஒன்பது புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்த பிறகே தேர்தலை நடத்தவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வாதிடப்

பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இதுதொடர்பான அனைத்து வழக்குகளும் டிசம்பர் 13-ம் தேதிதான் விசாரிக்கப்படவுள்ளன. அதுவரை தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு இல்லை.’’

‘‘அதற்குப் பிறகு?’’

‘‘ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய கால அவகாசம் கேட்பார்கள். தேர்தல் அறிவிப்பாணை வந்தால் துணைமேயர் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் வழக்கு போடக் காத்திருக்கிறார். அதன் பின்னணியிலும் ஆளும்கட்சி இருக்கலாம் என்கிறார்கள்.’’

‘‘இப்போதைக்கு தேர்தல் வருமா வராதா?’’

‘‘வரும்ம்ம்ம்... ஆனா, வராது என்றுதான் சொல்லவேண்டும். உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதில் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர் போன்ற பா.ஜ.க நிர்வாகிகளே டி.வி சேனல்களின் விவாத மேடைகளில் கொட்டித் தீர்க்கிறார்களே. அவர்களுக்குத் தகவல் கிடைக்காமல் இப்படிப் பேச வாய்ப்பு இல்லை. ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரே, தி.மு.க தரப்புக்கு அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ மூலம் தூதுவிட்டு, ‘தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இனிமேல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நீங்களே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, கோர்ட்டில் வாதாடுங்கள்’ என்று ஐடியா கொடுத்ததாகவும், அதனால்தான் ‘வார்டு வரையறை’ என்கிற வாதத்தை தி.மு.க கிளப்பியிருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.’’

டேபிளுக்குச் சுடச்சுட வந்தது ஃபில்டர் காபி. ரசித்துக் குடித்த கழுகார், ‘‘தமிழக மீடியாக்களின் கவனம் முழுவதும் ரஜினி, கமல் இருவர் மீதுதான் இருக்கிறது. கமல் போட்ட கணக்கு இப்போது வொர்க் அவுட் ஆகிவருகிறது. இருவருக்கும் இடையே ஈகோ இருந்தாலும் இணைந்து செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார்கள் கமல் தரப்பினர். ரஜினி தரப்பில், ‘கமல் மட்டுமல்ல, வேறு சில கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவந்து வலுவான ஓர் அணியை ஏற்படுத்த வேண்டும்’ என நினைக்கிறார்கள்.’’

கமல்
கமல்

‘‘ஆனால், ‘முதல்வர் வேட்பாளர் கமல்தான்’ என்று ஸ்ரீப்ரியா சொல்லியிருக்கிறாரே?’’

‘‘அவருடைய கருத்தில் கமலே கடுப்பாகிவிட்டாராம். ஸ்ரீப்ரியாவைக் கூப்பிட்டு சத்தம்போட்டதாகக் கேள்வி. அதன் பிறகுதான் ‘கூட்டணி, முதல்வர் பதவி குறித்து யாரும் பேசக் கூடாது’ என்று உத்தரவு பறந்திருக்கிறது. இன்னொரு பக்கம் கோவாவில் திரைப்பட விருது விழாவில் பங்கேற்றுவிட்டு, நவம்பர் 21-ம் தேதி சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போதும் ‘2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் மக்கள் மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்குநூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள். முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவுசெய்யப்படும்’ என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.’’

‘‘ம்!’’

‘‘கமலுடன் கூட்டணி அமைத்தால் கீழ்மட்டத்தில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்று நெருக்கமானவர்களிடம் ரஜினி கேட்டுவருகிறார். இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியும் சுதாரித்துக்கொண்டுள்ளது. ‘ரஜினி-கமல் கூட்டணி உருவானால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகளும், அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகளும் அவர்களுக்குச் சென்றுவிடும்’ என்று உளவுத்துறை தகவல் சொல்லியிருக்கிறதாம். எனவே, இந்த இணைப்பு நடக்காமல் தடுக்கும் வேலைகளில் உளவுத்துறையை இறக்கி

விட்டுள்ளது ஆளுங்கட்சி’’ என்ற கழுகார், மொபைல்போனில் ‘அலர்ட் மணி’ ஒலிக்க, எடுத்துப் பார்த்துவிட்டு நம் பக்கம் திரும்பியவர்,

‘‘சாமியார் நித்யானந்தா உள்பட அவருடைய அகமதாபாத் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர்மீது குழந்தைக் கடத்தல் வழக்குப் பதிவுசெய்திருக்கும் குஜராத் காவல்துறை, அந்த ஆசிரமத்தையும் முடக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நித்யானந்தா, அமெரிக்கப் பகுதியில் உள்ள ஒரு நாட்டில் பதுங்கி இருப்பதை நம்முடைய உளவுப்பிரிவு கண்டறிந்திருக்கிறதாம். அடுத்தடுத்து அதிரடி காட்சிகள் அரங்கேறப்போகின்றன. உங்கள் காதுகளைக் கூர்தீட்டிக்கொள்ளுங்கள்!’’ என்றபடியே சிறகுகளை விரித்தார்.

“ஜாதகத்தில் கனிமொழி டாப்!”

கனிமொழி
கனிமொழி

ஜனவரி 24, 2020-ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ஜாதகத்துக்குச் சாதகமாக இல்லையாம். ‘உதயநிதியின் ஜாதகம் பாசிட்டிவ்வாக இருப்பதால், அவரை ஸ்டாலினுக்கு நெருக்கமாக கட்சியிலும் அதிகாரத்திலும் உட்காரவைத்தால், ஸ்டாலினின் ஜாதக பலம் கூடும்; சனியின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம்’ என்று சில ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கனிமொழியின் ஜாதகத்துக்கு சனிப்பெயர்ச்சி அதிரடி ஏற்றங்களைத் தரப்போவதாக ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு அல்லது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை உதயநிதிக்கு ஒதுக்கிவிட்டு, ஸ்டாலினை திருவாரூர் தொகுதிக்கு இடம் மாறும்படி குடும்பத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism