Published:Updated:

மிஸ்டர் கழுகு: முஸ்லிம்களுக்கு ராஜ்யசபா வாய்ப்பு ஏன் இல்லை?

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

மூன்றாவது சீட் யாருக்கு என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

மிஸ்டர் கழுகு: முஸ்லிம்களுக்கு ராஜ்யசபா வாய்ப்பு ஏன் இல்லை?

மூன்றாவது சீட் யாருக்கு என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

கூலிங்கிளாஸ் அணிந்தபடி வந்த கழுகார் ஃப்ளாஸ்கிலிருந்து இளநீர் ஊற்றி நமக்கும் கொஞ்சம் கொடுத்தார். “கோடை, உக்கிரமாக இருக்கப்போகிறதாம். 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை கூடுதல் வெப்பம் நிலவ வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இப்போதிருந்தே அதற்கேற்ப உடல்நிலையைப் பராமரிக்க வேண்டும்” என்ற கழுகாரிடம், ‘‘ராஜ்யசபா எம்.பி வேட்பாளர்கள் தேர்வு பற்றிய பின்னணித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்’’ என்று கேட்டோம்.

‘‘தி.மு.க-வில் நடந்ததை முதலில் சொல்கிறேன்... கேளும்! மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரின் பெயர்களை கடந்த இதழிலேயே சொல்லியிருந்தேன். அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், மூன்றாவது சீட் யாருக்கு என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது. அந்த சீட் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தினரில் ஒருவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், மேற்கு மண்டலத்தில் எடப்பாடியை அவர் சார்ந்த கவுண்டர் சமூகத்தவர் பெரும்பாலும் ஆதரிக்கிறார்கள். இந்தச் சமூகத்துக்கு நிகராக மேற்கு மண்டலத்தில் பரவலாக இருப்பவர்கள் பட்டியல் சமூகத்தினர்தான். எனவே, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தந்தால், அவர்களின் ஓட்டுகளைப் பெறலாம் என்பது தி.மு.க-வின் கணக்கு. அந்த வகையில்தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், அந்தியூர் செல்வராஜின் பெயர் அறிவிக்கப்படும் கடைசி நிமிடம் வரை விஷயம் லீக்காகவில்லை.’’

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் 
என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ்.
மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ்.

‘‘ஆனால், தி.மு.க தரப்பில் முணுமுணுப்பு கேட்பதாகச் சொல்கிறார்களே?”

‘‘கேட்காமலா..? ‘மேற்கு மண்டலத்தில் இருக்கும் பட்டியல் சமூகத்தினரின் ஓட்டுகளைக் கவர முடிவுசெய்தது சரி... அதற்காக 65 வயதைத் தாண்டிய அந்தியூர் செல்வராஜுக்குத்தானா தர வேண்டும்? அதே சமூகத்தில் வயதில் இளையவர்கள் பலரும் ஆக்ட்டிவாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு தந்திருக்கலாமே?’ என்கின்றனர். ‘பண்ணாரி அம்மன் கோயிலில் தீ மிதித்து சர்ச்சைக்குள்ளாகி கருணாநிதியால் கண்டிக்கப்பட்டவர்’ என்று அந்தியூர் செல்வராஜ் மீதான பழைய விவகாரத்தையெல்லாம் இப்போது சிலர் தோண்டியெடுக்கின்றனர். அருந்ததியர் சமூகத்தில் நாமக்கல் வி.பி.துரைசாமியின் பெயரும் அடிபட்டது. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் கட்சியின் வடக்கு மண்டல ஜபர்தஸ்து ஒருவர்தான் `துரைசாமி வரக் கூடாது’ எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டாராம்.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘எல்லாம் சரி... முஸ்லிம்களுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற குமுறல், அந்தச் சமுதாய மக்கள் மத்தியில் எழுந்துள்ளதே!’’

‘‘ஆமாம். இந்தக் குமுறல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்துவருகிறது. ‘ஒருவருக்குக்கூடவா தி.மு.க-வில் சீட் கொடுக்க முடியாது?’ என்று கேள்வி எழுப்பியதற்கு, ‘தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி, ராமநாதபுரத்தில் ஜெயித்தாரே!’ என்று தி.மு.க-வின் மேல்மட்ட தலைவர்கள் பதிலளித்து வந்தனர். இப்போது ராஜ்யசபாவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, கட்சியின் இஸ்லாமியப் பிரமுகர்கள் மத்தியில் அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன என்கிறார்கள். அத்துடன், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக வண்ணாரப் பேட்டையில் இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஸ்டாலின் அங்கு சென்று ஆதரவு தெரிவிக்காததும் அந்தச் சமூக மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.’’

‘‘இது வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்குவங்கியை பாதிக்காதா?’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘‘தற்போதைய அகில இந்திய அரசியலில், முஸ்லிம்கள் தவிர்க்கவே முடியாமல் பா.ஜ.க எதிர்ப்பாளர் களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். சி.ஏ.ஏ விவகாரத்தில் முஸ்லிம் ஓட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சி.ஏ.ஏ-வை எதிர்க்கும் தி.மு.க-வுக்குக் கிடைத்துவிடும் என்பது பிரஷாந்த் கிஷோரின் கணக்கு. எனவே, அவரின் அறிவுரைப்படியும் ராஜ்யசபாவுக்கு முஸ்லிம் வேட்பாளரை தி.மு.க அறிவிக்க வில்லை என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.’’

‘‘ஆளுங்கட்சி முகாம் நிலவரம் என்ன?’’

‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள கே.பி.முனுசாமியின் பெயர் முன்னிலையில் இருக்கிறது. வக்கீல் மனோஜ் பாண்டியன், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தனித்தனியாக எம்.பி சீட் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சேலம் வக்கீல் தனசேகரன், இளங்கோவன் உள்ளிட்ட பலரும் முட்டிமோதுகின்றனர். மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகுதான் பெயர் பட்டியல் வெளிவருமாம். இதற்கிடையில், தே.மு.தி.க சார்பில் தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து சுதீஷ் தரப்பினர் கேட்டார்களாம். அதற்கு எடப்பாடி தரப்பில், ‘இப்போது வாய்ப்பு இல்லை. அடுத்த முறை வேறொரு வகையில் இதற்கு ஈடு செய்துவிடுகிறோம்’ என நாசூக்காகச் சொல்லப்பட்டதாம்.’’

‘‘தலைமைச் செயலகம் பக்கம் போனீரா?’’

‘‘போகாமல் இருப்பேனா... தலைமைச் செயலாளர் சண்முகம் தரப்பினருக்கும் முதல்வரின் செயலாளர்கள் சாய்குமார், விஜயகுமார் ஆகியோர் தரப்பினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளனவாம். துறை சார்ந்த விவகாரங்கள் வரும்போது, இந்த இருவரும் தலைமைச் செயலாளரிடம் கேட்காமலேயே நேரடியாக துறைத் தலைவர்களுடன் பேசி முதல்வருக்கு பாஸ் செய்கிறார்களாம். இதனால், பல விஷயங்கள் தாமதமாகத்தான் தலைமைச் செயலாளருக்கே தெரியவருகின்றனவாம். ஜூலை 7-ம் தேதியுடன் சண்முகம் ஓய்வுபெறப்போகிறார் என்பதால் அவரது பேச்சு பெரிதாக எடுபடவில்லை” என்ற கழுகார், ‘‘சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொல்கிறேன்... கேளும்! அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் விரைவில் எம்.பி ஆக இருக்கிறார். மேற்குவங்க மாநில மம்தா கட்சியின் ஆலோசகராக இருக்கும் அவர், அந்தக் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆக இருக்கிறாராம்’’ என்ற கழுகார், விருட்டெனப் பறந்தார்.

கழுகு பிட்ஸ்!

  • தி.மு.க தரப்பில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவருக்கு எம்.பி சீட் கொடுத்து அந்தச் சமூகத்தின் வாக்குகளைக் குறிவைத்திருக்கிறார்கள் என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு வேறுமாதிரியாக இருக்கிறது. பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக சட்டசபையில் முடிவு எடுத்து, பரவலான அளவில் பஞ்சமி நிலங்களை விரைவில் மீட்டு, பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கவிருக்கிறாராம். அதேசமயம் தி.மு.க-வின் முரசொலி அலுவலகம், சிறுதாவூர் பங்களா என இதன் பின்னணியில் ‘அடேங்கப்பா’ அரசியல் கணக்குகளும் இருக்கின்றனவாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

  • சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு), என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனச் சொல்லி பிரச்னையைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளது தி.மு.க. இந்தக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, பாக்கியிருக்கும் ஊரக உள்ளாட்சிகள் மற்றும் மாநகராட்சி தேர்தல்குறித்த அறிவிப்பும் வந்துவிடும் என்கிறார்கள்.

  • மார்ச் 15-ம் தேதி, என்.பி.ஆருக்கான விண்ணப்பங்களை பிரின்ட் செய்யப்போகிறது மத்திய அரசு. மாநிலவாரியாக அந்தந்த மாநில மொழிகளில் பத்து நாள்களுக்குள் விண்ணப்பங்களை பிரின்ட் செய்து முடித்து, ஏப்ரல் 1-ம் தேதி கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.