Published:Updated:

மிஸ்டர் கழுகு: முகர்ஜியின் முயற்சி... ஜி.கே.வாசனுக்கு ஜாக்பாட்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

வேட்பாளர் பட்டியலை முழுக்க முடிவெடுத்தது எடப்பாடிதான்.

கழுகாருக்கு போன் போட்டோம்... ‘லொக் லொக்’ என்ற இருமல் சத்தம். `என்னவோ... ஏதோ!’ எனப் பதறும்போதே, கொரோனா பாதிப்பு பற்றிய ரிக்கார்டர்டு வாய்ஸ்.

‘அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு எழுந்தபோதே, ‘‘சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வர முடியுமா?’’ என்று கழுகாரின் கரகரக்குரல்.

‘‘ஐயா சாமி... ஆழம் பார்க்கிறீரோ..! ‘கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்’ என்று அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீர் வழக்கம்போல அலுவலகத்துக்கே வந்துவிடும்’’ என்று சொல்லி போனை வைத்தோம்.

சுடச்சுட காபியுடன் நாம் தயாராக இருக்க, வந்து சேர்ந்த கழுகாரிடம், ‘‘அ.தி.மு.க-வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலை அதிரடியாக அறிவித்துவிட்டதே தலைமை?’’ என்று ஆரம்பித்தோம்.

காபியைச் சுவைத்துக்கொண்டே... ‘‘வேட்பாளர் பட்டியலை முழுக்க முடிவெடுத்தது எடப்பாடிதான். ஏற்கெனவே நாம் சொன்னதுபோல கே.பி.முனுசாமியின் பெயர் உறுதியாகியிருக்கிறது. சீனியர் என்பதால் தம்பிதுரைக்கு சீட் கொடுப்பதற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை. மூன்றாவது இடத்துக்குத்தான் ஏகப்பட்ட முட்டல், மோதல்கள். கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஜி.கே.வாசன் தட்டிச் சென்றுவிட்டார்.’’

எடப்பாடி பழனிசாமி - ஜி.கே.வாசன்
எடப்பாடி பழனிசாமி - ஜி.கே.வாசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் ஸ்கெட்ச் போட்டது எப்படி?’’

‘‘ஜி.கே.வாசன், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே சத்தமில்லாமல் காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க-வினரும் ஏ.சி.சண்முகமும் எடப்பாடியையே சுற்றிவர, ‘எங்கே கல்லெறிந்தால் கனி விழும்’ என்பதை மிகச் சரியாகக் கணித்து, டெல்லி லாபி மூலமாக வெற்றிக்கொடி நாட்டிவிட்டார்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘டெல்லியில் அந்த அளவுக்கு செல்வாக்கோ?’’

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் த.மா.கா-வுக்கு ஓர் இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ‘ராஜ்யசபா இடம் காலியாகும்போது பார்க்கலாம்’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந் தார்களாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் முழு தோல்வி என்பதால், சொந்த கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற முடிவுக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதனால்தான், தே.மு.தி.க உட்பட யாருக்குமே அவர் பிடிகொடுக்கவில்லை. இது தெரிந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் தற்போதைய பா.ஜ.க தலைவர்களுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவைப் பயன்படுத்தத் திட்டமிட்டாராம் ஜி.கே.வாசன்.’’

‘‘ம்ம்ம்!’’

‘‘பிரணாப் முகர்ஜியும் மூப்பனாரும் நெருங்கிய நண்பர்கள். இப்போது, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார் பிரணாப். இந்த வகையில், பா.ஜ.க தலைமைக்கு தகவல் போக, ஜி.கே.வாசன் எம்.பி ஆகிவிட்டார்.’’

‘‘ஏ.சி.சண்முகம் ஏமாந்துவிட்டாரே!’’

‘‘ ‘வாய்ப்பு இல்லை’ என்பதை அவருக்கு கடந்த வாரமே எடப்பாடி சொல்லிவிட்டாராம். ஆனால், ஜி.கே.வாசனுக்குத்தான் தரப்போகிறோம் என்பதை அப்போது சொல்லவில்லையாம். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்தினம் வரை

அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளுக்குக்கூட இது தெரியாதாம். ‘அ.தி.மு.க அல்லாத ஒருவருக்கு சீட் தரச் சொல்லி டெல்லி மேலிடம் அழுத்தம் கொடுக்கிறது’ என்கிற தகவல் மூத்த தலைவர்கள் ஒருசிலருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. ஆனால், அது தே.மு.தி.க என்றே நினைத்திருக்கிறார்கள் பலரும்.’’

‘‘ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்ததற்கு அ.தி.மு.க-வுக்குள் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லையா?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘கடும் அதிருப்தி. ஒரு வாரத்துக்கு முன்பு கே.பி.முனுசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, ‘மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சீட் கொடுக்கலாம். நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அவர் மறைந்த பிறகு அவர் குடும்பத்துக்கு நாம் செய்யும் கௌரவமாக இருக்கும்’ என்று கே.பி.முனுசாமி சொன்னாராம். ‘பார்க்கலாம்’ என்று சொன்னாராம் பன்னீர். அங்கிருந்து கே.பி.முனுசாமி நகர்ந்ததும் ‘இவரோட சீட்டை மனோஜ் பாண்டியனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதுதானே!’ என்கிற கமென்ட் பன்னீர் முன்பாகவே வந்து விழுந்துள்ளது. முன்னாள் எம்.பி-யான மைத்ரேயன், ‘தனக்கு வாய்ப்பு வேண்டும்’ என்று பன்னீர் மற்றும் எடப்பாடி இருவரிடமும் கடிதமே கொடுத்தும் பலனில்லை. நிலைமையைப் புரிந்துகொண்ட நத்தம் விசுவநாதன், ‘சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவராகவே ஒதுங்கிக்கொண்டாராம்!’’

‘‘ஜி.கே.வாசனுக்கு என எப்போது முடிவானது?’’

‘‘இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சியினர் என்ற அடிப்படையில் ஜி.கே.வாசனும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அப்போதே அவருக்கு ஏக முக்கியத்துவம் கொடுத்துப் பேசவைத்தார்கள். இது, அ.தி.மு.க-வினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதையும் கூட்டிக்கழித்து இப்போது அசைபோடுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.’’

‘‘அது சரி, ஜி.கே.வாசனுக்குப் பதவியைக் கொடுப்பதால், அ.தி.மு.க-வுக்கு என்ன லாபம்?’’

‘‘முதலில் டெல்லி மேலிடத்தைத் திருப்திப்படுத்தியதன் மூலமாகக் கிடைக்கும் பலாபலன்கள்தான் அவர்களுக்கு முக்கியம். அடுத்து, காவிரி டெல்டா பகுதியில் படு வீக்காக இருக்கிறது அ.திமு.க. அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான ஜி.கே.வாசனுக்குப் பதவியைக் கொடுப்பதன் மூலமாக ஏதாவது பலன் கிடைக்கக்கூடும் என்றும் கணக்குப்போடுகிறார்கள்.’’

‘‘சரி, மத்திய அமைச்சரவையில் ஜி.கே.வாசனுக்கு இடம் கிடைக்குமோ?’’

‘‘அவரின் ஆதரவாளர்களுக்கு அப்படியும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ‘அடுத்து, அமைச்சர் ஆகப்போகிறார். மீண்டும் கப்பல் ஓட்டுவார்’ என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘அட..!’’

‘‘ஆனால் அ.தி.மு.க தரப்பிலோ, ‘கட்சியை மொத்தமாக பா.ஜ.க-வுடனோ அல்லது ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியிலோ கரைத்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் இந்த வாய்ப்பை அவருக்கு பா.ஜ.க பெற்றுத் தந்திருக்கிறது. நமக்கு எந்தவிதத்திலும் லாபம் கிடைக்காது எனத் தெரிந்தும், ஜி.கே.வாசனுக்கு எதற்காக சீட் தர வேண்டும்?’ என்கிற குமுறலும் ஒலிக்கிறது.’’

‘‘தே.மு.தி.க ஏகத்துக்கும் அப்செட்டாமே?’’

‘‘இருக்காதா... பலமுறை அழுத்தம் கொடுத்தும் தங்களுக்குக் கொடுக்காமல், ஜி.கே.வானுக்குக் கொடுத்ததில் கேப்டன் குடும்பம் செம கடுப்பில் இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முதல் நாள் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘துரோகம், சூழ்ச்சிகளை வென்று சிங்கமாக மீண்டு வருவார் விஜயகாந்த்’ என்று பிரேமலதா பேசியதையும் இங்கே கவனிக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியை விட்டு தே.மு.தி.க விரைவில் வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வில் பொதுச்செயலாளர் ரேஸ் வேகம் எடுத்துவிட்டதோ?’’

‘‘அன்பழகன் சீரியஸாக இருக்கும்போதே அதுகுறித்த பேச்சுகள் கிளம்பிவிட்டன. சீனியரான தனக்கு அந்தப் பதவி வேண்டும் என்று இரண்டாம்கட்ட தலைவர்களை வைத்து ஸ்டாலினிடம் சொல்லவைத்துள்ளார் துரைமுருகன். ‘இப்போது என்ன அவசரம், பொறுமையாக முடிவு எடுக்கலாம்’ என்று பதில் சொல்லப்பட்டுவிட்டதாம். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் நகர்ந்தால், அவரிடம் தற்போது இருக்கும் பொருளாளர் பதவியைப் பிடிக்க பெரும்படையே தயாராக இருக்கிறது. ‘அறிவிக்கப்படாத பொருளாளராக கட்சிக்கு அண்ணன் இருக்கிறார். அவருக்கே கொடுக்க வேண்டும்’ என்று எ.வ.வேலு ஆதரவாளர்கள் மல்லுக்கட்டுகிறார்கள். ஆ.ராசா, டி.ஆர்.பாலு என இன்னும் சிலரும் கண்வைத்துள்ளனர். ‘அக்காவுக்கு கட்சிக்குள் பவர்ஃபுல் பதவி வேண்டும்’ என்று கனிமொழி ஆதரவாளர்களும் டீஸர் விட்டுக் கொண்டுள்ளனர்.’’

அன்பழகனின் இறுதிச்சடங்கு
அன்பழகனின் இறுதிச்சடங்கு

‘‘அன்பழகனின் இறுதிச்சடங்குகள் விஷயத்தில் அவரின் குடும்பத்தினருக்கு ஏதோ வருத்தமாமே?’’

‘‘அறிவாலயத்தில் அவர் உடலை வைத்திருக்கலாம் என்கிற வருத்தம்தான். இதே வருத்தம் மூத்த நிர்வாகிகள் சிலரின் மத்தியிலும் இருக்கிறது. ஆரம்பக்காலத்தில் அன்பழகனுக்குச் செல்லமாக இருந்த மு.க.அழகிரி அவர் முகத்தைப் பார்க்கக்கூட வரவில்லை என்பதிலும் அன்பழகன் குடும்பத்தினருக்கு கொஞ்சம் வருத்தம்தானாம்.’’

‘‘ரஜினி?’’

‘‘நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு, நெருக்கமான சில அரசியல் புள்ளிகளைச் சந்தித்துள்ளார் ரஜினி. திவால் ஆன ‘எஸ்’ வங்கி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகிப் பொறுப்பில் ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்திரா இருந்துவந்தார். அவரும் ரஜினிக்கு ஆலோசனை வழங்குவதில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இது, மன்ற நிர்வாகிகள் பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகாந்த் கட்சியில் நடந்தது இங்கும் நடந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள். அதேபோல் தன்னைவைத்து வெளியில் சிலர் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் என்ற தகவலும் ரஜினியின் காதுகளுக்கு எட்ட, இனி தன்னைச் சந்திக்க வருபவர்கள் யாருடைய பின்னணியில் வருகிறார்கள் என அலசி ஆராயச் சொல்லியிருக்கிறாராம்’’ என்ற கழுகார்,

‘‘கொரோனா வைரஸ் விஷயத்தில் எச்சரிக்கை கொடுத்ததற்கு நன்றி’’ என்று சொல்லி, சட்டென சிறகுகளை விரித்தார்.