Published:Updated:

மிஸ்டர் கழுகு: பொன்னாரின் உதவி... முருகனுக்கு பதவி!

பொன்.ராதாகிருஷ்ணன், முருகன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்.ராதாகிருஷ்ணன், முருகன்

தி.மு.க தரப்பிலும் பதவிப் போட்டி...!

மிஸ்டர் கழுகு: பொன்னாரின் உதவி... முருகனுக்கு பதவி!

தி.மு.க தரப்பிலும் பதவிப் போட்டி...!

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன், முருகன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்.ராதாகிருஷ்ணன், முருகன்
உள்ளே நுழையும்போதே ‘ஒருவன் ஒருவன் முதலாளி... உலகில் மற்றவன் தொழிலாளி...’ என்று பாடிக்கொண்டே வந்த கழுகாரிடம், ‘‘இன்னும் ரஜினி ஃபீவரிலிருந்து மீளவில்லையா... அவருடைய அறிவிப்பை, எல்லா அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் பரபரப்பாக எதிர்பார்த்தார்களாமே?’’ என்று கேட்டோம்.

ஃபிளாஸ்கிலிருந்து சுக்குமல்லிக் காபியை கோப்பையில் ஊற்றிக்கொண்டே, நமக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘ஆமாம். ரஜினி என்ன அறிவிக்கப்போகிறார் என்ற டென்ஷன், புதன்கிழமை இரவிலிருந்தே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புகளுக்குமே இருந்தது. புதிய கட்சி அறிவிப்பு வெளியிட்டால் அதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இரண்டு கழகங்களிலுமே சில நிர்வாகிகள் இருந்திருக் கிறார்கள். ஆனால், அதற்கு வழியில்லாமல் செய்துவிட்டது ரஜினியின் பேச்சு!’’

‘‘திருநாவுக்கரசர்கூட ரஜினியைச் சந்தித்துப் பேசினாரே?”

‘‘அவர், ‘பேரனின் பிறந்த நாள் வாழ்த்து பெறவே ரஜினியைச் சந்தித்தேன்’ என்று சொன்னாலும், ரஜினியுடன் ஒரு மணி நேரம் தனியாகப் பேசியிருக்கிறார். இருவரும் நாற்பது ஆண்டுக்கால நண்பர்கள். அந்த வகையில் ரஜினியிடம் உரிமையாகப் பேசிய அவர், ‘தைரியமா கட்சியை ஆரம்பிங்க. உங்க பின்னால வர பலரும் தயாரா இருக்காங்க’ என்று சொல்லியிருக்கிறாராம்.’’

‘‘அதற்கு ரஜினி என்ன சொன்னாராம்?’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் ரஜினி. ‘கட்சி ஆரம்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன’ என்று சொல்லி, அவற்றையெல்லாம் விளக்கியிருக்கிறார். வெளியே வந்த திருநாவுக்கரசர், ‘ரஜினி, அவருடைய முடிவில் தெளிவாக இருக்கிறார். கட்சி அறிவிப்பை அவ்வளவு சீக்கிரமாக அறிவிக்க மாட்டார்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.’’

‘‘அதுபோல்தான் நடந்திருக்கிறதே!’’

‘‘இருக்கலாம்... அதைப்பற்றித்தான் தனியாக கட்டுரை போடுகிறீர்களே. சரி... தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் அறிவிக்கப்பட்டதில், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் விஷயத்துக்கு வருகிறேன். பட்டியல் சமூகத்தில் ஒருவரை தலைவராக்கி இருப்பதன்மூலமாக, பட்டியல் சமூகத்தினரின் ஓட்டுகளை குறிவைத்து வியூகம் வகுத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், தமிழக பா.ஜ.க-வில் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்தவர்களைவிட மலைத்தவர்கள்தான் அதிகம். பெயருக்கு வாழ்த்து சொன்னாலும், பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த பலரும் கொந்தளிக்கிறார்கள்.’’

பொன்.ராதாகிருஷ்ணன், முருகன்
பொன்.ராதாகிருஷ்ணன், முருகன்

‘‘யாருடைய பரிந்துரையில் முருகனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது?’’

‘‘ஏற்கெனவே நயினார் நாகேந்திரன் பெயரை முரளிதர் ராவ் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், புதிதாக கட்சிக்கு வந்தவர் என்று அவரை பரிசீலிக்கவில்லையாம். ஹெச்.ராஜா தரப்பும் தலைவர் பதவிக்காக மல்லுக்கட்டியிருக்கிறது. ஆனால், சத்தமில்லாமல் சாதித்துவிட்டார் பொன்னார்!’’

‘‘என்னது... பொன்னார் பரிந்துரையா?’’

‘‘முருகன், பொன்னாரின் தீவிர ஆதரவாளர். அவரின் பரிந்துரையில்தான் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியும் முருகனுக்குக் கிடைத்தது. தன்னுடைய கைக்கு அடக்கமான ஒருவர்தான் தலைவர் ஆக வேண்டும் என்றே திட்டமிட்டு காய் நகர்த்தி, முருகனை தலைவராக்கிவிட்டார் என்கிறார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘எப்படி?’’

‘‘டெல்லியில் உள்ள தன் சகாக்கள்மூலம் கட்சித் தலைமைக்கு முருகன் பெயரை பரிந்துரை செய்ததுடன், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனையும் பரிந்துரை செய்யச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக நடக்கும் பிரசாரத்தை முறியடிக்க முருகன்தான் சரியான சாய்ஸ் என்று இரு தரப்பும் சேர்ந்து சொல்ல, முருகன் பெயரை ‘டிக்’ செய்திருக்கிறது டெல்லி. தவிர, முரசொலி அலுவலகம் - பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு எடுத்ததும் முருகன்தான். அதுவும் இவருக்கு பதவி கிடைக்க ஒரு காரணமாக இருக்கலாம்.’’

‘‘எல்லாம் இருக்கட்டும், அவரை சுதந்திரமாகச் செயல்பட விடுவார்களா?”

‘‘ஏற்கெனவே இதேபோல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதி, மாநிலத் தலைவராக இருந்தார். அப்போது அவருக்கு சில அவமானங்கள் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், நிலைமை இப்போது மாறியிருக்கிறதா, இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்!’’

‘‘தி.மு.க தரப்பிலும் பதவிப் போட்டி அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே?’’

‘‘பொதுச்செயலாளர் ரேஸ் ஒருபுறம் என்றால், அடுத்தடுத்த பதவிகளுக்கும் மோதல்கள் ஆரம்பமாகிவிட்டன. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் நகர்ந்தால், பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். எ.வ.வேலுவுடன் ஐ.பெரியசாமி, நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பொருளாளர் பதவிப் போட்டியில் இருக்கிறார்கள்.

டி.ஆர்.பாலு தரப்பில் ஒரு படி மேலே போய் ‘அண்ணனுக்கு இல்லாத தகுதியா!’
என்று கேட்கிறார்களாம்.’’

‘‘அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?’’

“வாயாடி அமைச்சர் ஒருவர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரைப் பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் ‘வாய் குழறியது’தான் இப்போது கோட்டை வட்டாரத்தில் பரபரப்புப் பேச்சாகப் பற்றி எரிகிறது. ‘அவங்க ரெண்டு பேரும் எந்த வகையிலும் எனக்குச் சமமில்லை’ என்பதையே வேறு வார்த்தைகளால் வக்கிரமாக கமென்ட் அடித்தாரம் அந்த அமைச்சர். அவர் பேசியதைக் கேட்டு ஆடிப்போனார்களாம் அந்த அதிகாரிகள். இந்த விஷயம் எப்படியோ கசிந்து, இதுதொடர்பாக உளவுத்துறையினரும் முதல்வர் அலுவலகத்துக்கு ‘நோட்’ போட்டு அனுப்பியிருக்கிறார்களாம்.”

ஸ்டாலின்
ஸ்டாலின்

‘‘தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டத்தை திடீரென தமிழக அரசு நிறுத்திவிட்டதே?’’

“சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய மார்ச் 11-ம் தேதி அன்றே என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அன்று மாலையே அதுகுறித்த அரசாணையும் வெளியிட்டன. ஆனால், மறுநாளான மார்ச் 12-ம் தேதி நிலைமை தலைகீழாகிவிட்டது. இஸ்லாமியர்களின் தொடர் போராட்டங்கள், பிற மாநிலங்களில் இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காதது... இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் யோசிக்க வைத்துவிட்டனவாம். தவிர, ஸ்டாலின் மண்ணடிக்குச் சென்று இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பேசியது உள்ளிட்ட விவகாரங்களை எல்லாம் சமாளிக்கவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நிறுத்திவிட்டார்களாம்!”

‘‘அ.ம.மு.க-வுக்கு சென்னை ராயப்பேட்டையில் புது ஆபீஸ் திறந்திருக்கிறார்களே?’’

அ.ம.மு.க
அ.ம.மு.க

‘‘அந்தக் கட்டடம் தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் முருகேசனுக்குச் சொந்தமானதாம். இவர்தான், தஞ்சாவூர் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மொத்தம் நான்கு மாடிகள்கொண்ட கட்டடத்தில், கட்சியின் ஒவ்வோர் அணிக்கும் தனித்தனியாக அலுவலக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.’’

‘‘11.3.2020 தேதியிட்ட இதழில் வெளியான ‘ரஜினி - சிவாஜியா, எம்.ஜி.ஆரா?’ என்ற உமது அட்டைப்பட செய்தி குறித்து ‘நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை’யின் தலைவர் கே.சந்திரசேகரன், வருத்தம் பொங்க ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்’’ என்றபடி கடிதத்தை நீட்டினோம்.

அதைப் படித்துவிட்டு சற்றே பதறிய கழுகார், ‘‘என்னது... சிவாஜியை நான் இழிவுபடுத்துவதா! சிவாஜி என்கிற அந்த நடிப்புச் சிம்மத்தின் மீது பலரையும்போல் எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. அவருடைய அரசியல், பிரதிபலன்பாராதது. எந்தவிதமான பதவிகளையும் அடையாமல் காமராஜருக்காகவே பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே காங்கிரஸில் பல காலம் இருந்தவர் சிவாஜி. அவரை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், அவருக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. ஆனாலும் அவர் காங்கிரஸைவிட்டு விலகவில்லை. அப்படியொரு பிறவி அவர். கடைசியில்தான் காலத்தின் கட்டாயமாக தனிக்கட்சியெல்லாம் ஆரம்பித்தார். கடைசி வரை அரசியலில் சோபிக்கவில்லை என்கிற அர்த்தத்தில்தான் அங்கே அவருடைய பெயரைப் பயன்படுத்தியிருந்தேன். சிவாஜியின் குடும்பத்தினர், ரசிகர்கள் உட்பட யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கில்லை. என்றாலும், அப்படியொரு தோற்றம் உண்டானதற்காக என்னுடைய வருத்தங்களை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்’’ என்று கூறிவிட்டு, அமைதியாக சிறகுகளை விரித்தார்.

கவர்மென்ட் ரோடு...
கலெக்‌ஷனைப் போடு!
  • சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் ஒன்று, விரைவில் வெடிக்கத் தயாராக இருக்கிறது. வடபழநி ஆற்காடுசாலையில் மாபெரும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது. அதே சாலையில் ஐ.டி நிறுவனத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடத்தை மருத்துவமனை நிர்வாகம் ஒன்று விதிமுறைகளை வளைத்துக் கைப்பற்றியதுடன், சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறதாம். அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் இருப்பதையும் அச்சத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதேபோல் வடபழநி டிப்போ எதிரில் சாலையை ஆக்கிரமித்து ஒரு கட்டடம் மற்றும் பிரபலமான மால் ஒன்று என ஆற்காடு சாலையில் விதிமுறை மீறல்கள் ஏராளம் என்கிறார்கள். குறிப்பாக, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மறுக்கப்பட்ட அனுமதிகள் அத்தனையும் இப்போது கொடுக்கப்பட்டிருக் கின்றனவாம். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது சி.எம்.டி.ஏ-வில் இருக்கும் கடவுளின் பெயர்கொண்ட அதிகாரி என்று கை நீட்டுகிறார்கள் ஏரியாவாசிகள்!

  • சென்னை தி.நகரில் ரங்கநாதன் சாலையிலும் அதேரீதியில் ஏகத்துக்கும் வசூல் தொடங்கியிருக்கிறது. கரடுமுரடாக இருக்கும் சாலையைச் சீரமைத்துத் தருவதாகச் சொல்லி, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி ஒருவர் கடைக்கு ஐந்து லட்சம் ரூபாய் கட்டிங் வசூலித்துக் கொண்டிருக்கிறாராம். இதுவரை 40 லட்சம் ரூபாய் வசூலான நிலையில், ‘இது போதாது. பிளாட்பாரத்தில் கடை வைத்திருப்பவர்களிடமும் வசூல் செய்யுங்க’ என்று அடிபொடிகளை ஏவியிருப்பதால், வியாபாரிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism