அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: இப்போது கட்சிப்பதவி பறிப்பு... அடுத்தது அமைச்சர் பதவி?

எடப்பாடி பழனிசாமி - ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - ராஜேந்திர பாலாஜி

எடப்பாடியிடமே எகிறிய பாலாஜி...

‘மாலை 4.30 மணிக்கு, ‘ஜூம் கிளவுட் மீட்டிங் ஆப்’ வழியாகச் சந்திக்கிறேன்’ என, கழுகாரிடமிருந்து மெசேஜ். சொன்னது போலவே சரியான நேரத்தில் திரையில் தோன்றிய கழுகாரிடம், ‘‘சட்டமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்கள்... தி.மு.க கேட்டவுடன் ஒப்புக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை நாள்கள் கழித்து ஒப்புக்கொண்டாரா எடப்பாடி?’’ என்று கேட்டோம்.

‘‘ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைய வேண்டும். உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், கூட்டத்தொடரை மார்ச் 31-ம் தேதி வரை இழுத்துவிடலாம் என நினைத்தது ஆளும் தரப்பு. அதனால்தான் ஸ்டாலின் வலியுறுத்தியும் இறங்கி வரவில்லை முதல்வர்.”

‘‘பிறகு எப்படி இப்படி முடிவு?’’

கட்சிப் பதவி நீக்க அறிவிப்பு
கட்சிப் பதவி நீக்க அறிவிப்பு

‘‘சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் மார்ச் 22-ம் தேதி மீண்டும் அறிக்கை வெளியிட்டார். அப்போது சட்டமன்ற அலுவலகத் தரப்பிலிருந்து 23-ம் தேதியன்று முன்மொழிவு தீர்மானம் கொண்டுவந்து சட்டமன்றம் ஒத்திவைக்கப்படும் என்கிற தகவல் தி.மு.க-வுக்கு எட்டியது. அதனால், தி.மு.க கொறடா சக்கரபாணி மூலம் `சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டால் போதும்’ என்று முதலில் தகவல் கூறப்பட்டிருக்கிறது. 23-ம் தேதி காலை வழக்கம்போல் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்படும் மானியக் கோரிக்கை குறித்த புத்தகம் வழங்கப்பட்டதும், சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பில்லை எனப் புரிந்துகொண்டு, சட்ட மன்றத்துக்குச் சென்ற தி.மு.க உறுப்பினர்களுக்கு ‘கூட்டத்தொடரைப் புறக்கணியுங்கள்’ என்று தலைமையிடமிருந்து உத்தரவு பறந்தது.’’

‘‘ஓ... அதற்குப் பிறகுதான் ஒத்திவைக்கப் பட்டதோ?’’

‘‘ஆமாம்... தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்த பிறகு, அவசரமாக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தினார். முக்கியத் துறைகளான காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை நிறைவேறாமல் இருக்கிறது. ‘எதிர்க்கட்சிகள் இல்லாமல் நிறைவேற்றுவது சரியாக வராது. எனவே, கூட்டத்தொடரை ஒத்திவைக்கலாம்’ என்று சபாநாயகர் சொல்ல, நீண்ட யோசனைக்குப் பிறகே அதற்கு ஓகே சொல்லியிருக்கிறார் முதல்வர்.’’

‘‘கொரோனா விஷயத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறதாம் இந்த அரசு?’’

‘‘அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து மேல்நடவடிக்கை எடுக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. பாதிப்புக் குள்ளான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு தனிக்குழுக்களை அமைக்கவும் பரிசீலனை நடக்கிறது.’’

‘‘சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த கையுடன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கிறார்களே?’’

எடப்பாடி பழனிசாமி - ராஜேந்திர பாலாஜி
எடப்பாடி பழனிசாமி - ராஜேந்திர பாலாஜி

‘‘ராஜேந்திர பாலாஜி நீக்கப்படலாம், நிறையவே வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். அமைச்சராக இருந்துகொண்டு மதரீதியான கருத்தை ட்விட்டரில் பகிர்ந்ததும், முதல்வர் எடப்பாடி ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டாராம். அதன் பிறகே எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து ‘இனியும் இவரை விட்டுவைக்கக் கூடாது’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர் என்கிறார்கள்.’’

‘‘கட்சிப் பதவியை மட்டும் உடனே பறித்து விட்டார்களோ?’’

‘‘கொரேனா வைரஸ் தாக்குதலுக்கு, ‘இந்து மத நம்பிக்கைகளைப் புறந்தள்ளி அவற்றைக் கேலி செய்ததுதான் காரணம்’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த சில மணி நேரத்தில், முதல்வரிடமிருந்து அவருக்கு போன் போயிருக் கிறது. `என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், அந்தப் பதிவை நீக்கிவிட்டு அதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடுங்கள்’ என்று முதல்வர் சொன்னாராம்.’’

‘‘ம்!’’

‘‘ஆனால் பாலாஜி, ‘அதெல்லாம் வருத்தம் தெரிவிக்க முடியாது. பதிவையும் நீக்க முடியாது’ என்று எடப்பாடியிடமே எகிறினாராம். ‘நீக்காவிட்டால் உங்களைப் பதவியிலிருந்து நீக்கி விடுவோம்’ என்று முதல்வர் நேரடியாகவே சொல்ல, அதற்கும் விவாதம் செய்தாராம் பாலாஜி. அவர் பேசிக்கொண்டிருந்தபோதே இணைப்பைத் துண்டித்துவிட்டாராம் முதல்வர்.’’

‘‘கட்சிப் பதவியைப் பறித்ததற்கு பாலாஜியின் ரியாக்‌ஷன் என்ன?’’

‘‘டெல்லியில் சில பா.ஜ.க புள்ளிகளை தொடர்புகொண்டு பேசினாராம். இந்தத் தகவலும் முதல்வர் காதுக்குச் சென்றிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர் பதவிப் பறிப்பை இப்போது நிறுத்தி வைத்துள்ளனர் என்கிறார்கள். அது தெரிந்துதான் மார்ச் 23-ம் தேதி சட்டசபைக்கு வரவில்லை யாம் பாலாஜி.’’

‘‘ட்விட்டர் பதிவு மட்டும்தான் பதவிப் பறிப்புக்குக் காரணமா?’’

‘‘சில நாட்களுக்கு முன்பு பத்திரிகை நிருபர் ஒருவர், ராஜேந்திர பாலாஜி ஆட்களால் தாக்கப்பட்டார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்போதே பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் திட்டமிட்டாராம். சட்டமன்றம் தொடங்கி விட்டதால் அமைதியாக இருந்துள்ளார். இப்போது ட்விட்டரை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார் என்கின்றனர்.’’

‘‘கொரோனா பீதி ஒருபுறம் என்றால், ஆட்சியாளர்கள் பெயரைச் சொல்லி வசூல் மழை மறுபுறம் நடந்துள்ளதுபோலவே?’’

‘‘உண்மைதான்... முதல்வருக்கு வேண்டிய சேலத்துப் பிரமுகர் ஒருவரும், கடந்த ஆட்சியில் சர்ச்சையில் சிக்கிய வடமாவட்ட அமைச்சர் ஒருவரும் சமீபநாள்களாக முக்கிய ஐ.ஏ.எஸ்,

ஐ.பி.எஸ் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கின்றனர். ‘சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அதிகாரிகள் மாற்றம் நடக்கும். அப்படி மாற்றம் நடக்கும்போது உங்களுக்கு வேண்டிய பசையான துறையை வாங்கித் தருகிறோம்’ என உறுதிகொடுத்து பல லகரங்களை வாங்கிக் குவித்திருக்கின்றனர். இந்த விவகாரத்தை முதல்வர் காதில் அமைச்சர் ஒருவர் போட்டு விட்டாராம். கொரோனாவைவிட முதல்வருக்கு இந்த வசூல் விவகாரம் உஷ்ணத்தை ஏற்படுத்தி யிருக்கிறதாம்.’’

‘‘அதிரடிக்குத் தயாராகிவிட்டாரோ எடப்பாடி?’’

‘‘அது கொரோனோ விவகாரம் முடிந்த பிறகுதான் தெரியும். ஆனால், கட்சியில் பல மாற்றங்களைச் செய்யவிருக்கிறாராம். புதிய ஆலோசனை டீமும் எடப்பாடிக்குத் தயாராகி விட்டது.’’

‘‘பிரதமர் அழைப்புவிடுத்திருந்த சுய ஊரடங்குக்கு தமிழகத்தில் நல்ல ஆதரவு கிடைத்து விட்டதோ?’’

‘‘நல்ல விஷயமென்றால் யார் சொன்னாலும் தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக, சிறப்பான ஆதரவு இருந்தது. இத்தாலிபோல் விபரீதமாகிவிடக் கூடாது என்றுதான் கட்டுப்பாடுகளை படிப்படியாகக் கொண்டுவரும்பொருட்டு சுய ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்புவிடுத்திருந்தார். அதற்கு ஏதுவாக போக்குவரத்துகள் அனைத்தும் அன்றைய தினம் ரத்துசெய்யப்பட்டிருந்தன. சென்னை மாநகர் மட்டுமன்றி தமிழகம் முழுவதுமே மக்கள் நடமாட்டம் இன்றியே காட்சியளித்தது. ஊரடங்கை மக்கள் சரியாக உள்வாங்கியிருந்தனர். ஆனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள்தான் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். ‘தொழிலாளர்கள், தாங்கள் இருக்கும் இடங்களிலேயே இருங்கள்’ என பிறகு பிரதமர் மோடி ட்வீட் செய்யும் அளவுக்கு விஷயம் தீவிரமானது.’’

சுய ஊரடங்கன்று மாலையில்  ராமேஸ்வரத்தில் கைதட்டிய பக்தர்கள்
சுய ஊரடங்கன்று மாலையில் ராமேஸ்வரத்தில் கைதட்டிய பக்தர்கள்

‘‘பாவம்.. பலருடைய பிழைப்புதான் பரிதாபமாகிவிட்டது!’’

‘‘ஆமாம்... ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர், சிறு வியாபாரிகளுக்கு வருமான பாதிப்பு இருப்பதை யும் உணர முடிந்தது. பொருளாதார உதவிகளையும் அரசு அறிவித்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது.’’

‘‘மார்ச் 24 மாலை 6 மணியிலிருந்து மார்ச் 31 வரை தமிழகத்தில் ஊரடங்கை அறிவித்திருக் கிறார்களே... என்னவாகும்?’’

‘‘இந்த அறிவிப்பு மக்களை கொஞ்சம் பீதியில்தான் ஆழ்த்தியிருக்கிறது. தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லாவிட்டால் நிறைய சிக்கல் களை அரசும் மக்களும் சந்திக்க வேண்டியிருக்கும்!’’ என்ற கழுகார், ‘‘நீரும் ஜாக்கிரதையாக இரும்!’’ என்று சொல்லிவிட்டு திரையை அணைத்தார்.