Published:Updated:

மிஸ்டர் கழுகு: இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! - ஜெயக்குமாரிடம் பன்னீர் காட்டம்...

ஜெயக்குமார், பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், பன்னீர்செல்வம்

மம்தாவையும் இந்த விழாவுக்கு அழைக்கலாம் என்றுதான் தி.மு.க நினைத்தது. ஆனால், ராகுல் வருகையால் அந்த முடிவைத் தவிர்த்துவிட்டார்கள். தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை

மிஸ்டர் கழுகு: இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! - ஜெயக்குமாரிடம் பன்னீர் காட்டம்...

மம்தாவையும் இந்த விழாவுக்கு அழைக்கலாம் என்றுதான் தி.மு.க நினைத்தது. ஆனால், ராகுல் வருகையால் அந்த முடிவைத் தவிர்த்துவிட்டார்கள். தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை

Published:Updated:
ஜெயக்குமார், பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், பன்னீர்செல்வம்

பை நிறைய புத்தகங்களுடன் என்ட்ரி கொடுத்த கழுகார், “புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இன்றுதான் நேரம் கிடைத்தது. அப்படியே முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கும் சென்றுவிட்டுவருகிறேன்” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார்...

“ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு முதலில், ‘அனைவரும் வருக’ என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி, பினராயி விஜயன் வருகை உறுதியானதும் பிப்ரவரி 28 அன்று பார்வையாளர்கள் வருகையைத் தடுத்து, முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் எதிர்க்கட்சி ஆளுமைகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ‘டெல்லி’க்கு எதிராக அரசியல் அனல் பறக்கும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ராகுல் காந்தி மட்டுமே, ‘எந்த மாநிலத்தையும் பிரதமர் புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவைத் தீர்மானிக்க நீங்கள் யார்?’ என்று பிரதமருக்கு எதிராகப் பேசினார். மற்றவர்கள் அனைவரும் ஸ்டாலினுக்குப் புகழாரம் சூட்டிய நிலையில், உமர் அப்துல்லா, ‘மக்களின் ஒப்புதலின்றி ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது. ஆளுநர், தமிழகத்தை மூன்றாகப் பிரித்தால் ஏற்க முடியுமா?’ என்று கோபத்தைக் கக்கினார். ஸ்டாலினும் ‘மாநிலங்களுக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்று வலியுறுத்தியதைத் தவிர பெரிதாக எதுவும் அட்டாக் செய்யவில்லை!”

“ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும்வரை வார்த்தைகள் அடக்கியே வாசிக்கப்படும்... விழாவில் வேறு எதுவும் தகவல்கள் உண்டா?”

மிஸ்டர் கழுகு: இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! - ஜெயக்குமாரிடம் பன்னீர் காட்டம்...

“ம்ம்... மம்தாவையும் இந்த விழாவுக்கு அழைக்கலாம் என்றுதான் தி.மு.க நினைத்தது. ஆனால், ராகுல் வருகையால் அந்த முடிவைத் தவிர்த்துவிட்டார்கள். தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; உதயநிதிக்கும் அவருக்கும் இடையே உரசல்கள் இருந்ததாகப் பேசப்பட்ட நிலையில், கனிமொழியை மேடையேற்றி கெளரவித்திருக்கிறது கட்சித் தலைமை. பதிலுக்கு கனிமொழியும் மேடையில், ‘நீட் தேர்வுக்கு எதிராக ஒலிக்கும் உதயநிதியின் குரல் நெஞ்சுக்கு நீதியாக ஒலிக்கிறது’ என்று நட்புக்கரங்களை நீட்ட... கீழே அமர்ந்திருந்த உறவுகள் முகத்தில் அத்தனை பூரிப்பு. சமீபகாலமாக வெளியே தலைகாட்டாமல் இருந்த மல்லிகா மாறன் நிகழ்வில் கலந்துகொண்டதும் ஓர் ஆச்சர்யம் என்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது மற்றோர் ஆச்சர்யம்!”

“மேயர் பதவியை முன்னிட்டு நடக்கும் உள் அரசியலில் அனல் பறக்கிறதே!”

“சென்னை மாநகராட்சி மேயர் ரேஸில் இருந்தவர் கவிதா நாராயணன். 17-வது வார்டில் போட்டியிட்ட இவர், அ.தி.மு.க வேட்பாளரிடம் தோற்றதோடு, அங்கே மூன்றாவது இடத்துக்கே வர முடிந்தது. இந்தத் தோல்விக்கு தி.மு.க-வின் சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம்தான் காரணம் என்று கவிதாவின் கணவர் புழல் நாராயணன் கட்சித் தலைமையிடம் புகார் வாசித்திருக்கிறார். ‘அமைச்சர் சேகர் பாபுவின் விசுவாசிதான் இந்த புழல் நாராயணன். மேயர் பொறுப்புக்கு கவிதா வந்துவிட்டால், லோக்கலில் தங்கள் அதிகாரம் சேகர் பாபுவிடம் பறிபோய்விடும் என்று சுதர்சனம் நினைத்திருக்கிறார். அதனாலேயே கவிதா போட்டியிட்ட வார்டில் தி.மு.க வட்டச் செயலாளர் உட்பட யாரையும் தேர்தல் பணியாற்ற சுதர்சனம் விடவில்லை’ என்கிறது கவிதா தரப்பு!”

“கோவையிலும் இதேபோல பிரச்னை ஆகியிருக்கிறதே?”

“ஆமாம். அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே பிரச்னை வெடித்திருக்கிறது. மேடையிலேயே மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக்கை, ‘என் வளர்ச்சியைத் தடுத்த முதல் ஆள் கார்த்திக்தான்’ என்று கழக மகளிரணி நிர்வாகி மீனா ஜெயக்குமார் வெடிக்க... கூட்டத்தில் காரசாரமாகிவிட்டது. செந்தில் பாலாஜிதான், ‘உங்கள் பிரச்னையை எழுதித் தாருங்கள். தலைமையிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’ என்று சமாதானப்படுத்தினார். மேயர் கனவு பறிபோனதால் ஆத்திரத்திலிருக்கும் மீனா தரப்பினர், கார்த்திக் மனைவி இலக்குமி இளஞ்செல்விக்கு மேயர் பதவி தரக் கூடாது என்று பொங்குகிறார்கள். உண்மையில், மீனாவுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என முடிவெடுத்ததே செந்தில் பாலாஜிதானாம். இது தெரியாமல் அவர் கார்த்திக்கிடம் எகிறியிருக்கிறார் என்கிறார்கள் கோவை உடன்பிறப்புகள்.”

“ஒருவழியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்துவிட்டாரே அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்..?”

“பிப்ரவரி 28 அன்று ஜெயக்குமார் கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திலும் பன்னீருக்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள். எடப்பாடியுடன், தான் இணக்கமாக இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே அவர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லையாம். அதேசமயம், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்கிற தொண்டர்களின் அதிருப்தி தன்மீது திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே சிறைக்குச் சென்று, ஜெயக்குமாரைச் சந்தித்து அரை மணி நேரம் பேசியிருக்கிறார் பன்னீர்.”

“அவ்வளவு நேரம் அப்படி என்னதான் பேசினார்களாம்?”

“ஆரம்பத்தில் ஜெயக்குமாரிடம் நலம் விசாரித்தவர், பிறகு கண்டிப்பு காட்டியிருக்கிறார்... ‘முன்னாள் அமைச்சராகவும் சபாநாயகராகவும் பதவிகளை அலங்கரித்தவர் நீங்கள். உங்களுக்கு இது தேவையில்லாத வேலை. கள்ள ஓட்டுப் போட்டால் அதைக் கட்சிக்காரனை வைத்துத் தடுத்திருக்க வேண்டும்... இல்லையென்றால் போலீஸில் புகார் அளித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, சட்டையைக் கழற்றச் சொல்லி, கைகளைக் கட்டிவைத்து, அவனோடு நீங்கள் நடந்து வந்ததெல்லாம் பார்க்க நன்றாகவா இருந்தது... இனி மக்கள் எப்படி உங்களை மரியாதையாகப் பார்ப்பார்கள்?’ என்று கடிந்துகொண்டாராம். ஜெயக்குமாரும், ‘கட்சிக்காரங்க கூப்பிட்டாங்களேனு உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பண்ணிட்டேன்’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகே ‘கட்சி உங்களுடன் இருக்கும். எதற்கும் கலங்க வேண்டாம்’ என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் பன்னீர்.”

“ஜெயக்குமாருக்கு ஆறுதல் கிடைத்தது இருக்கட்டும்... ஜாமீன் கிடைக்குமா?”

மிஸ்டர் கழுகு: இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! - ஜெயக்குமாரிடம் பன்னீர் காட்டம்...

“வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது... இப்போதைக்கு கடல்லயே இல்லையாம் ஜாமீன். ஏற்கெனவே இருக்கும் வழக்குகள் போதாதென்று தொழிற்சாலையை அபகரித்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் மார்ச் 11-ம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோது மீன்வளத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்த விவரங்களையும் தோண்டச் சொல்லியிருக்கிறது ஆளும் தரப்பு. இதில் சிக்கும்பட்சத்தில் மேலும் சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு இன்னும் சில நாள்கள் சிறையிலேயே இருக்க நேரிடும் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் மீன்வளத்துறையில் அப்போது பொறுப்பிலிருந்த சில அதிகாரிகளும் சிக்கக்கூடும்.”

“விருதுநகர் பக்கம் புலம்பல் சத்தம் கேட்கிறதே?”

“உமக்கும் கேட்டுவிட்டதா! ஜெயக்குமாருக்காக விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திலேயே ‘உள் ஆர்ப்பாட்டம்’ செய்திருக்கிறார் பாலாஜி. ‘நான் அரெஸ்ட் ஆனப்ப, அதைக் கண்டிச்சு பன்னீர், எடப்பாடி ஒரு அறிக்கைகூட விடலை. ஜெயில்ல இருந்து வெளியே வந்தப்பவும் கட்சித் தலைமை வந்து பார்க்கலை. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை சிவகாசியில ஆரம்பிச்சப்பதான் எடப்பாடி வந்து ஆறுதல் சொன்னார். ஆனா, இப்போ ஜெயக்குமார் கைதைக் கண்டிச்சு மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துறது என்ன நியாயம்? அதுவும் பாருங்க... இங்கே என் தலைமையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்த வெச்சுட்டாங்க... எல்லாம் என் தலையெழுத்து’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் பாலாஜி” என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியைக் கொடுத்தோம். ருசித்துப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

“அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்துவருகிறது... யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. எடப்பாடி, பன்னீர், சசிகலா என்று முக்கோண வியூகத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் தொண்டர்கள். இவ்வளவு களேபரத்துக்கும் இடையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘கட்சித் தலைமை முடிவெடுத்தால் ஒற்றைத் தலைமையின்கீழ் இயங்குவதை ஏற்க, தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்’ என்று நூல்விட்டிருக்கிறார். எடப்பாடிக்கு ஆதரவாகவே அவர் இப்படிப் பேசினார் என்கிறார்கள். அடுத்தடுத்த நாள்களில் இந்த மோதல் வலுக்கக்கூடும்... உமது நிருபரை உன்னிப்பாக ஃபாலோ செய்யச் சொல்லும்.”

“அப்படியே ஆகட்டும் கழுகார் அவர்களே... வேறு எதுவும் தகவல் இருக்கிறதா?”

“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இனி தமிழகம் வரும்போது அவரைச் சந்திக்க விரும்புபவர்களின் பட்டியலை மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து முன் அனுமதி வாங்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்திருக்கிறதாம். நிர்மலா சீதாராமனைச் சந்திக்க நேரம் வாங்கித் தருவதாகச் சொல்லி பா.ஜ.க-வினர் சிலர் தொழிலதிபர்களிடம் பணம் கறந்திருக்கிறார்கள். இதையடுத்தே இப்படியோர் உத்தரவு வந்திருக்கிறது!” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் சிலருக்கு உதவிவருவதாக அந்தத் துறையின் ஐ.பி.எஸ் அதிகாரிக்குத் தகவல் வந்திருக்கிறது. அநேகமாக ஒரு டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்!

* அதிகாலையில் வங்கக் கடலோரம் வாக்கிங் செல்லும் அந்த முன்னாள் உளவுப்பிரிவு காவல் அதிகாரியுடன் இடையில் இணைந்துகொள்கிறார் தாமரைப் பிரமுகர். கமலாலயத்துக்கு கணிசமான தகவல்கள் பாஸாவது இப்படித்தானாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism