Published:Updated:

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்... விடிய விடிய தூங்காத அமைச்சர்கள்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

மார்ச் 18 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படலாம் என்கிறார்கள். பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மும்முரமாக ஆய்வு செய்துவருகிறார் முதல்வர்.

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்... விடிய விடிய தூங்காத அமைச்சர்கள்!

மார்ச் 18 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படலாம் என்கிறார்கள். பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மும்முரமாக ஆய்வு செய்துவருகிறார் முதல்வர்.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள் பட்டியலோடு நுழைந்தார் கழுகார்... ‘‘எதிர்பார்க்கப்பட்டவர்களின் பெயர்களே பெரும்பாலான இடங்களில் இருக்கின்றன. சில இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் குறித்து உட்கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்துள்ளது. மார்ச் 4-ம் தேதி மேயர்கள், துணை மேயர்கள், நகர மன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்த நாள்களில் இந்த விவகாரம் கட்சிக்குள் களேபரத்தை உருவாக்கலாம்” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘விஷயம் தெரியுமா! சிவராத்திரி அன்று மூன்று அமைச்சர்கள் தூங்கவே இல்லை. மார்ச் 1-ம் தேதி இரவு முக்கிய இடங்களைக் குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டு வரப்போவதாக தி.மு.க வட்டாரங்களில் செய்தி கசிந்திருக்கிறது. இதையடுத்து, மூத்த அமைச்சர், பவர்ஃபுல் அமைச்சர், இனிஷியல் அமைச்சர் ஆகியோர் கடும் பதற்றமடைந்து விடிய விடிய தூங்கவே இல்லை. விடிந்த பிறகுதான் எம்-சாண்ட், ஜல்லி உற்பத்தியாளர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை களமிறங்கியிருப்பது தெரிந்து மூன்று அமைச்சர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி தூங்கச் சென்றிருக்கிறார்கள். தன் துணைவியாரிடம் அந்த மூத்த அமைச்சர், ‘நீயும் எத்தனையோ சிவராத்திரிக்கு என்னை கண்விழிக்கச் சொல்லியிருக்கே. நான் கேட்டதில்லை... ஆனா, இப்ப பாரு ஐ.டி-காரங்க என்னை கண்விழிக்கவெச்சுட்டாங்க’ என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கமென்ட் அடித்திருக்கிறார்.”

ஏ.வி.சாரதி
ஏ.வி.சாரதி

“இந்த ரணகளத்திலும் நகைச்சுவைக்குக் குறைவில்லை... ரெய்டு பின்னணி என்னவாம்?”

“ஆற்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி.சாரதி வீட்டில்தான் ரெய்டு நடந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் நெருக்கமாக இருந்த இவர், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்து, அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியுடன் நெருக்கம் காட்டிவருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் பலருக்கும் ஸ்வீட் பாக்ஸ் சப்ளை செய்ததே இவர்தான் என்கிறார்கள். தற்போது நடந்துள்ள சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒன்றரைக் கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஜல்லி உற்பத்தியாளர்கள் சிலர் செயற்கையான ஜல்லி பற்றாக்குறையை ஏற்படுத்துவதால், நெடுஞ்சாலைப் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் புகார் அளித்திருக்கிறார்கள். இதையொட்டியே இந்த ரெய்டு நடந்திருக்கிறது. இதுமட்டுமல்ல... சென்னையில் க்ரஷர் குவாரித் தொழிலில் கோலோச்சும் இரண்டு புள்ளிகளையும் வருமான வரித்துறை குறிவைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவர்கள் நடத்தும் குவாரிகளுக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைப் பாதை வரைபடத்தையே மாற்ற வைத்துள்ளார்கள். இப்போதும் ஆளும் தரப்பை சரிக்கட்டி குவாரி தொழிலில் கோடிகளைக் குவித்துவரும் இந்த இரட்டையர்களும் விரைவில் விசாரணை வளையத்தில் சிக்குவார்கள் என்கிறது ஐ.டி தரப்பு!”

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்... விடிய விடிய தூங்காத அமைச்சர்கள்!

‘‘ம்க்கும்... கடந்த காலங்களில் ஐ.டி நடத்திய ரெய்டுகளெல்லாம் என்னவாகின என்றே தெரியவில்லை. நல்ல டிராமா... அதிருக்கட்டும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியனுக்கும் சேகர் பாபுவுக்கும் இடையே மோதல் முற்றுகிறதாமே?’’

‘‘ஆமாம்... சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுவைக் கொண்டுவர வேண்டும் என்று மா.சுப்பிரமணியன் காய்நகர்த்தியிருக்கிறார். இதை முறியடித்து, முரசொலி செல்வம் வழியாக மா.சுப்பிரமணியனின் எதிர்த் தரப்பான சைதாப்பேட்டை மகேஷை, துணை மேயர் பதவிக்குக் கொண்டுவந்துவிட்டார் சேகர் பாபு. அதேபோல், சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் தேர்வுமே சேகர் பாபு சாய்ஸ்தானாம். இதையடுத்து, சென்னையை கன்ட்ரோல் எடுப்பது யார் என்பதில் இருவருக்கும் இடையே பனிப்போர் உச்சத்தில் செல்கிறது!”

‘‘சரிதான்...’’

‘‘இதுவும் சென்னை விவகாரம்தான்... ஈ.சி.ஆரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை முடித்துக்கொடுத்ததில் கணிசமான தொகை சென்னை அமைச்சர் ஒருவருக்குக் கைமாறியிருக்கிறது. விவகாரத்தை முடித்துக் கொடுத்ததோடு, ‘இதைத் தலைமைக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான் கமிஷனோடு விட்டுவிட்டேன். அங்கு விஷயம் தெரிந்தால், மொத்தமும் போய்விடும்’ என அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார் அமைச்சர்!’’

ஆ.ராசா
ஆ.ராசா
சிவசங்கர்
சிவசங்கர்

‘‘பெரம்பலூர் பக்கம் என்ன சத்தம்?”

‘‘அமைச்சர் சிவசங்கருக்கும், எம்.பி ஆ.ராசாவுக்கும் மோதல் பொறி பறக்கிறது. அந்த மாவட்டத்தின் அமைச்சராக சிவசங்கர் இருந்தாலும், அவரை பெரம்பலூரில் நடக்கும் கட்சி நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என்று தன் ஆதரவாளர்களிடம் ராசா வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறாராம். இதனாலேயே முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்காக உள்ளூரில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் சிவசங்கரின் புகைப்படமே இடம்பெறவில்லை என்கிறார்கள்’’ என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். டீயைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டிய அண்ணாமலை, ‘சிறப்பாகச் செயல்படாத மாவட்டத் தலைவர்கள் நீக்கப்படுவார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 24 இடங்களில் நாம் வெற்றிபெற வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அப்போது நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு, ‘ஒரு சட்டமன்றத் தொகுதிக்கே தி.மு.க தரப்பு 10 கோடி ரூபாயை வாரி இறைக்கும்... நாம் என்ன செய்வது?’ என்று கேட்க... ‘பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று கண்ணசைத்தாராம் அண்ணாமலை. கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்தபோதும், அவருடன் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார் அண்ணாமலை. அ.தி.மு.க-வில் நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம் நிர்மலா.’’

மா.சுப்பிரமணியன், சேகர்பாபு
மா.சுப்பிரமணியன், சேகர்பாபு

“மாஜி அமைச்சரின் மீதான பிடியைத் தளர்த்த முடிவு செய்திருக்கிறதாமே ஆளும் தரப்பு?’’

‘‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தைத்தானே சொல்கிறீர்... மார்ச் 3 அன்று மாலை நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம். இதற்கிடையே அவர்மீது குண்டாஸ் போடவேண்டும் என்று சென்னை அமைச்சர் தரப்பிலிருந்து அழுத்தம் வந்திருக்கிறது. அரசுத் தரப்பிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்த நேரத்தில், உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலமாக அ.தி.மு.க-வின் ஒருசில தலைவர்கள் ஆளும் தரப்பின் முக்கிய வி.ஐ.பி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால், ஜெயக்குமார் விவகாரத்தில் ஆளும் தரப்பின் பிடி தளரலாம் என்கிறார்கள்.’’

“நல்ல அரசியல்... பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி தகவல் உண்டா?’’

‘‘மார்ச் 18 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படலாம் என்கிறார்கள். பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மும்முரமாக ஆய்வு செய்துவருகிறார் முதல்வர். அமைச்சரவைக் கூட்டம், அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கவிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு துறையிலும் தி.மு.க அரசு வந்த பிறகு அறிவித்த திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்கிற விவரங்களையெல்லாம் நேரடியாக அதிகாரிகளிடமே கேட்கவிருக்கிறார். சில துறைகளின் செயல்பாடுகளில் முதல்வருக்கு திருப்தியில்லை என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிக்கல் எழலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்’’ என்ற கழுகார்,

‘‘தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த குளறுபடிகளை ஆராய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்துள்ளது அரசு. விசாரணையின் இறுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவருக்குத் துணையாக இருந்த அதிகாரிகள்மீது வழக்கு தொடரப்படலாம்” என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* ‘இயந்திரம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கும் மானியத்தில் 10 சதவிகிதத்தை வளர்ச்சி நிதியாக வழங்க வேண்டும்’ என்று தொழில் நிறுவனங்களிடம் ‘தாமாக’ முன்வந்து கறாராகச் சொல்லிவிட்டாராம் அன்பானவர். முன்பு மூன்று சதவிகிதம் மட்டுமே கமிஷன் சென்றுகொண்டிருந்தது என்று சுட்டிக்காட்டியும், கமிஷன் தொகையைக் குறைக்க மறுத்துவிட்டாராம்!

* டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி அட்டைப் பெட்டிகளை எடுக்கும் டெண்டர் முன்பு மாவட்டவாரியாக வழங்கப்பட்டது. இப்போது இதை மண்டலவாரியாக மாற்றி, சென்னை மண்டலத்தை ‘அக்கட’ பூமியின் ஏழுமலையான் பிரமுகருக்குக் கொடுத்திருக்கிறார்கள். சென்னை மண்டலத்தில் மொத்தம் 946 கடைகள் இருக்கும் நிலையில், டெண்டரை உள் ஏலத்துக்குவிட்டு கடை ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் என மாதத்துக்கு சுமார் 28 லட்சம் ரூபாய் கல்லாகட்டுகிறார் ஏழுமலையான் பிரமுகர். இது பற்றிக் கேள்வி கேட்டால், துறை உச்சத்தைக் கைகாட்டுகிறாராம் அவர்.