Published:Updated:

மிஸ்டர் கழுகு: வாய்ப்பூட்டு போடும் முதல்வர் அலுவலகம்... கொந்தளிக்கும் இளம் ஐ.பி.எஸ்-கள்

தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
பிரீமியம் ஸ்டோரி
தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதிக்கீடு செய்ததற்குள் படாத பாடாகிவிட்டதாம்.

மிஸ்டர் கழுகு: வாய்ப்பூட்டு போடும் முதல்வர் அலுவலகம்... கொந்தளிக்கும் இளம் ஐ.பி.எஸ்-கள்

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதிக்கீடு செய்ததற்குள் படாத பாடாகிவிட்டதாம்.

Published:Updated:
தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
பிரீமியம் ஸ்டோரி
தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

“அந்தச் சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் புகார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறதே!” பரபரப்புடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். நறுக்கிய பப்பாளிகளைக் கழுகாரிடம் நீட்டிவிட்டு, “சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்யக் கோரி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியிடம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் நேரில் முறையிட்டிருக்கிறார்களே...” என்றோம். ஆமோதித்தபடி பப்பாளிகளை விழுங்கியவர், “இந்த விவகாரத்தில் ஒரு எஸ்.பி-யின் பெயர் திட்டமிட்டே விடுபட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது” என்றபடிச் செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி மீதான விசாரணை, சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தன் மாமனாரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டும் தொனியில் பேசியதைப் பற்றி அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தன் புகாரில் குறிப்பிட்டிருந்தும், அந்த அதிகாரியின் பெயரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கில் சேர்க்கவில்லையாம். இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.”

“ஓஹோ... ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த புகாரிலேயே இவ்வளவு தகிடுதத்தம் செய்கிறதா காவல்துறை?”

“ஆமாம். இது குறித்து காவல்துறை வாட்ஸ்அப் குரூப்களில் கடும் கண்டனங்களையும் பதிந்துவருகிறார்கள் அதிகாரிகள். மறைக்கப்பட்ட அந்த அதிகாரி, எஸ்.பி ரேங்க்கில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றுகிறார். அவர்தான், பெண் ஐ.பி.எஸ்-ஸின் மாமனாருக்கே போன் செய்து, ‘சிறப்பு டி.ஜி.பி செய்தது தவறுதான். அதற்காக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் ரெடி. சிக்கலைப் பெரிதாக்காதீர்கள்...’ என்று மிரட்டலாகக் கூறியிருக்கிறார். இதில், டென்ஷனான மாமனார், உடனே போன் தொடர்பைத் துண்டித்திருக்கிறார். போன் செய்த அதிகாரியின் கால் ஹிஸ்டரியை ஓர் ஆதாரமாகப் புகாரில் இணைத்திருக்கிறார் பெண் ஐ.பி.எஸ். ஆனாலும், எஃப்.ஐ.ஆரில் இந்த அதிகாரியின் பெயரைச் சேர்க்காமல் போனதற்கு முதல்வர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவரின் அழுத்தம்தான் காரணமாம்.”

“சரிதான்... இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மிரட்டுவதாகச் சொல்கிறார்களே?”

“சரியாகச் சொன்னீர். ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில், இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், ‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்று பதிவிட்டிருக்கிறார். அந்தக் கருத்தை மற்ற அதிகாரிகளெல்லாம் ஆமோதித்திருக்கிறார்கள். சில மணித் துளிகளிலேயே கருத்து பதிவிட்ட அதிகாரிகளின் லைனில் வந்த முதல்வர் அலுவலகத்தின் முக்கியமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ‘இது மாதிரி தேவையற்ற பதிவுகளைப் போட்டுக்கிட்டிருந்தா உங்க மேல கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று மிரட்டினாராம். வாய்ப்பூட்டு போடப்பட்டதால், இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகளெல்லாம் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.”

“ஆதங்கத்தை வெளிப்படுத்தக்கூட வாய்ப்பில்லாத நிலைதான் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கே என்றால்... என்னத்தைச் சொல்வது? சரி, தி.மு.க கூட்டணிப் பஞ்சாயத்துகள் ஓய்ந்துவிட்டனவா?”

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்

“அது அவ்வளவு சீக்கிரமாக ஓய்ந்துவிடுமா என்ன... தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதிக்கீடு செய்ததற்குள் படாத பாடாகிவிட்டதாம். மார்ச் 4-ம் தேதி வரை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்யவில்லை. கடைசியாக 30 தொகுதிகள் என்றால் ஓ.கே சொல்லாம் என்கிற மூடில் இருந்திருக்கிறது சத்தியமூர்த்திபவன். ஆனால் தி.மு.க தரப்பில், ‘25 தொகுதிகள் வரை ஒதுக்கலாம். அதற்கும் ஒத்துவரவில்லையென்றால் 27 தொகுதிகளை கொடுக்கலாம்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அப்படியும் டீல் படியவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே, ‘தேசியக் கட்சிகளாக இருப்பதால், குறிப்பிட்ட மாநிலங்களில் கணிசமான அளவு எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும். அதனால் எங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதியைத் தாருங்கள்’ என்று நெருக்குதல் கொடுக்கிறார்களாம். விழிபிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.”

குளிர்ச்சியான இளநீர்ப் பாயசத்தைக் கழுகாரிடம் நீட்டியபடி “அ.தி.மு.க கூட்டணியில் என்ன நடக்கிறது?” என்றோம்.

ரசித்துக் குடித்தவர், தொடர்ந்தார்... “மார்ச் 3-ம் தேதி இரவு வரை பா.ஜ.க-வுடன் சிக்கல் நீடித்தது. ஆனால், அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தவுடன் அ.தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. ‘பா.ஜ.க-வைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம்’ என்று திடகாத்திரமாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. 21 தொகுதிகளை பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிட்டு, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையும் அவர்கள் வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறது அ.தி.மு.க தரப்பு. பா.ஜ.க பேச்சுவார்த்தை இழுபறியாகக் காரணமே, அந்தக் கட்சியின் தரப்பில் செய்த தவறுகள்தான் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.”

“அப்படியென்ன தவறு செய்து விட்டார்களாம்?”

“அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்துவது அண்ணாமலைதானாம். அவர் அரசியல் களத்துக்கே புதியவர். கட்சியின் சீனியர்களான முருகன், பொன்னார் போன்றோர் அண்ணாமலையைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களாம். அண்ணாமலை தொகுதியின் எண்ணிக்கையை மட்டும் முதலில் பேசியிருந்தால் முடிவு எட்டப்பட்டிருக்குமாம். ஆனால், இவர் தொகுதியின் எண்ணிக்கையோடு இந்தந்த தொகுதிகள் வேண்டும் என்றும் கறார் காட்டியிருக்கிறார். ‘சீட் எண்ணிக்கையைத் தாண்டி, நாம் வலுவாக இருக்கும் தொகுதிகளையும் வாய்கூசாமல் கேட்கிறார்களே’ என்று அ.தி.மு.க தலைமை கடுமையாகக் கொந்தளித்திருக்கிறது. இது இப்படி இருக்க, மற்றொருபுறம் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்திருக்கிறார்கள்.”

“ஓஹோ... கூட்டணிப் பேச்சுவார்த்தை தலைசுற்றிவிடும் போலவே?”

“உண்மையிலேயே இந்தக் களேபரத்தால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைசுற்றி மயக்கமடைந்துவிட்டாராம். மார்ச் 2-ம் தேதி, காலையிலிருந்து மதியம் வரை தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், மாலையிலும் தொடர்ந்து நேர்காணலை நடத்தியிருக்கிறார். இரவு 10 மணிக்கு மேல்தான் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு உதயநிதி தேர்தலில் நிற்கும் விவகாரம் குறித்த பேச்சு, வீட்டில் உள்ளவர்களுடன் சச்சரவாகியிருக்கிறது. ஒருகட்டத்தில் சச்சரவு விவகாரமானவுடன், டென்ஷனில் ஸ்டாலின் திடீரென மயங்கிச் சாய்ந்துவிட்டாராம்.”

துரைமுருகன் - அண்ணாமலை
துரைமுருகன் - அண்ணாமலை

“ஐயய்யோ!”

“அருகில் நின்ற துர்கா பதறிக்கொண்டு ஸ்டாலினை எழுப்ப, சலனமில்லாமல் இருந்திருக்கிறார் ஸ்டாலின். பதறியடித்துக்கொண்டு மருத்துவருக்கு போன் செய்திருக்கிறார்கள். நள்ளிரவு நேரத்தில் செனடாப் சாலை பரபரப்பாகியிருக்கிறது. சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த மருத்துவர், உடனடியாக முதலுதவி செய்து மயக்கத்திலிருந்த ஸ்டாலினை இயல்புநிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார். ‘உயர் ரத்த அழுத்தம்தான் காரணம். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க’ என்று மருத்துவர் அட்வைஸ் செய்தும், மறுதினம் நேர்காணலுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின். ஆனால், நேரம் செல்லச் செல்ல சோர்வு ஆட்கொண்டதால், சீக்கிரமாக நேர்காணலை முடிக்கச் சொல்லிவிட்டாராம்.”

“ஓ... அதனால்தான் அடுத்த நாளிலிருந்து, இருபது இருபது பேரிடமாக நேர்காணல் நடத்தினார்களோ?”

“ஆமாம். அவர்களிடம் சொல்லி வைத்ததுபோல் மூன்று கேள்விகள் ஒரே மாதிரியாகக் கேட்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை மறக்காமல் அனைவரிடமும் கேட்டிருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் தொகுதிக்கான நேர்காணலில் கலந்துகொண்ட ஒருவர், ‘தலைவரே நான் 25 கோடி வரை செலவு செய்வேன்’ என்று தடலாடியாகச் சொல்ல, ‘ஏன்யா அந்த மாவட்டமே வறட்சி மாவட்டம். நீ மட்டும் எப்படிய்யா வளமா இருக்க?’ என்று கிண்டலடித்திருக்கிறார் துரைமுருகன்.”

“நக்கலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. சரி... அ.தி.மு.க நேர்காணல்கள் எப்படி நடந்தன?”

‘மாரத்தான்’ பாணியில் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஒரு பேட்சுக்கு ஆறு மாவட்டத்தினர் வீதம் ஒட்டுமொத்தமாக 100-120 பேரிடம் ஒரே நேரத்தில் மெகா நேர்காணலாக நடத்தியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நேர்காணலில் பங்கேற்ற யாரிடமும் கேள்வியே கேட்கப்படவில்லை. தலைவர்கள் உரை நிகழ்த்த, அதைக் கேட்டுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள் விருப்ப மனு கொடுத்தவர்கள். மார்ச் 8-ம் தேதிக்குள் அனைத்து சீட் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என எல்லாவற்றையும் முடித்துவிட்டு பிரசாரம் செல்லத் தயாராகிறது அ.தி.மு.க” என்றபடி சிறகுகளைப் படபடத்த கழுகார்,

“அரசியலிலிருந்து சசிகலா ஒதுங்கிவிட்டதைத் தொடர்ந்து, அ.ம.மு.க மூத்த நிர்வாகிகளை வளைக்க வலைவிரித்திருக்கிறது அ.தி.மு.க. உசிலம்பட்டி மகேந்திரன், மானாமதுரை மாரியப்பன் கென்னடி, திருவையாறு கார்த்திகேயன் போன்று பலமான நபர்களைத் தேர்தலுக்குள்ளாக அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவர ஆட்களை நியமித்திருக்கிறார்களாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism