Published:Updated:

மிஸ்டர் கழுகு: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் அறிக்கை! - சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்குமா?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஸ்டாலினின் புத்தக வெளியீட்டுவிழாவில் உதயநிதிக்கு கனிமொழி புகழாரம் சூட்டினாலும், இளைஞரணியில் பெண்களைச் சேர்க்கும் விவகாரத்தில் அவரது மனக்காயம் ஆறவில்லை என்கிறார்கள்

மிஸ்டர் கழுகு: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் அறிக்கை! - சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்குமா?

ஸ்டாலினின் புத்தக வெளியீட்டுவிழாவில் உதயநிதிக்கு கனிமொழி புகழாரம் சூட்டினாலும், இளைஞரணியில் பெண்களைச் சேர்க்கும் விவகாரத்தில் அவரது மனக்காயம் ஆறவில்லை என்கிறார்கள்

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“தி.மு.க-வுக்குள் நடந்துவரும் களேபரங்களை கவனித்தீரா?” என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “ம்ம்ம்... கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனாலும் அதைக் கழுகார் சொல்லக் கேட்பதுதானே சிறப்பு” என்றோம். “ஏற்கெனவே ஜலதோஷம்... இதில் நீர் வேறு ஐஸ் வைக்கிறீர்” என்று சிரித்தபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றும் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாத அளவுக்கு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் தி.மு.க-வினர் போட்டியிட்டு வெற்றிபெற்ற விவகாரத்தில் வி.சி.க., சி.பி.எம் ஆகிய கட்சிகள் உடனடியாக ரியாக்‌ஷன் காட்டவே, ‘மாற்றுவழியில் வென்ற தி.மு.க-வினர் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு, என்னை வந்து சந்திக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட நகராட்சிகளில் சிலர் பதவி விலகிவிட்டாலும், பலரும் தங்களது மொபைல் போனை ஆஃப் செய்துவிட்டு கமுக்கமாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக நெல்லிக்குப்பம் நகராட்சியில் தன் மனைவி ராஜினாமா செய்ய மாட்டார் என்று அவரின் கணவர் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகக் கூறியது கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தேசிய அளவில் தன்னை ஆளுமையாக முன்னிறுத்திகொள்ளும் ஸ்டாலினை உள்ளூர் கட்சி நிர்வாகிகளே மதிக்காதது, அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சட்டச் சிக்கலுக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் அறிக்கை! - சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்குமா?

“ஒரு மாநிலத்தின் முதல்வர் சட்டச் சிக்கல்களை அறியாமலா அறிக்கைவிட்டிருப்பார்?”

“அப்படித்தான் சொல்கிறார்கள். கட்சியைவிட்டு நீக்கப்படும் ஒரு நகராட்சித் தலைவரோ, துணைத் தலைவரோ சிலரது பின்னணியில் ஸ்டாலினின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில், ‘கட்சித் தலைவருக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ராஜினாமா செய்யச் சொல்ல அதிகாரம் இல்லை’ என்று வழக்கு போட்டால் அது மேலும் ஸ்டாலினுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். கருணாநிதி இருந்தால் இப்படியெல்லாம் அறிக்கை அரசியல் செய்யாமல், சத்தமில்லாமல் ஒரே நாளில் அத்தனை பேரையும் ராஜினாமா செய்யவைத்திருப்பார். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு ஸ்டாலின் தலைவலியை ஏற்படுத்திக்கொண்டார் என்கிறார்கள்.”

“என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அது சரி... தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழியின் வேகம் கூடும்போல?”

“ஸ்டாலினின் புத்தக வெளியீட்டுவிழாவில் உதயநிதிக்கு கனிமொழி புகழாரம் சூட்டினாலும், இளைஞரணியில் பெண்களைச் சேர்க்கும் விவகாரத்தில் அவரது மனக்காயம் ஆறவில்லை என்கிறார்கள். இது தனக்கான செக் என்பதைப் புரிந்துகொண்ட கனிமொழி, அதற்கு எதிர்வினையாற்றத் தயாராகிவிட்டார். சினிமா ஷூட்டிங்கில் உதயநிதி பிஸியாக இருப்பதால் இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த மாட்டார் என்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாவட்டம்தோறும் பயணித்து உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை நடத்த கனிமொழி திட்டமிட்டிருக்கிறார். வாரிசுகளின் மோதல் எங்கு சென்று முடியுமோ என்பது தெரியவில்லை.”

“எத்தனை தலைவலிகளைத்தான் தாங்குவார் ஸ்டாலின்! தாம்பரம் பகுதியில் சலசலப்பு அதிகரித்திருக்கிறதே... கவனித்தீரா?”

மிஸ்டர் கழுகு: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் அறிக்கை! - சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்குமா?

“ஆமாம், தாம்பரம் மேயர் தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் என்று காட்டுவதற்காக தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா, மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசனுக்கு எதிராகக் காய்நகர்த்துகிறார். தாம்பரம் மேயராக வசந்தகுமாரி தேர்வுசெய்யப்பட்டதும், ராஜா அவரை தா.மோ.அன்பரசனிடம் அழைத்துச் சென்று ஆசி வாங்க வைத்திருக்கிறார். ஆனால், முதல்வரிடம் மேயரை அழைத்துச் சென்றபோது தா.மோ-வைத் தவிர்த்துவிட்டு, இவர் மட்டுமே சென்றிருக்கிறார். ஆனால், ‘மாவட்டச் செயலாளர் இல்லாமல் முதல்வரைச் சந்திக்க முடியாது’ என்று முதல்வர் அலுவலகத்தில் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இன்னொரு பக்கம் சிட்லபாக்கத்தில் இருக்கும் தனது எம்.எல்.ஏ அலுவலகத்தைத் தவிர்த்துவிட்டு, தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் மேயர் அறையைத்தான் ராஜா பயன்படுத்திவந்தார். இப்போது மேயர் பதவியேற்றதும், அந்த அறையை காலிசெய்து கொடுக்காமல் வேறு அறையை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். பின்னாளில் இது பிரச்னையாக எழலாம்.”

“வேலூர் பக்கமும் பிரச்னை என்கிறார்களே?”

“தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கும், வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமாருக்கும் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்குத் தன் ஆதரவாளர் புஷ்பலதாவைப் பரிந்துரைத்திருந்தார் கதிர் ஆனந்த். ஆனால் நந்தகுமாரும், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனும் மாநகர மகளிரணி அமைப்பாளர் சுஜாதாவைப் பரிந்துரைத்திருந்தார்கள். ‘புஷ்பலதா துரைமுருகன் சார்ந்த சமூகம் என்பதால் பொதுச் செயலாளர் அவரை ஆதரிக்கக் கூடாது’ என்று நந்தகுமார் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க... துரைமுருகனும் அதை ஏற்றுக்கொண்டு சுஜாதாவை மேயராக்கிவிட்டார். இதனால், முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்ட கதிர் ஆனந்த்திடம் துரைமுருகன், ‘வேலூரில் மெஜாரிட்டியாக இருப்பது மேயர் சுஜாதாவின் சமூகத்தினர்தான். நாளை நீயே மீண்டும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டால் அந்தச் சமூகத்தினரின் ஓட்டுகள்தான் கைகொடுக்கும். யாருக்காகவோ உனது எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று மகனுக்கு அரசியல் பாடம் எடுத்திருக்கிறார் துரைமுருகன்” என்ற கழுகாருக்கு சூடாக வெங்காய பஜ்ஜியைக் கொடுத்தோம். ருசித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

“அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சிக்கல் நெருங்குகிறது. ஏற்கெனவே சென்னை, புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டட விவகாரத்தில் அவர் தலை உருண்டது... இப்போது தேனியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்து, கனிமக் கொள்ளை நடந்த விவகாரத்தில் சிலர் அளித்துள்ள வாக்குமூலத்தை வைத்து பன்னீர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு செக் வைக்கப்படலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘2021 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான சொத்து விவரங்களை மறைத்து, பொய்யான தகவல்களைத் தெரிவித்து போட்டியிட்டார்’ என்று பன்னீர் மீது தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து தப்பிக்கவே இப்போது அரசியல் நாடகம் ஆடுகிறார் பன்னீர் என்கிறார்கள். கொசுறு தகவல்... இதையும் தெரிந்துகொள்ளுங்கள். கோவை மாவட்டம், வெள்ளலூர் மறைமுகத் தேர்தலில் நடந்த தள்ளுமுள்ளுவில் சிக்கி வேலுமணி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது... கையில் கட்டோடு வலம்வருகிறார் வேலுமணி.”

“ஏற்கெனவே கேஸ் கட்டுகள் வேறு... எத்தனை கட்டுகளைத்தான் சுமப்பார் வேலுமணி! முதல் வரின் துபாய் பயணம் பற்றிய தகவல் உண்டா?”

மிஸ்டர் கழுகு: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் அறிக்கை! - சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்குமா?

“ம்ம்ம்... முதல்வர் துபாய் செல்லும் முன்னதாக வரும் மார்ச் 23 அன்று உதயநிதியும் சபரீசனும் துபாய் செல்கிறார்கள். ஏற்கெனவே, சபரீசனுக்கு நெருக்கமான சிலர் துபாய் சென்று அங்குள்ள முதலீட்டாளர்களுடன் பேசிவருகிறார்கள். தி.மு.க அயலக அணி நிர்வாகிகள் தனியாகவும், மீரான் என்ற நபர் தனியாகவும், அரசுத்துறை அதிகாரிகள் தனியாகவும் முதலீட்டாளர்களிடம் பேசிவருகிறார்கள். இப்படிப் பலமுனை பேச்சு வார்த்தைகள் நடப்பதால் முதலீட்டாளர்கள் குழப்பமடைந்திருக்கிறார்களாம். எனினும், துபாயின் பிரபலமான பன்னாட்டு நிறுவனம் ஒன்று சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை அமைக்கும் வகையில் ஓர் ஒப்பந்தமும், தமிழகத்திலுள்ள இரு நிறுவனங்கள் துபாயில் தொழில் தொடங்கும் வகையில் ஓர் ஒப்பந்தமும் முதல்வரின் துபாய் விசிட்டில் கையெழுத்தாகும் என்கிறார்கள்.”

“ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடங்கிவிட்டதே?”

“மார்ச் 7-ம் தேதி தொடங்கிய முதல் நாள் விசாரணையில் வாக்குமூலம் அளித்த அரசு மருத்துவர் பாபு மனோகர், ‘2016 தேர்தலுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தது. பிறர் துணையின்றி நடக்க முடியவில்லை. பதவியேற்புக்கு முந்தைய நாள் பரிசோதித்து சில மருந்துகளைக் கொடுத்ததோடு, ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தினேன்’ என்று கூறியிருக்கிறார். இந்த வாரம் மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு, அடுத்த வாரம் முதல் அரசியல்வாதிகளை விசாரணைக்கு அழைக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதலில் பன்னீருக்கும், அடுத்து எடப்பாடிக்கும் சம்மன் அனுப்ப ஆணையம் தயாராகிவருகிறது. இந்தமுறை பன்னீர் டிமிக்கி கொடுக்க முடியாது!” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னை பெசன்ட் நகரில் சர்வதேசத் தரத்திலான பள்ளி ஒன்றை இலவசமாகக் கட்டித்தர பிரபல தொழிலதிபர் ஒருவர் முன்வந்திருக்கிறார். இதற்கான அனுமதியைப் பெறுவதற்கு ‘யோக’மான வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை அணுகியபோது அவர் ‘கோட்’ செய்த தொகையைக் கேட்டு கடுப்பான தொழிலதிபர் தரப்பு, விவகாரத்தை முதல்வர் அலுவலகத்துக்குக் கொண்டுசென்றுள்ளது. அதிகாரியோ, ‘அவர்னு தெரியாம கேட்டுட்டேன்’ என்று புலம்புகிறாராம்!

* கடந்த வாரம் சசிகலா டூரில் இருந்தபோது அவரைச் சந்திக்கத் தயாராக இருந்தாராம் தென் மாவட்ட மாஜி அமைச்சர். ஆனால், தம்பியை நீக்கிய தகவல் மாஜிக்குக் கிடைத்ததுமே நமக்கேன் வம்பு என்று வீட்டுக்குள் முடங்கிவிட்டாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism