Published:Updated:

மிஸ்டர் கழுகு: காய்நகர்த்தும் டெல்லி... கலக்கத்தில் எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

சசிகலா கட்சிக்குள் வந்தால் தனக்கான பிடிமானம் போய்விடும்... அதே நேரம், எடப்பாடியைக் கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா என்ற ஆயுதம் தேவை என்று இத்தனை நாள்கள் நினைத்திருந்தார்.

மிஸ்டர் கழுகு: காய்நகர்த்தும் டெல்லி... கலக்கத்தில் எடப்பாடி!

சசிகலா கட்சிக்குள் வந்தால் தனக்கான பிடிமானம் போய்விடும்... அதே நேரம், எடப்பாடியைக் கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா என்ற ஆயுதம் தேவை என்று இத்தனை நாள்கள் நினைத்திருந்தார்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

‘‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கவனித்தீரா? பஞ்சாப்பைத் தவிர, நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் கரைந்துகொண்டே இருக்கிறது’’ என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்தோம். அதை பருகியபடியே, ‘‘அ.தி.மு.க-வில் சசிகலா விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயாது போலிருக்கிறது’’ என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘மகளிர் தினத்தன்று அ.தி.மு.க-வின் இரட்டை தலைவர்களும் மகளிரணியினருக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்த காட்சிகள் உமக்குத் தெரிந்திருக்கும். வெளியே கொண்டாட்டமாகக் காட்டிக்கொண்டாலும், அன்றைய தினம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குள் நடந்த விவாதங்களில் அனல் பறந்திருக்கிறது. சசிகலா விவகாரத்தில் டெல்லி தலைமை வேறு மாதிரி கணக்கு போடுகிறது என்பதை எடப்பாடி அன்றுதான் உடைத்துச் சொல்லியிருக்கிறார். தேனியில் சசிகலாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் போட்ட மறுதினமே எடப்பாடியை சேலத்திலுள்ள அவரது வீட்டுக்கே சென்று பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்திருக் கிறார். அப்போது எடப்பாடியிடம் அவர், ‘டெல்லி தலைமையும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தி யுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பலமாக இருந்தால் மட்டுமே நமது கூட்டணிக்கு நல்லது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போதே சசிகலாவையும், அ.ம.மு.க-வையும் கட்சியில் இணைக்கச் சொன்னது டெல்லி. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனதே தி.மு.க ஆட்சிக்கு வர காரணமாகி விட்டது. அதேநிலை வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடாது’ என்று டெல்லி மேலிடம் சொன்னதாக தகவல்களை பாஸ் செய்ய... ஆடிப்போயிருக்கிறது எடப்பாடி தரப்பு!’’

மிஸ்டர் கழுகு: காய்நகர்த்தும் டெல்லி... கலக்கத்தில் எடப்பாடி!

‘‘இந்த விஷயம் தெரிந்துதான் சசிகலா தைரியமாகச் சுற்றுப்பயணம் சென்றாரா?’’

‘‘ஆமாம். சசிகலா தரப்புக்கு இந்த தகவல்கள் எல்லாம் சென்ற பிறகே தென்மாவட்டச் சுற்றுப்பயணத்துக்கு கிளம்பியிருக்கிறார். அதோடு ஓ.ராஜாவிடம் சொல்லி ‘பத்து நாள்களில் சசிகலா வசம் அ.தி.மு.க வரும்’ என்று பேச வைத்திருக்கிறார்கள். ஆனாலும், சசிகலாவை உள்ளே கொண்டு வரக் கூடாது என்று எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவருகிறாராம்.’’

‘‘அவரது பிடிவாதம் தெரிந்த விஷயம்தானே... பன்னீர் என்ன நினைக்கிறார்?’’

‘‘சசிகலா கட்சிக்குள் வந்தால் தனக்கான பிடிமானம் போய்விடும்... அதே நேரம், எடப்பாடியைக் கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா என்ற ஆயுதம் தேவை என்று இத்தனை நாள்கள் நினைத்திருந்தார். ஆனால், இப்போது டெல்லியின் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருப்பதால், ‘நான் நேரடியாக சசிகலாவை எதிர்த்தால், தென் மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது. நீங்கள் எதிர்ப்புக் குரல் கொடுங்கள்... நான் மறைமுகமாக ஆதரிக்கிறேன்’ என்று எடப்பாடியிடம் நழுவலாக சொல்லி யிருக்கிறார். சசிகலா விவகாரத்தில் எப்போதும் எதிர்ப்புக்குரலைப் பதிவுசெய்து வந்த வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும் சில நாள்களாக சசிகலாவுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், அமைதி காப்பதன் பின்னணியே, டெல்லியின் இந்த நிலைப்பாடுதான் காரணம் என்கிறார்கள். அதனாலேயே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் சென்னையில் முகாமிட்டு தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் ஆலோசித்திருக்கிறார்.’’

மிஸ்டர் கழுகு: காய்நகர்த்தும் டெல்லி... கலக்கத்தில் எடப்பாடி!

‘‘அ.தி.மு.க புராணம் போதும்... வேறு ஏதேனும் செய்திகள் இருக்கின்றனவா?”

“முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு மார்ச் 10 தொடங்கி மார்ச் 12 வரை நடக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் முதல்வரின் முகம் இறுக்கமாக இருந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சியினர் தி.மு.க ஆட்சிமீது சட்டம் ஒழுங்கு பிரச்னையை கிளப்பிவருகிறார்கள்; ஆளுநரிடமும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்கள். இதையொட்டி இந்தக் கூட்டத்தில், ‘சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று அதிகாரிகளிடம் சீறியிருக்கிறார். அதோடு, ‘கட்டப்பஞ்சாயத்து, வசூல் என எந்தக் கட்சியினர் அராஜகம் செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள்’ என்றும் உத்தர விட்டிருக்கிறார்!”

‘‘ஒருவேளை தன் கட்சியினரை மனதில் வைத்து சொல்லியிருப்பாரோ... என்னவோ!”

‘‘ம்ம்க்கும்... உமக்கு நக்கல் அதிகம்தான் போங்கள்... நீங்கள் சொன்னதுபோல மார்ச் 18-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவித்திருக்கிறார்கள். முதல்வருக்கு துபாய் பயணத்திட்டம் இருப்பதால், இந்தக் கூட்டத் தொடரைப் பத்து நாள்களுக்குள் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார்கள். மானியக் கோரிக்கையை அடுத்த மாதம் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் முதல்வர் தரப்பில் ஓடுகிறதாம்.’’

‘‘ம.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் நடத்தப் போகிறார்கள்போல... ‘தாயகம்’ பக்கம் சென்றீரா?’’

மிஸ்டர் கழுகு: காய்நகர்த்தும் டெல்லி... கலக்கத்தில் எடப்பாடி!

‘‘ம.தி.மு.க-வின் தலைமைக் கழகச் செயலாளராக ஏற்கெனவே வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரையே துணைப் பொதுச் செயலாளராக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் தடதடக்கின்றன. துணைப் பொதுச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணையும் வெளியாகியிருக்கிறது. அதில், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வைகோவின் மகன் துரை வைகோ, மாநில மகளிரணிச் செயலாளர் மருத்துவர் ரோஹையா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், துரை வைகோவை துணைப் பொதுச் செயலாளர் ஆக்குவதற் காகத்தான் இந்தத் தேர்தலே நடத்தப்படுகிறது என்கிறார்கள் ம.தி.மு.க நிர்வாகிகள்.’’

“ரிப்பங் மாளிகையிலிருந்து கரைச்சல்கள் வருகின்றனவே?”

‘‘ஆமாம்... சென்னை மாநகராட்சியில் கட்டடங்கள் கட்டும் பிரிவின் நிர்வாகப் பொறியாளர் முருகன், கடந்த 30 ஆண்டுகளாக அதே அலுவலகத்தில் ‘பசை’யாக ஒட்டிக் கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தில் மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கே மூழ்கியதைப் பார்த்து அதிர்ந்துபோன மாநகராட்சி ஆணையர், அவரை இடமாற்றம் செய்திருக்கிறார். முருகனோ, முதல்வர் அலுவலக அதிகாரிகள் சிலரைப் பிடித்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் வேறு சில விவகாரங்களில் மீண்டும் புகார் வரவே... முருகனை தென்சென்னைப் பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய ஏற்பாடுகள் நடந்திருக் கின்றன. இதையும் அறிந்துகொண்ட முருகன், ‘எல்லோரையும் கவனித்துவிட்டேன்... என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று சவால்விட்டு வருகிறாராம்” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வெற்றி வாகை சூடிக்கொடுத்த சில அமைச்சர்கள்மீதான புகார்களைத் தூசுதட்டுகிறது அமலாக்கத்துறை. தி.மு.க தேறாது என்று நினைத்திருந்த மாவட்டங்களில், கட்சிக்கொடி நாட்டிய அமைச்சர்தான் முதல் இலக்கு என்பதால் ‘ஷாக்’கில் இருக்கிறாராம் அவர்.

* தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் வட மாவட்டம் ஒன்றில் துணை இயக்குநராக இருந்த அதிகாரி ஒருவர், கடந்த ஆட்சியில் அங்கு பணியில் இருந்தபோது, மாவட்ட மாண்புமிகுவின் சகோதரருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதி அளித்திருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அந்த அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போதைய மாண்புமிகுவைச் சந்தித்து சென்னை தலைமை அலுவலகத்திலேயே பணியைப் பெற்றுவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism