Published:Updated:

மிஸ்டர் கழுகு: பன்னீர் பட்டியலில் பந்தாடிய எடப்பாடி!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைத் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறார்

மிஸ்டர் கழுகு: பன்னீர் பட்டியலில் பந்தாடிய எடப்பாடி!

அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைத் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறார்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

கற்றையாக பேப்பர்களை எடுத்துக்கொண்டு என்ட்ரி கொடுத்தார் கழுகார். “எல்லாம் கூட்டணித் தொகுதிப் பங்கீட்டுப் பேப்பர்கள். உமக்கு உதவுமே என எடுத்துவந்தேன்’’ என்றபடி டேபிளில் போட்டார். வெயிலுக்கு இதமாக இளநீரைக் கொடுத்து, “அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதுமே கட்சிக்குள் அதகளம் ஆரம்பித்துவிட்டதே?” என்றோம்.

“யாரை நிறுத்தினாலும் எதிர்ப்பு காட்டாமல் அவருக்கு வேலை செய்ய இது என்ன ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க-வா? இப்போது வந்திருக்கும் பட்டியலை கவனித்தால், தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களையெல்லாம் எடப்பாடி சத்தமில்லாமல் காலி செய்திருக்கிறார் என்பது புரியும். பன்னீர் கொடுத்த பட்டியலிலும்கூட, தனக்கு வேண்டப்படாதவர்களை நீக்கியிருக்கிறார் எடப்பாடி. கட்சியின் சீனியர்களில் ஒருவரான மைத்ரேயன், தனக்கு எப்படியும் தொகுதியை ஒதுக்கிவிடுவார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், பன்னீர் பரிந்துரை செய்தும், மைத்ரேயன் பெயரைப் பட்டியலிலிருந்து எடப்பாடி நீக்கியிருக்கிறார். அதேபோல் சேலம் மாவட்டத்தில் சீனியராக வலம் வரும், தற்போதைய எம்.எல்.ஏ செம்மலையின் மேட்டூர் தொகுதியையே பா.ம.க-வுக்கு தாரைவார்த்து ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் பலவற்றைக் கூட்டணிக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்று பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை எடப்பாடி. தன் சொந்த மாவட்டத்திலேயே ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டை காலி செய்திருக்கிறார் எடப்பாடி. எதிர்காலத்தில் தனக்கு எதிராக எந்த சக்தியும் கட்சிக்குள் உருவாகிவிடக் கூடாது என்பதை மனதில்வைத்தே வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.”

“ம்!”

“அதேசமயம், தனது விசுவாசிகள் எவ்வளவு வில்லங்கத்தில் சிக்கியிருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. தி.நகரில் மீண்டும் சத்யா நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர்மீது ஏகப்பட்ட புகார்கள் முதல்வரிடமே வந்துள்ளன. தொகுதியில் உட்கட்சிப் பூசலிலும் அவர் தலை உருளுகிறது. ஆனால், எடப்பாடிக்கு பர்சனல் உதவிகளைக் கச்சிதமாக செய்துவருகிறார் சத்யா. அதற்காகவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சிவகாசியில் நின்றால் தனக்குச் சிக்கல் வரும் என்று அஞ்சிய ராஜேந்திர பாலாஜி, எடப்பாடியிடம் பேசி ராஜபாளையத்துக்கு மாறிவிட்டார். நடிகை கௌதமிக்காக பா.ஜ.க தரப்பு கடைசிவரை ராஜபாளையத்தைக் கேட்டுப் போராடியும் எடப்பாடி விட்டுக்கொடுக்கவில்லை. இதே ராஜேந்திர பாலாஜியைக் கடந்த ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்தே காலி செய்ய நினைத்தார் எடப்பாடி. ஆனால், என்னென்னவோ செய்து எடப்பாடியின் குட்புக்கில் இடம் பெற்றார் ரா.பா. அதனால் ராஜபாளையம் கிடைத்திருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: பன்னீர் பட்டியலில் பந்தாடிய எடப்பாடி!

“அமைச்சர்களும் இந்த விஷயத்தில் விளையாடியிருப்பார்களே?”

“ஆமாம்! ஜோலார்பேட்டையில் மூன்றாவது முறையாகக் களமிறங்கும் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைத் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறார். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி தொகுதியில் செல்வாக்கில்லாத வி.ராமுவுக்கு சீட் வாங்கிக் கொடுத்தது சர்ச்சையாகியிருக்கிறது. துரைமுருகனுடனான ரகசிய ஒப்பந்தம் காரணமாகவே இப்படி ‘டம்மி’ வேட்பாளரைக் களத்தில் இறக்கியிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. வீரமணியின் விளையாட்டு அ.தி.மு.க-வுக்கு எதிராக அமையும் என்றும் புலம்பிவருகிறார்கள் அந்த மாவட்டக் கட்சியினர்!”

“தி.மு.க தரப்பில், வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன்?”

‘‘மார்ச் 10-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தி.மு.க தரப்பில் முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அன்று காலை வரை கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடையவில்லை. குறிப்பாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் தொகுதியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. இதனால் அறிவாலயம் டென்ஷனானது. காரைக்குடி, திருவாடானை, சேலம் ஆகிய மூன்று தொகுதிகள் குறித்த பஞ்சாயத்துதான் காங்கிரஸ் பட்டியலைத் தாமதமாக்கியது. இந்தப் பஞ்சாயத்து ஒருபுறம் நடக்க, வேட்பாளர்கள் தேர்விலும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பங்கள் இருந்ததால், டெல்லியிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை அனுப்பியது டெல்லி தலைமை. அவரும், ப.சிதம்பரமும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வார்களாம். இந்தநிலையில் ‘11-ம் தேதி உங்களுக்கான தொகுதிகளை இறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் 12-ம் தேதி தி.மு.க பட்டியல் வெளியிடப்படும்” என ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார். அதன் பிறகுதான் 11-ம் தேதி மாலை மீண்டும் அறிவாலயத்துக்குச் சென்ற கே.எஸ்.அழகிரி, தொகுதிகளை இறுதிசெய்தார். மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளை இறுதி செய்வதில் இறுதிவரை முரண்டு பிடித்தது. கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சம்மதிக்கச் செய்திருக்கிறார்.”

‘‘ம.தி.மு.க வேக வேகமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறதே?”

‘‘அதில் ஆச்சர்யம் ஒன்று இருக்கிறது. சாத்தூர் தொகுதியை தன் மகன் துரை வையாபுரிக்காக வைகோ கேட்டு வாங்கியதாகக் கட்சியினரே பேசிக்கொண்டனர். ஆனால், தொடர்ச்சியாக அது பற்றி விமர்சனங்கள் எழுந்ததால், கடந்த தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் ரகுராமனுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். வைகோவின் குடும்ப நண்பராம் அவர்.’’

“புதுச்சேரியிலும் புகைச்சல் அதிகமாக இருக்கிறதுபோலவே?”

“முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயத்தை முன்னிலைப்படுத்த முயன்றதாலும், தான் கேட்ட தொகுதிகளைத் தரத் தயங்கியதாலும், பா.ஜ.க-வைக் கழற்றிவிடும் முடிவுக்குத் தயாரானார் ரங்கசாமி. ஆனால், புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்று காய்நகர்த்திவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரங்கசாமியை நேரடியாகத் தொடர்புகொண்டு ‘நீங்கள்தான் முதல்வர். 16 தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியதும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரங்கசாமி. இதில் நமச்சிவாயம் அப்செட். ‘காங்கிரஸ் கட்சி எனக்குச் செய்ததைத்தான் இப்போது நீங்களும் செய்கிறீர்கள். பா.ஜ.க-வில் இணைந்து இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற முடியாது. அதனால் மண்ணாடிப்பட்டுக்குச் செல்கிறேன்’ என்று பா.ஜ.க-வின் புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் குமுறியிருக்கிறார் நமச்சிவாயம். அதற்கு ‘மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பதால், அவர்கள் கேட்கிறார்கள். அதனால் இந்தமுறை நீங்கள் வில்லியனூர் தொகுதியிலேயே நில்லுங்கள். உங்கள் வெற்றியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சுரானா வீசிய அடுத்த பவுன்சரில் நொந்துபோனார் நமச்சிவாயம். மார்ச் 9-ம் தேதி சுரானா, ரங்கசாமி, அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதிசெய்தனர். அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து தனது எதிர்ப்பைக் காட்டினார் நமச்சிவாயம்.”

“குமரியிலிருந்து குமுறல் கேட்கிறதாமே?”

“ஆமாம், இதுவும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலின் எதிரொலிதான். குமரியில் தற்போது அ.தி.மு.க-வுக்கு என எம்.எல்.ஏ-க்கள் ஒருவர்கூட இல்லை. வரக்கூடியத் தேர்தலிலாவது மக்கள் பிரதிநிதியைப் பெற வேண்டும் என குமரி மாவட்ட ர.ர-கள் விரும்பினர். சாமித்தோப்பு அய்யாவழி பாலபிராஜபதி அடிகளாரும் இம்முறை நாடார் சமூகத்தவருக்கே சீட் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி தொகுதியை அறிவித்துவிட்டு, நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளை பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிட்டது தலைமை. ‘தளவாயை மீண்டும் தோற்கடிக்காமல் விட மாட்டோம்’ என லோக்கல் கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்” என்ற கழுகார், இறுதியாக “குடும்ப கோட்டாவில் சீட் கேட்டு கொடுத்த பட்டியலை முழுமையாக நிராகரித்துவிட்ட ஸ்டாலின், ‘தனி ஒருவனாக’ இருந்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்திருக்கிறாராம். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் கிளப்பிய வைப்ரேஷனைவிட தி.மு.க வேட்பாளர் பட்டியல் கூடுதலாகக் கிளப்பும்!” என்றவாறு விடைபெற்றார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* சென்னை சென்சார் போர்டுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக தாமரைக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இருவர் வசூல் வேட்டை நடத்தியதாக டெல்லி வரை புகார் போயிருக்கிறது.

* மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் 12 சென்ட் வீதம் 42 பிளாட்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 26.2.21 அன்று இன்டர்வியூ செய்தார்கள். ஆனால், அதில் ஒரு பிளாட்டுக்குத் தனியாக 10 லட்சம் ரூபாய் கொடுத்தவர்களுக்கு அன்றைய தினமே முன் தேதியிட்டு அலாட்மென்ட் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். மதுரை சிட்கோ தொழிற்பேட்டை சங்க நிர்வாகி ஒருவர் இந்த டீலைக் கச்சிதமாக முடித்திருக்கிறார். இந்த பிளாட்களுக்கு சிட்கோ நிர்ணயித்த விலை சென்டுக்கு ரூ.1,85,000. மார்க்கெட் விலையோ ரூ.5,00,000. ‘அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கவர்னர் மாளிகைக்குப் புகார் போயிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism