அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ரூட் க்ளியர்... தி.மு.க போடும் டெல்லி கணக்கு!

துர்காவின் தங்கை ஜெயந்தியின் மகன் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
News
துர்காவின் தங்கை ஜெயந்தியின் மகன் திருமணம்

போக்குவரத்து ஆணையத்தின் துணை ஆணையர் நடராஜ் அறையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது

செல்போனில் பேசிக்கொண்டிருந்த கழுகார், நம்மைக் கண்டதும் போனை கட் செய்தார். “என்ன கழுகாரே... எங்களுக்குத் தெரியாமல் ரகசியம் பேசுகிறீராக்கும்...” என்று கிண்டலடித்தோம். “நான் ரகசியம் பேசுவது இருக்கட்டும், சசிகலாவுக்கே தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் ரகசியக் கூட்டம் போட்டிருக்கிறார்கள்!” என்றபடி உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, அன்வர் ராஜா, பெங்களூரு புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன், அஸ்பயர் சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் சென்னை ஹோட்டல் ஒன்றில் கூட்டம் போட்டிருக்கிறார்கள். இதுவரை சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்கள் உட்பட சுமார் 300 பேரை அ.தி.மு.க தலைமை நீக்கியிருக்கிறது. இவர்களில் பலரும் அரசியல் எதிர்காலமே தெரியாமல், சசிகலாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கூட்டத்தில் பேசியவர்கள், ‘அந்தம்மா பணத்தையும் எடுக்குறதில்லை... வெளிப்படையா எதையும் சொல்றதும் இல்லை... சும்மா சும்மா சுற்றுப்பயணம் போறேன்னு கிளம்பினா மட்டும் போதுமா? அந்தம்மா முதல்ல ஜமீன் நினைப்புல இருந்து இறங்கி வரணும்... ஒண்ணு, கட்சியைக் கைப்பத்தணும்... இல்லைன்னா ஒதுங்கிடணும். இதை அந்தம்மாகிட்டயே நேர்ல கேட்டுடலாம்’ என்று கூட்டத்தில் முடிவுசெய்திருக்கிறார்களாம்!”

மிஸ்டர் கழுகு: ரூட் க்ளியர்... தி.மு.க போடும் டெல்லி கணக்கு!

“நானும் அதையேதான் சொல்கிறேன்... அடுத்து சசிகலா அதிரடியாக ஏதாவது செய்தால் மட்டும் சொல்லுங்கள்... ‘போனார்... வந்தார்...’ ரீதியிலான தகவல்கள் சலித்துப்போய்விட்டன. அதிருக்கட்டும்... அ.தி.மு.க-வில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான போட்டி இப்போதே தொடங்கிவிட்டதே?”

“ஆமாம்... வரும் ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் காலியாகின்றன. இவற்றில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டு எம்.பி பதவியிடங்கள் கிடைக்கும். இவற்றில், ஒன்றை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டிருக்கிறாராம். மற்றொரு பதவிக்கு அ.தி.மு.க-வில் இப்போதே போட்டி களைகட்டுகிறது. பொன்னையன், பா.வளர்மதி, சேலம் இளங்கோவன் என லிஸ்ட் நீள்வதால், இந்த ஒற்றைப் பதவிக்கு அறிவிப்பு வெளியாகும்போது அ.தி.மு.க-வில் அடிதடிக் காட்சிகள் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் ராயப்பேட்டை வட்டாரத்தில்!”

“கோட்டைப் பக்கம் உங்கள் தலை தென்பட்டதாமே?”

“எனது வேலையே அதுதானே... கோட்டையில் பட்ஜெட் பணிகள் வேகமெடுத்துள்ளன. மற்றொருபுறம், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கான திட்டங்களை ஒரு டீம் தனியாகத் தயார் செய்துவருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை மார்ச் 24-ம் தேதியுடன் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அநேகமாக மார்ச் 26-ம் தேதி முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் இருக்கலாம். அதன் பிறகு ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் தி.மு.க கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதில் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.”

மிஸ்டர் கழுகு: ரூட் க்ளியர்... தி.மு.க போடும் டெல்லி கணக்கு!

“கடகடவென தகவல்களை ஒப்பிக்கிறீர்களே... அப்புறம்?”

“ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, ‘காங்கிரஸ் கட்சி முன்வந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் அணிசேரத் தயார்’ என்று அறிவித்துள்ளார். மம்தாவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுசேராமல் இருந்ததுதான் தி.மு.க-வுக்கு தேசிய அளவிலான கூட்டணியை ஒருங்கிணைப்பதில் பெரும் சிக்கலாக இருந்தது. இப்போது ரூட் க்ளியர் ஆகிவிட்டது என்கிறார்கள். இதையடுத்து, டெல்லி கட்சி அலுவலகத் திறப்பு விழாவைக் காரணமாக வைத்து வட இந்தியாவில் பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளை அணிதிரட்டும் வேலையைத் தி.மு.க முன்னெடுக்கப்போகிறதாம். திறப்பு விழாவில் சோனியா காந்தி, மம்தா, சரத் பவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டால், ஸ்டாலினின் இமேஜ் டெல்லியில் உயரும் என்பது தி.மு.க-வின் கணக்கு” என்றபடியே கவர் ஸ்டோரியின் அட்டைப்படத்தை உற்றுப் பார்த்த கழுகாரிடம், “உம்மிடமும் அது தொடர்பான தகவல்கள் இருக்குமே...” என்று கேட்டோம்.

“ஆமாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-கள் மாநாட்டுக்குப் பிறகு தலைமைச் செயலாளரிடம் சில அதிகாரிகள் தங்களுக்கு வேறு துறையை மாற்றிக்கொடுக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சுகாதாரத்துறையில் இடம்பிடிப்பதற்கு ‘விஜய’மான அதிகாரி ஒருவர் காய்நகர்த்தி வருகிறாராம். இவையெல்லாம் முதல்வர் காதுக்கும் சென்றிருக்கின்றன. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் மாற்றப்படலாம். அதேபோல ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றமும் பெரிய அளவில் இருக்கலாம். குறிப்பாக 12 மாவட்டங்களின் எஸ்.பி-க்களை மாற்றுவதற்கான ஃபைல்கள் தயாராக இருக்கின்றன.”

“எழிலகத்தில் நடந்த ரெய்டில் எக்ஸ்க்ளூசிவ் ஏதேனும் இருக்கிறதா?”

“போக்குவரத்து ஆணையத்தின் துணை ஆணையர் நடராஜ் அறையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. போக்குவரத்து ஆணையர் அலுவலக உதவியாளர்களின் பதவி உயர்வுக்கு லஞ்சம் பெறுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு ரெய்டு நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. ஆனால், இதன் பின்னணியே வேறு என்கிறார்கள். வாகனங்களுக்கு அளிக்கப்படும் ஃபேன்சி நம்பர் விவகாரத்தையொட்டியே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாம். கடந்த ஆட்சியில் ஃபேன்சி நம்பர் விற்பனை, ஆளும் தரப்பு வி.ஐ.பி-க்களின் பரிந்துரையின் அடிப்படையில் நடந்தது. ஆனால், தற்போது ஃபேன்சி நம்பர் விற்பனை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதால், டிமாண்டும் பலமடங்கு எகிறிவிட்டது. அதோடு ஃபேன்சி நம்பருக்கு, துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் கையெழுத்தும் அவசியம். இதில்தான் ஏதோ நடந்திருக்கிறதாம். அமைச்சர் தரப்புக்கு நெருக்கமான மூன்றெழுத்து உறவு நபர்தான் இந்த விவகாரத்தில் புகுந்து விளையாடிவிட்டார் என்கிறார்கள் போக்குவரத்துத்துறையின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்!”

“காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் கலகம் தெரியுமா?”

“அந்தக் கட்சியில் கலகம் இல்லாவிட்டால்தானே ஆச்சர்யம்... கார்த்தி சிதம்பரம் ட்வீட் போட்டது பற்றி டெல்லி வரை புகார் சென்றுள்ளது. டெல்லி தலைமையும் அவர்மீது கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடக்கும் முன்பாக கட்சி எம்.பி-க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்திலும் கார்த்தி சிதம்பரம் கலந்துகொள்ளவில்லை. இன்னொரு பக்கம் தமிழக காங்கிரஸ் எம்.பி-க்கள் சிலர் டெல்லியில் ராகுல் காந்தியிடம் ‘நீங்கள் அடுத்த முறை தமிழகத்தில் போட்டியிடுங்கள். தமிழகம்தான் தற்போது பா.ஜ.க-வுக்கு எதிரான வலுவான களமாக உள்ளது’ என்று பீடிகையைப் போட்டிருக்கிறார்கள். அதன்படி மத்திய மாவட்டத்திலுள்ள இரண்டு தொகுதிகளையும் ராகுலுக்குக் குறித்துக் கொடுத்திருக்கிறார்களாம்!”

“ம்ம்க்கும்... ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதை இங்கு சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அமைச்சர் நேருவின் தம்பி, ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியிருக்கிறதே?”

“ராமஜெயம் கொலை செய்யப்பட்டு வரும் மார்ச் 29-ம் தேதியோடு பத்தாண்டுகள் நிறைவடையப் போகின்றன. அதற்குள் இந்த வழக்கில் சிறு முன்னேற்றத்தையாவது கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் புது டீம் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. ‘காலையில் வாக்கிங் செல்லும்போது ராமஜெயம் கடிகாரம் கட்டும் பழக்கம்கொண்டவரா, கைலியுடன்தான் செல்வாரா, போஸ்ட்மார்ட்டத்தை ஏன் வீடியோ எடுக்கவில்லை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் மும்முரமாகியிருக்கிறார்கள்” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். டீயைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: ரூட் க்ளியர்... தி.மு.க போடும் டெல்லி கணக்கு!

“துர்காவின் தங்கை ஜெயந்தியின் மகன் திருமணம் அறிவாலயத்தில் நடந்தது. விழாவில் பேசிய துரைமுருகன், ‘உதயநிதி என்னிடம், என்ன மாமா... என்னை நடிகர் உதயநிதி என்று சொல்கிறீர்கள்? என்று கேட்பார்... அதற்கு உங்களைத் தலைவர் உதயநிதியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள்தான் மாதம் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் சொல்வேன்’ என்று தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் சொல்லியிருக்கிறார். இதைவைத்து, ‘நாளைக்கு இன்பநிதி வந்தாலும் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வேன்’ என்று மனிதர் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கமென்ட் அடிக்கிறார்கள் உடன்பிறப்புகள் சிலர்!” என்ற கழுகார்... “பா.ஜ.க-வில் சமீபத்தில் கலைக்கப்பட்ட எட்டு மாவட்டங்களிலும் புதிய தலைவர் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்புகளைக் கைப்பற்றுவதற்காக கமலாயத்தை நிர்வாகிகள் பலரும் முற்றுகையிடத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தென் மாவட்ட தலைமறைவு பிரபலம், நெல்லை மாவட்ட பிரதிநிதி ஒருவர் மூலமாக பா.ஜ.க-வில் இணைவதற்குத் தூது அனுப்பியிருக்கிறார். டெல்லியிலிருந்து இன்னும் சிக்னல் வரவில்லை. ஒருவேளை கிரீன் சிக்னல் வந்தால் உடனடியாக பா.ஜ.க-வில் இணைந்துவிடுவார் என்கிறார்கள்.

* தமிழகத்தின் பிரபல நடிகரை ஹைதராபாத்தில் வைத்து பிரசாந்த் கிஷோர் சந்தித்திருக்கிறார். அந்த நடிகர் அரசியலுக்கு வருவது பற்றிச் சில அறிவுரைகளைக் கூறவே இந்தச் சந்திப்பாம்!

* சமீபத்தில் சிறை சென்று மீண்ட அ.தி.மு.க பிரமுகர், தன் வாய்த்துடுக்கால் மீண்டும் சிக்கலைச் சந்திக்கவிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பெண் விவகாரம் ஒன்றைத் தோண்டித் துருவிவருகிறது ஆளும் தரப்பு. சென்னை ஆர்.ஏ.புரம் நட்சத்திர விடுதியில் இவர் நடத்திய சில டீலிங் விவகாரங்களும் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.