Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஷாக் ட்ரீட்மென்ட்! - அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்...

முதல்வர் ஸ்டாலின்...
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் ஸ்டாலின்...

கடந்த மாதம் வரை பி.ஜி.ஆர் குழுமத்தின் ஷேர் மதிப்பு அறுபது ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.

மிஸ்டர் கழுகு: ஷாக் ட்ரீட்மென்ட்! - அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்...

கடந்த மாதம் வரை பி.ஜி.ஆர் குழுமத்தின் ஷேர் மதிப்பு அறுபது ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்...
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் ஸ்டாலின்...

‘‘நான் சொன்னபடியே ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது... கவனித்தீரா?’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘நீர் சொன்னது என்றைக்குத் தவறியிருக்கிறது... பாலியல் புகாரில் சிக்கிய ஐ.ஜி முருகனுக்கு மட்டும் பதவி உயர்வு கொடுக்கப்படவில்லை. மற்றபடி அவரது பேட்ச்சில் இருக்கும் ஆறு பேருக்கும் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது’’ என்றபடியே அவருக்கு சூடான பாதாம் பாலைக் கொடுத்தோம். பாலை அருந்தியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘மின்சாரத்துறையில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருப்பது ஆளும் தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நஷ்டத்தில் இயங்கிவரும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு தமிழக மின்சாரத்துறையில் 4,472 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான ஆணையை மார்ச் 10-ம் தேதி வழங்கினார்கள். இந்த நிறுவனம் முந்தைய தி.முக ஆட்சியில் மின்வாரியத்தில் கோலோச்சிய நிறுவனம் என்கிறார்கள். நிறுவன தரப்பும், ஊர்ப் பெயரை அடைமொழியாகக்கொண்ட அப்போதைய மூத்த அமைச்சர் ஒருவரும் உறவுக்காரர் என்பதால், அந்த நிறுவனத்துக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, நிறுவனத்தின் செயல்பாடுகள் சுருங்கிவிட்டன. ஒருகட்டத்தில் அந்த நிறுவனத்தை மின்சார வாரியமே பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டது. அந்த நிறுவனம்தான் தற்போது, மின்வாரியத்தில் 442 கோடி ரூபாய் வைப்புத்தொகையைச் செலுத்தி, இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை எடுத்துள்ளது என்கிறார் அண்ணாமலை. அதோடு ‘தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை எதற்காகக் கொடுத்தார்கள்? இதற்குப் பின்னால் கோபாலபுரம் குடும்பம் உள்ளது’ என்று அண்ணாமலை கூறியதுதான் முதல்வரைக் கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் மாண்புமிகு ஒருவரும், மேலிடத்து உறவினர் ஒருவரும் முதலீடு செய்திருப்பது தனிக்கதை!”

மிஸ்டர் கழுகு: ஷாக் ட்ரீட்மென்ட்! - அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்...

‘‘ஷாக் ட்ரீட்மென்ட் என்று சொல்லும்!”

‘‘கடந்த மாதம் வரை பி.ஜி.ஆர் குழுமத்தின் ஷேர் மதிப்பு அறுபது ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பெறப்பட்ட பிறகு ஒரே நாளில் ஷேரின் மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. இந்த உயர்வுக்கு முன்பாக அந்த நிறுவனத்தின் ஷேரில் சிலர் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். ஷேர் மதிப்பு உயரப்போகிறது என்பதை அறிந்தே இந்த முதலீடும் நடந்துள்ளது. இதையெல்லாம் ஷேர் விவகாரங்களைக் கண்காணிக்கும் செபி அமைப்பு, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகுதான் அண்ணாமலை இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். முதலீடு செய்தவர்கள் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், விரைவில் விவகாரம் வெடிக்கலாம் என்கிறார்கள்.’’

‘‘தமிழக ஆளுநரும் டென்ஷனில் வெடித்திருக்கிறார் என்கிறார்களே...”

‘‘ஆமாம்... ஒருபக்கம் ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு நடத்திக்கொண்டே மறுபக்கம் நாடாளுமன்றத்தில் ‘ஆளுநரை மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க கோஷமிட்டது ஆளுநரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ‘என்னிடம் இங்கு கைகுலுக்கிக்கொண்டே, டெல்லியில் எனக்கெதிராகக் கோஷம் போடுவார்களா?’ என்று வெடித்தாராம் ஆளுநர். அதேபோல இந்தச் சந்திப்பில் ஆளுநரிடமிருந்து பெரிதாக ரியாக்‌ஷன் இல்லையாம். ‘மசோதாவைத் திருப்பி அனுப்பினேன். நீங்கள் எனக்கு இரண்டாவது முறையாக அனுப்பியுள்ளீர்கள். சட்டப்படி இம்முறை நான் டெல்லிக்குத்தான் அனுப்ப வேண்டும். அதைச் செய்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதைத்தான் வெளியே வந்த முதல்வர், ‘குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்புவதாக ஆளுநர் உறுதி கொடுத்திருக்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார்.”

‘‘என்ன நடக்கிறது என்று பார்ப்போம்... பயணங்களுக்குத் தயாராகிவிட்டாரே முதல்வர் ஸ்டாலின்!”

‘‘தமிழக அரசு சார்பில் துபாய் எக்ஸ்போவில் அமைக்கப்படும் அரங்கைப் பார்வையிட மார்ச் 24-ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர். எக்ஸ்போவைப் பார்வையிட்ட பிறகு தொழில்

முனைவோர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். மறுநாள் அபுதாபி செல்லும் முதல்வர், மார்ச் 27-ம் தேதி சென்னை திரும்புகிறார். மீண்டும் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர், 2-ம் தேதி டெல்லி தி.மு.க அலுவலகத்தைத் திறந்துவைக்கவிருக்கிறார். டெல்லி பயணத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள். குறிப்பாக, தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்கள் முதல் ஆளுநர் விவகாரம் வரை பிரதமரிடம் முறையிடவிருக்கிறாராம் ஸ்டாலின்’’ என்ற கழுகார், தயாராக இருந்த கவர் ஸ்டோரியைப் படித்துவிட்டுத் தொடர்ந்தார்...

‘‘என்னிடமும் சில தகவல்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது இந்த முறை சொத்துக்குவிப்பு வழக்காக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது... இது வேலுமணிக்கு நிறையவே சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். வேலுமணிக்கு வேண்டப்பட்ட ஏ.டி.எஸ்.பி அனிதா தொடர்புடைய இடங்களும் ரெய்டில் சிக்கியதால், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை நடக்கிறது. கடந்த முறை ரெய்டில் தப்பித்த கிருஷ்ணா கல்லூரி குழுமத் தலைவர் மலர்விழியும் இம்முறை சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே ஆட்சி மாற்றம் நடந்தபோது அவர் தரப்பிலிருந்து ஆட்சி மேலிடத்துடன் சமரசம் பேச வந்தார்களாம். ஆனால், ஆளும் தரப்பு அதை உஷாராகத் தவிர்த்துவிட்டது. அநேகமாக இந்த விவகாரத்தில் யாராவது ஒருவர் வேலுமணிக்கு எதிராக அப்ரூவராக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.”

“எல்லாம் சரி... ரெய்டு விவகாரத்தில் இரட்டையர்கள் என்ன நினைக்கிறார்களாம்?”

“ரெய்டை உற்று கவனித்துவரும் எடப்பாடி தரப்பு, ‘தி.மு.க-வின் தொடர் தாக்குதல்களால் வேலுமணி தவிர்க்க முடியாத தலைவராக உருவாகிவிடுவாரோ?’ என்றும் கலக்கம் அடைந்துள்ளதாம். ஏற்கெனவே கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையை வேலுமணி செய்தவர் என்பதால், எடப்பாடி இம்முறை வேலுமணி விவகாரத்தில் உஷாராகவே காய்நகர்த்துவார் என்கிறார்கள். சமீபகாலமாக பன்னீருடன் வேலுமணி நெருக்கம் காட்டினாலும்கூட இந்த ரெய்டு விவகாரத்தில் பன்னீருக்கு மகிழ்ச்சி என்கிறார்கள். அதனால்தான், கடைசிவரை ஆறுதலுக்காகக்கூட வேலுமணியை அழைத்துப் பேசவில்லையாம் பன்னீர்!’’

‘‘தைலாபுரம் திடீர் பாசமழை பொழிந்திருக்கிறதே!”

‘‘ம்ம்க்கும்... அவர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்வார்களா! அகில இந்திய அளவில் சமூகநீதிக் கூட்டமைப்பை முன்னெடுப்பது பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். தொடர்ந்து தோல்விமுகத்தில் சென்றுகொண்டிருக்கும் பா.ம.க-வை மீட்க, எதிர்காலத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறாராம் ராமதாஸ். அதன் வெளிப்பாடே இந்தப் பாராட்டு என்கிறார்கள்.’’

“ஹைய்யோ... ஹைய்யோ... கடந்த காலத்தில் டாக்டர் பேசிய பேச்சுகள்தான் நினைவுக்கு வருகின்றன... அதிருக்கட்டும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட திருச்சிக்குச் சென்றிருக்கிறாரா இல்லை உல்லாசச் சுற்றுலா சென்றிருக்கிறாரா?”

மிஸ்டர் கழுகு: ஷாக் ட்ரீட்மென்ட்! - அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்...

“விருந்து வைபோகங்களைத்தானே சொல்கிறீர்கள்... திருச்சி பிளாசம்ஸ் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் ஜெயக்குமாருக்கு தினசரி மதியம், இரவு தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து தினமும் மதியம் அசைவ விருந்து செல்கிறது. முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி சார்பில் தோட்டம் ஒன்றில் கிடா வெட்டி விருந்து வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குப் போட்டியாக திருச்சி முன்னாள் துணை மேயரான சீனிவாசன், ஜெயக்குமாருக்கு பிடித்தமான கடல் உணவுகளை விருந்தளித்திருக்கிறார். இந்த விருந்தில் 300 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்!”

“சிறையில் நல்ல சாப்பாடு கிடைக்காத குறையைத் தீர்த்துக்கொள்கிறார்போல... வேறு ஏதேனும் தகவல்கள் இருக்கின்றனவா?”

“காங்கிரஸ் கட்சியில் மாநில இளைஞரணித் தலைவர் பதவிக்குத் தனி மவுசு உண்டு. இணைஞரணித் தலைவர் பதவியைப் பிடித்துவிட்டால், எதிர்காலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி சீட் வாங்குவது எளிது என்கிறார்கள். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பதவித் தேர்தலில் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் லெனின் பிரசாத் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் கார்த்தி சிதம்பரம் தன் ஆதரவாளரான ஜோஷ்வா என்பவரையும், மாணிக்கம் தாகூர் நவீன்குமார் என்பவரையும் ‘வெயிட்டாக’க் களமிறக்கியிருக்கிறார்கள். ஆனாலும், சுமார் 74 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் லெனின் பிரசாத் வெற்றிபெற்றிருக்கிறார்... நம்மை மீறி இவர் எப்படி வெற்றிபெற்றார் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்கிறது கார்த்தி மற்றும் மாணிக்கம் தரப்பு” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சர்ச்சைக்குரிய அந்த மாண்புமிகுவை டெல்லி உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் அவர்மீது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள். இதையடுத்து டென்ஷனான உச்சப்புள்ளி, அந்த மாண்புமிகுவை வரவழைத்து “உன் துறையில் என்னதான்யா நடக்குது?” என்று விளாசித் தள்ளிவிட்டாராம்!

* துபாயில் தொழிலதிபர் ஒருவருக்குத் தமிழகத்திலிருந்து 100 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதை மோப்பம் பிடித்த அமலாக்கத்துறை அந்தப் பரிமாற்றத்தை முடக்கியிருக்கிறதாம். அந்தத் தொழிலதிபர் உச்ச பிரமுகரின் குடும்ப வாரிசுகளுக்கு நெருக்கமானவர் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism