Published:Updated:

மிஸ்டர் கழுகு: கொரோனா முடக்கமா... வாக்குகளை முடக்க திட்டமா?

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

கொரோனா இரண்டாவது அலை வருகிறது என்று ஜனவரி மாதத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருந்தாலும், மார்ச் மாதத்திலிருந்துதான் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

மாஸ்க், கிளவுஸ் சகிதமாக பாதுகாப்பாக வந்த கழுகார், “கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. பாதுகாப்பாக இரும்” என்று அட்வைஸ் செய்தபடி, தான் கொண்டுவந்திருந்த கபசுரக் குடிநீரை நமக்கும் அளித்துவிட்டு செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம்தான் இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது. கொரோனா ஓரளவு கட்டுக்குள் வரும் முன்பே கடந்த ஆண்டு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என மூன்று கட்டங்களாக பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அங்கு முதற்கட்ட தேர்தலின்போது 2.13 லட்சம் ஆக்டிவ் கேஸ்களும், இரண்டாம் கட்டத்தில் 2.17 லட்சம் ஆக்டிவ் கேஸ்களும், மூன்றாம் கட்டத்தில் 2.2 லட்சம் ஆக்டிவ் கேஸ்களும் பதிவாகியிருந்தன. ஆனாலும், தளராமல் தேர்தலை நடத்தி முடித்தது தேர்தல் ஆணையம். அன்றைய பீகாருடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவ்வளவு ஏன்? தமிழகத்தில் கொரோனா உச்சத்திலிருந்தபோதே நாளொன்றுக்கு 6,993 ஆக்டிவ் கேஸ்கள்தான் பதிவாகின. தற்போது இங்கு நாளொன்றுக்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெறும் 1,000-க்குள் இருப்பதால் தேர்தலை எளிதாக நடத்திவிடலாம். ஆனால், நடப்பவை எல்லாம் மர்மமாகவே இருக்கின்றன!”

மிஸ்டர் கழுகு: கொரோனா முடக்கமா... வாக்குகளை முடக்க திட்டமா?

‘‘என்னதான் நடக்கிறது?’’

‘‘கொரோனா இரண்டாவது அலை வருகிறது என்று ஜனவரி மாதத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருந்தாலும், மார்ச் மாதத்திலிருந்துதான் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. தற்போது தேர்தல் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலங்களில், தமிழகத்தில்தான் தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இது பற்றி ஆய்வு செய்வதற்காக பீகாரிலிருந்து இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர்கள், ‘இப்போது தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்குள் கொரோனா பாசிடிவ் ரிசல்ட் வந்துகொண்டிருக் கிறது. தேர்தல் தேதி நெருக்கத்தில் இது பலமடங்கு அதிகரித்தால், தேர்தலை நடத்தாதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்களாம்.’’

“அச்சச்சோ!’’

‘‘ஆமாம். கொரோனா உச்சத்திலிருந்தபோது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இறந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை டி.வி மீடியாக்கள் ‘பிரேக்கிங் நியூஸ்’ எனத் தொடர்ச்சியாக வெளியிட்டனர். இவ்வாறு வெளியிடுவதால் மக்கள் பீதியடைகிறார்கள் என்று அரசு எச்சரித்ததால், பிறகு சாதாரணச் செய்தியாக மட்டுமே வெளியிட்டனர். இந்தநிலையில், சமீப நாள்களாக கொரோனா அதிகரித்துவருவதை மீண்டும் டி.வி மீடியாக்கள் ‘பிரேக்கிங் நியூஸாக’ வெளியிட்டு வருகின்றன. போதாக்குறைக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘கொரோனா அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது’ என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்.”

“மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதா?”

மிஸ்டர் கழுகு: கொரோனா முடக்கமா... வாக்குகளை முடக்க திட்டமா?

‘‘சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘ஊரடங்கு போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், `தெருவுக்கு மூன்று பேருக்கு கொரோனா இருந்தாலே அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்’ என்கிறது அரசு. ஆனால், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரைக் கூட்டிக்கொண்டு திரிகிறார்கள். நடப்பதை யெல்லாம் பார்க்கும்போது மக்களிடம் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி சட்டமன்றத் தேர்தலை மொத்தமாகத் தள்ளிவைக்க முயற்சி நடக்கிறதா என்பது முதல் சந்தேகம். கொரோனா பயத்தை மீண்டும் மக்களிடம் விதைத்து, தேர்தல் தேதியன்று வாக்கு சதவிகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையா என்பது இரண்டாவது சந்தேகம். ஒருவேளை வாக்குப்பதிவு குறைந்து அது தி.மு.க-வுக்கு பாதகமாக அமைந்தால், குதிரைப் பேரம் மூலம் எதையாவது செய்து அரியணையைப் பிடித்துவிடலாமா என்று மத்திய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறதா என்பது மூன்றாவது சந்தேகம். எப்படிப் பார்த்தாலும் இது தி.மு.க கூட்டணிக்கான செக்தான்!’’

மிஸ்டர் கழுகு: கொரோனா முடக்கமா... வாக்குகளை முடக்க திட்டமா?

‘‘ஏன் இவ்வளவு குழப்பம் செய்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால், கொரோனா விஷயத்தில் மக்கள் எப்போதும்போல சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகக் கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... சரி, வேறு செய்திகள் ஏதேனும்?’’

‘‘கடந்த முறை வருமான வரித்துறையில் அமைச்சர்களைக் காப்பாற்ற நடந்த சித்து விளையாட்டைப் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா... அதன் பிறகு நடந்த ஃபாலோ அப் தகவல்களை இப்போது சொல்கிறேன்...’’

‘‘சொல்லும்!’’

‘‘வருமான வரித்துறையில் சிக்கியுள்ள மணல் அதிபரின் ஃபைலை குளோஸ் செய்யச் சொல்லி மூன்று அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் வேலை முடிந்தபாடில்லை. இதனால், மத்திய அரசின் அனுகூலத்துடன் பெங்களூரிலிருந்து பெண் அதிகாரி ஒருவரைச் சென்னைக்கு இடமாற்றம் செய்ய ஒப்புதல் வாங்கியிருக்கிறது ஆளும்தரப்பு. சசிகலாவுக்கு ஏற்கெனவே சிக்கலை ஏற்படுத்திய அதிகாரி ஒருவரின் தங்கை வருமான வரித்துறையில் இணை ஆணையராகப் பணியாற்றுகிறார். அவரைத்தான் சென்னைக்கு மாற்றி மணல் அதிபர் வழக்கை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒருபுறம் ஆளும் தரப்புக்கு ஆதரவாகச் சில வேலைகள் நடந்தாலும், ஆளும்தரப்புக்கு எதிராக உள்ள ஃபைல்களையும் மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. அப்படி ஒரு ஃபைல் குறித்த நோட் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது.’’

‘‘என்ன அது?’’

‘‘ஆளுங்கட்சிப் பெரியவரின் வாரிசு ஒருவர் கொங்கு மண்டலத்திலுள்ள வனப்பகுதிக்கு அருகே புதிதாக பேப்பர் மில் ஒன்றை நிர்மாணித்துள்ளார். வனப்பகுதி அருகே தொழிற்சாலைகள் தொடங்குவதற்குக் கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன. ஆனால், ‘ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தி, ஆலைக்கு ஒப்புதல் வாங்கிவிட்டோம்’ என்று ஓர் ஆவணத்தையும் இணைத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால், அப்படியொரு கூட்டமே நடக்கவில்லை என்கிறார்கள். அதேபோல், ஆலைக்குத் தேவையான உபகரணங்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார்கள். இதன் உண்மையான மதிப்பு 1,000 கோடி ரூபாயைத் தாண்டுமாம். அதன் மதிப்பைக் குறைத்துக் காட்டி, அதற்கும் போலியான பில்லையும் இணைத்துள்ளார்கள். இது குறித்த புகார் ஏற்கெனவே டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், சுங்க இலாகாவுக்கும் சென்றது. இதனால், ஆலைக்கு அனுமதி வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு டெல்லிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என டெல்லியிலிருந்து சில நாள்களுக்கு முன்பு உத்தரவு வந்துள்ளது. இதையறிந்த ஆளுங்கட்சிப் பெரியவர் பதற்றத்துடன் இருக்கிறாராம்.’’

‘‘இருக்காதா பின்னே... இன்னொரு விவகாரத்தைச் சொல்கிறேன் கேளும்!’’

‘‘தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்துக்கும், தமிழ்நாடு மின்வாரியத்துக்கும் தேவையான பல லட்சம் டன் நிலக்கரியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துவருகிறது தமிழக அரசு. இதில் நடந்த முறைகேடு ஒன்றும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம்தான், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் நிலக்கரியை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூரில் வசிக்கும் ஒருவர், துபாயில் வசிக்கும் ஒருவர் என மூவர் இருக்கிறார்கள். தமிழக அரசின் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நிலக்கரியின் தர அளவு 5,000 கலோரிகளாக இருக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதிமுறை. ஆனால், சிங்கப்பூர் நிறுவனம் அனுப்பும் நிலக்கரியின் தர அளவு 4,500 கலோரி மட்டுமே இருக்கிறதாம். தரம் குறைந்த இந்த நிலக்கரியை இறக்குமதி செய்ய ஆளும்தரப்புக்கு ஒரு டன்னுக்கு கமிஷனாக ஐந்து டாலர்களைச் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிவருகிறதாம். இந்த நிறுவனத்துக்கு நிலக்கரி டெண்டரை வழங்கச் சொன்னதே முதல்வர் அலுவலகத்திலுள்ள ‘தரமான’ நபராம். இந்த விவரங்களையெல்லாம் ஃபைலாகப் போட்டு எதிர்க்கட்சிக்குக் கொடுத்துவிட்டனர் துறையிலுள்ள அதிகாரிகள் சிலர். எதிர்க்கட்சித் தலைமையும் தேர்தல் பிரசாரத்தில் இதை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.”

‘‘ஓஹோ... சென்னை மாநகராட்சி மீது ஸ்டாலினின் பார்வை அழுத்தமாகப் பதிந்திருக்கிறதாமே?”

‘‘உண்மைதான். சென்னை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தும் நந்தவன அதிகாரியின் மீது தி.மு.க-வின் கோபப் பார்வை பாய்ந்திருக்கிறது. அமைச்சர் வேலுமணி தரப்புக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் நந்தவன அதிகாரி, உள்ளாட்சித்துறையிலும் சென்னை மாநகராட்சியிலும் வசூலாகும் ஸ்வீட் பாக்ஸ்களை கலெக்ட் செய்யும் ஏஜென்ட்டாக இருக்கிறாராம். நந்தவன அதிகாரியின் தில்லுமுல்லுகள் பற்றி ஏகப்பட்ட புகார்கள் அறிவாலயத்தை எட்டியிருக்கின்றன.

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்த தலைமைப் பொறியாளர் புகழேந்தி, அமைச்சர் தரப்புக்குப் பணிந்து செல்லவில்லை என்பதால்தான் மாற்றப்பட்டார். அதைத் திட்டமிட்டு செய்து, தன் வசூல் வேட்டையில் தடையேதும் இல்லாமல் பார்த்துக்கொண்டது நந்தவன அதிகாரிதானாம். தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன் குமார், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சென்னை மாநகருக்குள்ளேயே ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். நந்தவன அதிகாரிக்கு பொன் குமார் ஒருவகையில் உறவினர் என்பதால் உஷாரான ஸ்டாலின், பொன் குமாரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டாராம். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நந்தவன அதிகாரி வனத்துக்கு அனுப்பப்படுவார் என்கிறது ரிப்பன் பில்டிங்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மிஸ்டர் கழுகு: கொரோனா முடக்கமா... வாக்குகளை முடக்க திட்டமா?