Published:Updated:

மிஸ்டர் கழுகு: துபாய்க்குச் சென்ற 5,000 கோடி! - அமைச்சர்களைக் கண்காணிக்கும் ராஜ்பவன்...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

வதந்தி என்கிறார்கள்... சண்முகசுந்தரம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சில கிடுக்கிப்பிடிகளைப் போட்டிருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: துபாய்க்குச் சென்ற 5,000 கோடி! - அமைச்சர்களைக் கண்காணிக்கும் ராஜ்பவன்...

வதந்தி என்கிறார்கள்... சண்முகசுந்தரம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சில கிடுக்கிப்பிடிகளைப் போட்டிருக்கிறார்.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

‘‘எனக்கு எதுவுமே தெரியாது...’’ என்று போனில் பேசிக்கொண்டே என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், ‘‘என்ன... ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை கவனித்துவிட்டு வருகிறீர்போல... எஃபெக்ட் தெரிகிறது!” என்று கிண்டலடித்தோம். செல்லமாக முறைத்தபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இருந்தாலும், பழைய திட்டங்கள் சிலவற்றை மாற்றியிருப்பதும், சில திட்டங்களை நிறுத்தியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. பெரியாரின் நூல்களை இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கவனிக்கவைத்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி படிப்பைத் தொடரும் வகையில், மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அறிவித்திருப்பது, எந்த ஆண்டும் இல்லாத அளவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில் திறன் மேம்பாட்டுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கியது... என்று சில அறிவிப்புகள் கவனிக்க வைத்துள்ளன.’’

‘‘வேறு என்ன ஸ்பெஷல்?’’

‘‘தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, அடுத்த நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சுமை 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். இது கவலையளிக்கும் அதேநேரம், வருவாய் பற்றாக்குறை குறைந்திருப்பதாகச் சொல்வது சற்றே ஆறுதல் தருகிறது. இலவச திட்டங்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. வளர்ச்சிக்கான செலவீனங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். இவை அனைத்தும் கவனிக்கவேண்டிய அம்சங்கள்தான்.’’

‘‘தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை ஏன் நிறுத்தினார்களாம்?’’

‘‘ஆமாம், அதுதான் சர்ச்சையாகியிருக்கிறது. திருமணமாகும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் எட்டு கிராம் தங்கமும், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும் பட்டம் படித்த பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் கடந்த மூன்றாண்டுகளாக முறையாகச் செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும், மூன்று லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கிக்கிடப்பதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக இந்தத் திட்டத்துக்கு 2021-22-ம் நிதி ஆண்டில் 721 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் கையால் சில பயனாளிகளுக்கு உதவியும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை தொடர்வதற்கு நிதி ஆதாரம் இல்லை... ஏற்கெனவே பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கும் பணமும் தங்கமும் கொடுக்க வழியில்லை. தவிர தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் இந்தத் திட்டத்துக்கான செலவை, கல்விக்கு மடைமாற்றிவிட்டோம் என்று சமாளித்திருக்கிறார்கள்!”

‘‘அது சரி...’’

மிஸ்டர் கழுகு: துபாய்க்குச் சென்ற 5,000 கோடி! - அமைச்சர்களைக் கண்காணிக்கும் ராஜ்பவன்...

‘‘ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு மானிய நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இரண்டு துறைகளையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கல்வித்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், அதில் பெரும் தொகை ஊதியத்துக்கே சென்றுவிடும் என்கிறார்கள். சேலம் - சென்னை விரைவு சாலை திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்த எட்டுவழிச் சாலைத் திட்டத்தின் பெயரை மாற்றி இப்படி அறிவித்திருக்கிறார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.”

‘‘கலவையான பட்ஜெட் என்று சொல்லும்’’ என்றபடியே சூடான பாதாம் பாலை கழுகாருக்கு வழங்கிவிட்டு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விட மாட்டார் போலிருக்கிறதே...’’ என்று கேட்டோம்.

‘‘ஆளுநரிடம் புகார் அளித்ததைத்தானே சொல்கிறீர்கள்... ‘செந்தில் பாலாஜியை அரசியல்ரீதியாக முடக்கினால் மட்டுமே கொங்கு ஏரியாவில் அரசியல் செய்ய முடியும்’ என்பதில் தெளிவாக இருக்கிறார் அண்ணாமலை. ஆளுநருடனான சந்திப்பில், பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு மின்சாரத்துறையில் வழங்கப்பட்ட டெண்டர் விவகாரம்தான் பேசப்பட்டிருக்கிறது. அப்போது ஆளுநரிடம் பா.ஜ.க துணைத் தலைவரான கே.பி.ராமலிங்கம், ‘தி.மு.க-காரங்க விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் கில்லாடிங்க. சட்ட நுணுக்கங்களைக் காட்டிக் குழப்புவாங்க. நீங்களே நேரடியா விசாரணைக்கு உத்தரவிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.”

‘‘பழைய தி.மு.க-காரர்தானே... அவர் அறியாததா! ஆளுநர் தரப்பில் என்ன ரியாக்‌ஷன்?”

‘‘வழக்கம்போல ‘விசாரிக்கிறேன்’ என்று சொன்னாராம். அதேசமயம், தமிழக அரசுமீது ஆளுநர் தரப்பு ஒரு கண் வைத்திருப்பதை சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்த வி.ஐ.பி ஒருவர் உறுதிசெய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தார் அந்த வி.ஐ.பி. அந்தச் சந்திப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த பேச்சும் எழுந்துள்ளது. அப்போது ஆளுநர் தரப்பிலிருந்து, ‘எதற்கெடுத்தாலும் நிதி இல்லை; மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறது தமிழக அரசு. ஆனால், இங்கிருந்து துபாய்க்கு ஐயாயிரம் கோடி ரூபாய் சென்றுள்ளது. இந்தப் பணம் எப்படி, யார் வழியாகச் சென்றது என்கிற விவரங்கள் அனைத்தும் டெல்லியில் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பின் துபாய் விசிட் முடிந்த பிறகு மகாராஷ்டிரா பாணியில் இங்கும் அமைச்சர்கள்மீது அதிரடி நடவடிக்கை இருக்கும். எல்லாவற்றையும் நாங்கள் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டதாம்!”

மிஸ்டர் கழுகு: துபாய்க்குச் சென்ற 5,000 கோடி! - அமைச்சர்களைக் கண்காணிக்கும் ராஜ்பவன்...

‘‘பெரும் போருக்குத் தயாராகிறார்கள் என்று சொல்லும்... வேறு ஏதேனும் செய்திகள்?”

‘‘வேறென்ன... கழகச் செய்திகள்தான். அ.தி.மு.க-வில் விரைவில் பொதுக்குழு அறிவிப்பு வரலாம். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில், தன் ஆதரவாளர்களை நுழைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி. தி.மு.க-வில் வரும் மே மாதத்துக்குள் உட்கட்சித் தேர்தலை முடித்துவிட்டு, ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டும் திட்டத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஜூன் மாதம் தமிழகத்துக்கான ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இவற்றில் நான்கு பதவிகள் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் என்பதால், கட்சிக்குள் இப்போதே எம்.பி பதவிக்கான ரேஸ் தொடங்கிவிட்டது. முதன்மையானவரின் மனைவி குடும்ப கோட்டாவில் ஒரு சீட் கேட்டிருக்கிறார்கள். தலைமையிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை... கட்சியின் வி.ஐ.பி-க்கள் பலரும் எம்.பி பதவிக்காக முட்டி மோதுவதால், எந்தப் பக்கம் அணைகட்டுவது என்கிற தீவிர யோசனையில் இருக்கிறாராம் முதன்மையானவர்.”

‘‘அவர் அணைகட்டுவது இருக்கட்டும்... மேக்கேதாட்டுவில் அணைகட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது’ என்று சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே?”

‘‘ஆமாம்... அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம், ‘மத்திய அமைச்சரவையில் தி.மு.க பங்கேற்ற காலத்தில், இந்தப் பிரச்னையைச் சரிசெய்திருக்கலாமே’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியபோது, துரைமுருகன் பதில் சொல்ல எத்தனித்தார். ஆனால், ‘பதிலுக்கு பதில் பேச வேண்டாம். ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்’ என துரைமுருகனை அமைதிப்படுத்தியிருக்கிறார் முதல்வர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்துத்தான், விவகாரம் அடுத்தகட்டத்துக்கு நகரும்.’’

‘‘தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்று தகவல் வருகிறதே, உண்மையா?”

‘‘வதந்தி என்கிறார்கள்... சண்முகசுந்தரம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சில கிடுக்கிப்பிடிகளைப் போட்டிருக்கிறார். இதையடுத்து, சண்முகசுந்தரத்தின் எதிர்க் கோஷ்டியைச் சேர்ந்த தி.மு.க வழக்கறிஞர்கள் சிலர், அவர் ராஜினாமா செய்யப்போவதாக கிளப்பிவிட்டிருக்கிறார்கள்” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

****

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் ஜரூராக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் தலைக்கு 7 லட்சம் ரூபாய் நிர்ணயித்திருப்பதுதான் ஹாட் நியூஸ்!

* சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்ட பிறகு, சென்னை பெருநகர காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெரிய அளவில் நடக்கவில்லை. கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தொடர்கிறார்கள். வெகுவிரைவில் இவர்கள் மொத்தமாக இடம் மாற்றப்படவிருக்கிறார்கள். இதில் ஷாப்பிங் ஏரியாவில் சர்ச்சைக்குரிய அதிகாரியின் பெயரும் உள்ளதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism