Published:Updated:

மிஸ்டர் கழுகு: பட்டியல் ரெடி... ஆக்‌ஷனுக்கு தயாராகும் தி.மு.க!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

‘சசிகலா குடும்பமே வேண்டாம் என்றவர்கள், இப்போது அவரைக் கட்சியில் சேர்க்க, குடும்பத்தோடு களமிறங்கிவிட்டார்கள் என்று சொல்லும்

மிஸ்டர் கழுகு: பட்டியல் ரெடி... ஆக்‌ஷனுக்கு தயாராகும் தி.மு.க!

‘சசிகலா குடும்பமே வேண்டாம் என்றவர்கள், இப்போது அவரைக் கட்சியில் சேர்க்க, குடும்பத்தோடு களமிறங்கிவிட்டார்கள் என்று சொல்லும்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

கழுகார் உள்ளே நுழைந்ததும் தயாராக இருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டவர், “ஓ... பன்னீர் - சசிகலா விவகாரம்தானா! சசிகலா விஷயத்தில் அதிரடியாக ஏதேனும் நடந்தால் மட்டுமே தகவல் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தீர்... அது நடந்திருக்கிறது. அதனால் என் பங்குக்கு நானும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் சொல்கிறேன்...” என்ற பீடிகையுடன் உரையாடலைத் தொடங்கினார்...

‘‘ஏற்கெனவே சசிகலாவுக்கும், அ.தி.மு.க-வில் அவரின் மறைமுக ஆதரவாளர்களுக்கும் பாலமாக இருப்பதாகச் சொல்லப்பட்ட அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் நடவடிக்கைகளில் இப்போது வேகம் கூடிவிட்டது. சசிகலாவை நேரடியாகச் சந்திக்காத வைத்திலிங்கம், தன் சார்பில் தன் சம்பந்தி தவமணியைச் சந்தித்துப் பேச வைத்திருக்கிறார். அந்தச் சந்திப்பின்போது சசிகலாவிடம் போனில் பேசிய வைத்திலிங்கம், ‘எடப்பாடி தலைமையை நான் விரும்பவில்லை. நீங்கள் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். தவிர, தன்னிடம் தொடர்பிலிருக்கும் அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகளிடமும், ‘அ.தி.மு.க-வுக்குள் சசிகலா நிச்சயம் வந்துவிடுவார்’ என்று சொல்லிவருகிறார். வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபுவும், ‘சசிகலா கட்சிக்குள் வருவதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது’ என்று தன் பங்குக்குப் பரபரக்கிறார். சசிகலாவை இணைப்பது தொடர்பாக சென்னையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களையும் வைத்திலிங்கம் சந்தித்துப் பேசியிருக்கிறாராம்!”

‘‘சசிகலா குடும்பமே வேண்டாம் என்றவர்கள், இப்போது அவரைக் கட்சியில் சேர்க்க, குடும்பத்தோடு களமிறங்கிவிட்டார்கள் என்று சொல்லும்... எடப்பாடிமீது அண்ணாமலை கடுப்பில் இருக்கிறார்போல!’’

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

‘‘உண்மைதான். சமீபத்தில் டெல்லி தலைமைக்கு நெருக்கமான டீம் ஒன்று தமிழகம் வந்துள்ளது. அவர்களிடம், ‘கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க வளர வேண்டுமென்றால், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து முதலில் அ.தி.மு.க-வை பலமிழக்கச் செய்ய வேண்டும்’ என்றிருக்கிறார் அண்ணாமலை. அப்போது கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று 2017-ல் தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கு, இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய டெல்லி தரப்பு, ‘அந்த வழக்குக்கு உயிர் கொடுத்தால் எடப்பாடியை வழிக்குக் கொண்டுவந்துவிடலாம்’ என்று அண்ணாமலைக்குத் தெம்பூட்டியிருக்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘செந்தில் பாலாஜியைப் பற்றியும் அப்போது பேச்சு எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் தி.மு.க வளர செந்தில் பாலாஜிதான் காரணம் என்பதால், ‘அமலாக்கத்துறையிலுள்ள அவர்மீதான வழக்குகளை வேகப்படுத்துங்கள்’ என்று தமிழக பா.ஜ.க தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில், தலைமைமீது வருத்தத்தில் இருப்பவர்களை பா.ஜ.க பக்கம் கொண்டுவரவும் முயற்சி நடக்கிறது.’’

‘‘அதுசரி... இன்றுடன் கெடு முடிகிறதுபோல...’’

‘‘எதைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது... கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க-வினரை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டு, கெடுவிதித்த நாள் மார்ச் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. முதல்வரின் பேச்சை மதித்து சிலர் மட்டுமே ராஜினாமா செய்தார்கள். பலரும் நாட் ரீச்சபிள் மோடுக்குச் சென்றுவிட்டார்கள். துபாய் சென்றிருக்கும் முதல்வர் திரும்பி வந்த பிறகுதான் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியும்!’’

‘‘ஆனால், ஒரு கட்சியின் தலைவராக, அவர்களைக் கட்சியைவிட்டு மட்டும்தானே நீக்க முடியும்?’’

‘‘நல்ல கேள்வி... அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கினாலும், அவர்களின் பதவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால், இந்த விவகாரத்தில் மாவட்டச் செயலாளர்களின் தலைகள்தான் உருள வாய்ப்பு இருக்கிறது. ‘முறைகேடாக ஜெயித்தவர்களை ராஜினாமா செய்யவைப்பது உங்கள் கடமை’ என்று தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது. அதன்படி அவர்கள்மீது நடவடிக்கை பாயலாம். இது தவிர, ஏற்கெனவே புகாருக்குள்ளான மாவட்டச் செயலாளர்கள் பட்டியலும் தயாராக இருக்கிறது. தருமபுரி, வடசென்னை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட ‘மாவட்டங்கள்’ மீது நடவடிக்கை பாயலாம்.’’

மிஸ்டர் கழுகு: பட்டியல் ரெடி... ஆக்‌ஷனுக்கு தயாராகும் தி.மு.க!

‘‘துபாய்க்கு விமானம் ஏறிவிட்டார் ஸ்டாலின்... ஏதேனும் விசேஷத் தகவல்கள் உண்டா?”

‘‘தமிழக தொழில்துறையிலிருந்து ஏற்கெனவே ஒரு குழு துபாய்க்குச் சென்று, ‘யாரிடமெல்லாம் முதல்வர் பேச வேண்டும்... எந்தெந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும்’ என்றெல்லாம் முடிவு செய்துவிட்டது. முதல்வரின் மகன் உதயநிதியும், மாப்பிள்ளை சபரீசனும்தான் ஒட்டுமொத்த துபாய் பயணத்தையும் மேற்பார்வை செய்திருக்கிறார்கள். அரசு நிகழ்வைத் தாண்டி அபுதாபியில் சில தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்கிறார். தமிழக முதல்வர் வருகை குறித்த விவரங்களை துபாயிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறதாம்... அதுதான் முதல்வர் தரப்புக்கு லேசான நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.’’

‘‘ஒருபக்கம் பா.ஜ.க-வுக்கு எதிராகச் சீறினாலும், இன்னொரு பக்கம் டெல்லி தி.மு.க அலுவலகத் திறப்புவிழா அழைப்பிதழை அவர்களுக்கும் கொடுத்துவிட்டார்களே?’’

மிஸ்டர் கழுகு: பட்டியல் ரெடி... ஆக்‌ஷனுக்கு தயாராகும் தி.மு.க!

“தி.மு.க முதலில் எதிர்க்கட்சிகளை வைத்துத்தான் விழா நடத்தத் திட்டமிட்டது. அதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும்தான் அழைப்பிதழையும் கொடுத்துவந்தார்கள். இந்த நிலையில், ‘டெல்லியில் நடக்கும் விழாவில் பா.ஜ.க-வினரை தவிர்ப்பது அரசியல் நாகரிகம் இல்லை. அதனால் அவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிடலாம்; வருவதும் வராமல் இருப்பதும் அவர்கள் விருப்பம்’ என்று கட்சித் தலைமையிலிருந்து சொல்லப்பட்டதாம். இதையடுத்தே அமித் ஷா, ஓம் பிர்லா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பிரதமரையும் சந்திக்க தி.மு.க எம்.பி-க்கள் நேரம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், நேரம் கொடுக்கப்படவில்லை.’’

‘‘மாஜி அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் சிக்கல் வரும்போலிருக்கிறதே?’’

‘‘முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கண் பதித்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வந்த முதலீடுகளில் சில வில்லங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவருக்குச் சிக்கல் வரலாம். அதேபோல் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு அரசு இடத்தைக் குறைந்த விலைக்கு வழங்கியதாக, முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்துச் சில தகவல்களை மேலிடத்துக்கு அதிகாரிகள் கொடுத்துள்ளார்கள். இதையொட்டி அவருக்கும் சிக்கல் எழலாம் என்கிறார்கள்.’’

‘‘இவ்வளவு நெருக்கடியிலும் முன்னாள் மாஜி ஒருவர் கூலாக ஒரு சொத்தை வாங்கிப் போட்டிருக்கிறாரே!”

‘‘உமக்கும் அந்தத் தகவல் கசிந்துவிட்டதா! டெல்டா ஏரியாவைச் சேர்ந்த அந்த மாஜி, மறைந்த டாக்டர் ஒருவரின் குடும்பத்தின் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை சமீபத்தில் வாங்கியிருக்கிறார். ‘ரெய்டு நேரத்தில் இது தேவையா?’ என்று அவரின் ஆதரவாளர்கள் கேட்டபோது, ‘ஏன்யா... அதெல்லாம் சரிபண்ணத் தெரியாமலா இதை வாங்குவேன்...’ என்று நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தாராம்!”

‘‘மறுபடியும் தீயணைப்புத்துறையில் அதிரடி ஆரம்பித்துவிட்டதே?’’

‘‘ஆமாம்... தீயணைப்புத்துறையில் போலி லைசென்ஸ் விவகாரத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு உயிர் காக்கும் கருவிகள் வாங்கியதில் நடந்த முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் ‘இதய நடிகர்’ பெயர்கொண்டவர் சிக்கலாம் என்கிறார்கள். மேலும், இந்தத் துறையில் தனி ஆவர்த்தனம் நடத்திவந்த பெண் அதிகாரி, சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்யும் உயரதிகாரி, வெயில் மாவட்ட அதிகாரி ஆகியோரின் முறைகேடுகளும் தெரியவந்திருக்கின்றன” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* திரைத்துறையில் கோலோச்சும் அன்பானவரிடம் ஏற்கெனவே வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பல புள்ளிகள் பற்றிய விவரங்கள் சிக்கின. இவற்றை வைத்து கோலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறது வருமான வரித்துறை!

* கொங்கு மண்டலத்திலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே வில்லங்க சர்ச்சைகளில் சிக்கி பல இடங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டவர், இம்முறையும் அதே வில்லங்கப் புகாரால்தால் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறாராம்!