Published:Updated:

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட உளவுத்துறை... உஷ்ணத்தில் முதல்வர்!

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மன வருத்தத்தால், அறிவாலயம் பக்கம் சில மாதங்களாக வராமலிருந்தார் எ.வ.வேலு. தேர்தல் நேரத்தில் நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால், அவரை மீண்டும் அரவணைத்துக் கொண்டது கட்சித் தலைமை.

‘‘பா.ஜ.க-வின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டதே!’’ - செருமியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். ரவா கேசரியை கழுகாருக்கு அளித்தபடி, ‘‘மார்ச் 24-ம் தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘ரவுண்டு கட்டும் பா.ஜ.க... திணறும் தி.மு.க’ என்ற தலைப்பில் தி.மு.க-வின் பணபலத்தை முடக்கு வதற்கான வேலைகளில் டெல்லி இறங்கிவிட்டதை அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இப்போது தி.மு.க-வின் கஜானாவாக இருக்கும் எ.வ.வேலுவின் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி யிருக்கிறது’’ என்றோம். பாராட்டுடன் ஆமோதித்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மன வருத்தத்தால், அறிவாலயம் பக்கம் சில மாதங்களாக வராமலிருந்தார் எ.வ.வேலு. தேர்தல் நேரத்தில் நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால், அவரை மீண்டும் அரவணைத்துக் கொண்டது கட்சித் தலைமை. அவருக்குக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவிலும் பொறுப்பு கொடுக் கப்பட்டது. உற்சாகமான வேலு தரப்பு, கொங்கு மண்டலத்திலும், வடக்கு மண்டலத்திலும் கட்சிக்குத் தேர்தல் நிதியைத் திரட்டும் பொறுப்பை ஏற்றது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏராளமான ஸ்வீட் பாக்ஸ்களை அவர் அறிவாலயத்துக்கு பார்சல் செய்ததால், தலைமையும் உச்சிகுளிர்ந்து விட்டதாம். தனது திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளையும் கணிசமான அளவு அவரே ஏற்றுக்கொண்டிருக்கிறார். வேலுவின் எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் சிலர் இந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரத்தை வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம். தி.மு.க மீது எப்போது பாயலாம் என்று காத்திருந்த பா.ஜ.க., திருவண்ணாமலைக்கு ஸ்டாலின் பிரசாரத்துக்குச் சென்ற அன்றே ரெய்டு அஸ்திரத்தை ஏவியிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட உளவுத்துறை... உஷ்ணத்தில் முதல்வர்!

‘‘சரிதான்... அதே நாளில் பொன்முடியும் அப்செட் என்கிறார்களே?’’

‘‘தேர்தல் பிரசாரத்துக்காக மார்ச் 24-ம் தேதி ஸ்டாலின் விழுப்புரம் வந்திருந்தார். பொன்முடி தலைமையில் பிரசாரத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. ‘விழுப்புரம் பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு தலைவர் செல்லும் வழியில், எனது தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் இருக்கிறது. தலைவர் அங்கு இரண்டு நிமிடம் பேசிவிட்டுச் செல்லட்டும்’ என்றாராம் பொன்முடி. ஆனால் ஸ்டாலின் தரப்பில், ‘ஏற்கெனவே போட்டுவைத்திருக்கும் பயணத் திட்டத்தை மாற்ற முடியாது. வேறு எங்கும் பிரசாரம் கிடையாது’ என்று கறாராக ‘நோ’ சொல்லி விட்டார்களாம். அப்செட்டான பொன்முடி, விழுப்புரம் பிரசாரக் கூட்டத்துக்கு திருக்கோவிலூரிலிருந்து ஆட்களை அதிகம் அழைத்துவரவில்லையாம். விழுப்புரம் வேட்பாளர் லட்சுமணன் ஆதரவாளர்களே அதிகமாக இருந்திருக்கிறார்கள்.’’

‘‘ஓஹோ... தி.மு.க-வில் வாரிசுப் பிரமுகரும் ஏதோ ஆத்திரத்தில் இருக்கிறாராமே?’’

‘‘அது நிதி விவகாரத்தால் வந்த வினை. சென்னை சேத்துப்பட்டிலிருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், மருமகன் தரப்புக்கு மிகவும் வேண்டப்பட்டதாம். ஈ.சி.ஆர் சாலையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்களை வாங்கிக் குவித்திருக்கும் இந்த நிறுவனம், அறிவாலயத்தின் தேர்தல் நிதிக்கு உறுதுணையாக இருப்பதாக ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தது என்கிறார்கள். சமீபத்தில் அந்த நிறுவனத்தை தி.மு.க தரப்பு அணுகியபோது, நிறுவனத்தின் மில்க் பிரமுகர், ‘எங்ககிட்ட ஏதுங்க காசு? எல்லாமே நிலத்துல முடங்கிடுச்சு... விக்கவும் முடியலை’ என்று தட்டிக்கழித்திருக்கிறார். விடாமல் துரத்திய தி.மு.க தரப்பு, ‘எங்கள் உதவி இல்லாமலா நீங்கள் இந்த அளவுக்கு முன்னேறினீர்கள்? நிலத்தின் பத்திரங்களைத் தாருங்கள். நாங்கள் அடமானம் வைத்து நிதி திரட்டிக்கொள்கிறோம்’ என்று விடாப்பிடியாகக் கேட்டதாம்.’’

“பத்திரங்களைத் தந்தார்களா?’’

‘‘எப்படித் தருவார்கள்... ‘நாங்கள் வளர்வதற்கு உங்கள் தொடர்பு காரணமல்ல. இப்போதைக்கு நிதி எதுவும் தர முடியாது’ என்று பேசி அனுப்பிவிட்டாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டு கொதித்த வாரிசுப் பிரமுகர், நிறுவனத்துடன் தொடர்பிலிருக்கும் அண்ணாநகர் முருகப் பிரமுகர் மீது கோபத்தைத் திருப்பியிருக்கிறார். ‘நீயும்தானே அவர்களுடன் சேர்ந்து தொழில் செய்கிறாய்... அவர்களுக்கு எப்படிச் சொத்து வந்தது என்று உனக்குத் தெரியாதா?’ என்று வறுத்தெடுத்துவிட்டாராம். இந்த விவகாரத்தால்தான் அண்ணாநகர் முருகப் பிரமுகருக்கு சீட் மறுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மருமகன் தரப்பின் முதலீடும் பெரும்பங்கு இருக்கிறதாம். மில்க் பிரமுகரிடம், ‘எதற்காக நாம் செலவழிக்க வேண்டும்? தலைவர் கேட்டால் வேறு காரணம் சொல்லிக்கொள்ளலாம். நிதி கொடுக்க வேண்டாம்’ என்று மருமகன் தரப்பில் தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்களையெல்லாம் இப்போது கேள்விப்பட்டதால், கொதிப்பில் இருக்கிறாராம் வாரிசுப் பிரமுகர்’’ என்ற கழுகாருக்குச் சூடாக இஞ்சி டீயை அளித்தோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பிறகும் தேர்தல் ஆணையத்துக்கு திருப்தி இல்லையாம். தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் டெல்லியிலிருந்து சில விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட தகவல்களைப் பார்த்தால் கடைசி நேரத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். அதோடு வருமான வரித்துறையும் கோவையை மையமாக வைத்து மாஸ் ரெய்டுக்குத் திட்டமிட்டிருக்கிறதாம்.’’

சஜ்ஜீவன்
சஜ்ஜீவன்
மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட உளவுத்துறை... உஷ்ணத்தில் முதல்வர்!

‘‘ம்ம்...’’

‘‘அ.தி.மு.க-வின் மாநில வர்த்தகர் அணித் தலைவர் சஜ்ஜீவனின் ஆதர வாளரான பொன்.ஜெயசீலனுக்கு கூடலூர் தொகுதியில் சீட் வழங்கப் பட்டுள்ளது. தன் ஆதரவாளருக்கு ஆதரவு திரட்ட ஊட்டிக்கும் கூடலூருக்கும் இடையே தொடர்ச்சியாகப் பயணிக்கிறார் சஜ்ஜீவன். அவரது காரை விசுவாசமான காக்கிகள் யாரும் நிறுத்திச் சோதனையிடுவ தில்லையாம். சமீபத்தில் பறக்கும் படை பெண் அதிகாரி ஒருவர் சஜ்ஜீவன் காரை மறித்து சோதனையிட முயன்றிருக்கிறார். டென்ஷனான சஜ்ஜீவன், ‘யாரும்மா நீ... எந்த டிபார்ட்மென்ட்... புதுசா வந்துருக்கியா? நான் யார்னு தெரியாம காரை நிறுத்திட்ட... சீக்கிரமே அதை தெரிஞ்சுக்குவ’ என்று மிரட்டிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அதிகாரிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்தும் எச்சரிக்கை வந்ததாம். ‘கடமையைச் செய்ததற்கு இப்படி ஒரு பிரச்னையா?’ என்று கொதிக்கிறது அதிகாரிகள் தரப்பு.’’

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட உளவுத்துறை... உஷ்ணத்தில் முதல்வர்!

‘‘உளவுத்துறை மீது முதல்வர் கொதிப்பில் இருக்கிறாராமே?’’

‘‘தவறான ரிப்போர்ட் கொடுத்ததுதான் முதல்வரின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். சென்னையில் ராயபுரம், ஆர்.கே.நகர், மயிலாப்பூர் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதி கள் எதுவும் அ.தி.மு.க கூட்டணிக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையாம். ஆனால், உளவுத்துறை ரிப்போர்ட்டில் ‘சென்னையிலேயே ஏழெட்டு தொகுதிகளை வென்றுவிடுவீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். முதல்வரும் ஒருகட்டத்தில் இதை நம்பியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் சில தனியார் நிறுவன ஊழியர்களை வைத்து அவர் தனியாக எடுத்திருக்கும் சர்வே ரிசல்ட் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையாம். ‘பொய்யான ரிப்போர்ட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்’ என்று மூத்த நிர்வாகிகளிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் எடப்பாடி.’’

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

‘‘ஓஹோ!’’

‘‘திருச்சி தி.மு.க-வினர், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மீது ஏக கோபத்தில் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் தன் மகன் ராமச்சந்திரன் போட்டி யிடுவதால், அங்கேயே முகா மிட்டிருக்கிறாராம் திருநாவுக்கரசர். அவர் எம்.பி-யாகப் பொறுப்பு வகிக்கும் திருச்சியில், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைக் கண்டு கொள்வதே கிடையாதாம். டென்ஷனான கே.என்.நேரு, ‘ஒரு முறையாவது பிரசாரத் துக்கு வந்து செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கும் திருநாவுக்கரசர் பிடிகொடுக்கவில்லையாம். ‘அவர் எம்.பி தேர்தலுக்கு நின்றபோது எங்க கைக்காசை செலவு பண்ணி பிரசாரம் செஞ்சோம். இதையெல்லாம் மறந்துட்டு தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டேங்குறாரு. அறந்தாங்கி தி.மு.க-வினரைத் தேர்தல் வேலை செய்ய வேண்டாம்னு சொல்லி ஆஃப் பண்ண எங்களுக்கு ரொம்ப நேர மாகாது. கூட்டணி தர்மத்துக் காகக் கட்டுப்பட்டு நிக்குறோம்’ என்று திருச்சி உடன்பிறப்புகள் கொந்தளிக்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.