Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘அறிவாலய அட்ராசிட்டி!’ - நொந்துகொள்ளும் கூட்டணிக் கட்சிகள்...

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ராகுலை எப்படியும் தி.மு.க கூட்டணிக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு டீம் குறியாக இருந்திருக்கிறது

மிஸ்டர் கழுகு: ‘அறிவாலய அட்ராசிட்டி!’ - நொந்துகொள்ளும் கூட்டணிக் கட்சிகள்...

ராகுலை எப்படியும் தி.மு.க கூட்டணிக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு டீம் குறியாக இருந்திருக்கிறது

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

‘‘அவர் ஆரம்பிக்க... இவர் வாழ்த்த... என்று கட்சி தொடக்கவிழாவே களைகட்டிவிட்டதுபோல?’’ - நக்கல் சிரிப்போடு என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடாக இஞ்சியும் தேனும் கலந்த டீயை கழுகாருக்கு நீட்டிவிட்டு, ‘‘அர்ஜுனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியைத்தானே சொல்கிறீர்... வாழ்த்துகள் வரும் அதேவேளையில், அர்ஜுனமூர்த்தி மீது ரஜினி மக்கள் மன்றத்தினரின் அம்புகளும் பாய்கின்றனவே?’’ என்றோம். ஆமோதித்தபடி டீயை உறிஞ்சிக்கொண்டே செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘ரஜினி மக்கள் மன்றத்தை உடைத்து, தனது கட்சிக்கு அர்ஜுனமூர்த்தி ஆள் சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. மன்றத்தின் மதுரைப் பிரமுகரை தனது ஏஜென்ட்டாக நியமித்திருக்கும் அர்ஜுனமூர்த்தி, அவர் மூலம் இதர நிர்வாகிகளுக்கும் வலை வீசுகிறாராம். இதுவரை நான்கு மாவட்டத் தலைவர்கள் அவர் வலையில் சிக்கிவிட்டதாகத் தகவல். ஏற்கெனவே மூன்று மாவட்டத் தலைவர்கள் தி.மு.க-வில் இணைந்துவிட்ட நிலையில், விரைவில் அர்ஜுனமூர்த்தியுடன் பல மாவட்டத் தலைவர்கள் கரம்கோக்க விருக்கிறார்களாம். அதோடு கமலுடன் சேர்ந்து மூன்றாம் அணியிலும் இடம்பெற அர்ஜுனமூர்த்தி ஆயத்தமாகிறாராம்.’’

‘‘ஏன்டா தமிழகம் வந்தோம் என்று நொந்துபோய்விட்டாராமே ராகுல்?’’

‘‘ஆளாளுக்குப் பிடித்து இழுத்தால் மனிதர் என்னதான் செய்வார்... பாவம்! ராகுலை எப்படியும் தி.மு.க கூட்டணிக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு டீம் குறியாக இருந்திருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி இரவு, குற்றாலம் அருகேயுள்ள தன் சம்பந்தியின் ரிசார்ட்டில் ராகுல் காந்தி தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் திருநாவுக்கரசர். அங்கு ராகுலுடன் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, ‘41 தொகுதிக்கு ஒரு தொகுதி குறைந்தாலும் வாங்க வேண்டாம். இதேநிலை பிற மாநிலங்களிலும் தொடரும்’ என்று கறார் காட்டியிருக்கிறார் ராகுல். சுற்றியிருந்த தலைவர்கள், ‘இம்முறை கொடுப்பதை வாங்கிக்கொள்ளலாம், தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் நிலை இருக்கிறது. நாமும் அதிகப்படியாக வெற்றியைப் பெறலாம்’ என்றிருக்கிறார்கள்.’’

‘‘ராகுலுக்கு மறைமுக நெருக்கடியோ?”

“ஆமாம். தங்கபாலு பேசும்போது, ‘தி.மு.க தரப்பு 25 தொகுதிக்கு மேல் எவ்வளவு தந்தாலும் வாங்கிக்கொள்ளலாம்’ என்றாராம். இவர்களின் நெருக்கடியால் வெறுத்துபோன ராகுல், ‘சரி, நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று எழுந்து சென்றிருக்கிறார். அதன் பிறகே மறுநாள் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி, கூட்டணிக்கு ராகுல் சிக்னல் காட்டினாராம். ‘தங்கள் வாரிசுகளைக் களத்தில் இறக்குவதற்காக, காங்கிரஸை தி.மு.க-விடம் அடகு வைத்துவிட்டார்களே!’ என்ற புலம்பல் சத்தம் சத்தியமூர்த்தி பவனில் அதிகமாகக் கேட்கிறது.”

“கட்சிக்காரர்களின் புலம்பலையும் தாண்டி, அதிகாரி ஒருவரின் அட்ராசிட்டி ராகுல் விசிட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறதே!’’

‘‘ம்... டெல்லியைச் சேர்ந்த அந்த அதிகாரி எஸ்.பி.ஜி பாதுகாப்புப் பிரிவில் ராகுலின் பாதுகாப்பை கவனித்தவராம். ஓய்வுக்குப் பிறகு ராகுலின் டூர் புரோகிராம்களை அவர்தான் ரெடி செய்கிறார். அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் நிகழ்ச்சிகளைப் போட்டு, ராகுலையும் கட்சிக்காரர்களையும் பெண்டு நிமிர்த்தி விடுகிறாராம் அந்த அதிகாரி. ராகுலை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பதற்கும் அவர் முட்டுக்கட்டை போடுகிறார் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: ‘அறிவாலய அட்ராசிட்டி!’ - நொந்துகொள்ளும் கூட்டணிக் கட்சிகள்...

‘‘கருணாநிதியின் அருமை இப்போதுதான் புரிகிறது என்றாராமே வைகோ. அவருக்கு என்ன வருத்தமாம்?’’

‘‘2016 சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க-வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்குவதாகச் சொன்னார் கருணாநிதி. அதையே ஏற்றுக்கொள்ளாமல் மக்கள் நலக் கூட்டணியைக் கட்டமைத்தார் வைகோ. இன்று, சீட் பங்கீட்டில் ஐந்து விரலைக் காட்டுகிறதாம் தி.மு.க. ‘நம்மை அவர்கள் நடத்தும் விதமே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொள்ளக்கூட விரும்பவில்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டாராம் வைகோ.’’

‘‘இதே வருத்தம் தி.மு.க கூட்டணியிலிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே...?”

‘‘உண்மைதான். அறிவாலயத்தின் அட்ராசிட்டியைப் பார்த்து நொந்துவிட்டாராம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா. இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று அவரிடம் கறார் காட்டியிருக்கிறது தி.மு.க. அதற்கு, ‘2016-ல் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டோம். அந்த இடங்களையாவது கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார் அவர். அதற்கு அறிவாலயம் மறுத்து இரண்டு தொகுதிகளையே ஒதுக்கியிருக்கிறது. ‘சிறுபான்மையினர் வாக்குகள் மட்டும் வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை கிடையாதா?’ என்று புகைச்சலில் இருக்கிறார்கள் இஸ்லாமியக் கட்சியினர்” என்ற கழுகாருக்குச் சூடாக மிளகாய் பஜ்ஜியை அளித்தோம். பஜ்ஜியின் காரத்தோடு “ஓர் அமைச்சருக்கு எதிராக அஸ்திரம் ஒன்று தயாராகிறது’’ என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

‘‘2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலுமணியின் உதவியாளர் வினோத், அவருக்கு நெருக்கமான சரவணன் ஆகியோரிடமிருந்து பல கோடி மதிப்பிலான ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர் ஒருவர் வருமான வரித்துறையிடம் ஆர்.டி.ஐ மூலமாகத் தகவல் கேட்டிருக்கிறார். அதன் நகல் அமலாக்கப் பிரிவுக்குச் சென்றிருக்கிறதாம். ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையிடம் கடிதம் மூலம் அமலாக்கப் பிரிவு சில விவரங்களைக் கேட்டிருந்தது. இப்போது நேரடியாக ஆர்.டி.ஐ மூலம் விவகாரம் கிளம்பியிருப்பதால், வேலுமணிக்குப் பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்கிறார்கள் அமலாக்கப்பரிவு அதிகாரிகள்.’’

“தி.மு.க செய்திகள் ஏதேனும்?”

‘‘ஐபேக் கொடுத்த உத்தேசப் பட்டியலை கிராஸ் செக் செய்வதற்கு, தனக்கு நெருக்கமான சோர்ஸ்கள் மூலம் 60-க்கும் மேற்பட்ட தொழில்முறை நிபுணர்களை நியமித்திருக்கிறாராம் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்தப் புதிய டீம் தொகுதி வாரியாக ஆய்வுசெய்து வருகிறதாம். தற்போது இறுதிசெய்யப்பட்டுவரும் தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலுடன், இந்த ஆய்வுகளை ஒப்பிட்ட பிறகே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்கிறார்கள். ஐபேக் கல்லாகட்டுவதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த கட்சித் தலைமை இந்தத் தனி ஆய்வுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

‘‘உதயநிதி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று ஒரு டீம் கடுமையாகச் சதிவலை பின்ன ஆரம்பித்திருக்கிறதாம். முழுமையான தகவல்களை உமக்குப் பிறகு தருகிறேன்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* தி.மு.க-வின் தேர்தல் செலவுக்கென வசூல் வேட்டையை லாட்டரி அதிபர் ஒருவரின் மருமகன் கனஜரூராக நடத்திவருகிறாராம். கோவை, திருப்பூர், நாமக்கல் ஏரியாக்களில் வசூல் தூள் பறக்கிறதாம்.

* கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு, மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்தின் பெயரை ராகுல் டிக் செய்திருக்கிறாராம்.

தே.மு.தி.மு-வுக்கு செக் வைத்த முதல்வர்!

அ.தி.மு.க கூட்டணியில் 25 சீட் எதிர்பார்க்கிறதாம் தே.மு.தி.க. அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் தங்கமணி, ``பா.ம.க-வுக்கே 23 சீட்தாங்க ஒதுக்கியிருக்கோம்” என்றிருக்கிறார். விஷயத்தைக் கேள்விப்பட்டு விஜயகாந்த் குடும்பம் கொதித்துவிட்டதாம். இந்த ஆத்திரத்தில், `234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் சொல்ல... விஷயம் அ.தி.மு.க தலைமைக்கு எட்டியிருக்கிறது. ‘இதற்கு மேல் அவர்களுடன் எதுவும் பேச வேண்டாம். அவர்களாக வந்து குறைத்துப் பேசினால் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டாராம் முதல்வர் பழனிசாமி.

கிச்சன் கேபினெட்டா... தலைமையா?

கிச்சன் கேபினெட், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும்போதெல்லாம் அர்ச்சனைக் கூடையைச் சுமக்கும் நாமக்கல் மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், திருச்செங்கோடு தொகுதியைக் கேட்டு ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களுடன் செனடாப் சாலையைச் சுற்றிவருகிறாராம். இந்தத் தொகுதியை நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.பி.ராமசாமி அல்லது முன்னாள் மாவட்டச் செயலாளர் பார் இளங்கோவுக்கு ‘டிக்’ அடிக்க தலைமை முடிவெடுத்திருக்கிறதாம். மற்றொருபுறம், தி.மு.க கூட்டணியிலிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் திருச்செங்கோடு தொகுதியைக் கேட்டு நச்சரிக்கிறது. ‘ஸ்வீட் பாக்ஸ் வேலை செய்யுமா?’ என்பதை நாமக்கல் கரைவேட்டிகள் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடுகடுத்த ஜெகத்!

தி.மு.க-வின் கஜானா என்று சொல்லப்படும் ஜெகத்ரட்சகன், சமீபகாலமாகக் கட்சித் தலைமைமீது அப்செட்டில் இருக்கிறாராம். மனிதர், இப்போதெல்லாம் அறிவாலயம் பக்கம் அதிகம் தென்படுவதில்லை. தன்னிடம், ‘சீட் வாங்கித் தாருங்கள்’ என்று சந்தித்தவர்களிடமெல்லாம், ‘ஏம்ப்பா, என்னையே ஒரு தொண்டராகத்தான் வெச்சிருக்காங்க. என்கிட்டபோய் சீட் கேட்கறீங்களே?’ என்று விரக்தியோடு கடுகடுத்திருக்கிறார் ஜெகத்.