Published:Updated:

மிஸ்டர் கழுகு: அடுத்த பயணத்துக்குத் தயார்... சசிகலாவுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

ரஜினியையே ஆட்டிப்பார்த்த சிங்காரவேலனின் கண்ணில் நடிகர் விமல் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறார்

மிஸ்டர் கழுகு: அடுத்த பயணத்துக்குத் தயார்... சசிகலாவுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

ரஜினியையே ஆட்டிப்பார்த்த சிங்காரவேலனின் கண்ணில் நடிகர் விமல் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறார்

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

உற்சாகமாக என்ட்ரி கொடுத்த கழுகார் கவர் ஸ்டோரியில் பார்வையை மேயவிட்டார். “தி.மு.க ஆட்சியின் சாதனைகளையும் சறுக்கல்களையும் கனகச்சிதமாகப் பதிவுசெய்திருக்கிறீர்... எனினும், கட்சியினருக்கு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன” என்றபடி நேரடியாகச் செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்...

“தி.மு.க தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு ஜூன் 1-ம் தேதி வெளியாகிறது. 2-ம் தேதி மனுத்தாக்கல். அன்றைய தினமே மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்கிறார். அடுத்த நாள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்புவிழா நடைபெறவிருக்கிறது. ஜூன் 5-ம் தேதி பொதுக்குழுக் கூட்டமும் நடக்கிறதாம். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்படும் முதல் பொதுக்குழு என்பதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறது அறிவாலய வட்டாரம்.”

“அப்படியே கூட்டுறவு சங்கத் தேர்தலையும் நடத்த, தி.மு.க திட்டமிடுகிறதாமே?”

“ஆமாம், கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து, மூன்று ஆண்டுகளாகக் குறைக்க வழிசெய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதா சட்டமாகிவிட்டால், தற்போதுள்ள கூட்டுறவு சங்க நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அ.தி.மு.க ஆட்சியில் இரு முறை நடந்த தேர்தல்களிலும் அக்கட்சியே வென்றது. அதேபோல தற்போதும் ஆளுங்கட்சியான தி.மு.க-வே வெல்லும் என்பதால், வெறித்தனமாகக் காத்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.”

மிஸ்டர் கழுகு: அடுத்த பயணத்துக்குத் தயார்... சசிகலாவுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

“அப்படியாவது, கட்சிக்காரர்களின் அதிருப்தி குறைகிறதா என்று பார்ப்போம்...”

“ம்க்கும்... அமைச்சர் மீதே செம அதிருப்தியில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர். மகனை பேரூராட்சித் தலைவராக்கி அழகு பார்த்தாரே அந்த ‘சிறு’ துறையின் அமைச்சர்... அவர் தன் மருமகனையே பி.ஏ-வாக வைத்திருக்கிறார். அமைச்சரைச் சந்திக்க வரும் நபர்களிடம் காரணங்களுக்கேற்ப தொகையைக் கறந்துவிடுகிறாராம் மருமகன். சில சமயம் பழக்க தோஷத்தில் துறை அலுவலர்களிடமே கைநீட்டிவிடுகிறார். உக்ரைன் போரில் சிக்கிய தமிழக மாணவர்கள் மீட்பின்போது, மருமகன் காட்டில் செம மழை. அதேபோல, மகன் ஆளுகையில் இருக்கும் நகரில் உள்ள எட்டு டாஸ்மாக் பார்களிலிருந்தும் கட்டாயம் கட்டிங் வர வேண்டும் என மருமகன் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்கிறாராம். இது பற்றி அமைச்சரிடம் சொல்லியும் பயனில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

“அங்கேயும் மருமகன் ஆதிக்கம்தானா... நாகை தி.மு.க-வில் எதோ பஞ்சாயத்தாமே?”

“ஆமாம். நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கெளதமனின் தம்பி மோகன்தாஸ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தவிர, துறைமுகத்தில் மீன்கூடைகளை இறக்கிவைப்பதற்கும், படகுகளைக் கட்டிக்கொள்வதற்கும் அவர் வசூல்வேட்டையில் ஈடுபடுவதாக மீனவர்கள் கொந்தளிக்கிறார்கள். ‘எங்களுக்கென தனியாக ஒரு கிராம நிர்வாகத்தை உருவாக்கிக் கொள்கிறோம். எங்கள் விஷயத்தில் மோகன்தாஸ் தரப்பினர் தலையிடக் கூடாது’ என்றும் அவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரின் தம்பி என்பதால், மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதாம் மாவட்ட நிர்வாகம். விவகாரம், முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது.”

“கோட்டையும் இல்லை... கொடியும் இல்லை... அப்பவும் சசிகலா ஏக குஷியில் இருக்கிறாரே எப்படி?”

“ஓ... அதுவா? அவருடைய அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே ஒரு மகள் இருக்கும் நிலையில், ‘இரண்டாவதும் உனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும்…’ என்று அடித்துச் சொல்லியிருந்தாராம் சசிகலா. அவர் சொன்னபடியே பெண் குழந்தை பிறக்க, குடும்பமே கொண்டாடித் தீர்த்திருக்கிறது. “அட்சய திரிதியை, ரமலான் பிறை, முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என அதிர்ஷ்ட நாளில் குழந்தை பிறந்திருக்கிறது. இது என்னுடைய அரசியல் பயணத்துக்குக் கிடைத்திருக்கும் கிரீன் சிக்னல்” என்றாராம் சசிகலா. குழந்தை சென்டிமென்ட் சசிக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, சீக்கிரமே அடுத்த பயணத்துக்குத் தயாராகிறாராம்!”

மிஸ்டர் கழுகு: அடுத்த பயணத்துக்குத் தயார்... சசிகலாவுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

“இந்த முறை எந்தக் கோயிலுக்கோ... சரி, தினகரன் சங்கதி ஏதாவது..?”

“வழக்கம்போல, அவரது கட்சியிலிருந்து இன்னொருவர் வெளியேறிவிட்டார். அ.ம.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது அல்லவா... காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் தினகரன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் நடக்கும் நாளில், சிவகங்கை உமாதேவனை வேறொரு மாவட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராகச் செல்லும்படி அறிவித்துவிட்டார்கள். தான் பொறுப்பாளராக இருக்கும் மதுரை மண்டலத்தில்... தன் ஊரில் நடக்கும் நிகழ்வில்... தினகரன் கலந்துகொள்ளும்போது வேண்டுமென்றே தன்னை வெளியூருக்கு அனுப்பிவிட்டார்கள். தினகரனும் இதைக் கண்டுகொள்ளவில்லை என்று மனம் வெதும்பிய உமாதேவன், தான் வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார். இதன் பின்னணியில் ஜனா, கோமல் அன்பரசு, டேவிட் அண்ணாதுரை ஆகிய மூவரின் கைவண்ணம் இருக்கிறதாம்.”

“கட்சியை அழிப்பதில் முன்னணி வகிப்பது தினகரனா... அவரது கட்சி நிர்வாகிகளா என்று பட்டிமன்றமே நடத்தலாம்போல...”

“உமக்கு நக்கல் ஜாஸ்திதான்... சரி அடுத்த விஷயத்துக்கு வருகிறேன். அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் மோதல் தொடர்பாக கடந்த 1.5.2022 தேதியிட்ட ஜூ.வி-யில் செய்தி வெளியிட்டிருந்தீர்கள் அல்லவா... அதில் சொல்லப்பட்ட தலைநகர் மாவட்டச் செயலாளர் ஒருவர், தனது வசூல்வேட்டையை இன்னமும் தொடர்கிறாராம். மயிலைப் பகுதியில் ‘டிக் டாக்’ பெண்மணி ஒருவருடன் நெருக்கத்தில் இருப்பதோடு, அந்தப் பெண்ணுக்கு பதவியும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். இந்த விவகாரம் அவரது பதவி பறிப்புவரையில் போகும் என்கிறார்கள்.”

“ரஜினியையே ஆட்டிப்பார்த்த சிங்காரவேலனின் கண்ணில் நடிகர் விமல் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறார்... கவனித்தீரா?”

“ஆமாம், ‘லிங்கா’ படம் சரியாகப் போகாத நிலையில், ரஜினிக்கு எதிராகப் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியவர் சிங்காரவேலன். சினிமாத்துறையின் பல பிரபலங்களையும் வம்புக்கு இழுத்து சர்ச்சைகளை உருவாக்குவதையே வேலையாக வைத்திருப்பவரென பெயர் எடுத்தவர், நடிகர் விமலுக்கு எதிராகப் புகாரைக் கிளப்பினார். இதற்கு பதிலடியாக விமல் புகார் கொடுக்க, அதிரடியாக சிங்காரவேலனை கைதுசெய்தது போலீஸ். பிணை கேட்டு அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாட, உயர் நீதிமன்ற உத்தரவுகளை சிங்காரவேலன் மதிக்காத பழைய ஆதாரங்களைச் சொல்லி வெளுத்தெடுத்துவிட்டதாம் நீதிமன்றம். ‘விமலுக்கு எதிராக இனி செயல்பட மாட்டேன்’ என்கிற உத்தரவாதத்தை வாங்கிய பிறகே அவருக்குப் பிணை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். ரஜினியையே மிரட்டிய சிங்காரப் பூனைக்கு, விமல் மணி கட்டிய விவகாரம் திரைத்துறையையே பரபரப்பாக்கியிருக்கிறது” என்று கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்...

மிஸ்டர் கழுகு: அடுத்த பயணத்துக்குத் தயார்... சசிகலாவுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!

“சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தார் அல்லவா... இந்த விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநில மனித உரிமைப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் தலைமைச் செயலக காலனி போலீஸாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர். விசாரணையின் அடிப்படையில் சாத்தான்குளம் சம்பவத்தைப்போல தலைமைச் செயலக காலனி போலீஸார் மீதும் விரைவில் கொலை வழக்கு பதிவு செய்யப்படவிருக்கிறதாம்” என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* ஃபேஸ்புக்கில் தன்னைப் பின்தொடரும் பெண்களிடம், ‘மெசஞ்சர்’ செயலி மூலமாக சாட்டிங் செய்கிறாராம் ஆளுங்கட்சி முக்கியத் தலைவரின் செல்லப்பிள்ளை ஒருவர். தன்னைத் தொடர்புகொள்ளும்படி பர்சனல் செல் நம்பரையும் பகிர்கிறார். இந்தச் சேட்டையின் ஸ்கிரீன் சாட் பதிவுகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்புவிழா தேதியை முடிவுசெய்ய ஆளுநர் அலுவலகத்துக்கும், அமைச்சர் அலுவலகத்துக்கும் நடையாக நடந்துகொண்டிருக்கிறார்கள் பல்கலைக்கழக அதிகாரிகள். சிண்டிகேட் உறுப்பினராக வாரிசு இருப்பதால், அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவே ராஜ்பவன் இப்படி அலைக்கழிக்கிறது என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism